தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/தேவை அறிதல்!

தேவை அறிதல்!

தேவை அறிதல்!

2


PUBLISHED ON : ஏப் 19, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 19, 2026

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேதாசலம் காலில் விழுந்தனர், லஷ்மியும், ரங்கராஜனும்.

மெல்லிய குரலில், ''தீர்க்காயுசா இருக்கணும். இன்னும் பேரன், பேத்தி எடுத்து, சந்தோஷமா குலம் தழைக்கணும்,'' என்று வாழ்த்தினார், வேதாசலம்.

பிறகு, தம்பதியரிடம், அந்த பணக் கவரை கொடுத்தார். அதாவது, திணித்தார்.

''மாமா, இதை வாங்கறதுக்கு எங்களுக்கு கஷ்டமா இருக்கு. உங்க வறுபுறுத்தலுக்காக தான் வாங்கிக்கறோம்,'' என்று கூறி, கவரை வாங்கி கணவரிடம் கொடுத்தாள், லஷ்மி.

அப்போது, ஒரு நடுத்தர வயது பெண்மணி, ஒரு டிபன் கேரியரை கொண்டு வந்து, அங்குள்ள மேஜையில் வைத்து சென்றாள். இவர்கள் கேட்கும் முன்பே, வேதாசலம் சொன்னார்...

''ஏதோ சமாளிச்சு, முன்பெல்லாம் சமையல் செஞ்சிக்கிட்டு தான் இருந்தேன். ஆனால், ரொம்ப சலிப்பாயிடிச்சு. உடம்பும் முடியல. இவதான் மூணு வேளையும் சாப்பாடு தர்றா. ரெண்டு வேளை டிபன், ஒரு வேளை சாப்பாடு. பாக்கலாம், இது எத்தனை நாளைக்குன்னு.''

''மாமா, எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு. அத்தை இருந்திருந்தா, இந்த எடுப்பு சாப்பாட்டை எல்லாம் வீட்டுக்குள்ள விட்டுருப்பாங்களா? இப்பவும் கெட்டுப் போகல. எங்க கூட வந்திடுங்க. நாங்க பாத்துக்கறோம்,'' என்றாள், லஷ்மி.

''புரியுது, லஷ்மி. ஆனா, நடைமுறையில சாத்தியமில்ல. இந்த வயசுக்கு மேல நான் எடத்த, மாத்திக்க முடியாது. நினைவிருக்கற வரை, இந்த கட்டைக்கு இங்கதான் எல்லாம். அப்புறம், எப்பவும் மத்தவங்களுக்கு பாரமா என்னால இருக்க முடியாது. நீங்க, இந்த பணத்தை வாங்கறதால, நன்றியா ஏதாவது செய்யணுமேன்னு குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாதீங்க. எனக்கு சொந்தம்ன்னா நீங்களும், மேலும் ரெண்டு பேர் தான். அதான், இப்ப ரொக்கமா பணம் வந்தப்ப கொடுக்கணும்ன்னு தோணிச்சு. அதேநேரம், ஒண்ணு செய்யுங்க. நேரம் கிடைக்கறப்ப, போன் பண்ணுங்க. அதுவே, எனக்கு ஆறுதலாக இருக்கும்,'' என்றார், வேதாசலம்.

லஷ்மியும், ரங்கராஜனும், நெகிழ்வுடன் விடை பெற்றனர். ஒரு ஆட்டோ பிடித்து, பஸ் ஸ்டாண்ட் சென்றனர்...

''பார்த்தீங்களா எங்க தாய்மாமாவோட நிலமைய. சென்ட்ரல் கவர்மென்ட்ல ஆபிஸரா இருந்தவரு. அத்தையும் பெரிய இடத்து பொண்ணு. அப்பவே, திருமணத்தின் போது, அத்தைக்கு, 300 சவரன் போட்டாங்க. ஆனா, குழந்தை பாக்கியம் இல்ல. அதுகூட, அவங்களுக்கு பெரிய குறையா தெரியல. ஆனா, 50 வயசுல அத்தைக்கு பாழாப்போன, 'ஹார்ட் அட்டாக்' வரணுமா என்ன? இப்படி மாமாவ தவிக்க விட்டு போவாங்கன்னு யாரும் எதிர்பார்க்கலீங்க.

''இந்த ஊர்ல மட்டும் இவருக்கு மூணு வீடு இருக்கு. தவிர பேங்க்ல, 'டிபாசிட்' ஏராளம் உண்டு. பென்ஷனே, ஒரு லட்சம் ரூபாய் வரும். நகைகள் எவ்வளவு இருக்குன்னு மாமாவுக்கே தெரியாது. என்ன இருந்தென்ன? இப்ப உடம்பும், மனசும் தளர்ந்து போய், சாப்பாடு எப்ப வரும்ன்னு அவ்வளவு பெரிய வீட்டுல ஒண்டியா காத்திருக்க வேண்டிய நிலமை. ஏதோ, கொஞ்சம் இடத்தை வித்து, அதுல வந்த பணத்துல, என்னை ஞாபகம் வச்சு கூப்பிட்டு, இப்படி பணத்தை கொடுத்திருக்காரு. வேற என்னத்த சொல்ல.''

ரங்கராஜனுக்கு புரிந்தது. இந்த பணம் மிகவும் அவசியம் இல்லையென்றாலும், பேங்க்ல போட்டு வைக்கலாம். ஏதாவது திடீர் பிரச்னை வந்தால் சமாளிக்கலாம். வாங்காவிட்டால், வேதாசலம் வருத்தப்படுவார் என்பதற்காகவே, மனைவியோடு வந்திருந்தார்.

த ன் மனைவியின் தம்பி, சண்முகத்துக்கு போன் செய்தார், வேதாசலம். அவர், போன் அழைப்பை ஏற்கவில்லை. பிறகு, மனைவியின் தங்கை, சுமதியை அழைத்தார். நெடுநேரத்துக்கு பின், அழைப்பை எடுத்தாள், சுமதி.

''சொல்லுங்க, மாமா.''

''அக்கா இல்லேன்னா, அவ்வளவு தானா உறவு?''

''இல்ல மாமா. இங்க ஏகப்பட்ட வேலை. அவருக்கு வேற உடம்பு சரியில்லை.''

''புரியுது, சுமதி. வீட்ல எல்லாத்துக்கும் வேலைக்காரி வச்சிருக்க. ஒரு அரை நாள் செலவழிச்சா, வந்துட்டு போகலாமே!''

''நீங்க ஆசைப்பட்டு தர்றீங்க, புரியுது. ஆனா, பேங்க்ல போட்டு, 'டிரான்ஸ்பர்' பண்ணலாமே!''

''இது எனக்கு தெரியாதா, சுமதி? இடத்தை வாங்கினவன், இந்த பணத்தை கணக்குல காட்ட முடியாதுன்னு சொல்லி, மூட்டை கட்டி கொடுத்திட்டான். இதை யார வச்சு நான் பேங்க்ல போய் போட முடியும். எனக்கு ஒவ்வொரு மணி நேரமும் யுகமா போவுது. அதான் உன்னை நேர்ல கூப்பிடறேன். அப்படியே பார்த்த மாதிரியும் இருக்கும்,'' என்று, கெஞ்சினார், வேதாசலம்.

எதிர்முனையில் மவுனம். ''சண்முகம் வந்தானா?'' என்று கேட்டாள், சுமதி.

''உன் தம்பியாச்சே, வர்றேன் வர்றேன்கிறான். ரெண்டு மாசமா ஆளை காணோம்!''

''சரி, மாமா. உங்க ஆசைய ஏன் தடுக்கணும். இந்த வாரம் சனிக்கிழமை வர்றேன்,'' என்றாள், சுமதி.

வேதாசலத்திற்கு சற்று அயர்ச்சியாக இருந்தது. 'லட்சக்கணக்கில் பணத்தை சும்மா தருகிறேன் என்றாலும், யாரும் ஏன் ஓடிவரவில்லை? அப்படி ஒன்றும் எல்லாரும் கோடிஸ்வரர்களாக மாறவில்லையே...' அங்கலாய்த்தபடி, டிபன் சாப்பிட தயாரானார்.

அ ந்த வார, சனிக்கிழமை, சுமதிக்கு போன் செய்தார். அவள் போன் எடுக்கவில்லை. சண்முகம் கேட்கவே வேண்டாம். தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார்.

ஈஸி சேரில் சாய்ந்து, அப்படியே கண்ணயர்ந்த, வேதாசலத்தை, ''என்ன வேதா,'' என்ற குரல் எழுப்பியது.

அது, வரதராஜன். பால்ய நண்பன். வேலைக்காக மதுரை சென்று, மீண்டும் இந்த ஊருக்கே வந்து சொந்த வீட்டில் வாழ்பவன். உரிமையோடு, வேதா என்று எப்போதும் அழைப்பவன்.

''வாப்பா, வரதா,'' என்றவர், அவரை அமரச் செய்தார்.

''பல்லு எடுக்கணும்ன்னு சொன்னியே, எடுத்தாச்சா?'' என்று கேட்டார், வரதராஜன்.

''அதை ஏன் கேக்கற. எங்க போனாலும் கூட்டம். நம்பள மாதிரி இவ்வளவு பேருக்கு பல்லு வலியான்னு ஆச்சரியமா போச்சு போ. ஒரு வழியா எடுத்தேன். மொத்தமா, ஆயிரம் ரூபாய் ஆச்சு. இன்னும் கொஞ்ச நாள்ல தானே கூட விழுந்திருக்கும்,'' என்றார்.

''சரி உன் பிராப்ளம் என்னாச்சு. ஏதோ பணத்தை பிரிச்சு கொடுக்கணும்ன்னு சொன்னியே, செட்டில் பண்ணிட்டியா?'' என்றார், வரதராஜன்.

முகம் மாறினார், வேதாசலம்.

''இன்னும் இல்ல, வரதா. என் சைடுல, லஷ்மி. அப்புறம் மனைவியோட தங்கச்சி, தம்பின்னு மூணு பேரையும் வெத்தலபாக்கு வச்சு அழைக்காத குறை தான். ஒரு மாசம் கழிச்சு, லஷ்மி மட்டும் தான் வந்தா. என் திருப்திக்காக வாங்கின மாதிரி சொன்னா. நான் அதை எதிர்பார்க்கல. அப்படி ஒண்ணும் எல்லாரும் பெரிய கோடீஸ்வரங்களா மாறல. ஆனாலும், பணம்ன்னு சொன்னதும் ஓடி வரல. எனக்கு அது புரியல, வரதா,'' என்று கவலையோடு கூறினார், வேதாசலம்.

''கொஞ்சம் ஆச்சரியமா தான் இருக்கு, வேதா. ஆனாலும், இதுலேயிருந்து, நீ ஒண்ண புரிஞ்சுக்கணும். நீ, அவங்கள, 30 வருஷத்துக்கு முன்னாடி உள்ள உறவுகளா இன்னும் நினைச்சுக்கிட்டிருக்க. இப்ப காலம் வேகமா கடந்து போச்சு. புது உறவுகள், புது சூழ்நிலை. அப்புறம் பொருளாதாரமும் கூடிப்போச்சு. முன்ன ஆயிரத்துக்குள்ள மதிப்பு, இப்ப லட்சத்துக்கு கிடையாதுப்பா. முக்கியமா நீ சொல்றவங்களுக்கு, முன்பு தேவைகள் இருந்துச்சு. ஆனா, இப்ப எல்லாரும் செட்டிலாகிட்டாங்க.

''நல்ல பசில உள்ளவங்களுக்கு கொடுக்கற சாப்பாடு மாதிரி, நீ அப்பவே, இது மாதிரி கொடுத்திருந்தா அதோட மதிப்பே தனி. இப்ப நீ கொடுக்கணும்ன்னு நினைக்கறது பெரிய மனசு தான். ஆனால், அதுக்கான பெரிய தேவை அவங்களுக்கு இல்லையே. அதான், மெதுவா, 'டீல்' பண்றாங்க. அதை அலட்சியம்ன்னு சொல்ல முடியாது. உன் அன்பை மதிச்சு, உனக்காக தான் வர்றாங்க. இதை வாங்கினா, பதிலுக்கு ஏதாவது செய்ய முடியுமான்னு யோசிக்கலாம்.

''இதுல நீ ஓவரா யோசிக்காதே. இப்ப கூட, நீ வேற மாதிரியும் யோசிக்கலாம். யாருக்கு ரொம்ப பணத்தேவை இருக்கோ, அவங்க உறவினர்களா இருக்கணும்ன்னு அவசியமில்லை. தெரிஞ்சவங்களா கூட இருக்கட்டும். யாராவது ஒரு ஏழை பையனை அல்லது பொண்ணோட மொத்த படிப்பு செலவை ஏத்துக்கலாம். ஆனா, நீ மனசு வந்து திருப்தியோட செய்யணும். இல்ல, உனக்கு பிடிச்ச கோவிலுக்கு நன்கொடையா தரலாம். சில கிராமத்துல உள்ள கோவில்கள், பாழடைஞ்சு கிடக்கு. அதை சீர் செய்ய உதவலாம். பணத்துக்கு எவ்வளவோ தேவை இருந்துகிட்டு தான் இருக்கு. அதை கண்டுபிடிச்சு உதவி செய்யலாமே, வேதா. அப்புறம் உன் இஷ்டம்?''

வரதராஜன் சொல்ல சொல்ல யோசிக்க ஆரம்பித்தார், வேதாசலம்.

'ஏன் தானாக வேண்டி வேண்டி, தேவையில்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும். தேவைப்பட்ட காலத்தில் எவ்வளவோ செய்திருக்கலாம் தான். அப்போது, எதிர்காலத்துக்காக சேமிக்கவே தோன்றியது. ஆனால், இப்போது தேவைக்கு அதிகமாக இருக்கிறது. கொடுக்கலாம் என்று வரும் போது, அதற்கு, பெரிய எதிர்பார்ப்பு இல்லை.'

மனதில் ஒரு தெளிவு கிடைத்ததாகவே உணர்ந்தார், வேதாசலம்.

கீதா சீனிவாசன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us