தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (19)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (19)

திரை நட்சத்திரங்களுடன் நந்தவன நாட்கள்! (19)


PUBLISHED ON : ஆக 09, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 09, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தாய்' வார இதழில் பணிபுரிந்தவரும், பத்திரிகையாளருமான பிரபு என்ற பிரபாகரன், தான் சந்தித்து பேட்டியெடுத்த திரை நட்சத்திரங்களுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்:

புது நெல்லு புது நாத்து படத்தின் நாயகியாக ந டிகை, சுகன்யா அறிமுகமாவதற்கு முன்பாகவே, அவர் எனக்கு நன்கு பழக்கம். அவரது அப்பா ரமேஷ், ஆன்மிக எழுத்தாளர். சேஷாத்ரி சுவாமிகள் வரலாறு, ஆழ்வார்கள் வரலாறு, நாயன்மார் வரலாறு, திருத்தல பெருமைகள் என, நிறைய ஆன்மிக நுால்களை எழுதியவர்.

'என் மகள்கள் கீதா, சுகன்யா இருவரும் பரதநாட்டியம் ஆடுபவர்கள். 'தாய்' இதழில் அவர்களைப் பற்றி எழுத முடியுமா?' என கேட்டார், சுகன்யாவின் அப்பா. புகைப்படக்காரர் ஜெயமோகனுடன் அவரது வீட்டுக்கு சென்று, விதவிதமாக புகைப்படமும், பேட்டியும் எடுத்தோம்.

அப்போது, தன் வெளிநாட்டு பயண அனுபவங்களை சொல்ல ஆரம்பித்தார், சுகன்யா...

'சந்திரலேகா கலைக்குழுவில் நானும் ஒரு உறுப்பினர். பரதநாட்டியம் ஆடுவதற்காக பல நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன். ஒன்றிணைந்த சோவியத் யூனியனில் இந்தியக் கலை விழாவிற்காக சென்றிருந்த போது, நாங்கள் இந்தியர் எனத்தெரிந்ததும், எங்களுக்கு தனி மரியாதை தந்தனர், ரசிகர்கள்.

'நாங்கள் அணிந்திருந்த கைவளையல்களைப் பார்த்து, அவர்கள் ஆச்சரியமடைந்தனர். நெற்றியில் வைத்திருந்த, ஸ்டிக்கர் பொட்டை தொட்டு தொட்டு பார்த்தனர். நாங்கள் ரஷ்யாவில் இருந்து திரும்பி வரும்போது, நிகழ்ச்சிக்காக நாங்கள் கொண்டு சென்றிருந்த சேலை, வளையல் மற்றும் ஸ்டிக்கர் பொட்டு அனைத்தையும் அங்கிருந்த பெண்களுக்கு பரிசாக கொடுத்துவிட்டு வந்தோம்.

'அதுபோல, ஜெர்மனியில் நடைபெற்ற நாட்டியப் போட்டிகளிலும் கலந்து கொண்டேன். 25 பேர் கொண்ட எங்கள் குழுவில், ஆறு பேர் பெண்கள். இவர்களில் ஒருத்தி மட்டும் பெங்களூரு; மற்றவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள். ஜெர்மனி நாட்டில் இருக்கிற சில நடன குழுக்களும் இதில் பங்கேற்றன. ஒவ்வொரு குழுவும் வெவ்வேறு இசை நாட்டியங்களை நடத்தினர். டார்க்மென்ட் என்ற ஊரில், ஹோட்டலில் தங்கியிருந்தோம். இந்தியா சார்பாக கலந்து கொண்ட ஒரே குழு எங்களுடையதுதான். காலை முழுக்க நாட்டிய பயிற்சி, மாலையில் நிகழ்ச்சி இருந்ததால், மற்ற நாட்டு நடன நிகழ்ச்சிகளை முழுவதுமாக பார்க்க முடியவில்லை.

'ஆஸ்திரேலியாவின், ஐலேண்ட் தியேட்டரில் நடந்த, டான்ஸ் நிகழ்ச்சியை பார்த்தோம். ஒவ்வொரு குழுவும் டான்ஸ்ல, 'வெரைட்டி' காட்டினாங்க. நாங்க ஆடினது, 'ஆங்கீகா' என்ற நடன வகை. பரதத்தின் சாயல், களரிக்கும், யோகாவுக்கும் உண்டுன்னு நடத்தி காட்டியது தான், 'ஆங்கிகா' என்ற புதிய நாட்டிய கலை. பரதம் ஆடி விட்டு, தொடர்ந்து களரி பண்ணுவோம். ரசிகர்கள் கைத்தட்டி ரசித்தனர்.

'ஓய்வு நேரத்தில் ஜெர்மனியின், காகெயின் காட்டுப் பகுதிக்கு போயிருந்தோம். அங்கே, 400 ஆண்டுகளுக்கு முன் கட்டிய வீடுகளை எல்லாம் புதுப்பிச்சு வச்சிருக்காங்க. 'இது எதற்கு?' என்று கேட்டால், 'பழங்கால பொருட்களை பாதுகாப்பதில் எங்களுக்கு ஆர்வம் அதிகம்...' என்றனர்.

'சாப்பிட ஜெர்மனியில், அரிசி சாதம் கூட கிடைத்தது. ஆனால், குடிக்க தண்ணீர் தான் கிடைக்கவில்லை. இந்தியாவிலிருந்து ஊறுகாய், மிளகாய் பொடி, பருப்பு பொடி கொண்டு போன மாதிரி தண்ணீரையும் கொண்டு வந்திருக்க வேண்டியதுதானே என்று, என்னை கேலி செய்தாங்க, எங்கள் குழுவினர்.

'இந்தியா திரும்பி வரும்போது, டார்க்மென்ட்டில் இருந்த விமான நிலையத்தில், இரவு, 7:00 மணிக்கு விமானம் ஏற வேண்டும். ஆனால், நாங்கள் போவதற்குள், விமானம் கிளம்பி போய்விட்டது. அங்கே இருந்து, பிராங்க்பர்ட் நகருக்கு பஸ்ல போய், அதே விமானத்தில் ஏறினோம். எங்களுக்காக, விமான நிலைய அதிகாரிகள் போன் பண்ணி சொன்னதால, விமானம் காத்திருந்தது...' என, சுகன்யா கூறிய இத்தகவல்களை, நான் அப்படியே, 'தாய்' வார இதழில் எழுதியிருந்தேன்; அக்கட்டுரை வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

அண்மையில், அயோத்தி ராமர் கோவிலில், ஜெய் ஸ்ரீ ராம் என்று அவர் ஒரு ஆடியோ ஆல்பத்தை தயாரித்து வெளியிட்டார். பாடல் பாட வேண்டும் என்ற அவரது ஏக்கத்தை இந்த, ஆடியோ ஆல்பம் மூலம் தீர்த்துக் கொண்டார், சுகன்யா.

டி. ராஜேந்தரின், தங்கைக்கோர் கீதம் படத்தின் படப்பிடிப்பு, 'வாகினி ஸ்டுடியோ'வில் நடந்தது. பிரமாண்டமான அரங்குகள் போடப்பட்டிருந்தன. படக்குழுவின், பி.ஆர்.ஓ., மணி என்னை உள்ளே அழைத்துச் சென்றார். நான், 'தாய்' பத்திரிகையில் இருந்து வருவதாக, டி.ராஜேந்தரி டம் அறிமுகப்படுத்திக் கொண்டதும், 'அது எம்.ஜி.ஆர்., பத்திரிகை ஆச்சே...' என்றார்.

அதன்பின், அவர், என் தோளில் கை போட்டு பேசும் அளவிற்கு நன்கு பழகிவிட்டார். இப்போதும், என்னை எங்கு பார்த்தாலும், 'என்ன பிரபு?' என, கேட்காமல் இருக்க மாட்டார்.

ஒரு முறை, 'பிரசாத் பாடல் பதிவு' அரங்கில் அவரை சந்திக்க சென்றிருந்தேன். மேஜை மீது தாளம் போட்டு, இப்படி வரணும் என, தாளலயம் குறிப்பிட்டு கொண்டிருந்தார், டி.ஆர்.,

தெய்வம், அவருக்கு இசை ஞானம் மட்டுமல்ல, மனிதநேயத்தையும் கொடுத்திருந்தது.

செப்., 16, 1982ல், திடீரென நடிகை உஷாவை, திருமணம் செய்து கொண்டார், டி.ராஜேந்தர்.

டி.ஆரின் நண்பரும், நடிகருமான, ரவீந்தர், உஷாவை காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதை, டி.ஆரிடம் நேரில் சந்தித்து சொல்லி, கண்ணீர் விட்டு அழுதுள்ளார், உஷா. அவரை சமாதானம் செய்து, நேரடியாக, ரவீந்தரை சந்தித்து, கேட்டுள்ளார், டி.ஆர்.,

அவரோ, 'உஷாவை திருமணம் செய்து கொள்ள முடியாது...' என்றதும், 'சரி, நானே திருமணம் செய்து கொள்கிறேன்...' என்று கூறி, உஷாவை கோவிலுக்கு அழைத்து சென்று, மாலை மாற்றி மனைவியாக்கிக் கொண்டார்.

திருமணத்திற்கு பின், 'தஞ்சை சினி ஆர்ட்ஸ்' என்ற நிறுவனத்தை உருவாக்கி, மனைவி உஷாவை தயாரிப்பாளராக ஆக்கினார். அதன்பின், டி.ஆர்., எடுத்த திரைப்படங்கள் சக்கைப்போடு போட்டன.

இ து போன்று, இன்னும் பல திரைநட்சத்திரங்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களுடன் பழகிய மறக்க முடியாத, சுவையான நிகழ்வுகள் பல உள்ளன.

இப்போதைக்கு சற்று இடைவேளை விடுகிறேன்.

'வாரமலர்' இதழில் இக்கட்டுரை தொடர் வெளியிட அனுமதி பெற்றுத் தந்த, அந்துமணிக்கும், தொடரை சிறப்பாக வெளியிட்ட பொறுப்பாசிரியருக்கும் என் மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் சந்திப்போம்.



- ஆர்.பிரபாகன்

- முற்றும் -


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us