sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/இணைப்பு மலர்/வாரமலர்/மிஷின் கோழிக் குஞ்சுகள்!

மிஷின் கோழிக் குஞ்சுகள்!

மிஷின் கோழிக் குஞ்சுகள்!


PUBLISHED ON : பிப் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 01, 2026


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோயம்புத்துார், சரவணம்பட்டி. ஆர்.எஸ்.ஜி., இணை சுகாதார அறிவியல் கல்லுாரி. மாணவர் விடுதியின் வரவேற்பறை.

ஷேர் ஆட்டோவிலிருந்து வெகுதுாரம் நடந்து வந்திருந்த, பாலகணேசன் பெரிதாய் மூச்சிரைத்தார். மகனுக்காக, சிக்கன் பிரியாணி சமைத்து எடுத்து வந்திருந்தார். அத்துடன் அச்சு முறுக்கு, தட்டை பாக்கெட்டுகள்.

''பெரியவரே, யாரை பார்க்கணும்?'' என்றார், வரவேற்பறை ஆசாமி.

''எம்.எஸ்சி., ரேடியாலஜி முதலாமாண்டு படிக்கும், அபிமன்யூவை பார்க்கணும்.''

''அறை எண் என்ன?''

''இருநுாத்தி எட்டு!''

''பத்து நிமிஷம் பொறுங்க கூட்டி வரச் சொல்றேன்,'' என்றார், வரவேற்பறை ஆசாமி.

சரியாக, 20 நிமிடங்கள் கழித்து வந்தான், அபிமன்யூ. வயது 21. மாநிறம். உயரம் 170 செ.மீ., சதா கற்பனையில் மிதக்கும் கண்கள்.

அவன் நடையில் அலட்சியம் தெறித்தது. கீழுதட்டை நாக்கால் நக்கியபடி தந்தையை அசூயையாக பார்த்தான்.

''வாடா கன்னுக்குட்டி,'' என்றபடி ஓடிப்போய் மகனைக் கட்டிக்கொண்டார், பாலகணேசன். தந்தையின் அணைப்பிலிருந்து முரட்டுத்தனமாக விடுபட்டான்.

''எல்லாரும் உங்களை பாசக்கார அப்பான்னு நம்பணும்ன்னு டிராமா போடுறீங்களா? வயசுக்கு வந்த மகனை அப்பன் பொது இடத்துல கட்டிப்பிடிக்கிறது. 'வெரி இன்டீசன்ட்' தெரியுமா உங்களுக்கு?''

மேற்தொடைகள் தெரிய பேகிஸ் டவுசர் அணிந்திருந்த, அபிமன்யூ கால் மேல் கால் போட்டு தெனாவெட்டாக அமர்ந்தான்.

''பதினைஞ்சு நாட்களுக்கு முன் தானே என்னை பார்க்க வந்தீங்க. இப்ப எதுக்கு மீண்டும்?'' என்றான்.

''வசதி வாய்ப்பிருந்தா தினமும் கூட வந்து பார்ப்பேன். அம்மாவும் வரேன்னா. அடுத்த தடவை பாத்துக்கலாம்ன்னு சொல்லிட்டேன்,'' என்றார், பாலகணேசன்.

''டாக்டருக்கு படிக்கும் கனவுல இருந்த என்னை, ரேடியாலஜில சேத்து விட்டுட்டு, ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை, திக் விஜயம் எதுக்கு பண்றீங்க?''

''நான் தனியார் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக இருக்கிறேன். அம்மா இல்லத்தரசி. என் மாத சம்பளம் பிடித்தம் போக, 28 ஆயிரம் ரூபாய். உன் அக்காவை ஓரளவு படிக்க வச்சு நல்ல இடத்துல கட்டிக் கொடுத்தேன். உன்னை டாக்டராக்கணுங்கறது தான் என்னோடதும், உன் அம்மாவோட கனவும். 'கோச்சிங் சென்டர்'ல சேத்து உன்னை, 'நீட்' தேர்வு எழுத வெச்சேன். மூணு, 'அட்டம்ப்ட்.' மூணு தடவையும் நீ, நுாறு மார்க்கை தாண்டவில்லை. ஏறக்குறைய கால் கோடி கொடுத்து, 'மேனேஜ்மென்ட் கோட்டா'ல மெடிக்கல் சீட் வாங்க என் பொருளாதார நிலை சம்மதிக்கவில்லை. நீ படிக்கிற கோர்ஸும் டாக்டர் மாதிரி மரியாதைக்குரியது தான்,'' என்றார்.

''நான், 'நீட்'ல சரியா மார்க் வாங்கலேன்னு குத்திக் காட்றீங்களா... அப்பா.''

''இல்லப்பா. யதார்த்தத்தை சொன்னேன்.''

''காலம் பூராவும் நான் ரேடியேஷன்ல வெந்து சாகணும்ன்னு திட்டம் போட்டுட்ட. நீ சரியான, 'சாடிஸ்ட்' அப்பன். அமிர்தத்தை ஊட்டுற மாதிரியே விஷத்தை ஊட்டுவ,'' என்றான், அபிமன்யூ.

''நான், 'சாடிஸ்ட்' அப்பனா?'' வேதனையாய் சிரித்தார், பாலகணேசன்.

''ரேடியாலஜிஸ்ட்டா இருக்கிற எத்தனையோ பேர், 'கேன்சர்' வந்து, 50 வயசிலேயே செத்திருக்காங்க. நிறைய ரேடியாலஜிஸ்ட்கள் குழந்தைப்பேறு இல்லாமல் இருக்கின்றனர்,'' என்றான், அபிமன்யூ.

''ரேடியேஷன்ல சிக்காம பாதுகாப்பாக பணிபுரிய ஆயிரம் வழிகள் உள்ளன. 'கேன்சர்' யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்,'' என்றார், பால கணேசன்.

''எம்.எஸ்சி., ரேடியாலஜிக்கு என்ன, 'ஸ்கோப்' இருக்கு?'' என்றான்.

''என்ன அப்படி கேட்டுட்ட? 'ரேடியாலஜி டெக்னீஷியன், எம்.ஆர்.ஐ., டெக்னீஷியன், சி.டி., டெக்னீஷியன், ஸோனாகிராபர், ரேடியேஷன் சேப்டி ஆபிஸர்' ஆகிய பதவிகளில் ஏதாவது ஒன்றில் அமரலாம். சொந்தமாக நீயே, 'எக்ஸ்ரே யூனிட்' நடத்தலாம்,'' என்றார், பாலகணேசன்.

''தனியே, 'எக்ஸ்ரே சென்டர்' அமைக்க துட்டு தேவைப்படுமே, நீ தருவியா?'' என்றான் நக்கலாக, அபிமன்யூ.

''உன் படிப்புக்காக கல்விக்கடன் அது, இதுன்னு ஊரை சுற்றி கடன் வாங்கி இருக்கிறேன்,'' என்றார்.

''நாளைக்கு நான் வேலைக்கு போனாலும் இந்த கடன்களை எல்லாம் அடைக்க மாட்டேன்!'' என்றான்.

''நீ அடைக்க வேண்டாம். பிழைச்சுக்கிடந்தா நானே அடைச்சிருவேன். பிரியாணி சாப்பிடுப்பா,'' என்றார், பால கணேசன்.

''சன்பிளவர் ஆயில்ல, செத்த பிராய்லர் கோழியை வைச்சு செஞ்ச பிரியாணியா?'' என்றான்.

''ரைஸ்பிரான் ஆயிலும், நெய்யும் போட்டிருக்கோம். கோழி நம்ம வீட்ல வளர்ந்தக் கோழி,'' என்றார்.

''ஏதாவது ஒரு, 'டூ-வீலர்' ஆசாமி நம்ம கோழியை மோதி நசுக்கி தள்ளிட்டு போய்ட்டானா?''

''என்னப்பா எதை சொன்னாலும், எகனைக்கு மொகனையா பேசுற.''

''வரவர உன்னை பார்த்தா வெறுப்பு மண்டுதுய்யா. என்னோட, பிளஸ்2 படிச்சவன் எல்லாம், 'எகனாமிக்கலா டாப்லெவல்'ல இருக்காங்க. எனக்கு மட்டும் ஏனிந்த துரதிர்ஷ்டம்? ஒரு ஒன்றையணா குடும்பத்துல பிறந்திருக்கேன்,'' என்றான்.

''அபிமன்யூ, யாருடனும் உன்னை ஒப்பிடாதே. என்னைப்பார். என் தந்தை, இரண்டாம் கல்யாணம் பண்ணிக்கொண்டு என்னை நடுரோட்டில் நிறுத்தினார். கொடூரமான சித்தி. தன்னந்தனியனாக போராடி எனக்கொரு வாழ்க்கையை அமைத்து, பிள்ளைகளை ஆளாக்கி வருகிறேன். உன் தாய், எட்டு சகோதர, சகோதரிகளுடன் பிறந்தவள். குடும்பச்சூழல் காரணமாக உன் அம்மாவை உன் பாட்டி, பிளஸ் 2க்கு பிறகு படிக்க அனுமதிக்கவில்லை.

''உன் அக்காள் கணவர், தன் தந்தையை ஐந்து வயதில் இழந்தவர். அவர் தனியாக நின்று குட்டிக்கரணம் அடித்து முன்னேறி இருக்கிறார். உனக்கு கீழே உள்ளவர் கோடி அதனை நினைத்து அமைதி நாடு மகனே,'' என்றார், பாலகணேசன்.

''ஏம்ப்பா என்னை பெத்த? இரண்டாவது குழந்தை வேண்டாம் என, என்னை கருச்சிதைவு பண்ணியிருக்கலாமே,'' என்று, மகன் அபிமன்யூ பேசியதை கேட்டு, பொறி கலங்கிப்போனார், பாலகணேசன்.

''நெருப்புத்துண்டங்கள் போல வார்த்தைகளை கொட்டாதே. பின் நீ விரும்பினாலும் அதனை அள்ள முடியாது, மகனே,'' என்றார்.

''அப்படித்தான்ய்யா பேசுவேன்.''

''இந்த தலைமுறை ஆணும், பெண்ணும் படுசுயநலவாதிகளாக இருக்கிங்க. பெற்றோருக்கு, உடன்பிறந்தோருக்கு ஒரு சிறு துரும்பும் கிள்ளிப்போட மாட்டேறீங்க. உங்களைப் பொறுத்தவரை அம்மா ஒரு விலையில்லா ஆயா; அப்பன் ஒரு ஏ.டி.எம்., கார்டு.

''உங்களுக்கு எல்லாம் உழைப்பின் மீது நம்பிக்கை இல்லை. குருட்டு அதிர்ஷ்டமாய் எல்லா வசதி வாய்ப்புகளும் உங்கள் வாசல் கதவைத் தட்ட வேண்டும். சதா அடுத்தவனை பார்த்து ஏக்கமும், போட்டியுமாக பொறாமைபடுறீங்க. உங்களிடம் சுயதிருப்தியும், தன்னிறைவும் இல்லவே இல்லை.

''உன் படிப்பை, பிளஸ் 2வோடு நிறுத்தி, உன்னை ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்பி இருந்தால் உன்னால என்ன செய்திருக்க முடியும். நன்றி உணர்வும், பச்சாதாபமும் இல்லாத சமுதாயம் பாழாகி விடும் அபிமன்யூ,'' என்றார், பாலகணேசன்.

''ஓ! என்னை குற்றம் சாட்டுகிறீர்களோ?'' என்றான்.

''அடித்தால் வலிதாளாமல் அலறுவது இயற்கை தானே? உனக்கு புரிகிற மாதிரி ஒரு உதாரணம் சொல்கிறேன். நாங்கள் போன தலைமுறை மக்கள் எல்லாம் நாட்டு கோழிக்குஞ்சுகள். 21 நாட்கள் தாய்க்கோழி அடைகாத்து குஞ்சு பொரிக்கும். 12 குஞ்சுகள் பொரித்தால் கழுகு தாக்குதல் மற்றும் நோய்கள் தாண்டி, ஏழெட்டு குஞ்சுகள் உயிர் தப்பும். நாட்டுக்கோழிகளின், 'சர்வைவல் ரேட்' 70 அல்லது 80 சதவீதம். இந்த, 'ஜென் இஸட்' தலைமுறை மக்கள், 'மிஷின்' கோழிக்குஞ்சுகள். தாய்க்கோழி இல்லாமல் இயந்திர சூட்டில் குஞ்சு பொரித்து, மிஷின் கோழிக்குஞ்சுகள் வெளியாகும். இவற்றின் தாக்குப்பிடிப்பு திறன் மிகக்குறைவு. இவற்றின், 'சர்வைவல் ரேட்' 20 அல்லது -30 சதவீதம். 'மிஷின்' கோழிக்குஞ்சுகளை உருவாக்கின குற்றத்தில் பெற்றோரின் தலைகால் புரியாத புத்திரபாசமும் அடங்கும்.

''தான் கனவு கண்டு நடக்காததை தன் மகன், மகள் சாதிக்க வேண்டும் என்ற வெறியில் தங்களின் சுயத்தை தொலைத்து விட்டு நிற்கின்றனர், வெள்ளந்தி பெற்றோர். நிறைய பெற்றோர் குடும்பத்தின் சிரம சூழ்நிலையை பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்பதில்லை. இனி, நீ என்னையோ, அம்மாவையோ குற்றம்சாட்டி பேசினால் உன்னை பார்க்க வர மாட்டோம்,'' என்றார், பாலகணேசன்.

''எமோனஷனல் பிளாக்மெயில்!'' என்றான், அபிமன்யூ.

''கடைசியில் ஒரு, 'பஞ்ச் டயலாக்' அடிக்கிறேன் கேள். உன்னை ஏன் கடவுளும், பெற்றோரும் அம்பானியின் மகனாக பிறக்க வைக்கவில்லை என, நீ கேட்கிறாய். எங்களை ஏன், கடவுளும், எங்கள் பிள்ளைகளும் அம்பானியின் பெற்றோராக உயர்த்தவில்லை என, நாங்கள் கேட்கிறோம்!'' என்றார்.

''சரிசரி போதும் யானைக்கும், பானைக்கும் சரி!'' என்று கூறி, பிரியாணியை எடுத்து, 'கபக்கபக்' என்று விழுங்க ஆரம்பித்தான், அபிமன்யூ.

இனி, பெற்றோரை நன்றிகெட்டதனமாக பேசமாட்டான், அபிமன்யூ. மகனை ஓரக்கண்ணால் பார்த்து மந்தகாசப் புன்னகை வெடித்தார், பாலகணேசன்.

- ஆர்னிகா நாசர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us