தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (10)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (10)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (10)


PUBLISHED ON : ஜூன் 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன், தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்: த மிழில் பரபரப்பான நாயகியாக நடித்து கொண்டிருந்தவர், ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக இருந்து, மூன்று முடிச்சுகள் படத்தில் கதாநாயகியாக நடித்த, ஸ்ரீதேவி, ஹிந்தி படங்களில் நடிக்க போன சமயம் அது. 16 வயதினிலே படத்தோட தழுவல் தான், சாவ்லா சாவன் என்ற ஹிந்தி படம். ஹிந்தியில், ஸ்ரீதேவிக்கு முதல் படம் அது; எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மூன்றாம் பிறை தமிழ் படத்தின் ஹிந்தி தழுவலான, சத்மா படம் ஓரளவுக்கு ஓடி, ஸ்ரீதேவிக்கு பெயர் வாங்கி கொடுத்தாலும், பெரிய வாய்ப்புகள் அவருக்கு ஆரம்பத்தில் கிடைக்கவில்லை.

ஹிந்தி நடிகர், ஜிதேந்திராவுடன் இவர் நடித்த, ஹிம்மத் வாலா படம் வெளிவந்து, 'சூப்பர் ஹிட்' ஆன பின்னரே, ஸ்ரீதேவியை ஹிந்தி திரையுலகம் திரும்பி பார்க்க ஆரம்பித்தது.

ஒருமுறை வாகினி ஸ்டூடியோவில், மிக சாதாரணமாக நாற்காலியில் உட்கார்ந்து, 80 பக்க நோட்டு ஒன்றை வைத்து படித்துக் கொண்டிருந்தார்.

ஸ்ரீதேவியுடன் எப்போதும் அவரது தங்கை, ஸ்ரீலதா உடன் வருவார். எப்படியாவது, ஸ்ரீதேவியிடம் பேசி, பேட்டி எடுத்து விட வேண்டும் என்று நினைத்து, 'ஸ்ரீதேவி மேடம் என்ன படிக்கிறாங்க?' என ஒப்பனையாளரிடம் கேட்டேன். அவர், ஸ்ரீதேவியின் தங்கை, ஸ்ரீலதாவிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். என்னைப்பற்றி தகவல் சொன்னதும், 'அக்கா பேட்டி எதுவும் தருவதில்லையே...' என்று மறுத்தார், ஸ்ரீலதா. 'ஐந்து நிமிடம் கொடுத்தால் போதும்...' என்றதும், ஸ்ரீலதாவே என்னை அழைத்து போய், ஸ்ரீ தேவியிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

என் கையில் இருந்த, 'தாய்' இதழைப் பார்த்ததும், வாங்கி பார்த்தவர், 'நான் இப்பல்லாம் எந்த பேட்டியும் தர்றதில்லே, சாரி...' என்றார்.

'இது, சி.எம்., நடத்துற பத்திரிக்கை. ஒருநாள் மட்டும் உங்களோடு இருக்கிற மாதிரி நேரம் ஒதுக்கிக் கொடுங்க. உங்ககிட்ட எதுவுமே பேசாமல், உங்கள் ஒருநாள் நடவடிக்கைகளை தொகுத்து, கட்டுரையாக எழுதிக் கொள்கிறேன்...' என்றேன்.

முதலில் மறுத்தவர், வற்புறுத்தலுக்கு பின் ஒப்புக் கொண்டார்.

மறுநாளே வீட்டுக்கு வரச் சொன்னார். மயிலாப்பூர் சி.ஐ.டி., காலனியில் அப்போது, ஸ்ரீதேவியின் வீடு இருந்தது. காலை 6:00 மணிக்கு நானும், புகைப்படக்காரரும் அங்கு போய் விட்டோம். வாட்ச்மேன் உள்ளே விட மறுத்தார். ஒருமணி நேரக் காத்திருப்புக்கு பின், ஸ்ரீதேவியின் ஒப்பனையாளர் தயவால் உள்ளே சென்றோம். புகைப்படக்காரர், ஜெயமோகனிடம், 'கேமராவை ரெடியாக வைத்துக் கொள்ளுங்கள்...' என்று ஆரம்பத்திலேயே சொல்லி விட்டேன். 'மேக்-அப்' எதுவும் போடாமல் வெளியே வந்த, ஸ்ரீதேவிக்கு வணக்கம் சொன்னேன்.

'நீங்க நேரா பிரசாத் ஸ்டூடியோ வாங்க...' என்றார்.

'வீட்டை விட்டு நீங்க கிளம்புறதெல்லாம் போட்டோ எடுத்துக்கிட்டு, நேராக ஸ்டூடியோ வர்றோம்...' என்றேன்.

'சரி' என்று சொல்லி, 10 நிமிடத்தில் வெளியே வந்தார். வீட்டிலிருந்து கிளம்பி, காரில் ஏறுவது வரை விதவிதமாக படங்கள் எடுத்து, பிரசாத் ஸ்டூடியோ போனால், அங்கே, வாட்ச்மேன் உள்ளே விட தடை போட்டார். பிறகு இசையமைப்பாளர், கங்கை அமரனின் சிபாரிசில் உள்ளே சென்றோம்.

ஸ்ரீதேவி, 'மேக்-அப்' போடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார். உடை மாற்றிய பிறகு, அவரே அழைத்து படம் எடுத்துக் கொள்ள சொன்னார். அவருடன் படப்பிடிப்பு தளத்திற்கு உள்ளே போய் புகைப்படம் எடுத்தோம். புகைப்படம் எடுப்பதை பார்த்த படக்குழுவில் இருந்த ஒருவர் சண்டைக்கு வந்து விட்டார்.

'அவங்க என்னுடைய விருந்தினர்...' என சொல்லி, அந்தப் பிரச்னையை சமாளித்தார், ஸ்ரீதேவி. படப்பிடிப்பு இடைவேளையில், கையில் வைத்திருந்த நோட்டை திறந்து படிக்க ஆரம்பித்தார்.

'என்னதான் படிக்கிறீங்க?' என, அவரிடம் கேட்டே விட்டேன்.

அவர் சிரித்தபடி, 'ஹிந்தி பாடம். தமிழ் அர்த்தத்தோட படிக்கிறேன். மும்பையிலே, தமிழ் தெரிந்த ஹிந்தி டீச்சர் வந்து சொல்லி தர்றாங்க. அவங்க சொல்ல, சொல்ல நான் குறிப்பு எடுத்து, நோட்ல எழுதிப் படிக்கிறேன்...' என்றார்.

ஸ்ரீதேவியால், எங்களுக்கும் அன்று சுவையான மதிய உணவு கிடைத்தது.

'படப்பிடிப்பு நிகழ்வு - காலை முதல் மாலை வரை!' என்ற தலைப்பில், 'தாய்' இதழில் கட்டுரையாக வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பின், தமிழில், ஸ்ரீதேவி பற்றி வெளிவந்த கட்டுரை அது.

இ ன் னொரு நாள், தி.நகர் சோமசுந்தரம் மைதானம் அருகே, அதிகாலை நேரம், ஸ்ரீதேவியை சந்திக்க நேர்ந்தது. 'குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது, வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள, அந்த வீட்ல தான் குடியிருந்தோம். இப்போது அந்த வீடு கல்யாண மண்டபமாக மாறிப் போச்சு. அதன் அருகிலேயே இன்னொரு இடம் வாங்கினோம். இங்கு சின்னதா ஒரு ஹோட்டல் கட்டலாம் என்று ஆசை. அதற்கான பூமி பூஜை தான் இன்று நடக்கிறது...' என்றார், ஸ்ரீதேவி.

பூமி பூஜைக்காக, பூமியை தோண்டும்போது, மிகவும் உக்கிரமான களிமண்ணாலான காளி சிலை ஒன்று வெளி வந்தது. எல்லாரும் பயந்து விட்டனர். ஸ்ரீதேவியின் அம்மா ராஜேஸ்வரி, 'இது அபசகுனமா இருக்கிறதே...' என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார். பூஜைக்காக அங்கு வந்திருந்த, சாஸ்திரி ஒருத்தர், 'ஆஞ்சநேயர் சிலை வச்சா, எந்த தோஷமும் வராது. கவலைப்படாதீங்க...' என, சொன்ன பின் தான் சமாதானமானார். 'ஸ்ரீதேவி பார்க்' என்ற அந்த ஹோட்டல் முன் இப்போதும் அந்த, ஆஞ்சநேயர் கோவில் உண்டு.

ஸ்ரீ தேவிக்கு திருமணம் ஆன பின், சென்னை, ஆழ்வார்பேட்டையில் இருக்கும், ஆஞ்சநேயர் கோவிலில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிகாலை, 4:00 மணிக்கு அவர் அந்த ஆலயத்திற்கு வந்து விட்டார். அதிகாலை நேரம் பூஜை செய்வதற்காக, அப்போது, அ.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்பில் இருந்த, ஜெயலலிதாவும் கோவிலுக்கு வந்தார். இருவரும் சில நிமிடங்கள் பேசினர்.

'இந்த ஆலயத்திற்கு அடிக்கடி வருவீர்களா?' என்று, ஸ்ரீதேவியிடம் கேட்டேன்.

'நான் சென்னைக்கு வரும்போதெல்லாம் நிச்சயமா இங்கு வந்து விடுவேன். மனசு ஒரு மாதிரியா இருந்தாலும், நான் இங்கு வருவேன். இங்கு பிரார்த்தனை செய்து விட்டு சென்றால், நிச்சயம் வெற்றியை தரும்...' என்றார், ஸ்ரீதேவி.

ஆஞ்சநேயர் ஆலயத்தை பார்க்கும் போதெல்லாம், ஸ்ரீதேவி தான் இன்றைக்கும் நினைவில் இருக்கிறார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பேட்டி எடுத்த அனுபவம்...



- தொடரும்

ஆர்.பிரபாகரன்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us