தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/மகள் சொன்ன பாடம்!

மகள் சொன்ன பாடம்!

மகள் சொன்ன பாடம்!


PUBLISHED ON : ஏப் 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 19, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடேசன், பொறுமையின்றி மனைவி கமலம் அறையை பார்த்து கத்தினார்...

''இன்னும் கெளம்பலையா, என்ன இப்படி, 'லேட்' பண்ணிக்கிட்டிருக்கே? அந்த காலத்துல தான் ஆபிசுக்கு கிளம்பும்போது பக்காவா, 'மாட்சிங் டிரஸ்' எல்லாம் போட்டுக்குவ. இப்ப என்ன, பாங்குக்கு போய், 'பென்ஷன்' பணம் வாங்கப் போறோம். அவ்வளவு தானே? அதுக்கு ஓவர் அலங்காரம் தேவையா?''

''புடவைக்கு பொருத்தமா ஜாக்கெட் தேடி போட்டுக்கிறேன். அது, உங்க கண்ணை உறுத்துதாக்கும்? ஒரு நாள் கூட ஆபிசுக்கு நான், 'லேட்'டா போனதே இல்லே தெரியுமா? என்னமோ கண்ணாடி முன் நின்னதுமே நான், 'டயம் வேஸ்ட்' பண்ண மாதிரி பேசறீங்க. சரி, ஆட்டோ, 'புக்' பண்ணிட்டீங்களா?'' என்றவாறே அறையிலிருந்து வெளியே வந்தாள், கமலம்.

''ஆட்டோவா? நாம என்ன கவர்னரா வேலை பாத்துட்டா, 'ரிட்டயர்ட்' ஆகியிருக்கோம்? சாதாரண அரசாங்க உத்தியோகம். 'பென்ஷன்' பணம் எடுத்து வாழ்க்கையை ஓட்டுறோம். எப்பவும் போல, 'டெர்மினஸ்' போய், பஸ்சில் ஏறி உக்காந்துடலாம். அவன் எப்ப இறக்கி விடறானோ விடட்டும். அங்கிருந்து அஞ்சு நிமிஷ நடை தான் உன் பாங்கும், என் பாங்கும்.''

''அதானே பாத்தேன், எங்கடா குணம் கிணம் மாறி இருக்கப் போகுதோன்னு. நம்ம தலையெழுத்து. பஸ்ல ஏறி இறங்கி, வெயில்ல 'லொங்கு லொங்கு'ன்னு நடந்து, வரிசைல நின்னு, 'பென்ஷன்' பணத்தை எடுத்துட்டு வரணும். சரி கிளம்புங்க,'' என்றாள்.

''தண்ணீர் பாட்டில் எடுத்துக்கிட்டியா? அப்புறம் பிஸ்கட், வாழைபழம்?''

''ஏங்க எப்பவாவது தான் வெளில போறோம். சமோசா, 'கட்லட்' ஏதாவது சாப்பிடலாமே. 'ரோஸ்மில்க்' கூட, பாங்க் பக்கத்துலயே விக்குது தெரியுமா?''

முறைப்புடன் மனைவியை ஏறிட்டார், அவர்.

''என்ன ஆச்சு உனக்கு? எதிர்வீட்டு, மோகனா கூட ரொம்ப ஒட்டி உறவாடுறியா? அவங்களும், அந்த ரவிதாஸும் அடிக்கிற கூத்தை பார்க்க முடியலே. நம்மளை மாதிரி தானே அவங்களும்? கவர்மென்ட் வேலைல இருந்து, 'ரிட்டயர்ட்' ஆகி, 'பென்ஷன்'ல காலத்தை ஓட்டிக்கிட்டிருக்காங்க. நம்ம பையன், கனடால, 'செட்டில்' ஆகிட்டான்னா, அவங்க பொண்ணு, துபாய்ல, 'செட்டில்' ஆகிட்டா. நாம எப்படி இன்னும், செட்டா குடித்தனம் நடத்தி, முடிஞ்சவரை சேமிச்சு வெக்கிறோம்? இதோ பாரு, கமலா, அவங்களைப் பார்த்து நாம கெட்டுப் போயிட வேண்டாம். தெரியுதா?''

கண்களில் துளிர்த்த ஈரத்தை அவள் திரும்பி மறைத்துக் கொண்டாள்.

வீட்டை பூட்டி இருவரும் கிளம்பினர். வழியில் ஒரு ஆட்டோ நின்று கொண்டிருந்தது.

''ஏம்பா நடேசா. வெளில கெளம்பறீங்களா ரெண்டு பேரும்? எங்க பாங்க் தானே?'' ஆட்டோவின் உள்ளே இருந்து சிரித்துக் கொண்டே தலையை வெளியே நீட்டினார் நண்பர், ரவிதாஸ். அவருடன் அமர்ந்திருந்த மனைவி, மோகனா கைகாட்டி புன்னகைத்தாள்.

''ஆமாம்பா. முதல் வாரம் இல்லையா?'' என்றார், நடேசான்.

''நாங்க, 'ஷாப்பிங் மால்' போறோம். அடுத்த வாரம் எங்கள் திருமண நாள் வருது. பாங்க்ல பணம் எடுத்திட்டு, அப்படியே அவளுக்கு, ஒரு, 'சாரி' எனக்கு ஒரு 'ஷர்ட' வாங்க போறோம், நீங்களும் எங்க கூட வர்றீங்களா,'' என்றார், ரவிதாஸ்.

''இல்லப்பா. ஆட்டோல நாலு பேர் போகிறது சிரமம். நீங்க கெளம்புங்க'' என்றார், நடேசன்.

''சரிப்பா. அப்புறம் ஒரு விஷயம் கேக்கணும்ன்னு இருந்தேன். ஜூலைல ராஜஸ்தான், 'டூர்' போகலாம்ன்னு இருக்கோம். ஐ.ஆர்.சி.டி.சி., போட்டிருக்கிற, 'டூர் ப்ளான்.' பத்து நாள், எட்டு இடம். எல்லாம் ரயில்ல, 'ஏசி' கோச்ல. நீங்களும் வாங்களேன்.'' என, கேட்டார், ரவிதாஸ்.

''ராஜஸ்தானா? லக்சுரி கோச்சா? எதுக்குப்பா வேண்டாத வேலை. இந்த, 65 வயசுல? கைய கால உடைச்சுக்காம கடைசிவரை ஆரோக்கியமா வாழ்ந்துட்டு போனா போதாதா? சரி கெளம்புங்க ரெண்டு பேரும்,'' என்றார், நடேசன்.

''எங்க திருமண நாள் அன்னிக்கு ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும். ஈ.சி.ஆர்.,ல 'பீச் ரிசார்ட்'ல அரை நாள் 'செலிப்ரேஷன்' வீட்டுக்கு வந்து கூப்பிடறேன்,'' என்றார், ரவிதாஸ்.

ஆட்டோ கிளம்பியது.

உதட்டைப் பிதுக்கியபடி நடந்தார், நடேசன்.

''ரொம்ப ஓவரா இருக்கு. இந்த வயசுல ஏன் இப்படி துள்ளி குதிக்கிறாங்க ரெண்டு பேரும்? வயசானதுக்கு ஒரு கவுரவம் வேணாம்? சரி வேகமா வா, 10:30 மணி பஸ்சை எடுத்துடப் போறான்.''

குடையை விரித்துக் கொண்டு நடந்தாள், கமலம்.

இ ரவெல்லாம் துாங்க முடியாமல் தவித்தார், நடேசன்.

ரவிதாஸ் என்னை போலவே தலைமைச் செயலகத்தில் வேலை பார்த்த ஊழியர் தான். மோகனாவும், கமலாவைப் போல மின்சார வாரியம், பதிவுத்துறை என்று வேலை பார்த்தவள் தான். எல்லா கரங்களும் சுத்தமானவை என்பதில் சந்தேகமில்லை. சம்பளமும் சரி, ஓய்வுத்தொகையும் சரி. இரண்டு ஜோடிகளுக்கும் ஏறக்குறைய ஒன்று போலத்தான் இருக்கின்றன.

நடேசனின் மகன், பிரதாப், ரவிதாஸின் மகள், லயா இரண்டு பேரும் சிறுவயது முதலே நல்ல நண்பர்கள். நல்ல குணம், படிப்பு, வேலைவாய்ப்பு, வெளிநாட்டில் உயர் வேலை, உயர் சம்பளம் என்று அவரவர் வாழ்க்கை அமைந்து விட்டது.

பெற்ற குழந்தைகளுக்கு நல்ல வழி காட்டி விட்டோம் என்பதற்காக இப்படி ஆடம்பரமாக அலைய வேண்டுமா? பிள்ளை இல்லாத வீட்டில் கிழவனும், கிழவியும் துள்ளி விளையாட வேண்டுமா?

அவர் யோசித்து யோசித்து மண்டை காய்ந்து துாங்கி போனார்.

ந டைப்பயிற்சி முடிந்தது. எப்போதும் போல அரச மர மேடையில் அமர்ந்தார். தண்ணீர் பாட்டிலை எடுத்து மூடியைத் திறந்தபோது பக்கத்தில் வந்து உட்கார்ந்தார், ரவிதாஸ்.

''இனிய மகிழ்ச்சியான காலை வணக்கம், நடேசா. சீக்கிரமாகவே இன்னிக்கு வந்துட்ட போலிருக்கு. என்ன சரியா துாங்கலையா?''

''ம், ஆமாம்''

''தலைவலியா? மாத்திரை இருக்கு, தரேன். சாப்பிட்ட பிறகு போட்டுக்கோ.''

''நீதான், எனக்கு தலைவலிடா, ரவிதாஸ்,'' என, நடேசன் கூறியதை கேட்டு, திடுக்கிட்டு, உடனே சிரித்தார், ரவிதாஸ்.

''நானா? நான் என்னடா பண்ணேன்? கனவுல வந்து உன் துாக்கத்தை கெடுத்தேனா என்ன?''

''கனவுல வேற வரணுமா? நேர்ல பண்ணுறதே ரகளையா இருக்குதே. ஏம்பா இப்படி அட்டூழியம் பண்ணுற? காசு இருந்தா வாரி இறைக்கணும்ன்னு இருக்கா? சினிமா என்ன, டிரெஸ் என்ன, மால் என்ன, 'டூர்' என்ன... சின்ன வயசுன்னா சரி. ஆசை இருக்கும், இளமை இருக்கும். இப்ப எல்லாம் பார்த்து ஓய்ந்துட்ட பிறகு இந்த ஆட்டம் தேவையா? காசை கரியாக்குறதுல என்ன சந்தோஷம் அப்படி?''

பொரிந்து தள்ளி விட்ட நண்பனை, பொறுமையாக பார்த்தார், ரவிதாஸ். பிறகு மென்குரலில் சொன்னார்...

''ஆமாம் நடேசா. காசை செலவழிக்கிறேன் தான். ஏன்? சொல்றேன். என் பொண்ணு, லயா வந்தபோது எனக்கும், மோகனாவுக்கும் சில, 'சஜஷன்ஸ், அட்வைஸ்' கொடுத்தாள். என்ன தெரியுமா? சின்ன வயசுல வேலை வேலைன்னு ஓடினோம், கஷ்டப்பட்டு பணம் சேர்த்தோம், கடமைகளை முடிச்சோம். இப்போ ஆரவாரம் முடிஞ்சு நிறைய நேரம் கிடைச்சு நிறைவா இருக்கோம்.

''இப்பவும் கஷ்டப்பட்டா தான் நல்லது, சிம்பிளா இருப்பது தான் நம்ம அடையாளம்ன்னு நினைக்கணுமா என்ன? அது நம்மையே ஏமாத்திக்கறது இல்லையா? அந்தக் காலத்தில் இந்த மனநிலை தேவையாக இருந்தது. இன்று உழைச்சாதான் நாளை சோறு என்ற எச்சரிக்கை உணர்வோடவே ஓடினோம். ஆனால், பொறுப்புகளை எல்லாம் நிறைவேற்றி இன்று வசதி வந்த பிறகும் அதையே பிடிச்சுகிட்டு நாம கஷ்டப்பட்டே ஆகணும்ன்னு நெனச்சா, அது மனப்பழக்கம் மட்டும்தான். உண்மையான தேவை இல்லை.

''ஆரோக்கியமான மனநலன் என்பது ஆடம்பரம் இல்லே, தேவை இல்லாத சிரமங்களை விலக்கிட்டு நம்ம நேரம், நம்ம உடல், நம்ம மனதை உற்சாகமா வைத்துக் கொள்வது. கஷ்டங்களை அனுபவிச்சுட்டு, இன்று நல்ல நிலைமையில் இருக்கோம். இப்பவும் கஷ்டத்தையே தேர்வு பண்ணினால் அது புத்திசாலித்தனம் இல்லே, நடேசன். அது ஒரு விதமான மனநோய். லயா தான் பொறுமையா சொல்லி புரிய வெச்சா,'' என்றார், ரவிதாஸ்.

''லயா மாதிரி பெண் எனக்கு இல்லே, ரவி. என்னதான் இருந்தாலும் பையன் பையன் தான். பெண் பெண் தான். இல்லையா?'' என்றார், நிதானமாக.

''ஏன், உன் மனைவியும் பெண் தானே? அவங்க சொல்வதை கேட்கலாமே?'' என்றார், ரவிதாஸ்.

வி. உஷா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us