PUBLISHED ON : ஆக 17, 2025

படித்து பட்டம் பெற
பட்டிணப்பிரவேசம் செய்தாயிற்று...
வாழ்வு வளம் பெற
பிழைப்புக்கும் வழி தேடியாயிற்று!
வந்தேறிகள் ஊர்நாட்டான்
பிழைக்க வந்த பரதேசி - இப்படி
ஏச்சுப் பேச்சுக்களை
கடந்தும் வந்தாயிற்று!
பிழைக்க வந்த இடத்தில்
பிழையாகாமல் காலுான்றி
ஒரு மாமாங்கம் கடந்தாயிற்று!
சொந்த ஊர் மொழி மறந்து மெட்ராஸ் பாஷை
நாவில் நர்த்தனமாடுகிறது!
தோல்வி கண்ட போதெல்லாம்
ஊர் மடி தேடி ஓடுவது
ஒழிந்து போய்
சென்னையே சொந்த ஊரான
விசித்திரமும் நடந்தேறியது!
எல்லையில்லா தேடலில்
வாகை சூடினோம்
புதிய உறவுகள் நட்புகள்
எம் வாழ் நாளேட்டில்
வரவு வைக்கப்பட்டது!
வேரூன்றி வேரடி மண்ணோடு
ஐக்கியமானோம்...
சென்னைவாசி என்ற முகவரியும்
கிடைக்கப் பெற்றோம்!
தலைமுறை தழைத்திட
தருநிழல் தந்த
சென்னை மாநகரமே - உமக்கு
என்ன கைமாறு செய்யட்டும்!
நம்பிக்கையை துணையாக்கி
நீயே தஞ்சமென வரும் சிலருக்கேனும்
அடைக்கலம் தந்து வழிகாட்டி
என் நன்றி கடனை தீர்ப்பேன்!
உரக்க சொல்வோம் பட்டிணத்துக்கு வந்து
கெட்டுப் போனவர்கள் யாருமில்லை...
என்றென்றும் கலங்கரை விளக்கமாய்
ஒளிவீசி வழிகாட்டும்
சென்னை மாநகரமே
வாழிய நீ பல்லாண்டு!
— என்.ரிஷிபாலா, சென்னை.

