PUBLISHED ON : ஜூலை 27, 2025

ஒவ்வொரு ஆண்டும், ஜூலை 29ம் தேதி, சர்வதேச புலிகள் தினம் கொண்டாடப்படுகிறது.
புலிகளை பாதுகாப்பது மற்றும் அவற்றின் வாழிடங்களை பாதுகாப்பது பற்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்த நாள் உருவாக்கப்பட்டது.
கடந்த, 2010ல், ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த புலிகள் உச்சி மாநாட்டில், இந்த நாள் துவங்கப்பட்டது.
அந்த மாநாட்டில், 2022ம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
உலக வனவிலங்கு நிதியம் மற்றும் பிற பாதுகாப்பு அமைப்புகளின் முயற்சியால், இந்த திட்டம் உருவானது.
இருபதாம் நுாற்றாண்டின் துவக்கத்தில், உலகில் ஏறக்குறைய ஒரு லட்சம் புலிகள் இருந்தன. ஆனால், வேட்டையாடுதல், வாழிட இழப்பு, மனித - வனவிலங்கு மோதல்கள் ஆகியவற்றால், 2010ல் புலிகளின் எண்ணிக்கை, மிகவும் குறைந்தது.
இந்த அபாயகரமான நிலையை உணர்ந்து, இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட, 13 நாடுகள் இணைந்து, இந்த இலக்கை அமைத்தன.
இந்த மாநாட்டில், ஜூலை 29ம் தேதி, சர்வதேச புலிகள் தினமாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நாள், புலிகளின் முக்கியத்துவத்தையும், அவற்றை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும் மக்களுக்கு உணர்த்துகிறது.
பெங்கால், இந்தோ-சீன, மலேயன், சைபீரியன், தெற்கு-சீன மற்றும் சுமத்ரான் என, ஆறு வகைகளாக புலிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இவை, அளவு, நிறம் மற்றும் வாழிடத்தில் வேறுபடுகின்றன.
இந்தியாவில், உலகின், 70 சதவீத புலிகள் வாழ்கின்றன. 2022ல், இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை, 3,167 ஆக உயர்ந்தது. இது, இந்த இலக்கில் இந்தியாவின் வெற்றியை காட்டுகிறது.
புலிகளின் வாழிடங்கள், 93 சதவீதம் குறைந்து விட்டதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும். காடு அழிப்பு, நகரமயமாக்கல் மற்றும் விவசாய விரிவாக்கம் ஆகியவை, இதற்கு முக்கிய காரணங்கள்.
ஒவ்வொரு புலியின் கோடுகளும் தனித்தன்மை வாய்ந்தவை. மனிதர்களின் கைரேகைகளைப் போல, இது, அவற்றை அடையாளம் காண உதவுகிறது.
இந்த நாளில், பள்ளிகளில் கல்வி நிகழ்ச்சிகள், புலிகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணிகள், ஆவணப்படங்கள், வனவிலங்கு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.
சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன, புலிகள். அவை சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கின்றன.
இந்த நாள், புலிகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், காடுகள், நதிகள், பிற உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
இந்தியாவைப் போலவே, அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டால், புலிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடியும். இந்த நாளில், புலிகளைப் பாதுகாப்போம் என்ற உறுதியை மீண்டும் உறுதிப்படுத்துவோம்.
-மு. ஆதினி