
''பெரியம்மா பையன் கல்யாணம். இரண்டு நாளைக்கு முன்னாலேயே வரச் சொல்லி சொன்னாரு, பெரியப்பா. பசங்க, 'சம்மர் கிளாஸ்' போறாங்க. எப்படி, நாலு நாள் தனியா இருப்பாங்க,'' யோசனையுடன் கணவனைப் பார்த்தாள், புவனா.
''உன் தோழி சித்ரா, இந்திரா நகரில் தானே இருக்கா... அவளை கேட்டு பாரேன். ஊரில் இருந்தா அங்கே விட்டுவிட்டு போகலாம்,'' என்றார், புவனாவின் கணவர்.
''தாராளமாக இங்கே எங்க வீட்டிற்கு அழைச்சுட்டு வா, புவனா. என் பிள்ளைகளும் விடுமுறையில் தான் இருக்காங்க. கோடை பயிற்சி வகுப்பு நேரம் போக, பசங்க சேர்ந்து விளையாடிட்டு இருப்பாங்க. அவங்களுக்கும் பொழுது போகும்,'' என்றாள், சித்ரா.
''தாங்க்ஸ் சித்ரா. 'ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ், ஸ்விம்மிங், மாக்ஸ் கோச்சிங்'ன்னு பணம் கட்டி சேர்த்தாச்சு. இவங்களை அழைச்சுட்டு போனால் சரி வராது.''
''பரவாயில்லை, புவனா, இங்கேயிருந்து போகட்டும். நான் பார்த்துக்கிறேன். நீ கல்யாணத்துக்கு போயிட்டு வா. நான் அதுக்கப்புறம் தான், எங்க ஊருக்குப் போறேன்.''
கல்யாண வீட்டில் உறவினர்கள் அனைவரும், பிள்ளைகளை பற்றி தான், புவனாவிடம் விசாரித்தனர்.
'என்ன புவனா, பசங்களுக்கு விடுமுறை தானே... கூட்டிட்டு வந்திருக்கலாமே...' என்றனர்.
''புவனா, அரை பரீட்சை விடுமுறைக்கும், 'டூர்' போயிட்டீங்க. ஊர் பக்கம் வரலை. இப்பவும், 'சம்மர் க்ளாஸ்' அது, இதுன்னு சொல்றே. பசங்களைப் பார்த்து நாளாச்சு, புவனா. அவசியம் நாலு நாள் இருக்கிற மாதிரி, நீயும், மாப்பிள்ளையும் பேரப் பசங்களைக் கூட்டிட்டு ஊருக்கு வாங்க,'' என்று, பேரன்களை பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மகளிடம் கூறினாள், புவனாவின் அம்மா.
''அம்மா, சித்ரா ஆன்ட்டி எங்களை நல்லா பார்த்துக் கிட்டாங்க. புதுசு புதுசா டிபன் செய்து தந்தாங்க. வீட்டில் இருக்கும் போது, வருண், சுதாகருடன் 'கேரம்' விளையாடினோம்,'' என்றான், பெரியவன்.
''அம்மா நாங்களும், உங்களோடு வந்திருக்கலாம். சிபி அண்ணா, முத்து மாமா எல்லாம் வந்தாங்களா?'' சின்னவன் ஆவலுடன் விசாரித்தான்.
''நீ எப்ப உங்க கிராமத்துக்கு போற, சித்ரா,'' என்று கேட்டாள் புவனா.
''இன்னும் இரண்டு நாளில் கிளம்பறோம்.''
''சரி, அவசியம் ஊருக்கு போய்ட்டு வந்த பிறகு, பிள்ளைகளை கூட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டு போ சித்ரா,'' என்றாள், புவனா.
டிபன் பாக்ஸ் நிறைய பலாச்சுளைகளை எடுத்துக் கொண்டு, சிநேகிதியின் வீட்டுக்கு வந்தாள், சித்ரா.
''வா சித்ரா, ஊருக்குப் போயிட்டு வந்தாச்சா. அப்பா, அம்மா நல்லா இருக்காங்களா? இதென்ன பலாச்சுளையா... உங்க வீட்டில் காய்ச்சது தானே. ரொம்ப நல்லாயிருக்கும்,'' ஆசையுடன் வாங்கியவள், ''என்ன சித்ரா... நீ மட்டும் வந்திருக்கே... பிள்ளைகளை அழைச்சுட்டு வரலையா?'' என்றாள், புவனா.
''இல்லை, புவனா. அவங்க கிராமத்தில் அம்மா வீட்டில் இருக்காங்க. கூட்டிட்டு வரலை. விடுமுறையில் கொஞ்ச நாள் அங்கே இருக்கட்டும்ன்னு விட்டுட்டு வந்தேன்.
''அடுத்த வாரம் திருவிழா வருது. எங்க அண்ணன் பசங்க, அக்கா வீட்டில் எல்லாரும் வருவாங்க. எல்லாருமாக ஒன்றாக இருக்கட்டும்ன்னு, அம்மா வீட்டில் விட்டுட்டு வந்தேன்,'' என்றாள், சித்ரா.
''என்ன சொல்றே?'' என்று ஆச்சரியமாக அவளை பார்த்தவள், ''பசங்களை, கோடை பயிற்சி வகுப்பு எதிலும் சேர்க்கலையா? பயிற்சி வகுப்பில் சேர்த்தா, பசங்க நிறைய 'நாலெட்ஜ் கெயின்' பண்ணுவாங்க. அதை 'மிஸ்' பண்ணிட்டாங்களே. ஸ்கூல் திறந்ததுன்னா, இதே மாதிரி வாய்ப்பு கிடைக்காது,'' என்றாள், புவனா.
சொல்லும் சிநேகிதியை பார்த்து சிரித்த சித்ரா, ''கோடை பயிற்சி வகுப்பு சேர்ந்து தான் பசங்க அறிவை வளர்த்துக்கணும்ன்னு இல்லை, புவனா. பள்ளி சமயத்தில் கூட நேரம் கிடைக்கும் போது, இதுபோல சின்ன, சின்ன, பயிற்சி வகுப்பில் சேர்க்கலாம்.
''ஆனால், படிக்கிற பிள்ளைகளுக்கு இதைப் போல தொடர்ந்து விடுமுறை கிடைப்பது கஷ்டம். அந்த சமயத்திலும், அவங்களை இப்படி அடைச்சு வைக்காமல், விடுமுறையை அனுபவிக்க விடணும்.
''முதலில், உறவுகளின் அருமையை தெரிஞ்சுக்கணும். அண்ணன் பிள்ளைகள், அக்கா பிள்ளைகள், தாத்தா, பாட்டின்னு உறவுகள் சூழ, அவங்க இருக்கக் கூடிய வாய்ப்பைத் தரணும். பாசத்தைப் பகிர்ந்து வாழ கற்றுக் கொடுக்கணும்.
''இப்படி தனி தீவாக எதிலும் அவங்களை கலந்துக்க விடாமல் படிப்பு, படிப்புன்னு ஒரு வட்டத்துக்குள் அடைச்சு வளர்த்தா, நாளைக்கு பெரியவங்க ஆனதும், உறவுகளின் உண்மையான நெருக்கமும், பாசமும் கிடைக்காமல் விலகிப் போயிடுவாங்க.
''அந்தக் காலத்தில் விடுமுறை வந்தாச்சுன்னா, எல்லாரும் தாத்தா, பாட்டி வீடு தேடி ஓடுவோம். அண்ணன், தம்பி, அக்கா, தங்கைன்னு குறைந்தது, வீட்டிற்கு நாலு பேராவது இருப்போம். இப்ப அப்படியில்லை வீட்டிற்கு ஒன்று, இல்லைன்னா இரண்டு பேர் தான் இருக்காங்க.
''அவங்களையும் இப்படி படிப்பு, படிப்புன்னு, எதிலும் கலந்துக்க விடாமல், சின்ன கூட்டுக்குள் அடைச்சு வளர்க்கிறோம். அது தப்புன்னு, என் மனசுக்கு தோணுது, சித்ரா. நாம் அந்தக் காலத்தில் உறவுகளோடு சேர்ந்து இருந்து அனுபவித்த சந்தோஷத்தில் பாதியாவது, நம் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டாமா?
''படிப்பை மட்டுமில்லை. வாழும் கலையை பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்,'' என்று சொல்லி முடித்தாள், சித்ரா.
'அம்மா நாங்களும் உங்களோடு வந்திருக்கலாம். சிபி அண்ணா, முத்து மாமா எல்லாரும் வந்தாங்களா...' என்று கண்களில் ஆவல் தெரிய மகன் விசாரித்தது, புவானவுக்கு ஞாபகம் வந்தது. சித்ரா சொல்வதை மறுக்க முடியாமல் அமைதியாக இருந்தாள், புவனா.
லாவண்யா பாலாஜி

