
'இந்திய விடுதலை போராட்டம்' என்ற நுாலிலிருந்து: ஹி ந்து - முஸ்லிம் கலவரம், உச்சகட்டத்தில் இருந்த சமயம் அது.
ஹிந்து - முஸ்லிம்களுக்கு இடையே பதட்ட நிலை ஏற்பட்ட போது, 'ஆசாத் முஸ்லிம் வானொலி' ஒலிபரப்பு சேவை துவங்கப்பட்டது. ஜின்னாவின் வார்த்தைக்கு அடிபணிந்து, 'வெள்ளையனே வெளியேறு' இயக்க போராட்டத்தை புறக்கணித்தனர், முஸ்லிம்கள்.
கடந்த, ஏப்., 1944ல், ஜின்னாவை சந்தித்து, எதிர்காலத்தில் முஸ்லிம்களின் எல்லை வரையறை, பிரிவினை பாதுகாப்பு போன்றவற்றை பற்றி விவரித்தார், ராஜாஜி. இதை கேட்ட உடனே, ராஜாஜியின் திட்டத்தை நிராகரித்தார், ஜின்னா.
ஜூலை 17, 1944ல், ஜின்னாவுக்கு கடிதம் எழுதி, அதில் அவரை சந்திப்பதற்கான, தம் விருப்பத்தை வெளிப்படுத்தினார், காந்திஜி. அதற்கு, தன் வீட்டில் சந்திக்கும்படி பதில் எழுதினார், ஜின்னா.
ஜின்னாவை மலபார் மலை மாளிகையில் சந்தித்தார், காந்திஜி. இருவருக்கும், செப்டம்பர் 9லிருந்து, 27ம் தேதி வரை பேச்சு வார்த்தை நடந்தது. ஜின்னாவின், இரு நாட்டு கொள்கையில், காந்திஜிக்கு உடன்பாடே இல்லாமல் இருந்தது. அதற்கு முன், 1940ல், லாகூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட, பாகிஸ்தான் தீர்மானத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என, பிடிவாதமாக இருந்தார், ஜின்னா.
முஸ்லிம் லீக்கின் சட்டமன்ற கட்சி தலைவராக இருந்தவர், லியாகத் அலிகான். இவர் தான் காங்கிரஸ் தலைவர் தேசாயுடன், பிரிவினை பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜூன் 25, 1945ல், இந்திய தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார், வைஸ்ராய் வேவல் பிரபு. அந்த மாநாட்டை, சிம்லாவில் உள்ள வைஸ்ராய் மாளிகையில் கூட்டினர்.
இடைக்கால அமைச்சரவையில் சேர மறுத்த ஜின்னா, 1946ல், ஆகஸ்ட் 16ம் தேதியை, நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தார். அந்நாளை துக்க தினமாக கருத வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் பிரிவு, முஸ்லிம் லீக் பிரிவு எனப் பிரிந்து, தனித்தனி தலைமையின் கீழ் செயல்பட்டன.
இடைக்கால அரசில் அங்கம் வகித்தபடியே, மறுபுறம், இனக்கலவரத்தை துாண்டி, 'டபுள் கேம்' ஆடியது, முஸ்லிம் லீக். மேலும், அரசியலமைப்பு சட்டமன்றத்தில் சேர மறுத்தது.
இந்த சூழ்நிலையில் மவுண்ட் பேட்டன் பிரபு, இந்திய வைஸ்ராயாக, மார்ச் 24, 1947ல், பதவியேற்றார். பதவியேற்றதும், காந்திஜி, ஜின்னா, ஆசாத் மற்றும் படேல் போன்ற தலைவர்களை அழைத்து பேசினார்.
'இந்திய அரசியல் மற்றும் இனச்சிக்கல் தீர வேண்டுமானால், இந்தியாவை பிரிவினை செய்வதை தவிர வேறு வழியில்லை...' என கூறினார், மவுண்ட் பேட்டன்.
ஜூன் 3, 1947ல், தன்னுடனிருந்த நேரு, ஜின்னா மற்றும் பல்தேவ் சிங் ஆகியோரிடம் இந்தியாவை இரண்டாக பிரிக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் பெற்றார், மவுண்ட் பேட்டன்.
இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு டொமினியன்கள், ஆகஸ்ட் 15, 1947ல் உருவாகின. ஆகஸ்ட் 14 - 15 நள்ளிரவில் இந்தியாவுக்கு வெளிச்சம் கிடைத்தது. ஆம், பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியாவில் முடிவுக்கு வந்தது.
ஆங்கிலேயரின் பிரித்தாளும் கொள்கை, இறுதி வரை அவர்களுடனிருந்தது. இறுதியில், இங்கிருந்து வெளியேறும் போதும், இந்தியாவை பிரித்து விட்டே வெளியேறினர்.
ஒன்றுபட்ட இந்தியாவை உயிருக்கும் மேலாக நினைத்த, காந்திஜி, பிரிவினைக்கு எப்படி சம்மதித்தார்? வன்முறையால் அப்பாவி மக்கள் அடைந்த இன்னல்கள், அவரை தலையசைக்க செய்தது என்பதே, நிதர்சனமான உண்மை.
இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மவுண்ட் பேட்டன், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார். இந்தியா விடுதலை அடைகிறது என, அரசியலமைப்பு சட்டமன்றம் செய்த பிரகடனத்தில் கையெழுத்திட்டார், மவுண்ட் பேட்டன்.
'யூனியன் ஜாக்' பறந்த கொடி மரத்தில் அசோகச் சக்கரம் பொறித்த, மூவர்ண இந்திய சுதந்திர கொடியை பறக்க விட்டார், மவுண்ட் பேட்டன். இந்திய தேசிய கொடியை முதன் முதலில் ஏற்றியவர், ஒரு ஆங்கிலேயரே!
நடுத்தெரு நாராயணன்

