PUBLISHED ON : ஏப் 05, 2026

மாலை நேரம். அம்மாவின் வருட சிரார்த்தம் நன்றாக நடந்த மன நிறைவில், ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்திருந்தார், சிவராமன்.
''என்ன ரொம்ப அசதியா இருக்கா. உடம்புக்கு ஒண்ணுமில்லையே?'' என, கேட்டபடி வந்தாள், சிவராமனின் மனைவி, மைதிலி.
''அதெல்லாம் ஒண்ணுமில்லை, மைதிலி. பாவம் உனக்கு தான் வேலை அதிகம். காலையிலே சீக்கிரம் எழுந்து, சாஸ்திரிகள் வரதுக்குள்ளே சமையல், பட்சணங்கள் முடித்து, அவர் கூப்பிடும் போதெல்லாம் ஓடி வந்து எல்லாத்தையும் எப்படித்தான் நீ சமாளிக்கிறேன்னு எனக்கு தெரியலை. உட்கார்ந்து, எழுந்து சாஸ்திரிகள் சொல்றதை பண்றது சிரமமா இருந்தாலும், உடல் வலியை விட, மன வலி தான் அதிகமா இருக்கு. சிரார்த்தம் பழைய நினைவை கிளறி விடுது,'' என்றார், சிவராமன்.
''பங்குனி மாதம் வந்தாலே பரபரப்புத்தான். இன்னும், 15 நாளில், அப்பா சிரார்த்தம் வருது. சவும்யா லீவு போட்டு வந்தது ஒத்தாசையா இருந்தது. அப்பா திதிக்கும் வரேன்னு சொல்லியிருக்கா,'' என்றாள், மைதிலி.
பேசிக்கொண்டிருந்த போதே அவரருகே மகன், கார்த்திக் மனைவி, சவும்யாவுடன் வந்தான்.
''அப்பா, சவும்யா உங்ககிட்டே பழைய கதைகளை கேட்டுத் தெரிஞ்சிக்கணும்ன்னு ஆசைப்படறா,'' என்றான்.
''நான் கேள்விப்படறதெல்லாம் உண்மையா, மாமா. நீங்க இன்னிக்கு சிரார்த்தம் பண்ணியது உங்களோட...'' என்று சொல்லும் போது இடைமறித்த, சிவராமன், ''ஆமாம், சவும்யா, இன்னிக்கு நடந்தது என்னை ஸ்வீகாரம் எடுத்த அம்மாவோட சிரார்த்தம். இன்னும், 15 நாள்ல வரப்போற சிரார்த்தம் என்னோட ஸ்வீகார அப்பாவுக்கு,'' என்றார்.
''கார்த்திக் அரையும் குறையுமா சொன்னார். அதான் உங்ககிட்டயே கேட்கலாம்ன்னு, நினைத்தேன்,'' என்றாள், சவும்யா.
பழைய கதையை சொல்ல ஆரம்பித்தார், சிவராமன்:
எங்க அப்பா ஊரில் உபாத்யாயம் பண்ணிட்டுருந்தார். நாங்க, நான்கு குழந்தைகள். அப்பாவோட வருமானத்தில படிக்க வைக்கிறது கஷ்டமா இருந்தது. அப்பாவோட ஒரே தங்கை, லட்சுமி. அவளை சொந்தத்திலே கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தாங்க. வீடு, வயல்ன்னு நிறைய சொத்து. குழந்தை இல்லை. உன்னோட பெரிய பையனை எனக்கு தத்து கொடு. நான் நல்லா படிக்க வைக்கிறேன்னு கேட்டாங்க. அப்பாவுக்கு தங்கை மேலே பாசம் அதிகம். அம்மாவுக்கு என்னை தத்து கொடுப்பதற்கு இஷ்டமில்லை. எனக்கு படிப்பில ஆர்வம் அதிகமா இருந்ததால அப்பா தத்து கொடுப்பதற்கு ஒத்துக்கிட்டாங்க.
ஸ்வீகாரம் கொடுப்பதற்கு சடங்கு உண்டு. அந்த சடங்கை பண்ணி, சிவராமன் எங்களோட வாரிசுன்னு ஊருல எல்லாருக்கும் தெரியணும் என்பதற்காக, எனக்கு உபநயனம் பண்ணி வைச்சாங்க. அப்பாகிட்ட வேதம் கத்துகிட்ட சாஸ்திரிகள், நாகேஸ்வரன் தான் எல்லாம் பண்ணி வைச்சார்.
அதனால, என்னோட அத்தை லட்சுமி, சட்டப்பூர்வமா என்னோட, அம்மா ஆனாள். அத்தையோட கணவர் வெங்கட்ராமன் சட்டப்பூர்வ, அப்பா. என்னை நல்ல பள்ளிக்கூடத்திலே சேர்த்து படிக்க வெச்சார். பள்ளிக்கூடம் முடிச்சு என்னை காலேஜ் படிக்க அனுப்பணும்ன்னு ஆசைப்பட்டார். நாம என்ன ஆசைப்பட்டாலும், நமக்கு என்ன எழுதியிருக்கோ, அதுதானே நடக்கும்.
பள்ளிக்கூடத்திலே கடைசி வருடப் பரீட்சை முடிஞ்சது. காலேஜ்ல சேரறதுக்கு, 'பார்ம்' வாங்கி அப்பா வெச்சிருந்தார். எங்க கிராமத்திலே விஷக் காய்ச்சல் வந்தது. என்னை மகனா ஸ்வீகாரம் எடுத்த லட்சுமி அம்மா அந்தக் காய்ச்சலில் இறந்து போயிட்டாங்க. அம்மா போன பின், ஸ்வீகார அப்பா ரொம்பவே தளர்ந்து போயிட்டார். பதினைந்து நாளுல அவரும் போயிட்டார். அவருக்குப் பிறகு அவருடைய சொத்துகள், அவருடைய ஸ்வீகார புத்திரனான எனக்குத் தான் சேரணும்ன்னு உயில் எழுதி வைக்கலை.
அப்பாவோட உடன் பிறந்தவங்க, இறந்து போனவருக்கு வாரிசு இல்லாததனால சொத்து அவர்களுக்கு போகணும்ன்னு சொன்னாங்க. என்னை ஸ்வீகாரம் பண்ணிட்டதால், சொத்து எனக்கு வரணும்ன்னு சொன்னோம். இந்த கேஸ் கோர்ட்டுக்குப் போச்சு.
இந்துக்கள் வழக்கப்படி சடங்கு செய்து ஸ்வீகாரம் எடுத்துகிட்டார், அப்பா ஸ்தானத்தில இருந்து ஊரறிய உபநயனம் பண்ணி வைச்சார்ன்னு நாங்க சொன்னோம். அந்த காலத்தில இந்த உபநயனம் பண்றதுக்கு பத்திரிகை அடிக்கிற பழக்கம் இல்லை. வீட்டிலே தான் இதெல்லாம் செய்வாங்க.
எங்களுக்கு ஒரே சாட்சி, சடங்கு, உபநயனம் பண்ணி வைச்ச சாஸ்திரிகள், நாகேஸ்வரன் தான். அப்பாகிட்ட வேதம் கத்துக்கிட்டவர். குடும்ப நண்பர். அதனால, அவர் சாட்சி சொன்னா எல்லாம் சரியாயிடும்ன்னு இருந்தோம்.
கோர்ட்ல, 'அந்த மாதிரி சடங்கு நடக்கலை. நான் உபநயனம் பண்ணி வைக்கலை'ன்னு பொய் சாட்சி சொல்லிட்டார், நாகேஸ்வரன். இதை நாங்க யாரும் எதிர்பார்க்கலை. அதனால, வாரிசு இல்லாத சொத்துக்கு ஸ்வீகார அப்பாவோட உடன் பிறந்தவங்களுக்குத்தான் உரிமைன்னு அவங்க பக்கம் தீர்ப்பாயிடுச்சு. கிராமத்தில எல்லாருக்கும் தெரிஞ்சு பண்ணி வைச்ச சடங்குகளை இல்லைன்னு, எங்கிட்ட வேதம் படிச்சவனே பொய் சாட்சி சொல்லி இருக்கானேங்கிற அதிர்ச்சியிலே அப்பாவும் காலமாயிட்டார்.
பள்ளிப் படிப்பில நல்ல மார்க் வாங்கினதால எனக்கு கவர்ன்மென்ட் உத்தியோகம் கிடைச்சுது. ஊரை விட்டு நாங்க எல்லாருமே சென்னைக்கு வந்தோம். அப்பா போனதால, கூடப் பிறந்தவங்களை படிக்க வைச்சு, சகோதரிகளுக்கு கல்யாணம்ன்னு எல்லா பொறுப்பும் எனக்கு வந்தது.
''கோர்ட் உங்களை வாரிசு இல்லைன்னு சொன்ன பிறகுமா, நீங்க வருஷா வருஷம் ரெண்டு பேருக்கும் சிரார்த்தம் பண்றீங்க,'' என, கேட்டாள், சவும்யா.
''கோர்ட் என்ன வேணா சொல்லலாம், சவும்யா. ஆனால், மனசாட்சின்னு ஒண்ணு இருக்கே. வேத மந்திரங்களை சொல்லி, என்னை மகனா ஏத்துக்கிட்டவங்களுக்கு அந்த மகன் செய்ய வேண்டிய காரியங்களை பண்ணாமல் இருக்கிறது தப்பு இல்லையா. சொத்து எனக்கு கிடைக்கலைங்கறதுக்காக என்னுடைய கடமையை நான் செய்யாம இருக்கலாமா? நீ சொல்ற மாதிரி தான் ஊர்காரங்களும் சொன்னாங்க. ஆனால், என் உயிர் இருக்கிற வரைக்கும் என்னுடைய கடமையை நான் பண்ணித்தான் ஆகணும்.
''எனக்கு ஒரு வருத்தமும் இருக்கு. மூத்த பையனா இருந்தும் என்னை பெத்தவங்களுக்கு காரியம் பண்றதுக்கு எனக்கு தகுதியில்லை. ஆனால், எங்க அம்மா கடைசி வரைக்கும் என்னோட இருந்தாங்க. அவளை நல்லா பார்த்துக்கிட்ட ஆத்ம திருப்தி எனக்கிருக்கு. சாஸ்திரிகள் பொய் சாட்சி சொன்னதிலே எனக்கு உபநயனம், சந்தியா வந்தனம் பண்றதில இருந்த நம்பிக்கை விட்டுப் போச்சு. குழந்தைகளுக்கு சின்ன வயசில பூணுால் போடணும்ன்னு சொல்லுவாங்க. ஆனால், கார்த்திக் காலேஜ் படிக்கும் போதுதான், அவனுக்கு பூணுால் போட்டேன். நான் சந்தியா வந்தனம் பண்றதில்லை. அதனால, அவனையும் கட்டாயப்படுத்தல,'' என்றார், சிவராமன்.
''நீங்க அப்புறம் ஊர் பக்கம் போகலையா,'' என்றாள், சவும்யா.
''பிறந்து, வளர்ந்த ஊராச்சே, சவும்யா. மண் வாசனை விட்டுப் போகுமா. அதனால, போயிருக்கேன். சொத்தைப் பிரிச்சுக்கிட்டவங்க அதை வித்துட்டு ஊரை விட்டே போயிட்டாங்க. 'உங்க சொத்தை அபகரிச்சவங்க யாரும் சுகப்படலை'ன்னு ஊருல சொன்னாங்க. ஒரு வேளை சொத்து எனக்கு கிடைச்சிருந்தா, நானும் தவறான வழியில போய் சொத்தை அழிச்சிருப்பேனோ என்னமோ. செல்வத்தை விட, கல்வி தான் பெரிசுன்னு கடவுள் நினைச்சி எனக்கு சொத்து கிடைக்காமல் இருக்க முடிவு பண்ணியிருக்கலாம். என்னோட உடன் பிறந்தவங்க எல்லாரும் நல்லா இருக்காங்க. அது போதும்,'' என்றார், சிவராமன்.
''அப்பா, நீங்க ஊருக்கு போனப்போ, நாகேஸ்வரன் சாஸ்திரிகளை பார்க்கலையா. ஏன் பொய் சாட்சி சொன்னீங்கன்னு கேட்கலையா,'' என்றான், கார்த்திக்.
''பொய் சாட்சி சொன்னதிலே ஊருல அவருக்குக் கெட்ட பேர் வந்தது. அதனால, அவர் ஊரை விட்டே போயிட்டார். ஆனால், என்னைப் பார்க்கணும், பேசணும்ன்னு சொன்னாராம். நான் பார்க்க விரும்பலை. எனக்கு என் மேலே நம்பிக்கை இல்லை. கோபத்தில நான் ஏதாவது சொல்லிடப் போறேன்னு அவரைப் பார்க்க வேண்டாம்ன்னு நினைச்சேன்,'' என்றார், சிவராமன்.
ச ற்று நேரத்தில் அவர் ஊரில் கூடப் படித்த, சாம்பசிவம் அங்கு வந்தார்.
''சிவராமா எப்படியிருக்கே. ஒரு விஷயம் சொல்லிட்டுப் போகணும்ன்னு வந்தேன். நாகேஸ்வரன் சாஸ்திரிகள் சென்னையிலே வளசரவாக்கத்தில பையன் வீட்டுல இருக்கார். நான் அவர் பையனை போய் பார்த்தேன். 'அப்பாவுக்கு, 'ஹார்ட்ல ப்ளாக்' இருக்கு. சின்ன, 'சர்ஜரி' பண்ணனும்ன்னு டாக்டர் சொல்றார். பணத்துக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன்'னு சொன்னான். நான் எனக்குத் தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி என்னால முடிஞ்சதை செய்யறேன்னு சொன்னேன். சாஸ்திரிகள் செய்த தப்புக்கு இது தண்டனை,'' என்றார், சாம்பசிவம்.
''கொஞ்சம் இரு சாம்பசிவம்,'' என்று சொல்லி, உள்ளே சென்று கையில் ஒரு கவருடன் வந்தார், சிவராமன்.
''சாம்பசிவம், இந்த கவர்ல, 50 ஆயிரம் ரூபாய்க்கு செக் இருக்கு. இதை, நாகேஸ்வரனின் சாஸ்திரிகள் பையன் கிட்ட கொடு. என்னுடைய மொபைல் போன் நம்பரைக் கொடு. ஏதேனும் உதவி வேணும்னாலும் கேட்க சொல்லு,'' என்றார், சிவராமன்.
''சிவராமா, உனக்கு வர வேண்டிய சொத்து உனக்கு வராதது அவரால தான். அவருக்கு உதவி செய்ய நினைக்கிறியா,'' என்றார், சாம்பசிவம்.
''நீங்க எதுக்கு அவருக்கு கொடுக்கணும்,'' என்றனர், கார்த்திக்கும், சவும்யாவும்.
''எனக்கு சொத்து வரக்கூடாதுன்னு எழுதியிருக்கு. அதுக்கு அவர் ஒரு கருவி அவ்வளவு தான். நம்ம ஊர்க்காரர். நமக்குத் தெரிந்தவர். அவருக்கு உதவி செய்ய வேண்டியது என் கடமை. இப்படி செய்யறதனால, எனக்கு அவர் மேலே எந்த வருத்தமும் இல்லைன்னு தெரிந்தா அவரோட மனசுக்கும் நிம்மதி கிடைக்கும்,'' என்றார், சிவராமன்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். என்ற குறளுக்கு எடுத்துக்காட்டாக இருந்த, சிவராமனை அனைவரும் அதிசயமாக பார்த்தனர்.
கே.என்.சுவாமிநாதன்
