PUBLISHED ON : செப் 29, 2024

அகிம்சையின் அரசன் அறவழி புருஷன்
விடுதலை ஈன்ற அன்பின் தேசன்
தாய் மண்ணைக் காக்க வந்த தாசன்
அரிச்சந்திரன் வழிவந்த சத்திய நேசன்!
அருமை தாய்க்கு செய்த சபதம்
அகிம்சை, நேர்மை, சத்தியம்
மூன்றும் கடைசி மூச்சு வரையில்
வரைந்தார் மூன்று கோடுகளாய் நெற்றியில்!
அண்ணலின் சிந்தை மொழி அகிம்சை
அராஜகமான காலனி ஆதிக்கத்தை,
அகந்தையாய் பூட்டிட்ட செவிகளை திறந்ததில்
ஆங்கில அரசு அன்றே பதறியது!
அண்ணல் காந்தியின் அறவழி போராட்டம்
எதிர்முனை தோட்டாக்களை மவுனமாக்கியது
ஒற்றுமையை கற்றுத் தந்த சத்தியாகிரகம்
பெற்றுத் தந்தது ஆனந்த சுதந்திரம்!
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம்
அகிம்சையின் மறுஉருவம் காந்தியின் உன்னதம்
ஆயுதத்தால் வெல்ல முடியாததை
அகிம்சையால் வென்ற மாமனிதர்!
மனதின் எண்ணங்களே வாழ்வினை மாற்றும் வண்ணங்கள்
மனிதனாக இருப்பது மனிதம் அல்ல
மனிதாபிமானத்துடன் இருப்பதே மனிதம் என்ற
மனிதநேயத்தை கற்றுத்தந்த ஆசான்!
அகிம்சை முறையில் வாழ்ந்தவரை இம்சை முறையில் கொன்று போட்டனர் சுயமில்லா வாழ்க்கை வாழ்ந்தவர் இன்றும்
எண்ணில்லா மக்கள் மனதில் வாழ்கிறார்!
வெள்ளையனை வெளியேற்ற
நாட்டின் கொள்ளையனை வெளியேற்றமத நல்லிணக்கத்தை உணர்த்த
ஒற்றுமையை நிலைநாட்ட
தீவிரவாதம் இல்லா பாரதம் உருவாக்க
இன்னும் பிறக்கட்டும் அகிம்சை காந்திகள்!
- புனிதா சங்கர், சென்னை.