
சிறு கூட்டம் காத்திருந்தது. எல்லாம் கிராமத்து மக்கள். 
சிலர் அழுதபடி, சிலர் கண்களைக் கசக்கியபடி. அதோ அடுக்கி வைக்கப்பட்ட சிதை தயாராக காத்திருந்தது. அந்த சிதையின் மேல், கருத்தம்மா கிடத்தப் பட்டிருந்தாள். 
உடம்பெல்லாம் எரியூட்ட ஏதுவாக, விறகு கட்டைகளும், வறட்டிகளும் வைக்கப்பட்டு விட்டன.  
முகம் மட்டும் திறந்திருந்தது. 
அனைவரும், கருத்தம்மா மகன், முத்துப்பாண்டியின் வரவுக்காக காத்திருந்தனர்.
முத்துப்பாண்டி - கொலை குற்றம் சாட்டப்பட்ட, ஒரு கைதி.
போலீஸ் ஜீப் வந்து விட்டது. அதிலிருந்து மொட்டை தலையுடன், கையில் பூட்டிய விலங்குடன், போலீஸ் காவல் புடைசூழ வந்தான், முத்துப்பாண்டி. 
'ஆத்தா...' என, கதறியபடி அவன் கூவியது, அந்த பகுதி முழுக்க எதிரொலித்தது. 
காத்திருந்த கூட்டத்தினர், கண்ணீர் சிந்தினர். கொலைகாரனோ, குற்றவாளியோ இந்த நேரத்தில் அவன் ஒரு மகன்; கருத்தம்மாவின் மகன். கூட்டத்தில் தான், கண்ணம்மாவும் இருந்தாள். கருத்தம்மாவும், கண்ணம்மாவின் அம்மாவும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். 
பொறுப்பற்ற தன் மகனை பற்றி, அடிக்கடி புலம்பிக் கொண்டே இருப்பாள், கருத்தம்மா. 
ஆக, இன்று எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு வந்துவிட்டது. 
கதறியபடி, சிதைக்கு தீ வைத்தான், முத்துப்பாண்டி. 
பார்த்துக் கொண்டிருந்தாள், கண்ணம்மா. 
சிறுவயதிலிருந்தே, அவளுக்கு முத்துப்பாண்டியை தெரியும். கோபக்காரன் தான். ஆனால், இவள் மீது பாசமாக இருப்பான். எங்கோ இருந்து எடுத்து வந்த, நாவல் பழங்களை இவளுக்கு தருவான். ஏதோ ஒரு கடையில் திருடிய தாவணியை இவளுக்குத் தருவான்.
'வேண்டாம், பாண்டி. தப்பு பண்ணாத. நல்ல புள்ளையா இரு...' என்பாள். 
'நானே சம்பாரிச்சுத் தான் வாங்கினேன். நான் நல்ல பிள்ளை தான். ஆனா, உன்ன பத்தி யாராவது ஏதாவது சொன்னா எனக்கு கோபம் வருது. என்ன பண்ணுவேன்...' என்பான். 
இது சம்பந்தமாக ஒருமுறை நடந்த சண்டையில், அடிதடி ஏற்பட்டது. முத்துப்பாண்டி அடித்த அடியில், அடிபட்டவன் இறந்து போனான். பார்த்துக் கொண்டு இருந்த ஒருவர், போலீசுக்கு தகவல் தர, அவனை போலீஸ் கைது செய்து, சிறையில் அடைத்தது. 
இப்போது, முத்துப்பாண்டியின் அம்மா கருத்தம்மாவின் மரணம், அவனை பரோலில் வெளியே அனுப்பி இருந்தது. 
முத்துப் பாண்டியை பார்ப்பதற்காக ஒருமுறை, கருத்தம்மாவுடன் ஜெயிலுக்கு போயிருந்தாள், கண்ணம்மா.
ஆனால், அவள் ஆத்தா சத்தம் போட, அதன் பின் போவதை நிறுத்திவிட்டாள், கண்ணம்மா. அந்த முத்துப்பாண்டியை பார்ப்பதற்காக தான் இப்போதும் வந்தாள். 
திடீரென்று, ஏதோ பட்டாசு வெடிக்கும் சத்தம். ஏக புகை. ஒன்றுமே புரியவில்லை. 
கண்ணம்மாவிற்கு மயக்கம் வந்தது. 
இந்த குழப்பத்தில், தப்பித்துப் போயிருந்தான், முத்துப்பாண்டி. போலீஸ் திகைத்தது. பரோல் கைதி தப்பித்தது, இன்ஸ்பெக்டர் கோபிநாத்திற்கு கோபத்தை கூட்டியது. ஒரு சாதாரண, அதிகப் படிப்பு இல்லாத கிராமத்து கொலைகாரன், தன்னை ஏமாற்றிவிட்டு தப்பித்துப் போய் விட்டான். 
அங்கு இருப்பவர்களிடம் விசாரித்து, அத்தனை பேரிடமும் விலாசம் வாங்கிய பின், அவர்களை போக விட்டனர். 
சிதை இன்னமும் எரிந்து கொண்டிருந்தது. சிதைக்குள் பட்டாசு மற்றும் வெடி மருந்துகளை வைத்து, யாரோ, முத்துப்பாண்டியை தப்பிக்க செய்திருந்தனர். 
குனிந்த தலையுடன் ஜீப்பில் ஏறினார், இன்ஸ்பெக்டர் கோபிநாத். 
விசாரணை நடந்தது. அவருக்கு அது, 'பிளாக் மார்க்!' கூடவே அவமானம்; பணியிட மாற்றம். 
''அம்மா...'' என்ற குரல் கேட்டு திரும்பினாள், கண்ணம்மாள்.
கடந்த காலத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தன் மகன் கண்ணனைப் பார்த்தாள். பள்ளிக்கூடத்தில் இருந்து திரும்பி வந்திருந்தான்.
''இன்னைக்கு பள்ளிக்கூடத்துல என்ன நடந்தது தெரியுமாம்மா?'' 
''என்ன நடந்தது?'' 
''ஒரு பையன் என்ன அடிச்சுட்டான். நான் பொய் சொல்றேனாம். எங்க அப்பா இறந்து போயிட்டாருன்னு சொன்னேன். ஏம்மா, நீதானே சொன்னே, அப்பா இறந்துட்டாருன்னு? அதுக்கு அவன் சிரிக்கிறான். அம்மா எனக்கு கோபம் வந்தது. அவன அடிச்சுட்டேன்.'' 
''சண்டை அடிதடிக்கெல்லாம் போகக் கூடாது. உனக்கு டிபன் வச்சிருக்கேன். போய் சாப்பிடு,'' என சொல்ல, உள்ளே போனான், கண்ணன். 
மீண்டும் கடந்த காலத்திலே மூழ்கினாள் இவள்.
அன்று...
முத்துப்பாண்டி தப்பிய நேரத்தில், கண்ணம்மாவின் அம்மா, பழனி கோவிலுக்கு பாதயாத்திரை போயிருந்தாள்.
திடீரென்று கொல்லைப்புறம் பகுதியில் ஏதோ சத்தம் கேட்டது. என்ன சத்தம் என பயந்தபடி கொல்லைப்புறம் போனாள், கண்ணம்மா. 
இருட்டில் ஒளிந்தபடி வந்தான், முத்துப்பாண்டி. 
'நீயா, பாண்டி?'
'உஷ்... உள்ளே போ. என்னையும், எனக்கு உதவிய என்னோட கூட்டாளியையும் போலீஸ் தேடுது. நான், இந்த ஊர்ல இருந்தா என்ன புடிச்சிடுவாங்க.
'அதனால, நாங்க ரெண்டு பேரும், மும்பை போறோம். அதுக்கு முன்னாடி உங்கிட்ட சொல்லிட்டு போகணும்ன்னு தான் வந்தேன். கண்ணம்மா என்ன மறந்துராத. கண்டிப்பா நான் மறுபடியும், ஒருநாள் வருவேன்...'
அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள், கண்ணம்மா. 
வறண்டிருந்த நிலத்தில் பருவ காற்றின் ஸ்பரிசமும், மழைத்துளியும் விழ, பிறகு புயலாக, சுனாமியாக மாற, இருவருமே அதில் அடித்துச் செல்லப்பட்டனர்.
கடந்த காலம் எத்தனையோ ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கிறது.
அதன் பின், முத்துப்பாண்டி வரவே இல்லை. வராமல் போனால் என்ன? அவனுடைய நினைவு சின்னம் இவள் வயிற்றில். 
பகவான் கண்ணனை, கம்சனிடம் இருந்து காப்பாற்றுவதற்காக, வசுதேவர், யமுனை ஆற்றைக் கடந்தார். இவளும், தன் கண்ணனை காப்பாற்றுவதற்காக, வாழ்க்கை ஆற்றை கடந்து கொண்டிருக்கிறாள். 
'அடுத்த வாரம், கோகுலாஷ்டமி வருகிறது. வீடு முழுவதும் கிருஷ்ணர் பாதம் போட வேண்டும்...' என, இவள், சமையல் வேலை பார்க்கும் எஜமானியம்மாள் ஏற்கனவே சொல்லியிருந்தாள். 
இவளுக்கு அந்த அம்மா தான் ஆதரவாக, உறுதுணையாக, நல்ல எஜமானியாக இருந்தாள். அவள் கொடுத்த சம்பளம் மற்றும் சலுகைகள், இவளும், இவள் மகனும் வாழ போதுமானதாக இருந்தது. 
மறுபடியும் ஒருநாள் வருவேன் என்றான், முத்துப்பாண்டி. அவன் வரவுக்காக கோலம் போடுவது போல, இவள் வாசல் முழுவதும் கோலம் போடுவாள். 
எத்தனையோ கோகுலாஷ்டமிகள் வந்து போயின. அதிலே இதுவும் ஒன்று. 
''அம்மா,'' என கூப்பிட்டான், கண்ணன். 
''என்னடா கண்ணா?'' 
''கிருஷ்ணன் பிறந்தநாள் வருதும்மா. எங்க ஸ்கூல்ல, 'பேன்சி டிரஸ் காம்படிஷன்' நடத்துறாங்கம்மா. அதுக்கு, 'டிரஸ்' வேணும். புல்லாங்குழல் வேணும். நான் தான், கிருஷ்ணனாம் சொல்லிட்டாங்க. உன்கிட்ட கேட்காமலே பேர் குடுத்துட்டேன்,'' என்றான். 
''திருட்டு பயலே,'' என்றவள், சட்டென்று, தன் நாவை கடித்து கொண்டு, ''எஜமானி அம்மாகிட்ட சொல்லி ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா பாக்கறேன்.''
பள்ளியில், கோகுலாஷ்டமி விழா மாறுவேட போட்டி நடக்கும் தினம். பள்ளி வளாகம் முழுவதும் குட்டி குட்டி கிருஷ்ணன்கள், புல்லாங்குழலுடன் உலா வந்து கொண்டிருந்தனர். மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. 
அந்த கூட்டத்தில், கண்ணனும், கண்ணம்மாவும் காத்திருந்தனர். 
குழந்தைகள் பெயரை அறிவிக்க,  அவர்கள் ஒவ்வொருவராக மேடைக்கு சென்றனர். கண்ணனின் முறையும் வந்தது. 
ஏற்கனவே, கண்ணனிடம் சொல்லி வைத்திருந்தாள், கண்ணம்மா...
'சும்மா வேஷம் போட்டா மட்டும் போதாது, கண்ணா. ஏதாவது நாலு வார்த்தை பேசு. அப்ப தான் உனக்கு ஒரு தனி அங்கீகாரம் கிடைக்கும். நீ, நல்லபடியா பரிசு வாங்கணும்ன்னா ஏதாவது வித்தியாசமா செய்யணும்.
'எழுதிக் கொடுக்குறேன், அதை அப்படியே செய். கண்டிப்பா நீ ஸ்பெஷலா தெரிவாய்...' எனக் கூறி, சில வரிகளை எழுதித் தந்திருந்தாள். கண்ணனும் அதை மனப்பாடம் செய்து வைத்திருந்தான். 
மேடைக்கு வந்தான், கண்ணன். விளக்கு வெளிச்சம், இவன் மீது பட்டது. புல்லாங்குழல் எடுத்து ஊதினான். 'மைக்'கை பிடித்து பேச ஆரம்பித்தான்... 
''என் பெயர், கண்ணன். ஆனா, நான் வெண்ணெயெல்லாம் திருட மாட்டேன். நான் நல்லவன். என்னால் முடிந்த அளவு எல்லாருக்கும் உதவி செய்வேன்...'' என்றபடி குழல் ஊதியபடி நடக்க, அனைவரும் கைதட்டினர். முதல் பரிசு, கண்ணனுக்கு என, அறிவிப்பு வந்தது.
சிறப்பு விருந்தினராக வந்தவர், கண்ணனை பாராட்டினார். 
''குட், உனக்கு இதை எழுதித் தந்தது, யாருப்பா?'' என கேட்டார்.
''எங்க அம்மா சார். அவங்களும் இங்க வந்திருக்காங்க,'' என்றான். 
''அவங்கள மேடைக்கு கூப்பிடு. இந்த பரிசு அவங்களுக்கு தான் போய் சேரணும்.''
கூட்டத்தில் அமர்ந்திருந்த, கண்ணம்மா, மேடைக்கு அழைத்து வரப்பட்டாள். அவளைப் பார்த்தார், சிறப்பு விருந்தினர்.
''இந்தாங்கம்மா, பையனை நல்லா வளர்த்து இருக்கீங்க. நான் திருட மாட்டேன்னு சொன்னான் பாருங்க. அது ஒண்ணு போதும். புராணக் கதைகளை சொல்லும் போது, நல்லவற்றையும் சேர்த்துச் சொல்லித் தரணும். அப்போது தான் குழந்தைகள் நல்லவிதமா வளருவாங்க.
''ரொம்ப அழகா சொல்லிக் கொடுத்திருக்கீங்கம்மா. இந்த கோப்பை உங்களுக்குத் தான் சேரணும்,'' எனக் கூறி, கண்ணனிடம் திரும்பி, ''நல்ல பிள்ளையா நடந்துக்கணும் என்ன?'' என்றார், சிறப்பு விருந்தினர்.
அவர் சொல்லச் சொல்ல தலையாட்டியபடி, தனக்கு தரப்பட்ட, அழகு வெள்ளிக் கோப்பையை பார்த்துக் கொண்டிருந்தான், கண்ணன். 
கண்ணனை அவன் நண்பர்கள் சூழ்ந்து கொள்ள, சிறப்பு விருந்தினராக வந்திருந்த, கோபிநாத், கண்ணம்மாவின் அருகே வந்து, ''என்னை தெரிகிறதா? நீ தானே அந்த முத்துப்பாண்டியோட...'' என, மெதுவாக கேட்டார். 
கை கூப்பினாள், கண்ணம்மா.
''இங்க பேச வேண்டாம். கார்கிட்டே போலாம்,'' எனக் கூறி, சற்று தொலைவில் நின்றிருந்த கார் அருகில் வந்தவர், ''கண்ணனைப் பத்தி கவலைப்பட வேண்டாம். அவனை போலீஸ்காரங்க கொண்டு வந்து, உன்னிடம் விட்டுருவாங்க,'' என்ற கோபிநாத் தொடர்ந்தார்...
''உன் முகம் எனக்கு மறக்கல. அன்னைக்கு, கருத்தம்மாவின் இறுதிச் சடங்கின் போது, அந்த சிறு கூட்டத்துல, உன் முகம் தனியா தெரிஞ்சது. இந்த முகத்தை இத்தனை வருஷம் கழிச்சு, மேடையில் உன்னையும், கண்ணனையும் பார்த்தப்போ, எனக்குப் புரிஞ்சுது.
''முத்துப்பாண்டியை நான் மறக்கல. எனக்கு நடந்த விசாரணையையும், அவமானங்களையும் நான் இன்னும் மறக்கல. எங்க டிபார்ட்மென்ட்ல, முத்துப்பாண்டியோட பைலை, 'க்ளோஸ்' பண்ணினாக் கூட, நான் இன்னும் அவனை தேடிட்டு தான் இருக்கேன். ஒரு சாதாரண கைதிகிட்ட ஏமாந்தது, என் மனசை உறுத்திகிட்டே இருக்கு.''  
''ஐயா, தயவு செஞ்சு என் மகனிடம் எங்க வீட்டுக்காரரை, கொலைகாரன்னு மட்டும் சொல்லிடாதீங்க. அவர் இறந்தவராகவே இருக்கட்டும். நான் அப்படித்தான், கண்ணனிடம் சொல்லி இருக்கேன்,'' என கைக்கூப்பியவாறு கதறினாள், கண்ணம்மா.
''ஒரு நல்ல தாயை, தன்னுடைய பிள்ளைக்கு தந்திருக்கான், முத்துப்பாண்டி. உன்னை போன்ற தாய் தான், இந்த நாட்டோட எதிர்காலம். நான், முத்துப்பாண்டியை தேடிட்டு தான் இருக்கேன். ஒருநாள் வருவேன். 'அரஸ்ட் வாரன்ட்'டோட இல்லை. முத்துப்பாண்டியோட வருவேன்,'' என்றார், கோபிநாத்.
'ஒருநாள் கண்டிப்பா நான் வருவேன்...' என்ற, முத்துப்பாண்டியின் குரல் கேட்டது, கண்ணம்மாவுக்கு.
அந்த பரோல் கைதி, இனி தப்பிக்க மாட்டான். இவள், பரோல் கைதி அல்ல; குடும்பக் கைதி. 
துாரத்தில், கையில் பரிசு கோப்பையுடன், கண்ணன் வருவது தெரிந்தது.
விமலா ரமணி

