sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

விண்ணையும் தொடுவேன்! (15)

/

விண்ணையும் தொடுவேன்! (15)

விண்ணையும் தொடுவேன்! (15)

விண்ணையும் தொடுவேன்! (15)


PUBLISHED ON : ஜூன் 15, 2025

Google News

PUBLISHED ON : ஜூன் 15, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை சுருக்கம்: நீர்வளூர் கிராமத்தில் ஏற்பட்ட ஜாதி மோதலின் தீவிரத்தை அறிந்து, சென்னையிலிருந்து, அத்தொகுதி அமைச்சர், அக்கிராமத்துக்கு வந்தார். கலெக்டர் புகழேந்தியுடன் பேசி, இந்த பிரச்னையை லேசாக எடுத்துக் கொள்ளாமல், பிரச்னைக்கு காரணமான, தாழ்த்தப்பட்டவர்கள் இடுகாட்டுக்கு போகும் வழியை சீரமைத்து கொடுக்க சொல்லி அறிவுறுத்தினார், அமைச்சர்.



இரண்டு நாள், சாப்பாடு, துாக்கம் இல்லாமல், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பின், வீடு திரும்பினான், புகழேந்தி. நண்பன் பிரபாகரிடம் நடந்ததை சொல்லி, தன் அறைக்கு சென்றான், புகழேந்தி. அங்கு, அவன் மனைவி, கலெக்டராக தன் பணியை சரியாக செய்யவில்லை என, அப்பா கூறியதாக சொல்லி, அவனிடம் சண்டை போட்டாள்.

அப்போது, எஸ்.பி., ஈஸ்வரி, புகழேந்திக்கு போன் செய்து, நீர்வளூர் கிராமத்துக்கு வரச் சொன்னாள்.

நீர்வளூர் கிராமத்தில் பதட்டமாக இருப்பதாக, எஸ்.பி., ஈஸ்வரி போன் செய்ததும், அடுத்த, ஐந்தாவது நிமிடம் உடை மாற்றி, படியிறங்கி வந்தான், புகழேந்தி. அப்போது, பிரபாகரும் தயாராகி நிற்பதை பார்த்தான்.

''என்ன பிரபா, வெளிய போகப் போறியா?''

''இல்ல. உன் கூட வரப் போறேன்.''

''வா, பிரபா. ஆனால், எதையும் பத்திரிகையில் எழுதக் கூடாது.''

''தெரியாதா, புகழ். நீ சம்பந்தப்பட்ட விஷயம். எப்படி எழுதுவேன்.''

காரில் ஏறிய போது மீண்டும், எஸ்.பி., அழைத்தார்.

''சார், கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்.''

''உயர் ஜாதிக்காரங்க நிறைய பேர், தாழ்த்தப்பட்டவங்க வசிக்கிற ஏரியாவுக்குள் நுழைஞ்சு, இரும்புத்தடி, சைக்கிள் செயின், அரிவாள் எல்லாம் வச்சி தாக்கி இருக்காங்க. வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டிருந்த, 'டூ-வீலர்' மற்றும் சைக்கிள் மொத்தத்தையும் அடிச்சு, நொறுக்கி இருக்காங்க. வீட்டுக்குள்ளயும் புகுந்து கொடூரமா வெட்டி இருக்காங்க. நெருப்பு வச்சு கொளுத்தி இருக்காங்க.''

''உயிர் சேதம் ஏதாவது?''

''இருக்கு சார்.''

''எத்தனை பேர்?''

''நாலு சார். ஒரு பெண், மூன்று ஆண்கள்.''

''மைகாட்! எப்படி இப்படி நடந்தது. ஏன் அஜாக்கிரதையா இருந்தீங்க? நான், முழு அளவில் போலீஸ் பந்தோபஸ்து போட சொல்லிட்டு தானே வந்தேன். இரவு - பகல் கண்காணிக்க சொன்னேனே... இன்ஸ்பெக்டர் விஸ்வேஸ்வரய்யா இருந்தாரா இல்லையா?''

''இருந்தார், சார்.''

''போலீஸ்காரங்க?''

''இருந்தாங்க.''

''பின்ன?''

''குறைவா இருந்தாங்க.''

''ஏன்?''

''எல்லா ஸ்டேஷன்களில் இருந்தும் கூப்பிட்டுக்கிட்டேன், சார். அப்படியும் போறல.''

''பக்கத்து ஊர்களில் இருக்கிற மொத்த ஸ்டேஷன்களில் இருந்தும் கூப்பிட வேண்டியது தானே? சரி, கவலைப்படாதீங்க. வந்துக்கிட்டே இருக்கேன். எதுவானாலும் சமாளிக்கலாம்.''

''நன்றி சார்!'' சற்று நிம்மதி அடைந்தார், ஈஸ்வரி.

''என்ன புகழ்?'' எனக் கேட்டான், பிரபாகர்.

ஈஸ்வரி தன்னிடம் கூறியதை சொன்னான்.

''எஸ்.பி., கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கணும், புகழ்.''

''ஆள்காட்டி விரலால் எதிராளியை சுட்டிக் காட்டினால், கட்டை விரல் நம்மை சுட்டிக் காட்டும் என்பர் இல்லையா? நானும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் வீட்டுக்கும் வந்திருக்க கூடாது. துாங்கியும் இருக்க கூடாது.''

''களைத்துப் போய் தானே வந்தாய்.''

''அதே களைப்பு அவர்களுக்கும் இருந்திருக்கும் இல்லையா?''

''இந்த எண்ணம் தான், உன்னை தனியாக பிரித்துக் காட்டுகிறது!''

''அமைச்சரும், தலைமைச் செயலரும் என் மீது காட்டிய, அதே பரிவைத்தான் நான், ஈஸ்வரியிடம் காட்டியிருக்கிறேன். நாமெல்லாம் மனிதர்கள் தானே. தேவர்கள் இல்லையே... தவறு செய்வது இயற்கை அல்லவா?''

புகழேந்தி பேசி முடிக்கவும், அமைச்சர் கூப்பிடவும் சரியாக இருந்தது.

''என்ன, புகழ் நீங்க. எவ்வளவோ சொல்லிவிட்டு வந்தும், கோட்டை விட்டுட்டீங்க,'' அமைச்சரின் குரலில் ஒருவித சலிப்பு தெரிந்தது.

என்ன பதில் சொல்வதென்று தடுமாறினான்.

''சரி, நீங்க இப்ப எங்க இருக்கீங்க?''

''ஸ்பாட்டுக்கு போய்க்கிட்டு இருக்கேன், சார்.''

''நீங்க போய் தேவையான நடவடிக்கை எடுங்க. நானும் கிளம்பிட்டேன். எவ்வளவு விரைவாக வந்தாலும் சென்னையிலிருந்து, நீர்வளூரை அடைய, ரெண்டு, ரெண்டரை மணி நேரமாயிடும். பார்த்துக்குங்க.''

''சரி, சார்.''

கண்களை மூடி, நீண்ட பெருமூச்சு விட்டான், புகழேந்தி.

''நிலைமை ரொம்ப மோசமாகத்தான் இருக்கு, புகழ். நான்கு உயிர்கள் என்பது சாதாரண விஷயமில்லை.''

''உண்மை தான், பிரபா. இந்த அளவுக்கு போகும்ன்னு நான் எதிர்பார்க்கல. மொத்தத் தப்பும் என் மீது தான். அமைச்சரும், தலைமைச் செயலரும் வச்ச நம்பிக்கையை, நான் காப்பாத்தல. மினிஸ்டர் வர்றாரு. அவர் முகத்துல முழிக்கிறதுக்கே சங்கடமாக இருக்கு. குற்ற உணர்ச்சியால் தவிக்கிறேன்.''

''வருத்தப்படாத, புகழ். யானைக்கும் அடி சறுக்கும்.''

அவர்கள் போன போது, அந்த ஊரே போர்க்களமாக காட்சியளித்தது. போர் முடிந்ததும் நிலவும் சோகம் பிரதிபலித்தது. எரிக்கப்பட்ட வாகனங்களும், கூரை வீடுகளும் வெந்து மெல்ல தணியத் தொடங்கும் காடு மாதிரி காணப்பட்டது. பெண்களின் அழுகையும், ஓலமும், கூக்குரலும் கேட்டது.

வீடு வீடாகப் போய் விசாரித்தான், புகழேந்தி. ஒவ்வொரு வீட்டுப் பெண்களும் கதறி அழுதனர். தங்கள் வீட்டு ஆண்கள் உயிருக்கு பயந்து ஊரை விட்டு ஓடி விட்டதை தெரிவித்தனர்.

மூன்று ஆண்களும், ஒரு நடு வயது பெண்மணியும் கொல்லப்பட்டதை கண்ணீரோடும், கவலையோடும் கூறினர். அந்த நால்வரின் சடலங்களைப் பெண்களே மயானத்துக்கு துாக்கிப் போய், இறுதிச் சடங்கு செய்ய தயாராகி விட்டதை கண்ட புகழேந்தி, மேலும் அதிர்ச்சிக்கு உள்ளானான்.

காவல் துறையினரை அழைத்து, இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்யும்படி உத்தரவிட்ட போது, ஆக்ரோஷமாயினர், பெண்கள்.

''ஏன் சார்... இப்ப நாலு பொணம் விழுந்ததுக்கப்புறம் வர்றீங்க. சாவுக்கு அப்புறம் தான் வருவீங்கன்னா நீங்க எதுக்கு? நாங்களே செய்துக்கறோம். இத்தனை நாளு எங்களை விட்ட மாதிரியே இப்பவும் விட்டுடுங்க.''

அவர்களின் நெஞ்சக் கனல், அவனைச் சுட்டது.

'இந்த அப்பாவிகளுக்கு தான் தவறு செய்து விட்டேனோ! இந்த பிரச்னையை ஆரம்பத்திலேயே கவனித்து சரி செய்திருந்தால், இவ்வளவு அசம்பாவிதங்களும் நடந்திருக்காதோ!'

மெல்ல வெளியில் வந்தான். மனசு மிகவும் சங்கடப்பட்டது. அவனது முக பாவத்தை கவனித்த, பிரபாகர் கையைப் பற்றி அழுத்தினான்.

''ரிலாக்ஸ், புகழ். ப்ளீஸ் ரிலாக்ஸ்!''

''முடியல, பிரபா. என்னால் தாங்க முடியல. இந்த பெண்களின் கண்ணீரும், எரிந்து கிடக்கும் வீடுகளும், மனைவி மற்றும் குழந்தைகளை எல்லாம் விட்டு ஓடிப்போன ஆண்களின் உயிர் பயமும், அடித்து உதைக்கப்பட்டதில் இறந்து கிடப்போரையும் பார்க்க, குற்ற உணர்ச்சி அதிகமாகிறது.

''அமைச்சருக்கும், முதல்வருக்கும், என்னை பரிபூரணமாக நம்பிய தலைமைச் செயலருக்கும் என்ன பதில் சொல்லப் போகிறேன் என தெரியவில்லை. அவர்களை எவ்வாறு எதிர்கொள்வேன், பிரபா?''

''நீ என்ன சின்ன பிள்ளையா, புகழ்? பிரச்னைகளை கையாளும் தைரியமற்றவனா? அவங்க அத்தனை பேருக்கும் உன்னை தெரியும், புகழ். இதெல்லாம் உனக்கு தான் புதுசு. அவங்க அரசியல்வாதிங்க. இந்த மாதிரி ஆயிரம் பிரச்னைகளை சந்திச்சவங்க. தீர்த்து வச்சவங்க.

''அதனால், இதுபோல் கலங்குவதையும், கவலைப்படுவதையும் விட்டு விட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம் என, மட்டும் யோசி.''

கீதோபதேசம் பெற்ற, அர்ஜுனனைப் போல் சடாரென்று எழுந்தான், புகழேந்தி. மடமடவென்று செயல்பட துவங்கினான். பெண்களிடம் பேசி போராடி, இறந்து போனவர்களின் உடல்களை எடுத்து போக, அமரர் ஊர்திகளை ஏற்பாடு செய்தான்.

எஸ்.பி., ஈஸ்வரியை அழைத்து, ''இந்த மகா பாதகத்தை செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, உடனடியாக கைது செய்யுங்க,'' என, உத்தரவிட்டான்.

கிட்டத்தட்ட, 200 காவலர்களை கொண்டு வந்து குவித்தான். அனைவரையும், 'ஷிப்ட்' முறையில் பணிபுரிய சொன்னான். பெண்கள் உட்பட அனைவருக்கும், மூன்று வேளை உணவும், டீயும், பிஸ்கட்டுகளும் வழங்கப்பட்டன.

''நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படுகிற வரை, இவை அனைத்தும் அப்படியே தொடரப்பட வேண்டும்,'' என்றான், புகழேந்தி.

அமைச்சர் வந்து பார்த்து, அவனது போர்க்கால அதிரடி நடவடிக்கைகளில் திருப்தி அடைந்தார். தான் எதையெல்லாம் செய்ய வேண்டும் என நினைத்து வந்தாரோ, அதையெல்லாம், புகழேந்தி செய்து முடித்திருப்பதை கண்டார்.

''சரியாக கையாண்டு இருக்கிறீர்கள், புகழேந்தி. இதை முதலிலேயே செய்திருந்தால், இந்த மாவட்டத்துக்காரன் என்ற முறையில் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்,'' என்றார்.

''கொஞ்சம் தவறத்தான் விட்டுட்டேன், சார்,'' என்றான், நிஜமான வருத்தத்துடன், புகழேந்தி.

''பரவாயில்லை. தாக்குதல் நடத்திய அத்தனை பேரையும் ஒருவர் விடாமல் கைது செய்யுங்கள். சி.எம்., கேட்டால், நான் விளக்கம் சொல்லிக் கொள்கிறேன்.''

''நன்றி, சார்.''

''பிரச்னையை மேலும் வளர விடாதீர்கள். பார்த்துக் கொள்ளுங்கள்.''

''சரி, சார்.''

அமைச்சர் கிளம்பிப் போனதும், நிம்மதி பெருமூச்சு விட்டான், புகழேந்தி.

''இனிமேலாவது கொஞ்சம் அமைதியாக இருப்பாயா, புகழ்?''

''இல்லை, பிரபா. இனிமேல் தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கணும். அமைச்சர் கூறியது போல், மேலும், எந்த பிரச்னையும் வராமல் கண்கொத்திப் பாம்பு போல் கண்காணிக்கணும்.''

ஆனால், எதிர்பார்த்த மாதிரி பிரச்னை, அதோடு நின்று விடவில்லை. மேலும், தீவிரமடைந்தது. செய்தி டில்லி வரை சென்று, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்திலிருந்து உயரதிகாரிகள் விபரம் சேகரிக்க, சென்னை வந்து, நீர்வளூர் கிராமத்துக்கும் வந்தடைந்தனர். அவர்களை எதிர்கொள்ளும் முன்பு, புகழேந்தியை அழைத்து பேசினார், தலைமைச் செயலர்.

''கவலைப்படாதீர்கள், புகழேந்தி. நல்லபடியாக அவர்களை அனுப்பி வையுங்கள். எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம்.''

கண்கள் கலங்கின, புகழேந்திக்கு. உண்மையில் இது கோபப்பட வேண்டிய விஷயம். தன்னை அழைத்து நிற்க வைத்து கேள்வி கேட்கப்பட வேண்டிய விஷயம். பதிலளிக்க இயலாமல் தான் தலைகுனிய வேண்டிய விஷயம்.

ஆனால், கொஞ்சம் கூட கோபமின்றி, அமைதியாகவும், நிதானமாகவும் கையாளுகின்றனரே... இந்த பொறுமையும், மென்மையான அணுகுமுறையும் தான், இவர்களை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தி இருக்கிறதோ!

இந்த பொறுமையும், நிதானமான அணுகுமுறையும் தனக்கும் வேண்டும் என்றும், தன்னாலும் கையாளப்பட வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டான், புகழேந்தி.

அம்மா போன் பேசியதும், சென்னையிலிருந்து தான் புறப்பட்டு வந்ததிலிருந்து என்னவெல்லாம் நடந்து விட்டது என்பதை, கண்மூடியபடி நினைத்துப் பார்த்தாள், கயல்விழி.

கரகரவென்று கயல்விழி கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து, கன்னங்களை நனைத்த போது, யாரோ அருகில் வந்து நிற்பதை உணர்ந்து, சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தாள்.

புகழேந்தி!

''சார்...'' என, எழ முயன்றவளின் தோளை அழுத்தி உட்கார வைத்தான்.

''ரிலாக்ஸ்... ப்ளீஸ் ரிலாக்ஸ். அமைதியாக உட்காருங்கள்.''

அவளது கவலை தோய்ந்த முகமும், நீர் நிறைந்த கண்களும், புகழேந்தியை மட்டுமின்றி, பிரபாவையும் என்னவோ செய்தது.

''என்ன ஆச்சு, புகழ்?'' என, மெலிதான குரலில் கேட்டான், பிரபா.

''அதான் எனக்கும் தெரியல,'' என்ற, புகழேந்தி அதே கட்டிலில் அவளருகில் அமர்ந்து கொண்டான்.

''என்ன ஆச்சு, கயல்? ஏன் என்னவோ மாதிரி இருக்கீங்க?''

''இங்கு யாரும் என்கிட்ட பேச மாட்டேன்றாங்க. எது கேட்டாலும், 'கலெக்டரை கேளுங்க'ன்னு பதில் சொல்றாங்க.''

''நீங்க நேரிடையாக என்கிட்டயே கேட்க வேண்டியது தானே!''

''ரெண்டு, மூணு நாளா நீங்க தான் வரவே இல்லையே?''

''நீர்வளூர் என்ற கிராமத்தில் பெரிய பிரச்னை. ரெண்டு, மூணு நாளாத் துாக்கமில்லை, சாப்பாடு இல்லை. ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் பற்றியும் அறிவீர்கள் அல்லவா!''

கயல்விழியின் கண்கள் பளிச்சிட்டன. துக்கமெல்லாம் மறைந்து முகம் மலர்ந்தது.

''என்னை பற்றின எல்லா விபரமும் உங்களுக்கு தெரியுமா?'' என்றாள், கயல்விழி.

''எஸ்.பி., ஈஸ்வரி ரொம்பத் திறமைசாலி. ஒரே நாள்ல மொத்த விபரமும் கண்டுபிடிச்சு சொல்லிட்டாங்க.''

''அப்படின்னா எங்கம்மாவைப் பற்றியும் சொல்லி இருப்பாங்களே!''

சடாரென்று அவனது முகம் மாறியது; புன்சிரிப்பு நின்றது.

- தொடரும்இந்துமதி






      Dinamalar
      Follow us