PUBLISHED ON : நவ 24, 2024

நண்பனே...
தொலைந்(த்)து விட்ட கால்சுவடுகளை
தேடிப் போகாதே! - அது
கால வெள்ளத்தால் அழிந்து போயிருக்கலாம்!
நண்பனே...
புதிய பாதை உருவாக்கி
புதுமுயற்சியோடு வெளியே வா
புன்னகை ததும்பும் முகத்தோடு
புதிய வாய்ப்புகளை தேடி செல்
வெற்றி நிச்சயம்!
நண்பனே...
தன்னிறைவோடு நீ கொண்ட
வெற்றிகளை மறந்து - என்றோ
தவறுதலாய் வந்த தோல்வியை
மறவாமல் சொல்லும் மானிடர்கள்
மழையில் முளைத்தெழும் காளான்கள்
மழை முடியும் தருணம்
மறைந்து போவர் மண்ணோடு...
உன் வெற்றி நிச்சயம்!
நண்பனே...
மதிகெட்ட சிலரின் பேச்சால்
பாதை மாறி வீழாதே
விட்டில் பூச்சியாய் மாறி
வெளிச்சம் கண்டு மயங்காதே!
வீழ்ந்தது நீ அல்ல - உன்
தவறுகள் தான் - ஆம்
தவறுகள் தான்
வீரத்தோடு வெற்றி கொள் உலகை...
உன் வெற்றி நிச்சயம்!
நண்பனே...
சாதனையின் சிகரத்தை நீ தொடும் போது
தடைகற்களாக இருக்கும் ம(மா)க்களை
படிக்கற்களாக மாற்ற முடியாது தான் ஆனால்
சாதிக்க துடிக்கும் தலைமுறைக்கு உன்னால்
பாதை உருவாக்க முடியும்...
உன் வெற்றி நிச்சயம்!
— ரெஷ்மி சிவகுமார், கோவை.