
குழந்தைகள் முன் யோசித்துப் பேசுங்கள்!
என் தோழிக்கு, மூன்று குழந்தைகள். இதில், கடைக்குட்டி பெண்ணின் வயது பத்து. படு சுட்டி.
ஒரு நாள், பக்கத்து வீட்டு பெண்ணிடம், மூன்றாவது குழந்தையைக் காட்டி, 'இவ வயித்துல உண்டானதும், ரெண்டுக்கு மேல வேண்டாம்... கலைச்சுடலாமுன்னு முடிவு பண்ணி, எத்தனையோ மாத்திரையை வாங்கி சாப்பிட்டு பார்த்துட்டேன். எதுக்கும் அசையாம வந்து பொறந்துட்டா...' என்று, சாதாரணமாக சொல்லி இருக்கிறார், தோழி.
அதைக்கேட்ட வினாடியே அந்த குழந்தையிடம் இருந்த சந்தோஷமெல்லாம் காணாமல் போய் விட்டது.
அவளிடம், முன்பிருந்த சந்தோஷமும், ஒட்டுதலும் இப்போது சுத்தமாக இல்லை. 'என்னை கொல்ல நெனைச்சீங்க தானே!' என்று கூறி, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாள். அவளது மனநிலையை மாற்ற, இப்போது மனநல மருத்துவர்களிடம் அழைத்து சென்று வருகின்றனர், பெற்றோர். தேவையா இது!
பெற்றோரே... குழந்தை முன் நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், குழந்தையை பாதிக்கும் என்பதை உணருங்கள். பிறந்த குழந்தையை பாசத்துடன் வளர்த்து ஆளாக்குங்கள்.
- சந்திரா மோகன், துாத்துக்குடி.
இப்படியும் ஒரு பயிற்சியாளர்!
இறகுப்பந்து விளையாட்டு பயிற்சிக்கு தினமும் சென்று வருகிறான், என் பேரன். அந்த அகாடமியின் பயிற்சியாளர், மாணவ - மாணவியருக்கு பயிற்சி அளிப்பதோடு, ஒழுக்கத்தை போதிக்கும் ஆசிரியராகவும் இருக்கிறார்.
பயிற்சிக்கு வருபவர்களிடம், 'எத்தனை மணிக்கு எழுந்திருந்தாய். நீ உபயோகிக்கும் போர்வையை மடித்து வைத்தாயா, ஷூவிற்கு பாலிஷ் போட்டாயா, தண்ணீர் பாட்டிலை தினமும் கழுவுகிறாயா?' போன்ற கேள்விகளை கேட்பார்.
'இல்லை...' என, பதில் வந்தால், 'ஒரு ரவுண்ட் அதிகமாக ஓடு, 20 ஸ்கிப்பிங் அதிகமாக ஆடு...' என, சிறு சிறு தண்டனைகளை வழங்கி, அவர்களை பண்படுத்துவார். அவரவர் வேலைகளை செய்தவர்களை பாராட்டி, சிறிய பரிசுகளும் வழங்குவார்.
ஒழுக்கம், வாழ்வில் மிக அவசியம் என்ற எண்ணத்தை, பயிற்சிக்கு வருபவர்களின், மனதில் விதைப்பார். பெற்றோர்களிடம், குழந்தைகளுக்கு சிறு சிறு வேலை கொடுத்து பழக்குங்கள் என்பார்.
பணம் வாங்கினோம், பயிற்சி அளித்தோம் என்றில்லாமல், வருங்கால சமுதாயம் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற அவரின் எண்ணத்தை, மனமார பாராட்டி விட்டு வந்தேன்.
- கோ.சு.சுரேஷ், கோவை.
சாவி கொத்தில் போன் எண்!
சமீபத்தில் கோவில் திருவிழா ஒன்றுக்கு சென்றிருந்தேன். மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.
என் காலுக்கு கீழே சாவி கொத்து ஒன்று கிடந்தது. யாரோ கூட்டத்தில் தவற விட்டுள்ளனர் என, நினைத்து, கையில் எடுத்து பார்த்தேன்.
அதில், சிறிய அட்டையில் பெயரும், மொபைல் எண்ணும் எழுதப்பட்டிருந்தது.
அந்த எண்ணுக்கு போன் செய்து, 'கோவில் திருவிழாவில், என் காலுக்கு கீழே இந்த சாவி கொத்து கிடைத்தது...' என்றேன்.
மறுமுனையில், 'இது என் சாவி கொத்து தான். நான் தான் கூட்டத்தில் தொலைத்து விட்டு, தேடிக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக நீங்களே அழைத்தீர்கள். 10 நிமிடத்தில் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து விடுகிறேன்...' என, நான் இருக்கும் இடத்தை கேட்டு அறிந்து வந்தார்.
'ரொம்ப நன்றி சார். இந்த சாவி கொத்து கிடைக்கவில்லை என்றால், எனக்கு, மாற்று சாவிகள் செய்ய, 5,000 ரூபாய்க்கு நஷ்டம் ஆகியிருக்கும்...' என்றார்.
'சாவி கொத்தில் எப்படி மொபைல் எண் எழுதும் யோசனை வந்தது...' எனக் கேட்டேன், நான்.
'இந்த யோசனையை காவல்துறையில் பணியாற்றும், என் நண்பர், 'சாவி கொத்தில் விதவிதமான பொம்மைகளை வைப்பதற்கு பதிலாக, உங்களுடைய மொபைல் எண் மற்றும் பெயரை அட்டையில் எழுதி வைத்தால், சமயத்துக்கு உதவும்...' என்றார். நண்பர் கூறியபடியே, 'சாவி கொத்தில் என் பெயர் மற்றும் மொபைல் எண்ணை எழுதி வைத்தேன்...' என்றார்.
இது நல்ல யோசனையாக இருக்கவே, நானும் அதை பின்பற்றி, ஒரு கனமான அட்டையில், மொபைல் எண் மற்றும் பெயரை எழுதி சாவி கொத்தில், இணைத்து விட்டேன்.
- வெ.சென்னப்பன், உதகை, நீலகிரி.
பந்தியில் உட்கார்ந்தவர்களை எழுப்பலாமா?
உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு சென்றிருந்தேன். சாப்பாட்டுக்காக பந்தியில் அமர்ந்திருந்த போது, எதிரே அமர்ந்திருந்த, மூன்று நபர்களை, 'இங்கு முக்கிய நபர்கள் அமரப் போகின்றனர். அடுத்த பந்தியில் சாப்பிட்டுக்கங்க...' என்று கூறி, வலுக்கட்டாயமாக எழுப்பி வெளியேற்றினர், பந்தி பரிமாறியவர்கள்.
உடனே, அந்த மூவரும் எழுந்து, அவமானப்படுத்தப்பட்ட வேதனையுடன், தலை குனிந்து சாப்பிடாமலேயே மண்டபத்தை விட்டு வெளியேறினர்.
ஒருவர் பந்தியில் அமர்ந்து, அவருக்காக இலையும் போட்ட பிறகு எழுந்திருக்க சொல்வது நியாயமா? திருமணத்துக்கு அழைத்துவிட்டு, அவமானப்படுத்தப்படுவதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
எவரோ பந்தியில் உட்கார, ஏற்கனவே உட்கார்ந்த ஒருவரை எழும்ப சொல்வது மிகவும் பாவமான செயல்.
விசேஷ வைபவங்கள் நடத்தும் அனைவருமே இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
- தி.உதயகுமார், புதுச்சேரி.

