/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (19)
/
அமெரிக்காவில் என் விருந்தினராக சிவாஜி! (19)
PUBLISHED ON : செப் 28, 2025

சிவாஜி பெயருக்கு காரணம் எம்.ஜி.ஆர்.,
எங்கள் வீட்டு சமையல் அறையை ஒட்டிய பெரிய ஹாலில், ஒரு பிரமாண்ட ஜன்னல் இருக்கும். அதன் வழியே பார்த்தால், 'கால்ப்' விளையாட்டு மைதானம், ஏரி, பசுமையான புல்வெளி என, எல்லாம் தெரியும். சிவாஜிக்கு அங்கு உட்கார்ந்து, இயற்கையை ரசிப்பது மிகவும் பிடிக்கும்.
அன்றும் அப்படி தான், அங்கே ஒரு சோபாவில் அமர்ந்தபடி, இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தார், சிவாஜி. அந்த சமயத்தில் தான், சிவாஜிக்கு தெரியாமல், 'ஷாப்பிங்' சென்ற கமலா அம்மாவும், கிருஷ்ணாவும் உள்ளே வந்தனர். அவர்களை பார்த்த உடனேயே எல்லாவற்றையும் புரிந்து கொண்டு விட்டார், சிவாஜி.
'கமலா இங்க வா. என்ன, 'ஷாப்பிங்' போயிட்டு வர்றீங்களா? என்னென்ன வாங்கினீங்க. எல்லா பையையும் இங்க கொண்டு வா...' என, அவருக்கே உரித்தான குரலில் சொல்ல, அவர்கள் மிரண்டு போயினர்.
தன் பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், லேசான புன்னகையுடன், 'நிறைய எதுவும் வாங்கலை, மாமா. சும்மா ஏதோ ஒண்ணு ரெண்டு பொருட்கள் தான். அமெரிக்கா வந்திருக்கோமேன்னு வாங்கினேன்...' என்றபடியே, தன் கையில் இருந்த பைகளை அவர் முன் வைத்தார், கமலா அம்மா.
மேலோட்டமாக அவற்றைப் பார்த்த சிவாஜி, 'சரி! சரி! ஏதோ ஆசைப்பட்டு வாங்கி இருக்கே. போ, போ...' என, சொல்லி விட்டார். கமலா அம்மாவுக்கு நிம்மதியாக இருந்தது.
சி வாஜியுடன் பல இரவுகள் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். அதில், ஒரு இரவு உரையாடலை என்னால் மறக்க முடியாது. இரவு உரையாடல்கள் நீண்டு, அவருடைய வாழ்க்கை பயணம், அவர் சந்தித்த மனிதர்கள், அவர் எதிர்கொண்ட சவால்கள், சம்பவங்கள் என, இருக்கும்.
அப்படி ஒரு இரவில், அவருக்கு சிவாஜி என்ற பெயர் வந்த வரலாற்றை சொன்னார்...
'கணேசன் என்பது தான், உங்கள் பெயர். ஆனால், உங்களை, சிவாஜி என்று தான், உலகம் கொண்டாடுகிறது. ஈ.வெ.ரா., தான், அந்த பட்டத்தைக் கொடுத்ததாக, சொல்வர். ஈ.வெ.ரா., அந்த பட்டம் கொடுத்தது பற்றி சொல்லுங்களேன்...' என, சிவாஜியிடம் கேட்டேன்.
'கடந்த, 1946ல், திராவிடர் கழகத்தின் மாநாடு நடந்தது. அதில் மேடை ஏற்றுவதற்காக, 'சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்ஜியம்' என்ற பெயரில், ஒரு நாடகம் எழுதினார், அண்ணாதுரை. அந்த நாடகத்தில், சத்திரபதி சிவாஜியாக, எம்.ஜி.ஆர்., தான் நடிப்பதாக இருந்தது.
'ஆனால், நாடக அரங்கேற்றத்துக்கு ஒரு வாரம் இருக்கும் போது தான், அந்த நாடகத்தில் நடிக்க முடியாது என, சொல்லி விட்டார், எம்.ஜி.ஆர்., அந்த சூழ்நிலையில், 'கணேசா, சிவாஜியா நீ நடிக்கிறாயா?' எனக் கேட்டார், அண்ணாதுரை.
'ஆனா, எனக்கு என் மேலேயே சந்தேகம். 'இந்த கணேசனால சத்ரபதி சிவாஜியா நடிக்க முடியுமா?'ன்னு, அண்ணாதுரையிடம் நம்பிக்கை இல்லாமல் கேட்டேன். 'உன்னால முடியும் கணேசா...' என்றதும், நானும் ஒப்புக் கொண்டேன்.
'நான், சிவாஜியாக நடிப்பது என, முடிவான போது, காலை, 11:00 மணி இருக்கும். 90 பக்க வசன தாள்களை என்னிடம் கொடுத்தார், அண்ணாதுரை. மாலை, 6:00 மணிக்கு, அண்ணாதுரை முன் அந்த வசனங்களைப் பேசி நடித்துக் காட்டினேன். அண்ணாதுரையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர்...' என, சிவாஜி என்னிடம் சொல்லும் போது, அவர் குரல் நெகிழ்ந்து போனது.
'எப்படி அவ்வளவு வசனங்களையும் ஒரே நாளில் படிச்சு, மனப்பாடம் பண்ணினீங்க?' என, கேட்டேன்.
'நடிப்பு மேல அப்படி ஒரு வெறி எனக்கு. நம்மை நம்பிக் கொடுத்த வேஷத்துல சிறப்பா நடிச்சு பேர் வாங்கணும்ன்னு நெனச்சேன், செஞ்சேன்...' என்ற சிவாஜி, அந்த நாடகத்தில் நடந்தவற்றை தொடர்ந்தார்...
'எம்.ஜி.ஆருக்கு அளவு எடுத்து தான், சத்ரபதி சிவாஜிக்கான, 'டிரஸ்' தைச்சு வெச்சிருந்தாங்க. அப்புறமா, அதை என் அளவுக்கு, 'ஆல்டர்' பண்ணினாங்க. சென்னை ஹைகோர்ட்டுக்கு எதிர்ல இருந்த ஹால்ல தான் நாடகம் நடந்தது.
'ஈ.வெ.ரா.,வுக்கு இந்த டிராமா, சினிமா எல்லாம் துளியும் பிடிக்காது. ஜனங்களைக் கெடுக்கறதே இவை தான்னு சொல்வார். ஆனாலும், சுயமரியாதை மாநாட்டுல கொள்கைப் பிரசாரமா நாடகம் நடந்ததுனால வந்து பார்த்தார்.
'நாடகம் முடிந்ததும், 'சிவாஜியா நடிச்ச பையனை நான் பார்க்கணுமே'ன்னு, அண்ணாதுரையிடம் கேட்டிருக்கிறார், ஈ.வெ.ரா., அவரிடம் அறிமுகம் பண்ணி வெச்சார், அண்ணாதுரை.
'என்னிடம், 'நீ தான் கணேசனா? இனிமேல் உன் பெயர், சிவாஜி...' என, சொன்னார். நான் நெகிழ்ந்து போனேன். என் அம்மா வெச்ச கணேசனை எல்லாரும் மறந்திட்டாங்க. அன்னைக்கு, ஈ.வெ.ரா., வெச்ச சிவாஜிங்கிற பேர் தான் இன்னைக்கும் நிக்குது...' என, உணர்ச்சிவசப்பட்டு சொன்னார், சிவாஜி.
அவர் சொல்லச் சொல்ல எனக்கும் நெகிழ்ச்சியாக இருந்தது. எம்.ஜி.ஆர்., வாய்ப்பு, சிவாஜிக்கு வந்து, 90 பக்கங்களை மனப்பாடம் செய்து, அண்ணாதுரை, ஈ.வெ.ரா., இருவராலும் பாராட்டப்பட்டு, சிவாஜி என்ற பெயர் வாங்கி... அத்தனையும் ஒரேநாளில் நடந்தது என்பது ஆச்சரியமான செய்தி.
சிவாஜி தொடர்ந்தார்...
'ஈ.வெ.ரா., எனக்கு, சிவாஜி பட்டம் கொடுத்த சில ஆண்டுகளுக்கு பின், பெங்களூரில் நாங்கள் நாடகம் போட்டுக் கொண்டிருந்த சமயம், எங்கள் நாடகத்தைப் பார்க்க, ஈ.வெ.ரா.,வை அழைத்திருந்தோம். அவர் வந்து முழு நாடகத்தையும் பார்த்தார்.
'நாடகம் முடிந்தவுடன் மேடைக்கு வந்து பாராட்டினார். 'நாடகத்தின் போஸ்டர்களில் வெறும், கணேசன் என்று பெயரைப் போட்டிருக்கிறீர்களே... நான் கொடுத்த, 'சிவாஜி' என்ற பட்டத்தையும் சேர்த்து, இனிமேல், 'சிவாஜி கணேசன்' என்றே போடுங்கள்...' என, கம்பெனி நிர்வாகியிடம் சொன்னார். அன்றிலிருந்து என் பெயரை, சிவாஜி கணேசன் என்றே போடத் துவங்கினர்...' என்றார்.
அந்த நாடகத்தில் நடந்த, இன்னொரு வேடிக்கையான சம்பவத்தையும் சிவாஜி சொன்னார்:
அந்த நாடகத்தின் பெயர், 'விதி!' சிவாஜிக்கு வில்லன் கதாபாத்திரம். 'ஹீரோயினின்' மனதைக் கவரும் நோக்கத்தோடு, துப்பாக்கியால், 'ஹீரோ'வை சுட முயல்வார், வில்லன் சிவாஜி. ஆனால், 'ஹீரோயின்' சாதுர்யமாக அந்த துப்பாக்கியைப் பறித்து, அதனாலேயே, வில்லன் சிவாஜியை சுட்டு விடுவார்.
வில்லனாக நடிப்பவர், சிவாஜி அல்லவா? அவரைத் துப்பாக்கியால் சுட்டதும், அவர் கீழே விழுந்து, உடனே உயிர் போய் விட்டால், சரி வருமா?
எனவே, சிவாஜி, தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக துப்பாக்கியால் சுட்டதும், அதற்குரிய நடிப்பை வெளிப்படுத்தி, அதன் பிறகு கீழே விழுந்து, துடிதுடித்து சாவது போல நடிப்பார்.
இந்த காட்சியை பார்த்த, ஈ.வெ.ரா., துப்பாக்கியால் சுடப்பட்டதைத் தொடர்ந்து, காட்சி நீடித்துக் கொண்டே போவதை கவனித்து விட்டு, 'முட்டாளே! உன்னை தான் சுட்டு விட்டாளே... உடனே உயிரைவிட வேண்டியது தானே...' என, சத்தமாக குரல் கொடுத்தாராம்.
ஈ.வெ.ரா., அப்படி சொன்னதும், அது, 'சீரியஸ்' காட்சி என்பதையும் தாண்டி, அரங்கத்தில் இருந்த மக்கள் சிரித்து விட்டனராம்.
இந்த சம்பவத்தை சொல்லி சிரித்தார், சிவாஜி.
ஒ ரு நடிகராக பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று, அபாரமாக நடித்திருக்கிறார், சிவாஜி. ஒரே படத்தில் இரட்டை வேடம், மூன்று வேடங்கள் கூட செய்திருக்கிறார். ஆனால், நவராத்திரி படத்தில், ஒன்பது விதமான கதாபாத்திரங்களில் அவர் நடித்திருக்கிறார் என்பது, மிகப் பெரிய சாதனை.
நவராத்திரி படத்தில், ஒன்பது வேடங்களில் நடித்த அனுபவம் பற்றி, அவரிடம் கேட்க வேண்டும் என, நான் நினைத்தேன். அதற்கான வாய்ப்பு ஒருநாள் கிடைத்தது.
'எப்படி, ஒன்பது வேடங்களில் நடிப்பது என்ற யோசனை வந்தது?' எனக் கேட்டேன்.
'அதற்கு காரணம் ஒரு நாடகம். அந்த நாடகத்தில் ஒருவர், ஒன்பது வேடங்களில் பிரமாதமாய் நடித்திருந்தார். அதுதான் நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களில் நான் நடித்தற்கான இன்ஸ்பைரேஷன்...' என்றார், சிவாஜி.
நாடகத்தில், ஒன்பது வேடங்களா?
அது என்ன நாடகம்?
சிவாஜிக்கு, முன் உதாரணமாக இருந்த அந்த நாடகம் பற்றி அடுத்த வாரம்.
— தொடரும்
எஸ். சந்திரமவுலி