PUBLISHED ON : மார் 29, 2026

பரண் மீது ஏறி அமர்ந்து, ஆராய்ந்ததில், அரை நாள் கடந்திருந்தது. முழுக்க வியர்வையில், குளித்திருந்தான், பாரி.
ஏணியை எடுத்துப் போட்டு, பரண் மேல் ஏறி வந்து தலையை நீட்டி, பல்லைக் காட்டினாள், பாரியின் மனைவி, அகல்யா.
பதிலுக்கு சிரிக்காமல் முகத்தை, 'உர்'ரென்று வைத்திருந்தான், பாரி.
அரிதாய் வந்த விடுமுறையும் இப்படி அந்தரத்தில் தொங்கி வீணாய் போனதே என்ற எரிச்சல் வர, கொரில்லா குரங்கு மாடல் போலிருந்தான்.
''ஒட்டடையை அடிச்சு கீழே தள்ளி விட்டுட்டு இறங்கி வாங்க. சாப்பிட்ட பின் வேலை செய்யலாம்,'' என்றாள், அகல்யா.
''என்ன, சாப்பாடா? என்னை பார்த்தா எப்படி தெரியுது? உடம்பு முழுக்க அரிதாரம் பூசின மாதிரி துாசியை பூசிட்டு இருக்கேன். உடம்பு முழுக்க ஒரே அரிப்பு. நீ, இந்த பழைய பொருட்களை ஒதுக்கி வை. நான் போய் வண்டியை கூட்டிட்டு வர்றேன்; எடைக்கு போட்டுடலாம்,'' என்றான், பாரி.
''அட அதெல்லாம் எதுவும் வேண்டாம். கீழே கிடக்கிறது கிடக்கட்டும். நீங்க வந்து முதலில் சாப்பிடுங்க,'' என, பிடித்த முயலுக்கு மூன்று காலாக நின்றாள்.
குளித்து, சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வெளியே வர, அவன் நினைத்தது போலவே பங்கு பிரித்துக் கொண்டிருந்தாள், அகல்யா.
''அந்த சிவப்பு டப்பாவை எதுக்கு எடுத்து வச்சிருக்க?''
''அது கோலமாவு போட.''
''இப்போ கோலமாவு போட்டு வச்சிருக்கிறது?''
''அதுல துணி உலர்த்தற கிளிப்பை போட்டு வச்சுக்கலாம். கிளிப் அத்தனையும் கீழே சிதறி வீணாகுது.''
''நாம தான், 'வாட்டர் ப்யூரிபையர்' வாங்கியாச்சுல. அந்த, 'வாட்டர் பில்டர்' எதுக்கு?''
''என் தம்பிகிட்ட பேச்சு வாக்கில் அதைச் சொல்ல, 'கடையில போட்டுடாத... நான் வந்து வாங்கிக்கறேன்'னு சொல்லி இருக்கான்.''
''இது நம்பற மாதிரியா இருக்கு? திருத்துறைப்பூண்டி எங்கே, சென்னை எங்கே இருக்கு? இதை வாங்கிக்க அங்கே இருந்து வர்றானா?''
அவன் பேச்சை காதில் போட்டுக் கொள்ளவே இல்லை, அகல்யா.
மறுபடியும் பரணில் இடம் மாற ஒரு மூட்டை தயார் நிலையில் இருக்க, அங்கே நின்றால் பேச்சு வளர்ந்து, வால் முளைக்கும் என்பதை உணர்ந்து, வெளியில் வந்தான், பாரி.
எ லி ஒன்று பரண் மீது புகுந்து கொள்ள, அதன் பொருட்டு சுத்தம் செய்ய மேலே ஏறியவன், அகல்யா சேர்த்து வைத்திருந்த பொருட்களைக் கண்டு மலைத்து போய் விட்டான்.
இட்லி பாத்திரத்தில் மூன்று, டிபன் கேரியரில் நான்கு, ப்ளாஸ்டிக் ஸ்வீட் பாக்ஸ் ஒரு அடுக்கு, குவளையும், தவலையும் எண்ணிக்கை இன்றி கிடந்தன.
'என்ன விதமான ஆசை இது!' என்று அவனுக்கு கோபம் வந்தது. ஒவ்வொன்றுக்கும் பின்னும் ஒரு பொழிப்புரை வைத்திருந்தாள்.
'இந்த காசுப்பானை, எங்க பாட்டி, எங்கம்மாவுக்கு சீதனமாக தந்ததாம். இன்னைக்கு, 10 ஆயிரம் ரூபாய் தந்தாலும் வராது. பானையைப் பார்க்கும் போது அம்மா நினைவு வந்திடும்...' அவள் கண்களில் நீர் தளும்ப சொன்னாள்.
அம்மா, 'சென்டிமென்ட்' அக்கா, 'சென்டிமென்ட்' என்று ஏகப்பட்ட நினைவுகளை உள்ளடக்கி இருந்தது, அந்தப் பரண். இவன், மாலை 'வாக்கிங்' முடித்து வீடு வருவதற்குள் இறக்கிய அத்தனை சாமான்களும் மேலேறி இருக்க, கோபமாக முறைத்தான்.
''எல்லாம் காசு போட்டு வாங்கினது. சட்டுன்னு துாக்கிப் போடுன்னா எப்படி போடறது? சரியா இல்லை நீங்க பேசறது,'' என்று கூறி எழுந்து போனாள்.
பொருட்களின் மீதுள்ள பிரியம், ஒரு எல்லைக்கு பிறகு குறையும் என்றால், அகல்யா விஷயத்தில் கூடிக்கொண்டே இருந்தது. எதுவுமே ஒன்றுக்கு இரண்டாய் இருப்பதில் என்ன தவறு என்று நினைப்பாள். இந்த ஆசைகளை எப்போது விட்டுவிடப் போகிறாள் என்று அவன் எண்ணிய போது, அத்தையிடம் இருந்து அழைப்பு வந்தது. மெல்லிய ஆச்சர்யமாய் உணர்ந்து, மொபைல் போனை எடுத்து பேசினான், பாரி.
''பாரி எப்படிப்பா இருக்கே?'' குரலில் நிறைய மாற்றம் தெரிந்தது.
''சொல்லுங்க அத்தை. என்ன இத்தனை நாள் கழிச்சு போன் பண்ணியிருக்கீங்க?'' என்றவன் குரலில், அத்தனை ஆச்சர்யம்.
''பெரிசா விஷயமில்லை, பாரி. சென்னைக்கு வரவேண்டிய, ஜோலி ஒண்ணு வந்திருக்கு. உன் வீட்டுக்கு வரலாம் இல்லையா? அதைக் கேட்கத்தான் போன் பண்ணேன்,'' என்ற அத்தை மனதில் மண்டிக்கிடந்த அத்தனை புதர்களையும் வார்த்தையால் வெட்டி வீசியிருந்தாள். கனிந்து போனான், பாரி.
''என்ன கேள்வி இது? நீங்க எப்போதும் வரலாம், அத்தை,'' என்றான், நெகிழ்ச்சியோடு.
சிறிது நேரம் பேசிய பின், இணைப்பைத் துண்டித்தாள், அத்தை.
அதன்பிறகு, அகல்யாவின், 'என்கொயரி' ஆரம்பமாகியது...
''யாரு, சவுந்தரா அத்தையா? ஆச்சர்யமா இருக்கு. என்னவாம்?''
''அது எனக்கு எப்படி தெரியும்? வரட்டும் பேசிக்கலாம்.''
''அவ்வளவு நிர்தாட்சண்யமா பேசிட்டு போனாங்க. இப்போ என்ன வந்திருக்கு அவங்களுக்கு? ஒரு, 'லாக்கர்' எவ்வளவு விலை இருக்கும். அவ்வளவு வசதி வாய்ப்போட இருக்கிறவங்க, அதை அண்ணன் பையனுக்கு இருக்கட்டுமேன்னு தந்துட்டுப் போயிருந்தா என்னவாம்? ஆசைபிடிச்ச பொம்பளை,'' என்றாள்.
உள்ளபடி, பாரிக்குமே அத்தையின் வரவு சலனத்தைத்தான் ஏற்படுத்தி இருந்தது.
அ ப்பாவின் மரணத்துக்கு பின், ஒருநாள் இதுபோல் வீட்டு வாசலில் வந்து நின்றாள், அத்தை.
'பாரி, அந்த, 'லாக்கர்' இருக்குல்ல, அதை நான் எடுத்துக்கறேன். இதுப்பத்தி, அண்ணன் அதான் உன் அப்பா சொல்லி இருக்கிறார் இல்ல?' என்றாள்.
பாரியின் தாத்தா இறந்த பின், சொத்து பிரிக்கப்பட்ட போது, அத்தை பேருக்குச் சென்றது அந்த, இரும்புப் பெட்டி.
'நான் நாக்பூர்ல இருக்கேண்ணா. இந்த பெட்டியை துாக்கிட்டு அலையவெல்லாம் முடியாது. நான் மதுரை வந்த பிறகு எடுத்துக்கறேன். இப்பயென்ன என்கிட்டே இருந்தா என்ன, உன்கிட்டே இருந்தா என்ன, எல்லாம் ஒண்ணுதான்...' என, தேன் ஒழுக பேசி பெட்டியை, தன் அண்ணனிடம் ஒப்படைத்து சென்றாள், அத்தை. ஆனால், பாரியின் அப்பா தவறிய அடுத்த மாதமே வீட்டு வாசலில் வந்து நின்றாள்.
'நான், 'லாக்கரை' எடுத்துட்டு போயிடறேன், பாரி. உனக்கு எதுக்கு சிரமம்?' என்றவள், ஆட்களைப் பிடித்து, ஊருக்கு கொண்டு சேர்க்க, 3 ஆயிரம் ரூபாய் செலவு செய்திருந்தார்.
அந்த நாளில், பணம், நகைகளை பாதுகாக்க தாத்தா செய்தது, அந்த, 'லாக்கர்!' திண்டுக்கல்லில் பி ரபலமான அலமாரி தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ஆட்களை அழைத்து வந்து, மூன்று நாட்கள் தங்க வைத்து இந்த, 'லாக்கரை' செய்ததாக, கதை கதையாய் சொல்வார், அப்பா.
அம்பதோ, நுாறோ வருகிற வருமானத்தை அதில் வைத்து எடுத்தால் தான், ஒரு திருப்தி உண்டாகும். காலப்போக்கில் வைத்து பூட்ட, நகைகள் இல்லாமல் போனாலும், சொத்து பத்திரம், மாதச் சம்பளம் வரைக்கும் அந்த பெட்டிக்குள் போய் வரும்போது தான் அது இரட்டிப்பாவதாய் நம்பிக்கை இருந்தது.
அப்படி எங்கள் உணர்வோடு பின்னிப் பிணைந்த பெட்டியை அத்தை துாக்கிக் கொண்டு சென்றது மனதளவில் வலித்தது தான். நிர்தாட்சண்யமாய் நடந்து கொண்ட, அத்தை இப்போது எதற்கு வருகிறார் என்ற கேள்வி பாரி மனதில் வண்டாய் குடைந்தது.
அ கல்யா செய்த, மோர்க் குழம்பையும், மாவடுவையும் ருசித்து சாப்பிட்டாள், அத்தை. குறை காணாத அவளின் இயல்பு விசித்திரமாய் பட்டது.
சேம நலன்கள், பேச்சு வார்த்தைகள் அத்தனையும் சுமூகமாகப் போனது. கண்ணாடிக்கு மேல் கண்ணாடியை அணிந்து அத்தையின் வரவிற்கான காரணத்தை, அகல்யா தோண்டித் துருவியும், எதுவும் தென்படத்தான் இல்லை.
இறுதியாக வந்த காரணத்தை அத்தையே சொன்னார்...
''பாரி, எங்க அப்பாவுடைய, 'லாக்கர்' இருந்ததே உனக்கு நியாபகம் இருக்கா?''
எப்படி மறக்க முடியும்? பாரி பிறந்தது முதல் அந்த லாக்கருடன் அவனுக்கிருந்த பந்தத்தை அவன் உணர்ந்ததே அது இல்லாத பொழுதுகளில் தானே. இப்போது கூட, அது இருந்த இடத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரு வெறுமையை உணர்வானே!
வெறுமனே தலையசைத்தான்.
''நீ அதை எடுத்துக்கறியா? பணம் எதுவும் தரவேண்டாம். எடுத்துட்டு வர்றதுக்கு என்ன, 'சார்ஜ்' ஆகுதோ அதைக்கூட நான் தந்துடறேன். நீ, அதை எடுத்துக்க போதும்,'' என்று சொல்லி, அவனை வெகுவாய் வியப்புக்குள்ளாக்கினாள், அத்தை.
அவன் ஆச்சரியமாக பார்த்த பார்வையின் பொருள் புரிந்து அத்தையே சொன்னாள்...
''ஆச்சர்யமா இருக்கா தம்பி? எனக்கு வயது, அறுபதைக் கடந்திருச்சு. நம்மைச் சுற்றி இருக்கிற, நமக்கு பிடித்தமான விஷயங்களை நமக்கு பிறகு என்னாகும்ன்னு யோசிக்க வேண்டிய பருவம். இதை ஆங்கிலத்தில், 'டெத் கிளீனிங்'ன்னு சொல்வாங்க. பொருட்களை மேலே மேலே சேர்த்து வைக்கிறதாலே நம்முடைய வாழ்க்கை மட்டுமில்ல, மரணமும் சுமையாகும்.
''பொருட்களுக்கு உயிர் இல்லைன்னு சொல்றதை நான் நம்பல, பாரி. விரும்பி படித்த புத்தகம், விரும்பி அணிந்த உடைகள், பிரத்யேகமான வாகனம், நம்மை தாலாட்டிய தொட்டில் அத்தனையுடனும், நம் உயிருக்கு மேலான பிணைப்பு இருக்கு.
''உண்மையாகவே ஒரு பொருளை நேசிச்சோம்னா, அந்தப் பொருளை நம்மை விட அதிகமா நேசிக்கிறவங்க கையில் ஒப்படைச்சு அழகு பார்க்கணும்.
''மேலே மேலே அடுக்கி வச்சிருக்கும் நினைவுகளை விடுவிக்க கத்துக்கணும். நமக்கு பிடித்தமான பொருட்களை அப்படியே சேர்த்து வச்சிட்டு, அதை நிராதரவா விட்டுட்டு போறதை விட, அதை உளப்பூர்வமா விரும்பினவங்க கையில சேர்த்துவிட்டு போறது எவ்வளவு ஆத்ம திருப்தி தெரியுமா?
''மலை மாதிரி புத்தகங்களைச் சேர்த்து வைத்திருந்தேன். அதையெல்லாம், சிறையில இருக்கிற கைதிகளுக்கு அன்பளிப்பா தந்துட்டேன். தேவைக்கு அதிகமா சேர்த்து வைத்திருந்த புடவைகளை, அனாதை ஆசிரமத்துக்கு தந்துட்டேன். வீட்டை அடைச்சிட்டு இருந்த சாமான்களின் தேவைக்கு அதிகமா இருந்ததை, தானமாக கொஞ்சமும், எடைக்கு கொஞ்சமும் கொடுத்துட்டேன். உண்மையில் விடுவிக்க விடுவிக்கத் தான் எத்தனை பொருட்களை சேர்த்து உபயோகப்படுத்தாம வச்சிருக்கோம்கிறது புரிஞ்சது.
''என் காலத்துக்கு பின், இதற்கு ஒரு அடையாளத்தை தந்து, என் பிள்ளைகள் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தை ஏன் தரணும்?
''அதற்கு முன்பாக நானே அதை உரிய இடத்துல சேர்த்துடறது மன நிம்மதி தரும். என் மரணத்துக்கு முன் நானும், 'டெத் கிளீனிங்' செய்ய வேண்டாமா? என்னுடைய கடைசி காலம், சுமை இல்லாம லேசாகணும், பாரி. புறப்பாடுங்கிறது இயல்பாக இருக்கும் போது, அதுக்கான ஏற்பாடுகளும் இயல்பாகத்தானே இருக்க முடியும்,'' என்று பேசி முடித்தாள், அத்தை.
அகல்யாவைப் பார்த்தான். அவள் பரணில் இருந்த பொருட்களை, ஒழிக்க முடிவு செய்தது, அவள் பார்வையில் வெளிப்பட்டது.
எஸ்.பர்வின் பானு
