PUBLISHED ON : செப் 29, 2024

ஞாயிறு - கோதுமை லாடு!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை, வெல்லத்துருவல், நெய் - தலா அரை கப், முந்திரி - தேவையான அளவு, ஏலக்காய்த்துாள் - அரை தேக்கரண்டி, பால் - ஒன்றரை தேக்கரண்டி.
செய்முறை:
முதலில் பாதி நெய்யை வாணலியில் விட்டு சூடாக்கி, உடைத்த முந்திரியை வறுத்து எடுக்கவும். அதே நெய்யில் கோதுமை மாவைச் சேர்த்து, அடுப்புத் தணலைக் குறைத்து, நன்றாக வாசனை வரும்வரை வறுக்கவும். இடையிடையே, சிறிது பாலைத் தெளிக்கவும். மாவு நன்கு வறுபட்டதும் இறக்கி விடவும்.
மிக்ஸியில் சர்க்கரை மற்றும் வெல்லத்தை சேர்த்து பொடிக்கவும். இதையும் கோதுமை மாவுடன் சேர்த்து, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்துாள், மீதமுள்ள நெய் சேர்த்து கலந்து, லாடுகளாகப் பிடிக்கவும்.
***
திங்கள் - சிறுதானிய பால் பாயசம்!
தேவையான பொருட்கள்:
சாமை, வரகு மற்றும் குதிரைவாலி - தலா ஒரு தேக்கரண்டி, பால் - நான்கு டம்ளர், வெல்லம் - அரை கப், முந்திரி, பாதாம், சுக்குத்துாள், ஏலக்காய் துாள் - சிறிதளவு.
செய்முறை:
சாமை, வரகு மற்றும் குதிரைவாலியை, வெறும் வாணலியில் தனித்தனியே போட்டு, மணம் வரும் வரை வறுக்கவும். பின்னர், ஒன்றாகச் சேர்த்து, மூன்று டம்ளர் சூடான பால் ஊற்றி வேக வைக்கவும்.
அரை கப் அளவு வெல்லத்தை, தனியே தண்ணீர் ஊற்றி சூடாக்கிக் கரைத்து சேர்க்கவும். வேகும் போதே முந்திரி, பாதாமை சீவிப் போட்டு, சுக்குத் துாள், ஏலக்காய்த் துாள் சேர்க்கவும். கடைசியாக பால் சேர்க்கவும். விரும்பினால், சிறிதளவு குங்குமப்பூவை பாலில் கரைத்து சேர்க்கலாம்.
செவ்வாய் - துவரை சுண்டல்!
தேவையான பொருட்கள்:
துவரை -- ஒரு கப், கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயத்துாள் - தாளிக்க, உப்பு, தேங்காய் துருவல் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சைத் துவரை கிடைத்தால், அப்படியே தண்ணீர் ஊற்றி வேக விடலாம். குக்கரில் ஒன்று அல்லது இரண்டு விசிலில் வெந்துவிடும். உலர்ந்த துவரையானால், ஊறவைத்து, வேக வைக்கவும். சிவப்பு காராமணி என்றால், இரண்டு விசில்கள் போதுமானது. வெந்ததும் தண்ணீரை நன்றாக வடிக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயத்துாள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்து, வெந்த சுண்டலை சேர்க்கவும். நன்றாக சூடானதும் சிறிதளவு உப்பைத் துாவி தேங்காய்த் துருவலை கலந்து இறக்கவும்.
புதன் - பச்சைப்பயறு பக்கோடா!
தேவையான பொருட்கள்:
முழு பச்சைப் பயறு - ஒரு கப், பச்சைமிளகாய் - 2, இஞ்சி, முந்திரி - உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
முழு பச்சைப் பயறை, ஆறு மணி நேரத்திற்கு முன்பாக ஊறவைத்து வடிக்கவும். பின், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து, ஊறவைத்து வடித்த பயறைச் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
இதனுடன், முந்திரியை துண்டுகளாக்கிச் சேர்த்து, நன்றாக கலந்து, சூடான எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்து எடுக்கவும்.
***
வியாழன் - கடலைப்பருப்பு சுகியன்!
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒன்றரை ஆழாக்கு, உளுந்து - ஒண்ணேகால் ஆழாக்கு, ஜவ்வரிசி - ஒரு தேக்கரண்டி, கடலை பருப்பு, வெல்லம் - தலா ஒரு கப், ஏலக்காய் துாள், தேங்காய் துருவல் - தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசி, உளுந்து மற்றும் ஜவ்வரிசியை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, வடை மாவு பதத்தில் அரைத்து எடுத்தால், மேல் மாவு தயார்.
கடலைப் பருப்பை மலர வேக வைத்து வடிக்கவும். சம அளவு வெல்லம், சிறிதளவு ஏலக்காய்த்துாள் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். விரும்பினால், தேங்காய்த்துருவல் சிறிதளவு சேர்க்கலாம். பின்னர், சிறிய உருண்டைகளாக உருட்டி, மேல் மாவில் தோய்த்து எடுத்து, சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்கவும்.
***
வெள்ளி - தினை சர்க்கரைப் பொங்கல்!
தேவையான பொருட்கள்:
தினை - ஒரு கப், பயத்தம் பருப்பு - கால் கப், வெல்லம் - கால் கப், நெய், முந்திரி, திராட்சை, ஏலக்காய் துாள் - தேவையான அளவு.
செய்முறை:
தினையை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, நான்கரை மடங்கு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி போட்டு, அடுப்பை குறைந்த தணலில் வைத்து வேக விடவும்.
பயத்தம் பருப்பை மலர வேக வைக்கவும். இதை அப்படியே தண்ணீரோடு, வெந்த தினையில் சேர்க்கவும்.
சம அளவு வெல்லத் துருவலுடன் சிறிது தண்ணீர் விட்டு, இளம் கம்பி பதத்தில் பாகு காய்ச்சி வடிகட்டிச் சேர்க்கவும்.
நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து, ஏலக்காய்த்துாளுடன் பொங்கலில் சேர்க்கவும். மேலாக, சிறிதளவு நெய் விட்டு இறக்கவும்.
***
சனி - வேர்க்கடலை உருண்டை!
தேவையான பொருட்கள்:
எள் - ஒரு கப், ஆளி விதை - ஒரு தேக்கரண்டி, வறுத்த வேர்க்கடலை - கால் கப், வெல்லம் - 2 கப்.
செய்முறை:
எள், ஆளி விதை, இரண்டையும் ஒன்றாக வறுத்து, ஆறவைத்து மிக்ஸியில் போடவும். இதனுடன், வறுத்த வேர்க்கடலை சேர்த்து, ஒன்றும் பாதியுமாக பொடிக்கவும். சம அளவு வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.