தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஏப் 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுதந்திர போராட்டத்தின் போது, புரட்சி வீரர்களான, பகத் சிங், சுக்தேவ் மற்றும் ராஜகுரு ஆகியோர், பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரியான, ஜான் சாண்டர்ஸை படுகொலை செய்ததோடு, அரசு அலுவலகம் மீதும் குண்டு வீசி தகர்த்தனர். இக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு, பஞ்சாப் மாநிலம் லாகூரில் நடைபெற்றதால், 'லாகூர் சதி வழக்கு' என்று இந்திய சரித்திரத்தில் இடம் பெற்றது.

இச்சதியில் ஈடுபட்டதாக கூறி, பகத்சிங்கின், 30 தோழர்கள் மற்றும் வங்காளத்தை சேர்ந்த, ஜாதின் தாஸையும் கைது செய்து சிறையில் அடைத்தது, பிரிட்டிஷ் அரசு.

இவர்கள் சிறையில் கடும் சித்ரவதைக்கு ஆளாயினர்.

தங்களை, அரசியல் குற்றவாளிகளை போல் நடத்த வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார், ஜாதின். அவரை சிறையில் சந்தித்து, உண்ணாவிரதத்தை நிறுத்த முயன்றார், நேரு. ஆனால், முடியவில்லை.

அறுபத்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, செப்., 13, 1929ல், மரணமடைந்தார், ஜாதின் தாஸ். லாகூரிலிருந்து, கல்கத்தாவுக்கு தனி ரயிலில், தாஸ் உடல் கொண்டு செல்லப்பட்டது. கல்கத்தாவில், ஜாதின் தாஸ் உடலை பெற்று நல்லடக்கம் செய்தார், சுபாஷ் சந்திரபோஸ்.

இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பல லட்சம் மக்கள், கண்ணீருடன், ஜாதின் அஸ்தியை தங்கள் நெற்றியில் இட்டு, வீர வணக்கம் செலுத்தினர். இதற்கு பின், ஆங்கில அரசு, சிறையில், ஏ, பி, சி, என்று, மூன்று வகுப்புகளை உருவாக்கியது.

ஜாதின், மரணத்தை கண்டுகொள்ளவே இல்லை, காந்திஜி. ஒரு வார்த்தை கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. அவர் ஆசிரியராக இருந்த, 'யங் இந்தியா'வில், பொதுவாக எல்லா செய்திகளும் வெளிவரும். ஆனால், இளைஞர் ஜாதின் மரணத்தைப் பற்றி ஒரு வரி கூட வரவே இல்லை.

நேதாஜிக்கும், காந்திஜிக்கும் இடையிலான பனிப்போர் தான் இதற்கு காரணம் என்று சொல்லப்பட்டது.

*****

பத்திரிக்கையாளர், திருப்பூர் கிருஷ்ணன் ஒரு கட்டுரையில்... தி ருப்பூரில், ராஜபார்ட் ரங்கதுரை சினிமா ஓடிக் கொண்டிருந்தது. கடைசி காட்சியில், சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்த, கொடி காத்த குமரனாக நடித்திருந்தார், சிவாஜி கணேசன்.

அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கென்றே அந்த சினிமாவுக்கு போனார், குமரனின் மனைவி, ராமாயி அம்மாள். திருப்பூர் குமரனாக வரும் பாத்திரம் கொலையுண்டு இறப்பதைப் போல் அமைந்த காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, மயங்கி விழுந்தார், அந்த மூதாட்டி. தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவிக்கப்பட்டு, பத்திரமாக திருப்பூர் ஓடக்காட்டிலிருந்த அவரது இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

நான், ஒருமுறை ராமாயி அம்மாளை சந்தித்த போது, 'சிவாஜி நடிப்பு எல்லாரையும் மயங்க வைக்கக் கூடியது தான், அம்மா. ஆனாலும், நீங்கள் ஏன் அவர் குமரனாக நடித்ததைப் பார்த்து அப்படி மயக்கம் போட்டு விழுந்தீர்கள்?' என்று கேட்டேன்.

ராமாயி அம்மாள் சொன்ன பதில் நெஞ்சை உலுக்கியது...

'தம்பி, 10 வயசுலே எனக்குக் கல்யாணம். வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே, 17 வயசுலே தாலியறுத்தேன். புருஷனோட வாழ்ந்த வாழ்க்கை ஏழு வருஷம். அவர் போலீஸ்லே அடிபட்டு சாகறப்பக் கூட நான் திருப்பூர்ல இல்லே. எத்தினி வருஷம் ஓடிப்போச்சு. சிவாஜி நடிச்ச அந்தப் பாத்திரத்தையே, என் புருஷனா நினைச்சுப் பார்த்தேன். அந்த கதாபாத்திரம் செத்து விழுந்தப்ப, உண்மையிலேயே என் புருஷன், அப்போது தான் செத்ததா நினைச்சு மயக்கம் போட்டு விழுந்திட்டேன், ராசா...' என்று சொல்லி, விழிகளை துடைத்துக் கொண்டார், ராமாயி அம்மாள்.

இந்த சம்பவத்தை நான் சொல்லக் கேட்டு, கண் கலங்கினார், சிவாஜி கணேசன். 'எப்படிப்பட்ட தியாகத்தை எல்லாம் பண்ணி இந்த சுதந்திரத்தை நாம் வாங்கியிருக்கிறோம்!' என்று சொல்லி, மனம் நெகிழ்ந்தார்.

திருப்பூர் குமரனின் மனைவி, ராமாயி அம்மாள், 90 வயது வாழ்ந்து, காலமாகி விட்டார். அதில், 73 ஆண்டுகள் கணவனை இழந்த தனிமை வாழ்வு.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us