
''அம்மா இந்த, உல்லன் ஜாக்கெட்டை மேலே போட்டுக்குங்க. பூங்காவில் குளிரும். பர்த்டே பார்ட்டி முடிய, இரவு 8:00 மணியாகும்,'' என, அம்மா சாரதாவிடம் சொன்னாள், ரம்யா.
வெளியே எட்டிப் பார்த்தாள், சாரதா. அவள் சொன்னது உண்மை தான். அமெரிக்காவில் சூரியன் விடைபெற தாமதமாகி, 8:00 மணிக்கு பகல் போல இருந்தாலும், இந்த சில்லென்ற காற்று உடம்பையும், மனசையும் இதமாக குளிர வைத்தது.
அம்மாவைப் பார்த்து, இரண்டு ஆண்டுகளாகி விட்டன. சிறிது நாட்கள் பேத்தியோடு இருக்கட்டும் என, அம்மாவை, அமெரிக்காவுக்கு வரவழைத்திருந்தாள், ரம்யா.
எப்படியோ தெரிந்தவர் உதவியோடு விமானம் ஏறி அமெரிக்கா வந்துவிட்டாள், சாரதா. வித்தியாசமான சூழல், பேத்தியோடு இருப்பது எல்லாமே அவளுக்கு பிடித்திருந்தது. அவளால் ஆங்கிலத்தில் பேச முடியவில்லை என்பது தான், ஒரே குறை. வீட்டில் தமிழ் பேசுவதால் பேத்திக்கு அவள் பேசுவது புரிந்தது.
''அம்மா எனக்கு, டாக்டர் அப்பாயின்மென்ட் இருக்கு. என்னால நிகிலா கூட போக முடியாது. அவளது ப்ரெண்டோட பர்த்டே பார்ட்டி, பூங்காவில் நடக்குது. நீங்க அவளோடு போயிட்டு வாங்க. சும்மா துணைக்கு தான். போகும் போது, இறக்கி விட்டு போறேன். பார்ட்டி முடிஞ்சதும் நானே வந்து அழைத்து வருகிறேன்.''
''அம்மா... பாட்டி எதுக்கும்மா?'' என, அம்மா காதில் கிசுகிசுத்தாாள், நிகிலா.
''ஸ்... மெதுவா பேசு. பாட்டி உனக்கு துணைக்கு தான் வர்றாங்க... அவங்க, பூங்காவில் உட்கார்ந்திருப்பாங்க. நீ, உன் ப்ரண்டோடு, 'என்ஜாய்' பண்ணிட்டு வா.''
பனிரெண்டு வயது மகளை தனியே அனுப்ப மனமில்லாமல் சொன்னாள், ரம்யா.
நிகிலா, தன் சிநேகிதி களுடன் சிரித்து பேசி, விளையாடிக் கொண்டிருப்பதை சற்று தள்ளியிருந்த பெஞ்சில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள், சாரதா.
பூங்காவில் அமைக்கப் பட்டிருந்த பசுமை புல்வெளிகள் கண்ணுக்கு குளிர்ச்சியைத் தந்தது. சில்லென்ற காற்றை அனுபவித்தபடி மகள் மற்றும் பேத்தியோடு சில நாட்கள் இருக்கும் வாய்ப்பை தந்த கடவுளுக்கு நன்றி சொல்லியபடி அமர்ந்திருந்தாள், சாரதா.
சிநேகிதிகள், சிநேகிதிகளின் பெற்றோர் சூழ, பர்த்டே பெண், 'கேக்' வெட்ட, அனைவரும் கைதட்டி வாழ்த்து கூறினர். அப்போது, பர்த்டே கொண்டாடும் பெண்ணின் அம்மா, சாரதாவை சுட்டிக்காட்டி ஏதோ சொல்ல, அவளிடம் வந்தாள், நிகிலா.
''பாட்டி, என் ப்ரெண்டோட அம்மா, உன்னை அங்கே கூப்பிடறாங்க. நீ வந்து, 'விஷ்' பண்ணிட்டு வந்துடு. அவங்களுக்கெல்லாம் தமிழ் புரியாது. நீ ஏதும் பேசி வைக்காதே. எனக்கு அவமானமாக இருக்கும். உனக்கும் இங்கிலீஷ் பேசத் தெரியாது. புரியுதா?''
பதிலேதும் சொல்லாமல் அவளுடன் நடந்தாள், சாரதா.
புன்னகையுடன் வரவேற்ற பர்த்டே பெண்ணின் அம்மா, தன் மகளிடம், 'கேக்' கொடுத்து, சாரதாவிடம் கொடுக்கச் சொன்னாள். அதை அன்போடு வாங்கியவள், அந்த பெண்ணின் தலையில் கை வைத்து, ''நீ, நீண்ட காலம் நோய், நொடி இல்லாமல் ஆரோக்கியத்தோடு, பெத்தவங்க மனம் மகிழ, படித்து முன்னேறி வாழணும்ன்னு, இந்த பாட்டி உன்னை மனசார வாழ்த்தறேன்,'' என்றாள்.
அவள் சொன்னது அங்கிருப்பவர்களுக்கு புரியாவிட்டாலும், மகளை வாழ்த்துவது மட்டும் புரிய, அந்தப் பெண்ணின் தாய் புன்னகைத்தாள்.
''பாட்டி, உன்கிட்ட என்ன சொன்னேன். அவங்களுக்கெல்லாம் தமிழ் தெரியாது. நீ பேசி அவமானப்படுத்த வேண்டாம்ன்னு தானே சொன்னேன்,'' என, பாட்டியை மெல்லிய குரலில் கடிந்து கொண்டாள், நிகிலா.
''நிகிலா, நான் பேசின பாஷை அவங்களுக்கு புரியலைன்னாலும், நான், உன் சிநேகிதியை வாழ்த்தறேன்கிறதை அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க. எனக்கு அதுபோதும்.
''எனக்கு இங்கிலீஷ் பேசத் தெரியலைன்னு, நான் வெட்கப்படலை. அது, மனசில் இருப்பதை வெளிப்படுத்த நாம் பிறந்ததிலிருந்து நம்மை பெத்தவங்க மூலம் அறியப்பட்ட ஒரு மொழி அவ்வளவு தான்.
''இங்கே இருக்கிறவங்க, அவங்க மொழியான இங்கிலீஷ் பேசறாங்க. நாம், நம் தாய்மொழியான தமிழில் பேசறோம். இன்னும் சொல்ல போனால், படிச்சவங்க எல்லாரும் பேசற ஒரு பொதுவான மொழியாக ஆங்கிலம் இருக்கு,'' என, சாரதா சற்று உரக்கவே, நிகிலாவிடம் கூறினாள்.
அங்கு வந்த சீக்கிய பெண்ணின் தந்தை, ''எனக்கு கொஞ்சம், கொஞ்சம் உங்க தமிழ் மொழி தெரியும்,'' என, சிரித்த முகத்தோடு கூறினார்.
அவரைப் பார்த்தவள், ''வணக்கம்ங்க. நான் சொல்றதை முடிஞ்சா, இங்கே இருக்கிறவங்களுக்கு ஆங்கிலத்தில் சொல்லுங்க. நான், பத்தாவது வரைக்கும் தான் படித்தவள். என்னால் சரளமாக இங்கிலீஷ் பேசத் தெரியாது.
''என் மகள், மருமகன் மற்றும் பேத்தியோடு இருக்க, தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கேன். என் பேத்தி எனக்கு இங்கிலீஷ் தெரியலைங்கிறதை அவமானமாக நினைக்கிறா. என்னோட தாய்மொழியான தமிழில் பேசறதை, நான் பெருமையா நினைக்கிறேன். தமிழ் எங்கள் அடையாளம்.
''தமிழுக்கு அமுதென்று பேர்ன்னு, எங்க கவிஞர் பாரதிதாசன் பாட்டெழுதிட்டுப் போயிருக்காரு. இன்னும் எத்தனையோ இதிகாசங்கள் மற்றும் புராணங்கள், எங்க தமிழ்மொழியில் கொட்டிக் கிடக்கு.
''உங்க மொழியில் நீங்க, உங்க மனதில் இருப்பதை வெளிப்படுத்தற மாதிரி, நான், எங்க மொழியில் பேசறேன். அதனால், எந்தவிதத்திலும் அவமானப் படவோ, வெட்கப்படவோ தேவை இல்லைன்னு, நீங்க எல்லாரும் என் பேத்திக்கு புரியும்படி சொல்லுங்க,'' என்றாள், சாரதா.
சாரதா, தமிழில் கூறியதை, அந்த சீக்கியரும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அங்கிருப்பவர்களுக்கு கூறினார்.
அங்கிருந்த அனைவரும் நிகிலாவை சூழ்ந்து கொண்டனர்.
''உன் பாட்டியை நினைச்சு, நீ பெருமைப்படணும். அவங்க தாய்மொழியை விட்டுத் தராமல் பேசறாங்க. இன்னும் சொல்லப் போனால், அவங்க சரளமாக பேசறதைப் பார்த்து, எங்களுக்கே உங்க மொழியைக் கத்துக்கணும்ன்னு ஆர்வம் வருது.
''மனம் நிறைய பிறந்தநாள் சொன்ன உங்க பாட்டி, என் மகள் பர்த்டே பார்ட்டியில் கலந்துக்கிட்டதை பெருமையா நினைக்கிறேன், நிகிலா,'' என்றாள், பர்த்டே பெண்ணின் அம்மா.
''பாட்டி, அதோ அம்மா கார் வந்தாச்சு, வாங்க போகலாம்,'' என, அழைத்தாள், நிகிலா.
அங்கிருந்தவர்களிடம் விடைபெற்று, கையெடுத்துக் கும்பிட்ட, சாரதா பேத்தியுடன் கிளம்பினாள்.
பாட்டியின் கையை அழுத்தமாகப் பிடித்தவள், ''ஸாரி, பாட்டி... உன் மனசு கஷ்டப்படும்படி பேசிட்டேன். நம்ப தாய் மொழியில் நிறைய கதைகள், புராணங்கள் இருக்குன்னு சொன்னியே, நீ இந்தியா போறதுக்குள், முடிஞ்சவரை எனக்கு ஏதாவது கத்துக்கொடு பாட்டி,'' என்றாள், நிகிலா.
சிரித்தபடி பேத்தியின் கன்னத்தை வழித்து முத்தமிட்டாள், சாரதா.
பரிமளா ராஜேந்திரன்