/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நம்மிடமே இருக்கு மருந்து - செண்பகமே... செண்பகமே!
/
நம்மிடமே இருக்கு மருந்து - செண்பகமே... செண்பகமே!
PUBLISHED ON : பிப் 09, 2025

அனைவரையும் ஈர்க்கும் நறுமணம் கொண்டது, செண்பகப்பூ, மர வகையை சேர்ந்த மருத்துவ குணம் கொண்ட மலர், இது.
செண்பக மரப்பட்டையை ஒன்று இரண்டாக இடித்து, 20 பங்கு நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி தினமும் இருவேளை குடித்து வர, நாள்பட்ட வயிற்றுப்புண் குணமாகும்.
செண்பகப் பூவிலிருந்து, நறுமண எண்ணெய் மற்றும் அத்தர் போன்றவை எடுக்கப்படுகின்றன.
செண்பகப்பூ எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால், முடி உதிர்தல் சரியாகும். தலைவலி, கண் நோய்கள் நீங்கும். மூட்டு வாதத்தை குணமாக்கும்.
பூச்சிக்கொல்லி மருந்தாகவும் செயல்படுகிறது.
உடல் வலுவடைய செண்பகப்பூ சிறந்த மருந்தாகும். பூவை நிழலில் உலர்த்தி, பொடி செய்து, அதில், தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறும்.
செண்பகப்பூ பொடியை தினமும் இருவேளை, தேனுடன் கலந்து சாப்பிட்டு வர, பாலியல் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்கம் குறையும்.
செண்பகப் பூ பொடியில் கஷாயம் செய்து காலை, மாலை இருவேளை அருந்தி வந்தால், ஆண்மை குறைவு நீங்கும்.
செண்பகப் பூவை கஷாயம் செய்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நரம்பு தளர்ச்சி நீங்கும்.
செண்பகப்பூவுடன், 100 மில்லி நீர் விட்டு காய்ச்சி, 50 மில்லி காலை, மாலை என, இருவேளை குடித்து வர, மேக நோய்கள், நீர்சுருக்கு, வெள்ளை வெட்டை மற்றும் சிறுநீர் எரிச்சல் போன்றவை குணமாகும்.
செண்பக இலையை அரைத்து சாறு பிழிந்து, அதனுடன் தேன் கலந்து சாப்பிட, வயிற்று வலி குணமாகும். கஷாயம் செய்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து அருந்தி வந்தால், கண் பார்வை தெளிவு பெறும்.
செண்பக மரப்பட்டை, வேப்ப மரப்பட்டை சம அளவு எடுத்து, இடித்து, நான்கு மடங்கு நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் வடிகட்டி, காலை, மாலை என, இரண்டு வேளை குடித்து வர, குளிர் காய்ச்சல் நீங்கும்.
- சோ.ராமு