sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஹோம் ஸ்வீட் ஹோம்!

/

ஹோம் ஸ்வீட் ஹோம்!

ஹோம் ஸ்வீட் ஹோம்!

ஹோம் ஸ்வீட் ஹோம்!


PUBLISHED ON : பிப் 23, 2025

Google News

PUBLISHED ON : பிப் 23, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணி இரவு, 11:00. வலுக்கட்டாயமாக கண்ணை மூடி படுத்தாலும், மரகதத்திற்கு துாக்கம் வரவில்லை.

ஏதேதோ எண்ணம்...

கணவர் இறந்ததும், தன்னந்தனி ஆளாக நின்று, இரண்டு பெண்களை கல்யாணம் செய்துக் கொடுத்தது. பிள்ளையை அவன் விரும்பிய படிப்பு படிக்க வைத்து, வேலைக்கு போகும் பெண்ணை கல்யாணம் செய்தது. வந்த மருமகளுக்கு பார்த்து பார்த்து பணிவிடை செய்தது.

அது மட்டுமா? எல்லா பேரன், பேத்திகளையும் வளர்த்தாயிற்று. இப்போது உடம்பு தள்ளலை. கால் மூட்டு வலி தாங்க முடியலை. மருந்து, மாத்திரை, ஆயில் எல்லாம் போட்டு பார்த்தாயிற்று. இதன் நடுவில், போன மாதத்திலிருந்து, 'பி.பி., சுகர்' என, திடீர் விருந்தாளிகளின் அலட்டல் வேறு.

எதற்கு ஏங்குது என் மனம்? யாராவது நம்மை, ரெண்டு வார்த்தை புகழ்ந்து பேச மாட்டார்களா என இருக்குமோ? சே! சே அதெல்லாம் இல்லையே...

பையன், ரவி தங்கமான பிள்ளை தான். ஆனால், அம்மாவுடன் நின்று பேச நேரமில்லை. ஆபீஸ் வேலை, போன் கால் என, காதில் ஒயருடன் ஓடிக் கொண்டே இருப்பான். வீட்டிலிருக்கும் நாளில் எந்நேரமும் கண்ணும், கையும், 'லேப்-டாப்'பில் இருக்கும். அது சரி, பெண்டாட்டி பிள்ளையுடன் பேசவே அவனுக்கு நேரமில்லை. இந்த காலத்தில் வேலை செய்யும் ஆட்களுக்கு பணம் வருகிறது. ஆனால், ஆரோக்கியம் கெடுகிறது.

'பாட்டி, என் ப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் வந்திருக்காங்க. ஜூஸ் கிடைக்குமா பாட்டி?'

பேரன் கார்த்திக், பாட்டி, பாட்டின்னு கூப்பிட்டு, எல்லா வேலையும் சாதித்து கொள்கிறான்.

அழைப்பு மணி சத்தம், எண்ணத்தை திருப்பியது. பக்கத்து தெரு, அமிர்தா மாமி வந்திருந்தாள்.

''மரகதம், என்ன, 'டல்'லா இருக்கே? உடம்பு முடியலையா?'' என்றாள்.

''அதெல்லாம் ஒண்ணுமில்ல. லேசா, 'டயர்ட்'டா இருக்கு.''

''மறைக்காதே, அதான் உன் முகமே சொல்றதே, 'டல்'லா இருக்கியே... ஏன் என்னாச்சு? வேலை செஞ்சே உனக்கு, 'சுகர்' வந்துடுச்சு, போ. போதும் உன் சேவை, உனக்குன்னு நேரம் எடுத்துக்கோ. 'டிவி' பாரு, ஜாலியா டூர் போய் வா. எப்பப்பாரு வீடு, வேலைன்னு இருக்காதே.

''என்னைப் பாரு, நான் வீட்டுல ஒரு வேலையும் செய்ய மாட்டேன். கோவில், ஊர்ன்னு, 'டூர்' கிளம்பிடுவேன். இவர்களை எல்லாம் பெத்து வளர்த்து, படிக்க வெச்சு, கல்யாணம் பண்ணி கொடுத்து எவ்வளவு வேலை செய்திருப்போம். நமக்காக நாம் வாழ்வது, எப்போ சொல்லு?

''பிள்ளை, மருமகள் வாழ்க்கையை ஜாலியா வாழறா. நாமளும் அனுபவிப்போமே. சமையலுக்கும், வீட்டு வேலைக்கும் ஆள போடுன்னு சொல்லிட்டேன்.

''என் பிள்ளை ஏதாவது சொல்ல வந்தான்னா, 'என்னால் உனக்கு கஷ்டம்ன்னா என்னை, 'ஓல்ட் ஏஜ் ஹோமில்' சேர்த்துடுடா. நீங்க தனியா ஜாலியா இருங்கோ...' என, வருத்தமா சொன்னா போதும், அவன் பயந்துடுவான். ஏன் தெரியுமா? பெரிய பதவியில் இருக்கானே... பெத்தவளை முதியோர் இல்லத்தில் சேர்த்தா ஊர், உறவு என்ன சொல்லும்ன்னு பயம்,'' சிரித்தப்படி சொன்ன அமிர்தா, தொடர்ந்தாள்...

''மரகதம், என் ப்ரெண்ட் சொல்லியிருக்கா, ஹோமில், நமக்குன்னு, தனி, 'டிவி' மற்றும் வேளா வேளைக்கு டிபன், காபி, நல்ல சாப்பாடுன்னு, ஒரு வேலையும் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். என்னதான் மாங்கு மாங்குன்னு உழைச்சாலும், யாரும் நம்பளை கண்டுக்கமாட்டா, மரகதம் தெரிஞ்சுக்கோ,'' என, அமிர்தா மாமி பேசப் பேச... இன்னும் சூடாகியது, மரகதத்தின் மனம்.

'நாம் தான் முட்டாளோ? எதுவும் அனுபவிக்காம, மாங்கு மாங்குன்னு உழைக்கிறோமோ? பேசாம நாமும், 'ஹோமில்' சேர்ந்தால் என்ன? நாம் இங்கு இல்லாதிருந்தால் தான், எல்லாருக்கும் நம் அருமை புரியும்...' என நினைத்தாள், மரகதம்.

மருமகள், லதா நல்லவள் தான். தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பாள். எனக்கு உடம்பு சரியில்லை அல்லது நான் ஊரிலில்லை என்றால் சமைப்பாள்.

பெங்களூரு, மதுரை என, மகள்கள் இருக்கும் ஊர்களுக்கு போய் தங்கலாம் என்றால், இருவர் வீட்டிலும் மாமியார், மாமனார், மச்சினர் என, கூட்டுக் குடும்பம். அங்கும் யாருக்கும் பேச நேரமில்லாமல் எல்லாரும், 'பிஸி'யாகவே இருப்பர்.

இதில் அடிக்கடி போனில், 'ஏம்மா, எத்தனை வருஷம் தான் உழைப்பே. போதும்மா, 'ரெஸ்ட்' எடு...' என ஆதங்கப்படும், பெண்களின் கரிசனம் வேறு.

'மருமகளுக்கும் வேலை கொடுத்து பழக்கு. நம் அருமை அவளுக்கும் புரியணும் இல்லை...' என, எப்போது வீட்டிற்கு வந்தாலும் சொல்வாள், அமிர்தா மாமி.

அடுத்த நாள்-

''பாட்டி, நான் ரெண்டு நாள், 'புராஜெக்ட் டூர்' போறேன். என் டிரெஸ், சாக்ஸ், ஷார்ட்ஸ் எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன். சூட்கேஸில் அடுக்கி வெச்சுடு, பாட்டி. நான் குளிச்சு தயார் ஆகிடறேன். ப்ளீஸ் பாட்டி,'' என, கொஞ்சினான், கார்த்திக்.

அவன் சொன்னது, 'ஆர்டர்' ஆக, மரகதத்திற்கு மனதில் தோன்ற, எதுவும் செய்யாமல் அறைக்குள் சென்று படுத்து விட்டாள்.

பாத்ரூமிலிருந்து வந்து, ''பாட்டி, என்னாச்சு? உடம்பு சரியில்லையா?'' என, பதறினான், கார்த்திக்.

''டயர்டா இருக்கு. துாக்கம் வருது,'' எனக் கூறி, வலுக்கட்டாயமாக கண்ணை மூடி கொண்டாள், மரகதம்.

''சரி பாட்டி, துாங்கு சரியாயிடும். அப்பா, அம்மாகிட்டே போனில் சொல்லிட்டேன். போயிட்டு வர்றேன், பாட்டி,'' எனக் கூறி கிளம்பினான்.

கதவை சாத்தி விட்டு, ஹாயாக காலை நீட்டி, சோபாவில் படுத்து, 'டிவி' பார்த்தாள், மரகதம். துாக்கம் கண்ணை சொருகியது. நல்ல துாக்கம்.

மாலை 4:00 மணிக்கு எழுந்து சூடாக காபியும், பிஸ்கெட்டும் சாப்பிட்டு விட்டு, திரும்பவும் வலுக்கட்டாயமாக துாங்கினாள். மாலை, 6:00 மணி ஆகியும் எழவே பிடிக்கவில்லை. சோம்பேறித்தனத்துடன், அடம், கோபம் வந்தது.

வீடு அலங்கோலமாக இருந்தது. கேஸ் துடைக்கவில்லை. நேற்று துவைத்த துணி, மடித்து வைக்காமல் சோபாவில் கிடந்தது. லதா, ஆபீஸிலிருந்து வந்து பண்ணட்டும். வீம்பாக திரும்பி படுத்தாள்.

மாலை ஆபீஸ் முடித்து, ஸ்கூட்டரில் வந்திறங்கினர், பிள்ளையும், மருமகளும். 'டிவி'யில், 'கந்தசஷ்டி கவசம்' பாடாததை, ஹாலில் மரகதம் இல்லாததை கவனித்து, 'அம்மா... அம்மா...' என அழைத்தபடி, அறைக்கே சென்றான், ரவி.

''என்னம்மா ஆச்சு, முடியலையா? டாக்டரிடம் போகலாம் கிளம்புங்கம்மா,'' என, கரிசனத்துடன் கேட்டான்.

''என்னாச்சும்மா,'' என்றபடி, கையில் காபியுடன், 'பி.பி.,' மற்றும் 'சுகர் டெஸ்ட் மிஷின்' எடுத்து வந்து விட்டாள், லதா.

''அம்மா கையை நீட்டுங்க. பி.பி., பார்க்கறேன்,'' என்றான், ரவி.

''அதெல்லாம் காலையில் பார்த்துக்கலாம். துாக்கம் வருது,'' எனக்கூறி, திரும்பி படுத்த அம்மாவை ஆச்சர்யமாக பார்த்தான், ரவி.

''லதா, நீ இரண்டு நாளைக்கு, 'லீவ்' போட்டு அம்மாவை கவனிச்சுக்கோ. டாக்டரிடம் கூட்டிப்போ.''

''சரிங்க,'' என்றாள், லதா.

''யாரும், 'லீவ்' போட வேண்டாம். கார்த்திக் வேறு ஊரிலில்லை. நான் படுத்து, 'ரெஸ்ட்' எடுத்தா சரியாயிடும்,'' என, கண்டிப்பு குரலில் கூறினாள்.

அடுத்த நாள் காலை-

''அம்மா உங்களுக்கு மிளகு ரசம், வெண்டைக்காய் கறி, ஹாட் பாக்ஸில் வெச்சிருக்கேன். மாத்திரையும் வெச்சிருக்கேன். சாப்பிட்டவுடன் போட்டுக்கோங்கம்மா,'' என்றாள், லதா.

காலை, 8:00 மணிக்கு இருவரும் அரக்க, பரக்க ஆபீஸ் கிளம்பினர். அப்பாடி என, 'டிவி' போட்டு, படுத்தப்படி, 'சேனல்' மாற்றினாள். எதையும் பார்க்க பிடிக்காமல் போரடித்தது.

கை பரப்பரத்தது. கண் வீம்பாக மூடினாலும், மனது முழித்து அலைந்தது.

மெதுவாக, அனிச்சையாக எழுந்து, சமையலறையை பார்த்ததும், 'பகீர்' என்றது. சமையலறையை பார்க்க சகிக்கவில்லை; அலங்கோலமாக இருந்தது.

நான் படுத்து துாங்கியது தான், 'ரெஸ்ட்'டா? சோம்பேறித்தனமும், வேலை செய்யாததால் உடம்பு வலியும், கோபமும் வருகிறதே!

''ஹாய் பாட்டி... எப்படி இருக்கே? என்ன பாட்டி, சமையலறையில் நின்னுட்டிருக்கே. அப்பா போன் செய்து, 'பாட்டிக்கு முடியலை, தனியா இருக்காங்க. வீட்டிற்கு போய் பாட்டியை பார்த்துக்கோ'ன்னு சொல்லிட்டார். அதுதான் உடனே வந்துட்டேன்.

''என்ன ஆச்சு பாட்டி? என்னால தான் நீ, 'டயர்டா' இருக்கியாம். நான் தான் உனக்கு ரொம்ப வேலை கொடுக்கிறேனாம். அம்மா என்னிடம் கோவிச்சுக்கிட்டாங்க, பாட்டி. அப்படியா? நீ பார்த்தால் இங்க சமையலறையில் இருக்கே. வா வா வந்து உட்கார்,'' என, கையை பிடித்து இழுத்து வந்து சோபாவில் உட்கார வைத்து, தானும் அருகில் உட்கார்ந்தான், கார்த்திக்.

''பாட்டி எனக்கு என்ன, 'புராஜெக்ட்' தெரியுமா? 'ஓல்ட் ஏஜ் ஹோம்' போய், அங்குள்ள வயதான பாட்டி ஒருவருடன், நாள் முழுக்க நான் தங்கி, ஆறுதலாக பேசி, பிறகு அவர்களை பற்றி கட்டுரை எழுதணும். அந்த பாட்டியை பார்த்தா ரொம்ப பாவமாக இருந்தது, பாட்டி.

''அவருக்கு ரெண்டு பெண்களாம். இருவரும் திருமணமாகி வெளியூர்களில் ரொம்ப வசதியாய் இருக்காங்களாம். ஆனால், பாட்டியை கவனிக்க நேரமில்லை. தாத்தா இறந்து விட்டதால், பாட்டி கூட யாருமில்லை. பேசவும் ஆட்களில்லை.

''பாவம் அந்த பாட்டி. நான் அன்பாக அவர்களுடன் பேசியதும், 'வீட்டில் எல்லா வேலையும் ரொம்ப பொறுப்பா, நல்லா செய்வேன்பா. எனக்கு ஒரு நோய், நொடியில்லை. வேலை செய்தே பழக்கப்பட்ட எனக்கு, இங்கு ஒரு வேலையும் இல்லாததால் பொழுதே போகலை, தம்பி. எனக்காக யாருமில்லை என்பதைவிட, நான் யாருக்கும் உபயோகமாக இல்லாததை நினைக்கும் போது எதுவும் பிடிக்கலை'ன்னு, சொல்லி அழுதாங்க.

''அப்போது தான், அப்பா போன் செய்து, உனக்கு உடம்பு சரியில்லாததை சொன்னதும், அந்த பாட்டியும், 'போ கண்ணு. பாட்டியை போய் பாருய்யா, உன் கூட பேசியது ரொம்ப சந்தோஷம், திருப்தியா இருக்கு'ன்னு சொன்னாங்க. நான் உடனே எங்க சார் கிட்டே, 'பர்மிஷன்' வாங்கிட்டு உன்னை பார்க்க வீட்டிற்கு கிளம்பிட்டேன்.

''பாட்டி, நீ அந்த, அமிர்தா பாட்டி பேச்சை கேட்டு, 'ரெஸ்ட்' வேணுங்கறே. ஆனா, உன்னாலே சோம்பேறியா படுத்து, 'ரெஸ்ட்' எடுக்க முடியாது, பாட்டி. உன் உடம்பிற்கு மட்டுமில்ல, மனதிற்கும், 'ரெஸ்ட்' கொடுக்க முடியாது.

''என் பாட்டி எப்போதும், 'ஆக்டிவ்'வா இருக்கணும்ன்னு, நான், உனக்கு நடு நடுவில் சின்ன சின்ன வேலை கொடுப்பேன். அதனால, உன், 'சுகர், பி.பி.,' குறையும், பாட்டி. உன் வேலையை நீ பார்ப்பதாலும், எங்களுக்கு பல உதவிகள் செய்வதாலும் தான், அப்பா, அம்மா நிம்மதியா ஆபீஸில் வேலை செய்ய முடியுது. இந்த வீட்டின் பலமே, நீ தான் பாட்டி,'' எனக்கூறி முடித்தான், கார்த்திக்.

அவன் பேசப் பேச மனம் கொள்ளா சந்தோஷம். சட்டென அவனை அணைத்து நெட்டி முறித்தாள், மரகதம்.

''அம்மா ரசம், வெண்டைக்காய் கறி செஞ்சிருக்கா. அப்பளம் பொரிக்கிறேன். நாம, ரெண்டு பேரும் சாப்பிடலாம். வா கார்த்திக்,'' என்றாள், மரகதம்.

''உட்காரு பாட்டி, நான் இன்னைக்கு உனக்கு சாப்பாடு பரிமாறுறேன். இன்று என், 'புராஜெக்ட்' இதுதான். உன்னுடைய சுறுசுறுப்பு தான், எங்களின் சந்தோஷம், நிம்மதி. அம்மா, நாளை முதல் சமையலுக்கு ஒரு மாமியை ஏற்பாடு செய்கிறாளாம். சாரி பாட்டி, நானும் இனி உனக்கு எந்த வேலையும் கொடுக்க மாட்டேன். நீ, 'ரெஸ்ட்' எடு,'' என, கார்த்திக் பேசப் பேச, வானத்தில் பறப்பது போல் இருந்தது.

'என் சுயபச்சாதாபம், அனைவர் மனதையும் இப்படி சங்கடப்படுத்தி விட்டதே. அமிர்தா மாமி இங்கு வந்து, தினமும் என்னிடம், 'ரெஸ்ட் எடு'ன்னு, சொல்லிச் சொல்லி, என் மனதை, 'ரஸ்ட்' பிடிக்க வெச்சுட்டாளே.

'அன்பு, பாசமுடன் கவனிக்கும் மகன். நிதானமான, கனிவான மருமகள். பாட்டி, பாட்டின்னு என்னையே சுற்றி வரும், ஆறுதலாக பேசும் பேரன். இதை விட சொர்க்கம் உண்டா? இனி, சுயபச்சாதாபம் கூடவே கூடாது...' என, நினைத்துக் கொண்டாள், மரகதம்.

கையும், காலும் பரபரக்க, அழுக்கு துணிகளை வாஷிங்மெஷினில் போட்டாள். மனசு சுத்தமானது.

லதாவுக்கு போன் செய்தாள், மரகதம்.

''சமையலுக்கு ஆள் போடறேன்னு சொன்னியாமே, லதா. அதெல்லாம் வேண்டாம்மா. நான் சரியாயிட்டேன். இரவு டின்னருக்கு ஆலுா பராட்டா செஞ்சு வைக்கிறேன். ரவிகிட்டே சொல்லிடும்மா,'' என்றாள்.

''கார்த்திக், சாயங்காலம் படுக்கக் கூடாது, எழுந்திரு. உன் பிரண்ட் வந்திருக்கான் பாரு. அவனுக்கும், உனக்கும் டீ வெச்சிருக்கேன். புட்பால் எடுத்து போகும் பை, சாக்ஸ் எல்லாம் துவைச்சு மடிச்சு வெச்சிருக்கேன். எடுத்து போய் உன் அறையில் வெச்சுக்கோ. எழுந்திருப்பா,'' என, டீபாயின் மேல் இரண்டு கப் டீ, பிஸ்கட்டுடன், பேரனை எழுப்பினாள், மரகதம்.

பாட்டியின், 'எனர்ஜி' கார்த்திக்குக்கு மனங்கொள்ளா சந்தோஷத்தை தந்தது.

ராதா நரசிம்மன்






      Dinamalar
      Follow us