
திறமையான கணக்கு ஆசிரியர், ராகவன். அரசுப்பள்ளியில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்குப் பாடத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.
கணக்கை பார்த்து பயந்து ஓடும் மாணவனையும் எப்படியும், 50 மார்க் வாங்க வைத்து விடுவார், ராகவன். ஒவ்வொரு ஆண்டும் அவரிடம் படிக்கும் மாணவர்களில் குறைந்தபட்சம், இரண்டு பேராவது, 'சென்டம்' வாங்கி விடுவர். பலர், 80 மார்க்குக்கு மேல் வாங்கி விடுவர்.
விடுமுறை நாட்களில் அவராகவே மாணவர்களை அழைத்து, சிறப்பு வகுப்புகளை நடத்துவார். ஆனால், சமீபகாலமாக முன்பு போல பாடம் நடத்துவதில், அவர் ஆர்வம் காட்டுவதில்லை. எதையோ இழந்ததை போன்ற மனநிலையில் இருந்தார்.
ராகவனிடம் படித்த பல மாணவர்கள் நல்ல நிலையில், பெரிய பொறுப்புகளில் இருந்தனர். இதுகுறித்து மகிழ்ச்சியும், பெருமையும் அடைய வேண்டியவர் மனதில், ஏனோ எதிர்மறையான எண்ணம் ஏற்படத் துவங்கி விட்டது.
சொ ந்த வேலையாக சென்னைக்கு சென்றிருந்தார், ராகவன். ஊர் திரும்ப பேருந்துக்காக காத்திருந்த போது, அவரை கடந்து சென்ற, 'பிஎம்டபிள்யூ' கார், 'சடன் பிரேக்' அடித்து நின்றது. அதிலிருந்து இறங்கிய, 30 வயது மதிக்கத்தக்க இளைஞன், ராகவனை நோக்கி வந்தான்.
''சார், எப்படி இருக்கீங்க?'' என்ற இளைஞனை, ராகவனுக்கு அடையாளம் தெரியவில்லை.
அவரது பார்வையில் இருந்து இதை புரிந்து கொண்ட அந்த இளைஞன், ''சார், நான் உங்க மாணவன், கிஷோர்,'' என, அவருக்கு ஞாபகப்படுத்தினான்.
ஆர்வம் ஏதும் காட்டாமல், ''ஓ அப்படியா?'' என்றார், ராகவன்.
''ஆமாம், சார். இப்ப நான், ஒரு எம்.என்.சி., கம்பெனியிலே பெரிய பதவியில் இருக்கேன். எல்லாம் உங்க தயவு தான், சார். நீங்க கத்துக் கொடுத்த கணக்கு பாடம் தான் சார், என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு. வாங்க சார். எங்க போகணும்ன்னு சொல்லுங்க. 'டிராப்' பண்ணிடறேன்,'' என்றான்.
''இல்லேப்பா. நான் ஊருக்குப் போய்க்கிட்டிருக்கேன். நான் பார்த்துக்கறேன்,'' என்றார்.
தன் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டி, ''சார், ஏதாவது வேணும்ன்னா தயங்காம உடனே போன் பண்ணுங்க, சார். ப்ளீஸ்,'' என்றான், கிஷோர்.
அவன் நீட்டிய விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டார், ராகவன்; புன்னகைத்தவாறே விடை பெற்றுச் சென்றான், கிஷோர்.
ராகவனுக்கு எரிச்சலும், கோபமும் உண்டானது.
'என்கிட்டே படிச்ச பையன், பெரிய காரில் போறான். நான் இன்னமும் பஸ்சுக்குக் காத்துகிட்டிருக்கேன். உதவி வேணும்ன்னா போன் பண்ணுங்கன்னு சொல்லி, விசிட்டிங் கார்டை வேற நீட்டிட்டுப் போறான். இவன் உதவி வாங்கி, பொழைக்கிற நிலைமையிலா நான் இருக்கேன்?' என, அவன் கொடுத்த விசிட்டிங் கார்டை துாக்கி வீச நினைத்தவர், பின் ஏனோ மனம் மாறி, அதை தன் பையில் வைத்தார்.
ராகவனுக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் இருந்தனர். பி.எப்., லோன், சொசைட்டி லோன், அது, இது என வாங்கி, ஒரு வீட்டைக் கட்டி விட்டார்.
இரண்டு பெண்களும், பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் டிகிரியை முடித்து, சரியான வேலையின்றி, கிடைத்த வேலையை செய்து கொண்டிருந்தனர். பையன், கடைசி வருடம், பி.இ., படித்துக் கொண்டிருந்தான். எல்லா பிடித்தமும் போக கையில் வரும், 30 ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு திண்டாடினார்.
தன்னிடம் படித்த பையன்கள், காரும், பெரிய இடத்தில் வில்லாவும் வாங்கி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பணத்தை தண்ணீராய் செலவு செய்கின்றனர். போதாக்குறைக்கு பார்க்கும் போதெல்லாம், 'எல்லாம் உங்களால் தான், சார்; ஏற்றிவிட்ட ஏணி...' என்கின்றனர். ஆனால், நானோ இன்னமும் ஒரு பழைய மோட்டார் சைக்கிளில் தான் ஸ்கூலுக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்.
இதெல்லாம் நினைத்த போது கோபமும், எரிச்சலும் ஒரு சேர வந்தது. எல்லாம் நம் தலைவிதி என, தன்னைத்தானே நொந்து கொண்டார், ராகவன்.
அ ன்று பள்ளியில் அவருக்கு, 'ப்ரீ பீரியட்' ஒன்று இருந்தது. வழக்கமாக, 'ப்ரீ பீரியடில்' அவர், 'ஸ்டாப் ரூமில்' போய் உட்கார்ந்து கொள்ள மாட்டார். ஏதாவது ஆசிரியர் வராத வகுப்பிற்கு சென்று, கணிதப் பாடத்தை நடத்துவார். ஆனால், அன்று, அமைதியாக, 'ஸ்டாப் ரூமில்' உட்கார்ந்து கொண்டிருந்தார்.
அப்போது, உடன் பணியாற்றும், பாலகிருஷ்ணன் அங்கே வந்தார்.
''சார், இப்பெல்லாம் நீங்க முன்னே மாதிரி இல்ல. ரொம்ப, 'டல்'லா இருக்கீங்க. ஏதாவது பிரச்னையா சார்? என்கிட்டே, 'ஷேர்' பண்ணலாம்ன்னு நினைச்சா சொல்லுங்க. இல்லேன்னா வேணாம்,'' என்றார்.
சிறிது நேர மவுனத்திற்குப் பின், பாலுவிடம் பேசத் துவங்கினார், ராகவன்...
''உங்ககிட்டே சொல்றதுக்கென்ன, பாலு? என்கிட்டே படிச்ச பசங்கள்லே நிறைய பேர், பெரிய வேலைகள்லே இருக்காங்க. பெரிய பெரிய காரில் போறாங்க. நான் இன்னும் பழைய மோட்டார் சைக்கிள்லே தான் போய் வந்துகிட்டிருக்கேன்.
''மாசம் கையிலே, 30 ஆயிரம் ரூபாய் தான் வருது. இன்னும், நாலு வருஷத்துல, பணி ஓய்வு வந்துடும். என்னோட ரெண்டு பொண்ணுங்களுக்கும் இன்னும் சரியான வேலை அமையலை. கல்யாணம் வேற பண்ணி வைக்கணும்.
''அவ்வப்போது, என்கிட்டே படிச்ச பசங்க, 'அப்படியிருக்கேன், இப்படியிருக்கேன்'னு சொல்லும்போது எனக்கு எரிச்சலாக வருது. போன வாரம் கூட, மெட்ராஸ் போயிருந்தப்ப, கிஷோர்ன்னு ஒரு மாணவன், எம்.என்.சி., கம்பெனி ஒன்றில், பெரிய பதவியில் இருப்பதாகவும், உதவி ஏதாவது வேணும்ன்னா போன் பண்ணுங்கன்னு விசிட்டிங் கார்டை நீட்டிட்டு, காரில் ஏறிப் போயிட்டான்,'' எனக் கூறி முடித்தார், ராகவன்.
சிறிது நேரம் அமைதி நிலவியது.
''இதுதான் உங்க பிரச்னையா, சார். ஒரு விஷயத்தை நீங்க புரிஞ்சிக்கலை. எப்பவும் மத்தவங்களை மேலே ஏத்தி விட்டுட்டு ஏணி, அங்கேயே தான் இருக்கும். சில சமயங்களில் கீழே கூட விழுந்து கிடக்கும். அதுதான் ஏணிக்குப் பெருமை.
''நீங்க கார்ல போய், உங்ககிட்டப் படிச்ச பசங்க பஸ்சுலேயோ, ஷேர்ஆட்டோவிலேயோ போனாத்தான் வருத்தப்படணும். சமயங்களில் மாணவர்கள் உங்களைப் புகழ்ந்து பேசும் போது, 'எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கலையே'ன்னு, உங்க மேல பொறாமை கூட பட்டிருக்கேன், சார்.
''நீங்க பெரிய அதிர்ஷ்டசாலி, சார். ஆமா, உங்க மாணவன் கிஷோர், உதவி தேவைப்பட்டா, போன் பண்ணச் சொன்னான் இல்ல. உங்க பொண்ணை சாப்ட்வேர் வேலைக்கு சிபாரிசு செய்ய கேட்க வேண்டியது தானே சார்,'' என்றார், பாலகிருஷ்ணன்.
அமைதியாக இருந்தார், ராகவன்.
''கிஷோர், சென்னையில் உங்களைப் பார்த்தப்ப கண்டுக்காம போயிருக்கலாம். ஆனா, அவன் அப்படி செய்யாம உங்களைத் தேடி வந்து பேசியிருக்கான். ஏன்னு கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க.
''அவன், உங்களை ஒரு குருவா மதிக்கிறான். நீங்க அவனுக்கு செய்த உதவியை நெனைச்சி பார்க்கிறான். உங்களுக்கு குருதட்சணையா திருப்பி ஏதாவது செய்யணும்ன்னு நினைக்கிறான்.
''அதனால் தான் தன்னோட விசிட்டிங் கார்டைக் கொடுத்து, தேவைப்படறப்ப போன் பண்ணுங்க சார், காத்திருக்கேன்னு சொல்லியிருக்கான். நீங்க இதை சரியா புரிஞ்சிக்காம, வேற மாதிரி புரிஞ்சிகிட்டு அவன் மேல கோபப்பட்டு உங்களை நீங்களே வருத்திக்கிறீங்க.
''இதே நானா இருந்தா, அப்பவே அந்த பையன்கிட்டே, 'என் பொண்ணுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுடா'ன்னு, உரிமையோட கேட்டிருப்பேன் தெரியுமா?'' என்றார், பாலகிருஷ்ணன்.
யோசித்தார், ராகவன். ஏதோ புரிவது போல இருந்தது.
ஒரு வாரம் போனது. ராகவனின் நடவடிக்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை, கவனித்தார், பாலகிருஷ்ணன். முன்பு போலவே உற்சாகமாய் கணக்கு பாடம் நடத்த துவங்கியிருந்தார்.
அன்று அவர் வகுப்பை கடந்து சென்ற போது, தன் வகுப்பு மாணவர்களிடம் ராகவன் பேசியது காதில் விழுந்தது. நின்று கவனித்தார்.
''நீங்கல்லாம் நல்லா படிச்சி பெரிய வேலைக்கெல்லாம் போகணும். அதுதான் எங்களை மாதிரி ஆசிரியர்களுக்கெல்லாம் பெருமை; மகிழ்ச்சி.''
அன்று, 'ஸ்டாப் ரூமில்' ராகவனை சந்தித்தார், பாலகிருஷ்ணன்.
''என்ன சார். இப்ப பழைய உற்சாகம் வந்திருச்சு போல.''
''ஆமா பாலு. போன வாரம் நீங்க சொன்னதை பொறுமையா யோசிச்சிப் பார்த்தேன். நீங்க சொன்ன, 'லாஜிக்' சரின்னு பட்டுது. என்னோட சூழ்நிலை, இயலாமை என்னை அப்படி தவறா யோசிக்க வெச்சிடுச்சி. வீட்டுக்குப் போய், கிஷோர் கொடுத்த விசிட்டிங் கார்டைத் தேடி எடுத்து, அவனோடு பேசினேன்.
''என் பெரிய பொண்ணுக்கு, அவனோட சாப்ட்வேர் கம்பெனியிலே வேலை வாங்கி தர முடியுமான்னு கேட்டேன். 'என்ன சார் முடியுமான்னு கேட்கறீங்க. உங்க மகளை, அவரது விபரங்களை என் மெயிலுக்கு அனுப்ப சொல்லுங்க. உடனே வேலைக்கு ஏற்பாடு பண்ணிடறேன்'னு, சொன்னான்.
''அவனோட மெயில் ஐ.டி.,க்கு, தன்னோட விபரங்களை உடனே அனுப்பினா, என் பொண்ணு. முந்தா நேத்து கம்பெனியிலே இருந்து என் பொண்ணுக்கு, 'அப்பாயின்ட்மென்ட் ஆபர் லெட்டர்' மெயில் பண்ணியிருந்தாங்க. சம்பளம், 40 ஆயிரம் ரூபாய். உடனே, வேலையிலே சேரவும் சொல்லியிருக்காங்க.
''ஏணி மத்தவங்களை ஏற்றிவிட உபயோகமா இருக்கணுமே தவிர, தான் மேலே ஏறணும்ன்னு ஆசைப்படக் கூடாதுன்ற உண்மையை, உங்க மூலமா உணர்ந்துட்டேன்.
''நான் பைக்லேயும், என்னோட ஸ்டுடண்ட்ஸ் கார்லேயும் போறது தான் எனக்கு பெருமை அப்படிங்கறதையும் புரிஞ்சிகிட்டேன். இனி வாழ்நாள் முழுவதும் ஏத்தி விடற ஏணியா வாழணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்,'' என்ற ராகவனின் உணர்வுப்பூர்வமான பேச்சை கேட்டுக் கொண்டிருந்த, பாலுவின் கண்கள் குளமாகின.
ஆர். வி. பதி

