sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உறவுச் சங்கிலி!

/

உறவுச் சங்கிலி!

உறவுச் சங்கிலி!

உறவுச் சங்கிலி!


PUBLISHED ON : மே 04, 2025

Google News

PUBLISHED ON : மே 04, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்யாண மாப்பிள்ளை ஒரு வகையில் பார்த்தால் தண்டபாணிக்கும், இன்னொரு வகையில் மனைவி சிவகாமிக்கும் உறவு என்பதால், சதிபதி இருவருமே அந்த திருமணத்துக்கு செல்வதென, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காதுகுத்தல், கல்யாணம் என, எந்த விதமான விழாக்களுக்கு செல்வதென்றாலும், தண்டபாணிக்கு அவ்வளவாக ஒத்து வராது. அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்றால் கூட, சட்டென்று தானாகப் போய் பேசிவிட மாட்டார். புதியவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படிபட்ட சுபாவம் கொண்டவர்.

இதோ, இப்போதும் தண்டபாணி, திருவிழாவில் தொலைந்துவிட்ட குழந்தை போல, திரு திருவென்று முழித்தபடி இருந்தார். அவரின் தர்ம சங்கடத்தை உண்மையாகவே பெரும் சங்கடமாக்கினான், மனோகர்.

''மாமா.''

தன்னை அன்போடு அழைத்த அந்த இளைஞனை, தண்டபாணிக்கு அடையாளம் தெரியவில்லை.

முகம் முழுக்க சந்தோஷம் பொங்க சிரித்துக் கொண்டிருந்த அவனைப் பார்த்து, தண்டபாணியும் ஒரு புன்னகையை பூசிக் கொண்டார்.

பக்கத்தில், சிவகாமி இருந்தாலாவது, இவனின் ஜாதகத்தையே புட்டுப் புட்டு வைத்திருப்பாள்.

''நல்லா இருக்கீங்களா மாமா? அத்தை எப்படி இருக்காங்க?'' என்ற, இளைஞனின் விசாரிப்பில் பதில் சொல்ல வேண்டியது, தண்டபாணிக்கு கட்டாயமாகிப் போனது.

''ம்.. நல்லா இருக்கோம்ப்பா,'' என்றவர், ''நீ சவுக்கியமாப்பா?'' என விசாரித்தார்.

''ஜம்முன்னு இருக்கேன், மாமா,'' என, இதழ்கள் விரிய பதில் சொன்னவன், 'தாத்தா சவுக்கியமா, பாட்டி சவுக்கியமா, பக்கத்து வீட்டு பப்பாளி மரம் சவுக்கியமா?' என, வரிசையாக விசாரிக்க ஆரம்பித்து விட்டான்.

தான் கேட்ட ஒரே ஒரு சவுக்கியமாவுக்கு பதிலாக, இத்தனை சவுக்கியமாக்களா என, திணறினார், தண்டபாணி. இருந்தாலும், பொத்தாம் பொதுவாக பதில் கூறி, ''நீங்க.. நீ யாருன்னு...'' என, ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் கேட்டு விட்டார்.

''நான் மனோகர், மாமா. இங்க சென்னையில தான் வேலைக்கு சேந்துருக்கேன். ஒரு மாசமாச்சு. உங்களைப் பாக்கணும்ன்னு ஆசை. ஆனா, வீடு தெரியலை. ரொம்ப வருஷமாச்சே நாம சந்திச்சுப் பேசி? என்ன சாப்டுறீங்க? சொல்லுங்க. காபியா, டீயா?'' என்றான்.

''இல்லைப்பா. ஒண்ணும் வேண்டாம். இப்ப தான் காபி குடிச்சேன்.''

''பரவாயில்லை மாமா. சூடா ஒரு கப் சுக்கு காபி கொண்டு வரேன், இருங்க. உங்களுக்கு தான் சுக்கு காபின்னா ரொம்ப பிடிக்குமே?'' என, விறுவிறுவென்று சென்றான், மனோகர்.

'எனக்கு சுக்கு காபி பிடிக்கும் என்பது, இவனுக்கு எப்படித் தெரியும்?' என, மின்னலாக விரைந்த மனோகரின் முதுகை வெறித்த தண்டபாணியின் மூளை, அவனை அடையாளம் காண முற்பட்டு, பழைய ஞாபகப் பக்கங்களைப் புரட்டியது.

ஆனால், எங்கோ பார்த்த முகம் மாதிரி, சாயல் மனதில் நிழலாடியதே தவிர, யாரென்று நினைவுக்கு வரவில்லை.

சிவகாமியை கேட்கலாம் என, மனைவியைத் தேடினார், தண்டபாணி.

திருவிழாக் கூட்டத்தில் தொலைந்து போன ஒற்றை செருப்பைக் கூட கண்டுபிடித்து விடலாம். ஆனால், மனைவியைக் கண்டுபிடிப்பதாவது?

அதுவும், சிவகாமி ஓரிடத்தில் நிற்க மாட்டாள். எந்த விசேஷத்துக்கு போனாலும் ஏதாவது வேலைகளை இழுத்துப் போட்டு செய்யும் ரகம்.

பேசாமல், அவரைப் போலவே ஒரு மூலையில் தனியாக கிடந்த நாற்காலியில் உட்கார்ந்தார், தண்டபாணி. மனோகரை மறந்தும் போனார். ஆனால், அவன் இவரை மறக்கவில்லை.

''மாமா, சுக்கு காபி.''

''ரொம்ப தாங்க்ஸ்ப்பா,'' மனம் நெகிழ்ந்து, சுக்கு காபியை வாங்கியவர், ''நீ, என்னை ஞாபகம் வச்சிருக்கே. எனக்கு தான் உன்னை அடையாளம் தெரியலை,'' என்றார், தண்டபாணி.

''எனக்கு வயசு பத்திருக்கும் போது, நீங்க என்னைப் பார்த்தது. இப்ப எனக்கு வயசு, 25, மாமா. எப்படி நினைப்பிருக்கும்?'' குரல் கம்மிய, மனோகரிடம் தெரிந்த பாசத்தை, தண்டபாணியின் மனசு புரிந்து கொண்டது.

''ஆனா, மாமா நீங்க அப்படியே இருக்கீங்க. என்ன முடி தான் வெள்ளையாயிடுச்சி,'' என, புன்னகைத்த, மனோகர், ''நீங்க எனக்கு வாங்கிக் கொடுத்த கிரிக்கெட் பேட்டை நான் இன்னும் அப்படியே வச்சிருக்கேன் தெரியுமா, என் பையனுக்கு கொடுக்க,'' என்றான்.

''என்ன வயசுப்பா உன் மகனுக்கு?''

''இன்னும் கல்யாணமே ஆகலை, மாமா. ஆனா, ஆகுமில்ல? பையன் பொறப்பான்ல? அவன் விளையாடறதுக்கு அவங்கிட்ட கொடுப்பேன். நீங்க எனக்கு வாங்கிக் கொடுத்த பேட்டை.''

விளக்கம் சொன்னவன் அதோடு விடவில்லை.

கிரிக்கெட் விளையாட்டு உட்பட, தன் முந்தைய கால சிறு வயது நினைவுகளை, தண்டபாணியிடம் கண்கள் பளிச்சிட விவரித்தான், மனோகர். அதில், தண்டபாணி வாங்கித் தந்த ஐஸ்க்ரீம், சிவகாமி செய்து கொடுத்த அதிரசம் என, இனிப்பான சம்பவங்களும், அன்பான சமாசாரங்களும் ஏகத்துக்கு இருந்தன.

ஒவ்வொரு நிகழ்வையும் பற்றிப் பேசுகையில், அந்த ஞாபக மீட்சி, மனோகரின் இதயத்தில் நிரம்பிக் கிடந்த பாசத்தையும், நேசத்தையும் பறைசாற்றியது.

குளிர்சாதன வசதியில்லாத பழங்காலத்து மண்டபம், அது. மணப்பெண்ணின் வீட்டாரது பாரம்பரியமான ராசியான மண்டபமாம்.

சிவகாமிக்கு பெண்கள் கூட்டத்தில் வசதியான இடம் கிடைத்து விட்டது, இரவு துாங்க.

தான் எங்கே படுப்பது என, தண்டபாணி திணறிக் கொண்டிருக்க, கேட்காமலே உதவிக்கு வந்தான், மனோகர்.

அந்த கல்யாண கலாட்டாவிலும் தண்டபாணி படுத்துறங்க, மின் விசிறிக்கு கீழே வசதியாக ஓரிடம், தலையணை, விரிப்புத் துணி என, அவரை விழுந்து விழுந்து உபசரித்தான், மனோகர்.

அவனது பரிவில், கவனிப்பில், கரைந்து போனார், தண்டபாணி. உள்ளம் நெகிழ்ந்து, மகிழ்ச்சியில் திளைத்தார். ஆனால், 'யார் இவன்?' என்ற கேள்வி மட்டும், அவர் மனதைக் குடைந்தது.

மாமா என கூப்பிடுகிறான். தனக்கு அழகான இளவயசுப் பெண் இருப்பதாக நினைக்கிறானோ என்றெல்லாம் யோசித்தது, தண்டபாணியின் மூளை.

மொத்தத்தில், மனோகரனின் அன்பு அவருக்கு, ஒரு புதிராக இருந்தது. ஒரு இனிய, கனிவான பாசப் புதிர்.

அந்தப் புதிரை குறுகுறுப்போடு அனுபவித்துக் கொண்டிருந்த, தண்டபாணியை முதல் பந்தியிலேயே அமர வைத்தான், மனோகர். சிவகாமியையும் தேடி பிடித்து அழைத்து வந்து, தண்டபாணியின் அருகிலேயே அமரச் செய்தான்.

''அவியல் வச்சுக்கோங்க, பொரியல் வச்சுக்கோங்க,'' என, இருவரையும் பார்த்துப் பார்த்து உபசரித்தான்.

''இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்க,'' என, உணவோடு சேர்த்து, நேச உணர்வையும் சேர்த்துப் பரிமாறிய, மனோகரை காட்டி, ''யாரு சிவகாமி இந்தப் பையன்?'' எனக் கேட்டார், தண்டபாணி.

''நிஜமாவே உங்களுக்கு அடையாளம் தெரியலையா?'' நம்ப முடியாமல் கணவனை ஏறிட்டாள், சிவகாமி.

''தெரிஞ்சா, நான் ஏன் உன்னைக் கேட்கிறேன்? யாரு அது?'' என்றார்.

''அது உங்களுக்குத் தெரியாம இருக்கிறதே நல்லது,'' கூடுதலாக இன்னுமொரு புதிராக பதில் சொன்னாள், சிவகாமி.

தண்டபாணிக்கோ மண்டை காய்ந்தது.

''பாசமாத் தெரியுறான். அனுசரணையாப் பேசுறான். யாருன்னு கேட்டா விதண்டாவாதம் பேசுறியே?'' புலம்பினார்.

''அது... வந்து...'' சிவகாமி தயக்கமாக இழுக்கவும், ''இப்ப நீ சொல்லலை, பாதி சாப்பாட்டில் எழுந்துடுவேன்,'' என, தண்டபாணி மிரட்டினார்.

''அது... மனோகர். என் அண்ணன் மகன்,'' சிவகாமி பதில் சொன்னது தான் தாமதம், பாதி சாப்பாட்டில் கையை உதறி விட்டு, கோபமாக எழுந்து விட்டார், தண்டபாணி. முகம் சினத்தில் சிவந்து, உதடுகள் துடித்தன. கண்கள் அளவில்லாத ஆத்திரத்தை வீசின.

''என்ன மாமா பாதியில...'' ஓடி வந்த மனோகரை, ''வாயை மூடுடா ராஸ்கல்,'' ஓங்கி ஒலித்தது, தண்டபாணியின் குரல்.

''உன் கையால பரிமாறுனதை சாப்பிடுறதும், விஷத்தை சாப்பிடுறதும் ஒண்ணு தான். வந்துட்டான் மகன். அப்பனுக்கு வாரிசா. பாசமாப் பேசிக் கழுத்தறுக்கிறதுக்கு. துரோகி.''

தண்டபாணியின் கோபக் கூச்சல், பல தலைகளை திரும்ப வைத்தது. மனோகர் அவமானப்பட்டிருக்க வேண்டும். ஆனாலும், தண்டபாணியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பதிலுக்குப் பேசாமல் மவுனமாக இருந்து விட்டான்.

சினம் குறையாமலே அங்கிருந்து அகன்றார், தண்டபாணி. கணவரின் பின்னால் செல்ல வேண்டியது, சிவகாமிக்கு கட்டாயமாகிப் போனது.

''என்னங்க நீங்க? ஒரு வாலிப வயசுப் பையனைப் போய், அத்தனை பேர் முன்னாடி அப்படி திட்டிட்டீங்க? பதிலுக்கு அவனும் எகிறியிருந்தா?''

சிவகாமி கேட்டதும் தான், தண்டபாணிக்கு உறைத்தது.

தான் அவ்வளவு கோபமாக, சிறுமை தரும் வார்த்தைகளை கொட்டியும், எதுவும் பேசாமல் பொறுமையாக இருந்து விட்டானே, அந்த மனோகர்? இளம் வயது. அந்த வயசுக்கே உரிய கர்வம், திமிர் என, எதையுமே காட்டிக் கொள்ளாத அந்த அமைதி முகம், தண்டபாணியின் மனதை உறுத்தியது.

அந்த பையன் ஒரு வார்த்தை தன்னை எதிர்த்துப் பேசியிருந்தாலும், எல்லாரின் முன்பும் தன் மரியாதை கெட்டிருக்கும். மானம் கப்பலேறியிருக்கும். உண்மை உறைத்தது. ஆனாலும், 15 ஆண்டு பகை. மறக்க முடியாத துரோகம்.

வீடு கட்ட, தான் பார்த்து வைத்திருந்த இடத்தை, வில்லங்கம் என இவரிடம் சொல்லிவிட்டு, தனக்கென்று பேசி முடித்துக் கொண்ட ஏமாற்றுக்காரனின் பிள்ளை இந்த, மனோகர்.

வெட்டிவிட்ட உறவை ஒட்ட நினைக்கிறான் போல. தண்டபாணியின் சிந்தனைகளை இடைவெட்டியது, மனோகரின் குரல். யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான்.

''அந்தக் கிழவன், அத்தனை பேர் முன், உன்னை மட்டம் தட்றான். ஏன்டா சும்மா இருந்தே?''

''அவர், என் மாமாடா. எங்க அப்பா மேல அவருக்கு கோபம், ஆத்திரம். அந்த துரோகம்ங்கிற கலர் கண்ணாடியைப் போட்டுக்கிட்டு, அவர், என்னைப் பார்க்கிறார். அதனால, நான் தப்பா தெரியறேன். ஒருத்தர் மேல இருக்கிற பகையால அவங்க தொடர்பான அத்தனை பேரையும் வெறுத்தா உறவுச் சங்கிலி தொடரவே வழி இருக்காதுடா.

''இது, எனக்கு புரியற மாதிரி, எங்க மாமாவுக்கும் எப்போதாவது புரியும். அது வரைக்கும் நானும், அவர் வாங்கிக் கொடுத்த கிரிக்கெட் பேட்டும், நம்பிக்கையா காத்துகிட்டு இருப்போம்,'' என்றான்.

கல்யாண பட்சணம், தாம்பூலப் பை எல்லாம் வாங்கிய பிறகும், புறப்படாமல் தயங்கி, தடுமாறிய கணவனை வினோதமாக ஏறிட்டாள், சிவகாமி.

''போலாமா?'' என்ற மனைவியிடம், ''ம்...'' ஒற்றை எழுத்தை உதிர்த்துவிட்டு, விழிகளால் மண்டபத்தை அலசினார்.

''இரு வர்றேன்,'' என, சிவகாமியை வாசலில் நிறுத்தி வைத்து, மண்டபத்துக்குள் போனார், தண்டபாணி.

ரெண்டு நிமிஷம் கழித்து வந்து, ''வா போலாம்,'' என்ற கணவனை, மனைவியின் கண்கள் கேள்வியால் துளைத்தது.

''யார்கிட்ட சொல்லிட்டு வரப் போனீங்க?''

''நம்ம, மனோகர்கிட்ட தான்.''

ஆத்திரம் என்னாயிற்று? அங்கே, அன்பு வந்து, எப்போது அரியணை போட்டு அமர்ந்தது? துரோகி என்பது மாறி எப்போது, 'நம்ம' மனோகர் என்ற பரிவானது?

அறுந்துவிடாத உறவுச் சங்கிலியின் மந்திர இணைப்புகளை புரிந்து கொள்ள, சில சமயம் பதில்கள் தேவைப்படுவதில்லை.

கல்பனா சன்யாசி






      Dinamalar
      Follow us