
பிப்., 3 - அண்ணாதுரை நினைவு நாள்
நகைச்சுவையாக பேசுவதில் மட்டுமல்ல, அடுக்கு மொழியில் பேசுவதிலும் கை தேர்ந்தவர், அண்ணாதுரை.
ஒருமுறை தேர்தல் வந்தது. அவரது பேச்சைக் கேட்க, இரவு நெடுநேரம் வரை காத்திருந்தது, மக்கள் கூட்டம்.
அங்கு வந்த, அண்ணாதுரை மிகவும் களைத்து போயிருந்தார். ஆனாலும், மக்களுக்காக மேடை ஏறினார்.
அவர், 'மைக்' முன் நின்று, 'மாதமோ சித்திரை... மணியோ பத்தரை... உங்களைத் தழுவுவதோ நித்திரை... மறக்காது இடுவீர் எனக்கு முத்திரை...' என்று பேசத் துவங்கியதும், மக்கள் கூட்டம் துாக்கத்திலிருந்து விழித்து, சுறுசுறுப்பானது.
*****
'திராவிட நாடு' பத்திரிகை அலுவலகத்தில், தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார், அண்ணாதுரை.
மதிய உணவாக அவர்கள் அனைவருக்கும், கோழி பிரியாணி வரவழைக்கப்பட்டது. அங்கிருந்த பழனி என்பவர் மட்டும், சைவம். ஆகவே, அவருக்கு மட்டும், இட்லி பொட்டலம்.
எல்லாரும் சாப்பிட துவங்கினர்.
அப்போது, அவர்களை பார்த்து, 'மனிதன் இயற்கை விதியின் படி, சைவம் தான் சாப்பிட வேண்டும். காரணம், குரங்கிலிருந்து தான் பிறந்தான், மனிதன். அசைவம் சாப்பிடுவதில்லை, குரங்கு. மனிதனுக்கும் அந்த விதி பொருந்தும்...' என்றார், பழனி.
உடனே, பழனியைப் பார்த்து, 'குரங்கிலிருந்து தான் பிறந்தான், மனிதன். படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று அறிவு வளர்ந்ததும், நெருப்பைக் கண்டுப்பிடித்தான். அசைவம் சாப்பிடக் கற்றுக் கொண்டான். அதுபோல், நாங்கள் மனிதர்களாகி விட்டோம். நீ தான் இன்னும் அந்த குரங்கின் நிலையிலேயே இருக்கிறாய்...' என்றார், அண்ணாதுரை.
அதைக்கேட்டு, நண்பர்கள் அனைவரும் சிரிக்க, வேறு வழியின்றி பழனியும் சிரித்தார்.
******
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது, ஒருநாள் தன் சக, எம்.பி.,களுடன் பாராளுமன்ற வராந்தாவில் பேசிக் கொண்டிருந்தார், அண்ணாதுரை.
அப்போது, அவரிடம், 'நீங்கள் எனக்கு, இரண்டு ரூபாய் தர வேண்டும்...' என்றார், எம்.பி., ஒருவர்.
அதைக்கேட்டு திடுக்கிட்டு, 'நான் உங்களிடம் எப்போது இரண்டு ரூபாய் கடன் வாங்கினேன். எனக்கு ஞாபகத்தில் இல்லையே?' என்றார், அண்ணாதுரை.
அந்த எம்.பி., புன்சிரிப்புடன், 'நான் ஒருமுறை சென்னை வந்திருந்த போது, உங்களுடைய பேச்சை கேட்க விரும்பி, இரண்டு ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கினேன். ஆனால், நீங்கள் அந்த கூட்டத்துக்கு வரவேயில்லை. அந்த இரண்டு ரூபாயை தான் இப்போது கேட்கிறேன்...' என்றார்.
உடனே, 'ஓ... அதுவா விஷயம். நான் மீண்டும் ஒருமுறை சென்னையில் பேச இருக்கிறேன். அப்போது, நீங்கள் வந்தீர்களானால் உங்களுக்காக நானே ஒரு டிக்கெட் எடுத்துக் கொடுத்து விடுகிறேன்...' எனச் சொல்லி அண்ணாதுரை சிரிக்க, அந்த எம்.பி., உட்பட அங்கு கூடியிருந்த எம்.பி.,களும் சிரித்தனர்.
- நடுத்தெரு நாராயணன்