
''எப்பப் பாத்தாலும் மாமியாரும், மருமகளும் கீரியும், பாம்பும் போலவே இருக்கீங்களே... ஏன்?'' என்று, மனைவி மைதிலியிடம் எரிச்சலாய் கேட்டான், ரகு
''நான் மனுஷியாத் தான் இருக்கேன்; உங்கம்மா தான் கீரிப்பிள்ளை மாதிரி, எப்ப, எப்படி என்னை புடுங்கித் திங்கலாம்னு அலையுறாங்க,'' என்றாள், மைதிலி.
அப்போது, அங்கு வந்த மாமியார் ஜானா, ''ஏன்டி... போட்டுக் கொடுக்கறத உங்க வீட்டில, ஒரு பாடமா சொல்லி தந்தாங்களோ... உனக்கு அது கை வந்த கலையா இருக்கே,'' என்று, மருமகளை சாடினாள்.
''பாத்தீங்களா... உங்களுக்கு முன்னாடியே எப்படி சண்டைக்கு வர்றாங்கன்னு... எல்லாம், உங்க சப்போர்ட் இருக்கறதாலே தான்.''
''பாருடா ரகு... உன்னையவே குறை சொல்றா. எல்லாம் நீ கொடுக்கற இடம்; பெரியவங்க சின்னவங்கன்னு வித்தியாசமில்லாம பேசறா.''
''பாத்தீங்களா... ஆட்டை கடிச்சு, மாட்டை கடிச்சு கடைசியா உங்களையே கடிக்கறாங்க.''
''டேய் உன்னை ஆடு, மாடோட சேக்கறாடா... நீ என்னடான்னா பேசாம நிக்கறே. உங்கப்பாவா இருந்தா, ஓங்கி ஒரு அறை விட்டிருப்பார்.''
''என்னை அடிக்கச் சொல்லி உங்களை துாண்டி விடுறாங்க பாருங்க,'' என்று கூறி அழ ஆரம்பித்தாள், மைதிலி.
''ரெண்டு பேரும் சண்டைய நிறுத்துறீங்களா, இல்லையா,'' கோபத்தில் எகிறினான், ரகு.
இருவரும் அமைதியாகவே, ''இப்ப எதுக்கு சண்டை?'' அலுப்பாய் கேட்டான்.
''உனக்கு தோசைக்கு தொட்டுக்க சட்னி தான் பிடிக்கும்ன்னு அதை செஞ்சேன்டா, ரகு... இப்ப வந்த இவளுக்கு என்ன தெரியும்... உனக்கு இட்லி பொடி தான் பிடிக்கும்ன்னு, எல்லா தோசையிலும் பொடிய தடவி வைச்சிட்டா... அரக்கி.''
அதற்குள், சமையல் அறைக்கு சென்று விட்ட மைதிலி, “சட்னியா, இட்லி பொடியா?'' என்று சத்தமாய் கேட்க, ''இதுக்குத் தான், காலங்காத்தால இந்த பட்டிமன்றமா? ரெண்டுமே எனக்கு தேவையில்ல; ஆபீசுக்கு நேரமாச்சு நான் கிளம்பறேன்,'' என்று, சாப்பிடாமலேயே சென்றான், ரகு.
''உன்னால தான் என் பிள்ளை சாப்பிடாம போறான்,'' என்றாள், ஜானா.
''உங்களாலே தான், அவர் சாப்பிடாம போறார்,'' என்றாள், மைதிலி.
வாசலில், 'பைக்'கை கிளப்பிக் கொண்டிருந்த ரகு, இதைக் கேட்டு, 'மறுபடியுமா...' என்று அலுத்துக் கொண்டவன், வண்டியை கிளப்பினான்.
'அலுவலகம் விட்டு வீட்டிற்கு வந்தாலே, வீடு குருஷேத்ரமா இருக்கு; இந்த மாமியார் - மருமகள் பிரச்னையை எப்படி தீர்க்கிறது...' என்ற யோசனையில் ஆழ்ந்தவன், சிக்னலை பார்க்காமல் வண்டியை விட, மினி வேனில் மோதியது. சரேலென்று சறுக்கிய வண்டி, கொஞ்ச தூரம் போய் டிவைடரில் மோதியதில், கால், கைகளில் லேசான அடி.
''ஏய்... நீ சாக என் வேன் தான் கிடைச்சதா?'' சண்டைக்கு வந்தான், வேன்காரன்.
ஒரு வழியாக ஆபிசிற்கு வந்தவனுக்கு, சக அலுவலக ஊழியர்கள், முதலுதவி செய்து, 'லீவு போட்டு வீட்டுக்கு போ...' என்றனர்.
'வீட்டிற்கா...' என்று, 'ஜெர்க்' ஆனவன், ''பெரிய அடி ஒண்ணும் இல்ல,'' என்று சமாளித்து, வேலையில் மூழ்கினான். அவனுக்குத் தானே தெரியும்... வீட்டுக்கு போனால், இதை வைத்தே உருவாகும் பிரச்னையில், தான் வேக வேண்டும் என்று!
''என்ன ரகு... முடியலன்னா, 'லீவு' போட்டுட்டு வீட்டுக்கு போகலாமில்ல,''என்றார், மேனேஜர்.
''இருக்கட்டும் சார்,'' என்றான், சோர்ந்த குரலில்.
அவன் குரலில் என்ன உணர்ந்தாரோ, மதிய உணவு வேளையின் போது, ரகுவை கூப்பிட்ட மேனேஜர், ''என்ன விஷயம் ரகு... உங்கம்மாவுக்கும், மனைவிக்கும் ஒத்துப் போகலையா?'' என்று விசாரித்தார்.
''ஆமாம் சார்... சமாளிக்க முடியல,'' என்றவன், தன் தாயும், மனைவியும் தினமும் முட்டிக் கொள்வதை கூறினான்.
''கவலைய விடுங்க... நான் ஒரு யோசனை சொல்றேன். எங்க வீட்டிலயும் இதே மாதிரி தான், எங்கம்மாவும், மனைவியும் தொட்டதற்கெல்லாம் சண்டை போட்டாங்க. நானும், என்னென்னவோ, முயற்சி பண்ணி பாத்துட்டேன். எதுவும் சரிவரலை. கடைசியில, இந்த யோசனை தான், 'சக்ஸஸ்' ஆனது. நீங்களும் இதை முயற்சி பண்ணிப் பாருங்க,'' என்று கூறி, அந்த யோசனையை கூறினார்.
மாலை அலுவலகம் முடியும் நேரத்தில், மேனேஜர் சொன்னபடி, மொபைல் போனை, 'ஆப்' செய்தவன், 'ஓவர் டைம்' வேலை பார்த்து விட்டு இரவு, 10:00 மணிக்கு வீட்டுக்கு சென்றான்.
அலுவலகம் முடிந்து இன்னும் வரவில்லையே என்ற கடுப்பில் இருந்தாள், மைதிலி.
ரகு வீட்டிற்குள் நுழைந்ததும், ''ஏன் லேட்? மொபைலை, 'ஆப்' செஞ்சுட்டு, எங்க போயிட்டு வர்றீங்க?'' என்று கேட்டு, திட்ட ஆரம்பித்தாள், மைதிலி.
அறைக்குள் இருந்து வெளியே வந்த ஜானா, ''என்னைக்கும் இல்லாம, இன்னைக்கு ஏன் லேட்டா வந்திருக்கான்... இவனை இப்படியே விட்டா, தப்பு மேல தப்பு செய்ய ஆரம்பிச்சுடுவான். எங்க போனான்னு சொல்ற வரைக்கும் விடாதே,'' என்று மருமகளுடன் சேர்ந்து கொண்டாள்.
''சொல்லுங்க... கேட்கிறேன்ல... எங்க போனீங்க?''
''ஆபிஸ் நண்பன் விசுவின் வீட்டுக்கு போயிருந்தேன்,'' என்றான்.
''நீங்க சொல்லும் போதே தெரியுது அது பொய்ன்னு... உண்மைய சொல்லுங்க,'' அதட்டினாள், மைதிலி.
மென்று விழுங்கியபடி, ''சினிமாவுக்கு போயிருந்தேன்,'' என்றான்.
''என்ன படம்? எந்த தியேட்டர்?'' என, கேள்விகளை எழுப்பினாள்.
''மகராசி படம்; சூரி தியேட்டர்.''
''மறுபடியும் பொய்... மகராசி படம், ரைட் தியேட்டரில் ஓடுது,'' என்றாள் கடுப்புடன்.
''மைதிலி... இங்கே வாடி... இவன் மேல சிகரெட் வாசனை வருது,'' என்றாள், மாமியார் ஜானா.
''இது வேறயா... எத்தனை நாளா இந்த பழக்கம் நடக்குது?'' கோபமானாள், மைதிலி.
''நமக்கு தெரியாம அடிக்கடி வெளியே போவான்... கேட்டா காத்து வாங்க போறேம்பான்...'' ஒத்து ஊதினாள், ஜானா.
''எத்தனை பொய் சொல்வீங்க...''
''இல்ல மைதிலி... சும்மா எங்க கிளப்பில் சீட்டாடிட்டு வந்தேன். போதுமா?''
''அப்படியா... ஒரு கட்டில் எத்தனை கார்டுகள்ன்னு சொல்லுங்க...''
'என்ன இப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்கிறா...' என்று மனதிற்குள் நினைத்தபடி, ''அது வந்து... நான் எண்ணலை,'' வழிந்தான்.
''பால் வாங்கறத குறை; காசு அதிகமாகுதுன்னு சொல்ற நீயாடா, சிகரெட்டுக்கு, 100 ரூபாய் செலவழிக்கறே... சுயநலவாதி,'' தன் பங்கிற்கு பேசினாள், ஜானா.
''உடம்பு பூரா பொய்,'' என, ஆத்திரப்பட்ட மைதிலி, ''இன்னைக்கு மட்டும் மன்னிச்சு விடறேன்; இனிமே இப்படி செய்தா, விவாகரத்து தான்,'' என்று மிரட்டினாள்.
''இது அநியாயம்... சிகரெட் குடிக்கறதுக்கெல்லாம் விவாகரத்தா?''
''அவனவன் குறட்டை விடறதுக்கே விவாகரத்து பண்ணறான். பேப்பரெல்லாம் படிக்கறதில்ல போல,'' என்றாள் கிண்டலாய்!
''பாவம் மைதிலி... இன்னும் அவன் சாப்பிடலை போல,'' இரக்கம் காட்டினாள், ஜானா.
'பிளான் ஒன் சக்ஸஸ்...' என, மனதிற்குள் ரகுவிற்கு ஒரே கொண்டாட்டம். தன் மகிழ்ச்சியை வெளி காட்டாமல் அமைதியாக இருந்து கொண்டான்.
மறுநாள் அலுவலகத்தில், மேனேஜரிடம் விபரம் சொல்ல, ''வெரிகுட்; இன்னைக்கு அடுத்த பிளானை நடத்து,'' என்றார்.
அதேபோன்று, அலுவலகம் முடிந்து மாலையில், கால் போன போக்கில் சுற்றினான். 'நைட் ஷோ' சினிமாவுக்கும் போய் விட்டு, அதிகாலை, 2:00 மணிக்கு வீட்டுக்கு வந்து கதவை தட்டினான், ரகு. யாரும் கதவை திறக்கவில்லை.
அரைமணி நேரம் கழித்து வந்தாள், ஜானா.
''டேய்... எங்கடா போயிட்டு வர்றே... பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியுது. மைதிலி செம கோபத்தில் இருக்கா... உள்ளே போ,'' என்றாள்.
உள்ளே போனதும், கைகளை கட்டியபடி, ''வாங்க மிஸ்டர் தறுதலை... வீட்டுக்கு வர நேரமா இது? எங்க போனீங்கன்னு புளுக ஆரம்பியுங்க,'' என்றாள், மைதிலி அடக்கப்பட்ட கோபத்துடன்.
''அது வந்து... மைதிலி... கல்யாண ரிசப்ஷன்,'' என்றான், தடுமாற்றத்துடன்.
''யாருக்கு... எங்கே?''
''என்ன கோர்ட்ல வக்கீல் மாதிரி கேட்கறே... அலுவலக, 'கொலீக்' கலா வீட்டு, 'ரிசப்ஷனு'க்கு தான் போயிருந்தேன். நண்பர்களுடன் பேசிட்டு இருந்ததுல, கொஞ்ச நேரம் ஆகிடுச்சு,'' என்றான், இழுத்தபடி.
''பச்சை பொய்; கலாவுக்கு இன்னும் கல்யாணமே ஆகல.''
''கல்யாணம் ஆகாட்டி தானே, 'ரிசப்ஷன்' வைப்பாங்க,'' ரகுவின் குரலில் நடுக்கம்.
''சாப்பிட்டீங்களா, இல்லையா?''
''சாப்பிட்டேன்; ஆனா, மறுபடி பசிக்குது.''
''போங்க, பொய் மன்னா, போயி கொட்டிக்கங்க,'' ஆத்திரத்தில் பாத்திரங்களை உடைத்தாள்.
''சோறு போடாதேடி,'' என்றாள், மாமியார் ஜானா.
''மனசு கேட்கல அத்தே,'' அழுதாள், மைதிலி.
''இது சரிப்பட்டு வராது; நீ காலையில உங்க வீட்டுக்கு போய் உங்கப்பாவ கூட்டிட்டு வா. பேசி பைசல் பண்ணிடுவோம்,'' என்றாள், தீர்மானமாய் ஜானா.
''சரி அத்தை,'' என, தலையாட்டினாள், மைதிலி.
'ஆஹா... ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டாங்க... இனி நாளையிலிருந்து வழக்கம் போல், ஆபீஸ் விட்டதும் வீட்டுக்கு வந்துட வேண்டியது தான்...' என, தனக்குள் பேசிக் கொண்டான்.
மறுநாள் காலை -
மருமகள் போட்ட காபியை மாமியாரும், மாமியார் செய்த உப்புமாவை மருமகளும் பாராட்டிக் கொண்டனர். அதைப் பார்த்த ரகு, 'சக்ஸஸ்!' என்றான், தன்னை மீறிய உற்சாகத்துடன்!
மாதவி