
முன்கதைச் சுருக்கம்: தீ பாவின் அம்மா மஞ்சுளாவுக்கு, மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மிகவும் அபாயகரமான அறுவை சிகிச்சை என்பதால், ஜாக்கிரதையாக கவனித்துக் கொள்ள அறிவுறுத்தினார், டாக்டர். இன்னும் சில நாட்களில், 'மண்டை ஓட்டில் இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது...' என்று கூறி 'டிஸ்சார்ஜ்' செய்து வீட்டிற்கு, அனுப்பினார், டாக்டர், நஞ்சுண்டன். அறுவை சிகிச்சைக்காக, ஆராதனா மருத்துவமனையில் கட்டிய, ஆறு லட்ச ரூபாயை, நகைகளை விற்று திருப்பிக் கொடுத்தாள், தீபா. தன் வீட்டிலிருந்த காரை விற்பனை செய்வதாக, நாளிதழில் விளம்பரம் செய்தாள், தீபா. இதற்கிடையில், அடுத்த, சர்ஜரிக்கு அம்மா, தயார் என்று டாக்டர் சொல்ல, இரண்டாவது அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனையில், 'அட்மிட்' செய்ய, ஆம்புலன்ஸில், அம்மாவுடன், சென்றாள், தீபா. அப்போது, தீபாவின் காதலன் திலகன், போன் செய்து, தான் எம்.பி.ஏ., தேர்வில், முதல் மதிப்பெண் பெற்று தேர்வானதைச் சொல்லி, அன்றைய நாளிதழில் வெளிவந்த விளம்பரம் ஒன்றை பார்க்க சொன்னான்.
அன்றைய நாளிதழை மடித்து எடுத்து, வாகனத்தில் அம்மாவின் அருகில் அமர்ந்தாள், தீபா. ஆம்புலன்ஸ் சிறு குலுக்கல்களுடன் நகர ஆரம்பித்தது.
தினசரியை பார்த்தாள். தீபா. அதன் நான்காவது பக்கத்தில், 'நீபா ஷிப்பிங் ஏஜன்சிஸ்' நிறுவனத்துக்கு பொது மேலாளர் தேவை. பின்வரும் தகுதியுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு, விண்ணப்பிக்கலாம்: என்று விளம்பரத்தில் அச்சாகியிருந்தது.
அதற்குள், தீபாவின் போன் ஒலித்தது. சிலகன் தான்.
“சொல்லு, திலக்.' 'பட்டுன்னு, 'கட்' பண்ணிட்டே?
“அம்மாவை மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போயிட்டிருக்கேன், திலக்.
'விளம்பரத்தைப் பார்த்தியா. எனக்கு நிச்சயம், 'ஹெல்ப்' பண்ணுவாருன்னு சொன்னியே... இப்ப முத்துராமன் சாரும் அங்க இல்ல போலயிருக்கே.' என்றான்
“நான் முத்துராமன் அங்கிளுக்கு போன் செய்து விசாரிச்சிட்டு உன்னைக் கூப்பிடறேன், திலக், 'என்று தொடர்பை துண்டித்தாள்.
'அம்மா!' என்றாள், பரபரப்பாக. தன் பார்வையை, தீபாவை நோக்கித் திருப்பினாள், மஞ்சுளா.
'அம்மா, நம்ப கம்பெனியில் இப்ப புயல் வீசிட்டிருக்கு. முத்துராமன் அங்கிளையும் வேலைலேர்ந்து துரக்கிட்டாங்க. அவர் பதவிக்கு ஆள் கேட்டு விளம்பரம் வத்திருக்கு.'
யாருக்கு என்ன நேர்ந்தால் என்ன என்பதுபோல், தீபாவை சலனமின்றி பார்த்தாள், மஞ்சுளா.
தீபா, தன் அம்மாவிடம் கம்பெனி பற்றி பேசிக்கொண்டிருந்த அதே அதிகாலையில், ஆராதனா தன் அம்மாவின் எதிரில் அமர்ந்து, அதே கம்பெனி பற்றி, ஒரு கோப்பைத் திறந்து வைத்தபடி பேசிக் கொண்டிருந்தாள்.
யுவராஜ், தன் துப்பறியும் நிறுவனம் மூலம் கண்டுபிடித்துக் கொடுத்திருந்த தகவல்கள் அந்தக் கோப்பில் இருந்தன. அவற்றின் பக்கங்களில் பல இடங்களில், சிகப்பு மசியால் அடிக்கோடிட்டிருந்தாள். அவற்றை மட்டும் குறிப்பிட்டு, அவன் குரல் சற்றுக் கவலையுடன் ஒலித்தது.
'ஞானசேகரன் அங்கிள் பிசினஸ்ல நிறைய தப்பு பண்ணியிருக்காருமா. அவரோட, 'ஷிப்பிங் கம்பெனி'க்கு நல்ல பேரு இருக்கும் போது, இந்தக் கடத்தல் வேலையெல்லாம் அவர் செஞ்சிருக்கவே வேண்டாம். அவரா செஞ்சிருக்க மாட்டாருன்னு தான் இன்னும் சில விஷயங்களை, யுவராஜை விட்டு ஆழமா விசாரிக்கச் சொல்லியிருந்தேன். கொஞ்சம், 'ஷாக்கிங்'கான தகவல்லாம் கெடைச்சிருக்கு.'
வெளியார் யாரிடமும் முகம் காட்ட விரும்பாத அவள் அம்மா, ஆராதனாவுடன் இருக்கும்போது மட்டும் இயல்பாக இருப்பாள். கண்ணாடி தொட்டியில் நீந்தி விளையாடும் மீன்களைப் பார்வையிட்டு கொண்டே, 'சொல்லு,' என்றாள். அந்த வார்த்தை குழறலாக வந்தாலும், புரிந்து கொள்ள கற்றுக்கொண்டிருந்தாள், ஆராதனா.
'அஷ்வந்த்ன்னு நாசிக்ல பிசினஸ் பண்ற ஒரு ஆளு. அவன், 'தீபா ஷிப்பிங் கம்பெனி' மூலமா கோதுமை, பருப்புலாம் ஏற்றுமதி பண்ணிட்டிருந்தான். அவன்தான், ஞானா அங்கிளுக்கு நெருக்கமாகி, மெதுவா வலை விரிச்சிருக்கான். வெறும் பணத்தாசைல அவர் மாட்டல. அவன்கிட்ட ஏதோ ஒரு ஆதாரத்தை வெச்சு அங்கிளை, 'பிளாக்மெயில்' பண்ணியிருக்கான்னு சந்தேகப்படறான். யுவராஜ். அது என்ன ஏதுன்னு கண்டுபிடிக்க இப்ப அவன், நாசிக் போயிருக்கான்மா.'
'உன்னையும், வருணையும் அவங்க வீட்ல எதிரியாப் பார்க்கறாங்க. இன்னும் ஏன் மேல மேல அவங்களுக்காக நீ கஷ்டப்படறே?'
காற்றும், ஒலியுமாக அம்மா பேசியதை புரிந்துகொண்டு, தலையசைத்தாள், ஆராதனா.
'உன்கிட்டதாம்மா. ஞானசேகரன் அங்கிள்ன்னு சொல்றேன். நானும், வருணும் அவரை அன்பா, ஆசையா அப்பான்னுதான் கூப்புட்டோம். எங்களைப் பெத்த அப்பன் நம்மை அனாதரவா விட்டுட்டு போயிட்டாரு. ஆனா, அங்கிள் பொறுப்பெடுத்துக்கிட்டு கவனிக்கலைனா, நான் எம்.பி.ஏ., முடிச்சிருப்பேனா? அதுல டாக்டரேட் வாங்கிருப்பேனா? இன்னிக்கு இருக்கற பெரிய பதவியில இருப்பேனா?'
'அவர் அத்தனையும் செஞ்சது ஒரு குற்ற உணர்ச்சில. உங்க மேல இருக்கற பாசத்துல இல்லன்னு உனக்குத் தெரியாதா?'
“தர்மத்துக்கு பயப்படறவங்களுக்கு தானம்மா குற்ற உணர்ச்சி இருக்கும்? அவருக்கு இருந்த செல்வாக்குக்கு, அன்னிக்கு அவர் அலட்சியமா போயிருந்தா, நாம கோர்ட்டுக்கே போயிருந்தாலும் கூட, ஒண்ணும் பண்ணியிருக்க முடியாது. அதை மறக்கக்கூடாது.'
அவள் அம்மா நிமிர்ந்து பார்த்து, ஆராதனாவின் தலையை ஆதுரத்துடன் வருடிக்கொடுத்து, 'இந்த நல்ல குணத்தை மட்டும் மாத்திக்காத,' என்று அன்பு கசியர் சொன்னாள்.
மஞ்சுளாவை அறுவை சிகிச்சையறைக்குள் கூட்டிப்போனதும், மருத்துவமனைக்கு வெளியே வந்தாள், தீபா.
முத்துராமனுக்கு போன் செய்தாள்.
'அங்கிள், தீபா பேசறேன்.'
“எப்படிம்மா இருக்கே? அம்மா எப்படியிருக்காங்க? இன்னிக்கு பேப்பர்ல காரை விக்கப் போறதா விளம்பரம் பார்த்தேன். மனசுக்கு கஷ்டமாயிருந்துச்சு.'
''நானும் பேப்பரை' பார்த்தேன்... எனக்கும் கஷ்டமாயிருந்துச்சு, அங்கிள். உங்களை ஏன். ஜி.எம்., பதவியிலேர்ந்து துாக்கிட்டாங்க?' என்று சற்று தயக்கத்துடன் கேட்டாள்.
'அப்படில்லாம் ஒண்ணுமில்ல. தீபா. என் பதவிக்கு எந்த ஆபத்தும் இல்ல. எம்.டி., கல்யாண் மேத்தா நெறைய வியாபாரத்துல கவனம் செலுத்த வேண்டியிருக்கு. அவருக்கு இந்த, 'ஷிப்பிங் பிசினஸ்' புதுகன்றதால எனக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு கொடுத்து, 'ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டரா' பதவி உயர்வு தான் கொடுத்திருக்காரு. சென்னை மட்டுமில்லாம, மும்பை, கொல்கத்தா, கொச்சின்னு நான் அடிக்கடி போக வேண்டியிருக்கும். அதனால, இங்க என் நாற்காலி காலியாயிருக்கு. அதுக்குதான் விளம்பரம் பண்ணியிருந்தோம்.'
தீபாவுக்கு அந்தச் செய்தி பெரும் ஆறுதலாக இருந்தது.
“அப்பாடா... புது ஜி.எம்., எடுக்கற, 'இன்டர்வியூ'வுல நீங்க தான இருப்பீங்க, அங்கிள்?'
'என் கூட, எம்.டி.,யும், இன்னும் ரெண்டு டைரக்டர்ஸும் இருப்பாங்க. ஏன் கேக்கறே?'
'திலகனை உங்களுக்குத் தெரியும் தானே... நம்ம கம்பெனில, 'இன்டர்ன்ஷிப்' செய்தவன். அவன் இப்ப எம்.பி.ஏ., முடிச்சிருக்கான். அதுவும் நல்ல ரேங்க்ல. நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியிருந்தேனே. அவன் இந்தப் பதவிக்கு கரெக்ட்டா இருப்பான், அங்கிள். உங்களை வந்து, 'மீட்' பண்ணச் சொல்லவா?'
எதிர்முனை சற்று நேரம் மவுனம் சாதித்தது.
'அங்கிள்?' என்றாள் பதற்றத்துடன், தீபா.
'திலகன் புத்திசாலி. கறுகறுப்பான பையன். இப்ப நேர்ல வந்து பார்த்தா, தப்பாயிடும். விண்ணப்பிக்க சொல்லும்மா. என்னால முடிஞ்சதை நிச்சயம் செய்யறேன்.'
'தேங்க்ஸ் அங்கிள்.' இந்தச் செய்தியை, திலகனிடம் அவள் பகிர்ந்துகொள்ள, அவன் எண்ணை அழைக்கும் முன், போன் ஒலித்தது; எடுத்தாள்.
'மேடம். பேப்பர்ல விளம்பரம் பார்த்தோம். காரை எப்ப வந்து பார்க்கலாம்?'
'இப்ப வெளிய வேற வேலையா வந்திருக்கேன். சாயந்திரம், 4:00 மணிக்கு வாங்க,' என்று தொடர்பைத் துண்டித்தாள்.
மஞ்சுளாவுக்கு, இரண்டாவது அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்தது என்று கையுறைகளைக் கழற்றியபடியே புன்னகையுடன் சொன்னார், டாக்டர் நஞ்சுண்டன்.
''இப்ப, 'செக்' பண்ண வரைக்கும், மூளையில பெரிய பாதிப்பில்லம்மா. வலது கையும், காலும் முன்ன மாதிரி ஒத்துழைக்காது. பேச்சு தெளிவா இருக்காது. வேகமா சாப்பிட முடியாது. கவனமாப் பாத்துக்கிட்டா, ஏழெட்டு மாசத்துல தானா நடக்கவும், சாப்பிடவும் பழகிருவாங்க.'
மஞ்சுளாவுக்கு கொடுக்க வேண்டிய மருந்துகளைப் பட்டியலிட்டு விளக்கினார், டாக்டர்.
'ஒரு வாரத்தில வீட்டுக்கு கூட்டிட்டுப் போலாம். ஆனா. பிசியோதெரப்பியும், ஸ்பீச் தெரப்பியும் விடாம பண்ணனும்,'
'அதுக்கெல்லாம் நான் ஏற்பாடு பண்ணிருவேன், டாக்டர்,” என்றாள், தீபா.
தனக்கு முன்னால் வைக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஒவ்வொன்றாகப் புரட்டினார், முத்துராமன்.
வந்திருந்த விண்ணப்பங்களை அவருடைய உதவியாளர் பார்த்து, அதில் பன்னிரண்டை மட்டும் நேர்காணலுக்கு தேர்வு செய்து அவர் பார்வைக்கு அனுப்பியிருந்தார்.
திலகனின் விண்ணப்பம் மூன்றாவதாக இருந்தது. அதைத் தனியாக எடுத்து வைத்தார்.
அடுத்தடுத்த படிவங்களைப் புரட்டியவர், ஒரு குறிப்பிட்ட விண்ணப்பத்தை பார்த்ததும், திகைத்தார்.
அவர் சற்றும் எதிர்பாராத நபரிடமிருந்து வந்திருந்த அந்த விண்ணப்பத்தை மட்டும் வெகுநேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.
பூங்காவின் பெரிய மர நிழலில் காத்திருந்தாள், தீபா. மோட்டார் சைக்கிள் ஒலியைக் கேட்டாலே எழுந்து பார்ப்பதும், ஏமாந்து மீண்டும் அமர்வதுமாக பொறுமையின்றி நகம் கடித்து கொண்டிருந்தாள். தானியங்கி குழாய் சுழன்று சுழன்று புல்வெளிக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தது. காதலர்கள் சிலர் அங்கங்கே ரகசியம் பேசிக் கொண்டிருந்தனர்.
மன உறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது. பாரதியார் முப்பது நிமிடக் காத்திருத்தலுக்குப் பிறகு, தீபாவின் முகம் உற்சாகமானது. அதோ திலகன். வண்டியை நிறுத்தி, ஸ்டாண்ட் போட்டுவிட்டு, பூங்காவில் நுழைந்தான்.
அவளுக்கு மிகவும் பிடித்த நீலவரிகள் கொண்ட முழுக்கைச் சட்டை. லெதர் பெல்ட். உயர்தர ஷூக்கள். சிமென்ட் பாதையில் நடந்து, அவளை நெருங்கினான்.
'ஏய், எவ்வளவு டென்ஷனா காத்திருக்கேன், தெரியுமா? ஏன் போன் எடுக்கல?'
பதில் சொல்லாமல், அவளருகில் உட்கார்ந்தான், திலகன்.
'யூ லுக் ஸோ ஸ்மார்ட், திலக். ஸ்வீட்ஸ் எங்கே?'
'ஸ்வீட்டா? வர கோபத்துல உன் கழுத்தை நெரிக்காம விட்டாலே பெரிசு,' என்று, திலகன் படபடத்தபோது, அதிர்ந்தாள், தீபா.
'ஏய், ஒழுங்கா சொல்லுடா. என்ன ஆச்சு? 'இன்டர்வியூல' நீ நல்லா பண்ணலியா?' என, கவலையுடன் கேட்டாள், தீபா.
பூங்காவின் கேட்டை வெறித்துக்கொண்டு பேசலானான், திலகன்...
'இன்டர்வியூ காலைல நடந்தது. கேட்ட கேள்விக்கெல்லாம் டாண் டாண்ணுதான் பதில் சொன்னேன். மத்தியான, 'லஞ்ச்' கம்பெனிலயே குடுத்தாங்க. சாயந்திரம் 4:00 மணிக்கு, 'ரிசல்ட்' சொல்றோம்ன்னு, 'வெயிட்' பண்ண வெச்சாங்க. 12 பேர் வந்திருந்தாங்க. அதுல, எட்டு பேரு புதுசு. நாலு பேர் மட்டும் வேற கம்பெனில வேலை பார்த்த அனுபவத்தோட இருந்தாங்க.'
'எவ்வளவு பேர் வந்திருந்தா என்ன? நான் தான், முத்துராமன் அங்கிள்கிட்டே உனக்காகச் சொல்லியிருந்தேனே!'
'அவர் தான! கிழிச்சாரு. தெரிஞ்சவர் மாதிரி காட்டிக்கவே இல்லை. 'இன்டர்வியூ' பண்ண, நாலு பேர்ல என்னை மடக்கி, மடக்கி கேள்வி கேட்டதே அவர்தான்.
'அப்புறம், 'ட்ரெய்னி'யா வேணா, 'அப்ளை' பண்ணிப் பாருங்க'ன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டாரு.'
'நான் மறுபடி அவர்கிட்ட பேசவா?'
“பேசி... ஜெனரல் மேனேஜர் பதவிக்கு ஆளைத் தேர்ந்தெடுத்தாச்சு. அது யாருன்னு தெரிஞ்சா நீ துடிச்சுப் போயிருவ!'
'சொல்லு, திலக், யாரு, 'செலக்ட்' ஆனாங்க?'
'ஆராதனா.'
வேரோடு ஒரு மரம் தன் மீது சாய்ந்து விட்டது போல் அதிர்ந்து, நிமிர்ந்தாள், தீபா.
''என்னது' அவதான் ஏதோ ஒரு கம்பெனில நல்ல வேலையில இருந்தாளே!' “உன்னைப் பழிவாங்கறதுக்காக, 'தீபா ஷிப்பிங் ஏஜன்சீஸ்'க்கு, 'அப்ளை' பண்ணி, அங்க வந்து உக்கார திட்டம் போட்டிருக்கா. தீபூ. இதுல நடுவுல நான் மாட்டிக்கிட்டு அசிங்கப்பட்டு நிக்கறேன்.'
-தொடரும்
- சுபா

