sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மார் 01, 2026

Google News

PUBLISHED ON : மார் 01, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெற்றோர்கள் திருந்துவரா!

சமீபத்தில், சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ ஒன்றை பார்த்து, அதிர்ந்தேன். அதில், நடனப் பயிற்சிப் பள்ளி ஒன்றில், சிறுமிக்கு குறிப்பிட்ட நடன அசைவை கொண்டு வருவதற்காக தரையில், அவளை அமர வைத்து, அவளது இரண்டு பாதங்களிலும் தன் கால்களை வைத்து, நேர் கோடாக வரும்வரை, அவளது கால்களை அகட்டுகிறான், நடன பயிற்சி அளிக்கும், இளைஞன். வலி தாளாமல் கதறித் துடிக்கிறாள், அந்தச் சிறுமி. அவள் எவ்வளவு கெஞ்சியும், அந்த முரட்டுப் பயிற்சியை விடவில்லை, அந்த இளைஞன்.

இவ்வளவு கொடூரமான, விருப்பமற்ற பயிற்சியை அந்த சிறுமியின் மீது திணிப்பது கொடுமை அல்லவா!

இதில், நடனப்பயிற்சி பள்ளியை விட, முதல் குற்றவாளி, அச்சிறுமியின் பெற்றோர் தான். தன் மகளுக்கு என்ன விதமான பயிற்சி தரப்படுகிறது என்ற அறிவின்றி, தகுந்த கண்காணிப்பும் இன்றி, பயிற்சியில் சேர்த்து விட்ட அவர்களை என்னவென்று சொல்வது!

மனம், உடல் இரண்டுமே பாதிக்கப்படக்கூடிய அளவுக்கு பயிற்சி என்ற பெயரில் கொடூரம் நடக்கிறது. இதை எப்படி அனுமதிக்கலாம்?

இதேபோல் தான், எனக்கு தெரிந்த பெண் ஒருவர், தன் மகளை ஒவ்வொரு நாளும் ஒரு வகுப்பு என, டென்னிஸ், நடனம், பாட்டு, ஹிந்தி, அபாகஸ், சிலம்பம் என, எல்லா வகுப்புகளிலும் சேர்த்துவிட்டுள்ளார். விருப்பமில்லாமல், தன் சக்திக்கு மீறி இவற்றுக்கெல்லாம் ஓடிக் கொண்டிருக்கிறாள், அந்த சிறுமி.

இப்படி திணிக்கப்படும் கலைகளால் எந்தப் பயனும் இல்லை. அவர்கள் விரும்பும் கலைகளில் எதாவது ஒன்று அல்லது இரண்டு மட்டுமே கற்றால் போதுமானது. அதிகப்படியான வகுப்புகளில் சேர்ப்பதால், படிப்பில் கவனம் செலுத்த முடியாமலும் போக வாய்ப்பும் இருக்கிறது.

பெற்றோர்களே... இதை கவனத்தில் கொள்வீர்களா!

- கி. சரஸ்வதி, ஈரோடு.

கலைகளுக்கு இல்லை, பாலின பாகுபாடு!

சமீபத்தில், எங்கள் ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அங்கே மேடையில், பரதநாட்டியம் ஆடிக் கொண்டிருந்தார், திருநங்கை ஒருவர். அவரது நளினமான அசைவுகள் மற்றும் பாவனைகள், என, அனைத்துமே பார்வையாளர்களை மெய்மறக்க செய்தன. அவரின் ஒவ்வொரு அடியும், முத்திரையும், அவ்வளவு துல்லியமாக இருந்தன. அருகில் இருந்தவர், 'திருநங்கையான இவர், மிக நுணுக்கமான பரதக் கலையை இப்படி அர்ப்பணிப்புடன் ஆடுவது ஆச்சரியமாக இருக்கிறது...' என்றார்.

நானும் அதை ஆமோதித்து, அத்திருநங்கையின் திறமையை பாராட்டினேன்.

'ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், ஆர்வமும், திறமையும் இருந்தால், எந்தக் கலையையும் விரைந்து கற்று சிறந்து விளங்க முடியும் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்...' என்றார், கோவில் திருவிழாவிற்கு வந்திருந்த, நண்பர்.

பரதநாட்டியம் போன்ற பாரம்பரிய கலையில் ஒரு திருநங்கை, இவ்வளவு ஆழமாக ஈடுபட்டு, மேடையை அலங்கரிப்பது பெருமைக்குரியது; அவரது முயற்சியையும், அர்ப்பணிப்பையும் மனதார பாராட்டினேன்.

- டி.எல்.குமார், விழுப்புரம்.

அதிக சுதந்திரத்தால் ஆபத்து!

பக்கத்து வீட்டில் வசிக்கும், பிளஸ்2 படிக்கும் மாணவன் தேர்வுக்கு படித்து கொண்டிருந்தான். வீட்டில், அவன் தாத்தாவுக்கு உடல்நலமில்லை என்பதால், அவரின் நலனை விசாரிக்க வரும் உறவினர்கள் மற்றும் பரிசோதிக்க வரும் டாக்டர் என, அவனால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.

எனவே, மாடியில் மகனுக்காக தனியாக ஒரு அறை கட்டி கொடுத்தார், அவன் அப்பா. சிறிது நாட்களில், மகனும் மாடிவாசியாகவே ஆகிவிட்டான்.

உடன் பயிலும் நண்பர்கள், 'குரூப் ஸ்டெடி' படிக்க வர, பெற்றவர்களுக்கு மகன் குறித்து மிகவும் சந்தோஷம். பணிப் பெண் மட்டும் மாடிக்கு சென்று, பெருக்கி துடைப்பாள். மாடிக்கு செல்ல படி ஏற வேண்டும் என்பதால், 60 வயதான பெற்றோர் மாடிக்கு செல்வதில்லை.

சில மாதங்களில் அவர்கள் மகன் உடல் இளைக்க, அவன் தாத்தாவுக்கு மருத்துவம் பார்க்க வீட்டுக்கு வந்த டாக்டரிடம், பையன் உடம்பு தேற, 'டானிக்' எழுதித்தருமாறு கேட்டிருக்கிறாள், அவன் அம்மா. அவனை சோதித்து பார்த்த, டாக்டர் அவனுடன் தனிமையில் பேசி, தான் சந்தேகப்பட்ட விஷயத்தை ஊர்ஜிதம் செய்து கொண்டார். பிறகு, அவன் அம்மாவிடம் வந்து...

'தனிமையும், தேர்வு பயமும், போதைப்பொருட்களை சாப்பிடும் நண்பர்களின் பழக்கம் மற்றும் பண வசதி அவனை போதையின் பாதையில் தள்ளியிருக்கிறது.

'நண்பர்களுடன் சேர்ந்து, 'குரூப் ஸ்டெடி' போர்வையில், 'பிரவுன் சுகர்' என்ற போதை பொருளுக்கு அடிமையாகியிருக்கிறான்...' என்று கூறி, சில மருந்துகள் எழுதி கொடுத்துள்ளார். இப்போது, அவன் மருத்துவரின் தீவிர கண்காணிப்பில் மீண்டு வருகிறான்.

இந்த விஷயத்தில் மாணவனை விட, பெற்றோரே அதிக தவறு புரிந்திருக்கின்றனர். தேர்வுக்கு படிப்பவனை தொந்தரவு செய்யக்கூடாது என, எண்ணி அவனை தனி அறையில் கண்காணிப்பின்றி விட்டுவிடுவதும், கேட்கும் போதெல்லாம் பணம் தருவதும், அவர்களை தவறான பாதையில் செல்ல வழி செய்கிறது.

எனவே, பெற்றோர்களே... மாணவப் பருவத்தினருக்கு, அவர்கள் கேட்கும் பணத்தை கொடுப்பதும், அதீத சுதந்திரம் கொடுப்பதும் மற்றும் தனிமையில் விடுவதும் தவறு.

கே.குருமூர்த்தி, சென்னை.






      Dinamalar
      Follow us