
கோடை காலத்தின் உச்சி வெயில், மண்டையைப் பிளக்கும் வகையில் மிரட்டியது. நெடுஞ்சாலையில் மட்டுமல்லாது, அதை ஒட்டியுள்ள, 'ஹைவே மோட்டல்' என்ற ஹோட்டலில் வண்டிகள் நிறுத்தும் இடங்களிலும், கானல் நீர் ஓடிக் கொண்டிருந்தது.
ஹோட்டலை விட்டு வெளியே போகும் வாகனங்களையும், உள்ளே வரும் வாகனங்களை நிறுத்துவதற்கான இடத்தைக் காட்டியும், டிராபிக் போலீஸ் போல, இயங்கி கொண்டிருந்தார், 50 வயது மதிக்கத்தக்க, குப்பம்மாள்.
உழைத்து உழைத்து உரமேறிய, வெயிலில் கருத்துப் போன உடலின் நிறம், நீரில்லாப் பயிர் போல, எண்ணெயில்லாத தலை மயிர். வெளுத்துப் போன புடவை, கோடை வெயில் வெப்பத்திலும் வேர்த்து நனைந்து போன, 'ஹோட்டல்' என்று, பெயர் பொறித்த கோட். காலில் தேய்ந்து போன ரப்பர் செருப்பு, கையில், 'ஸ்டாப்' பெயர் பலகை என, வித்தியாசமாக இருந்தவரை, பார்க்காதவரே கிடையாது.
காரணம், ஆண் செய்ய வேண்டிய வேலையை ஒரு பெண், அதுவும் கிராமத்துப் பெண், ஓய்வெடுக்கும் வயசான காலத்தில், நகரத்தில் இப்படி செய்வதையும், இவருக்கு வேலை கொடுத்த முதலாளியையும் எண்ணி வியந்து, பார்க்கத் தானே செய்வர்.
அப்படித் தான், பெங்களூரிலிருந்து பாண்டிச்சேரிக்கு காரில் மனைவி, பிள்ளையுடன் போய்க் கொண்டிருந்த, நவின்குமார், மதிய உணவை, இந்த ஹோட்டலில் சாப்பிட்டான். வெளியில் வந்து, குப்பம்மாவைப் பார்த்துக் கொண்டிருந்தவன், அவரிடம், நுாறு ரூபாய் கொடுத்தான்.
வாங்க மறுத்து விட்டார், குப்பம்மாள்.
''வாங்கிக்கம்மா. இந்த வேகாத வெயிலில் கஷ்டப்படுறீங்க. நீங்களா கேட்கல, நானாத்தானே கொடுக்கிறேன். முதலாளி திட்டுவாருன்னு பயப்படறீங்களா?''
''அப்படியில்லீங்க சார், ஏற்கனவே அம்மா கொடுத்துட்டாங்க.''
''அம்மாவா யாரு?'' என்று நவின்குமார் கேட்டதும், அவனது மனைவி மாலதியைக் கை காட்டினார், குப்பம்மாள்.
'எனக்கு முன்பே, மனைவி பணம் கொடுத்துட்டாளா? எனக்கேற்ற புரிஞ்சு நடக்கும் இரக்க குணம்...' என்று, மனசுக்குள் நினைத்தான்.
''பரவாயில்ல... என்னை, உங்க மகனா நெனச்சு வாங்கிக்குங்க. என் அம்மாவா இருந்தா வாங்கிக்க மாட்டாங்களா?'' என்று, நவின்குமார் சொன்னதும், கண்கலங்கிய குப்பம்மாள், பணத்தை வாங்கி, கோட் பையில் வைத்துக் கொண்டார்.
''அம்மா... உங்கள பார்த்தா, கிராமத்திலிருந்து வந்த மாதிரி தெரியுது. நீங்க எப்படி இங்க?''
''ஆமா சார், நான் கிராமத்துக்காரி தான்.''
''சாருன்னு சொல்லாதீங்க. நான் உங்க மகன் மாதிரி. என் பேரு, நவின். பேரச் சொல்லி கூப்பிடுங்க. இல்லேன்னா, தம்பின்னு சொல்லுங்க.''
''எம் மவன தம்பின்னு தான் கூப்பிடுவேன்; அதே மாதிரி கூப்பிடுறேன், தம்பி.''
''சரிம்மா. உங்கள எப்படி வேலைக்கு வச்சுக்கிட்டாங்க? நீங்க ஏன், விவசாயத்தை விட்டுட்டு இந்த வேலைக்கு வந்தீங்க?''
''பொழைக்க வேற வழித்தெரியாம தான், இந்த வேலையை செய்யுறேன்.''
''உங்களுக்கு விவசாயம் செய்ய நிலம் இல்லையா?''
''ரெண்டு ஏக்கர் நிலம் இருந்துச்சு. நாலு வழி சாலைப் போடுறோம்ன்னு, அரசாங்கம் எடுத்துக்கிடுச்சு. இழப்பீடா கொஞ்ச பணம் கொடுத்தாங்க. வாங்கிய பணம், கடனை அடைக்கவே பத்தல.
''விவசாய நிலத்தை வச்சுத்தான் எங்க வாழ்க்கையே ஓடிட்டிருந்திச்சு. அதுவும் போச்சு, வேற வழித் தெரியாம, நானும், என் வீட்டுக்காரரும், கொஞ்ச நாள் விவசாயக் கூலியா வேலை செஞ்சோம்.
''சரியான மழை இல்லை. அதுவுமில்லாம நிலத்துக்காரங்களே எல்லா வேலையும் பார்த்துக்கிடறதால, எந்த வேலையும் கெடக்கல. நுாறு நாள் வேலைக்கும் போனோம். அந்த வேலையில, யாரும் ஒழுங்கா வேலை செய்யறதில்லை.
''மேலோட்டமா புல்ல செதுக்கிட்டு, மர நிழல்ல ஒக்காந்து காலத்த ஓட்றாங்க. நாம இறங்கி வேலை செஞ்சா, 'நாங்க உட்கார்ந்திருக்கும்போது, நீங்க மட்டும் வேலை செஞ்சு, நல்ல பேரு வாங்க பார்க்குறீங்களா?'ன்னு கேட்டு, கிண்டல் பண்ணுவாங்க.
''எங்களுக்கோ வேலை செய்யாம, கூலி வாங்க இஷ்டமில்ல; நேர்மையா ஒழச்சு வாழணும்ன்னு நினைக்கிறவங்க. அதனால, இந்தப் பொழப்பு, நமக்கு வேணாம்ன்னு நுாறு நாள் வேலைக்கும் போறதில்ல.
''எங்களுக்கு ரெண்டு பிள்ளைங்க. அதுங்களை வளர்த்து ஆளாக்க வேணாமா? வேலை இல்லாம எப்படி உசுரு வாழறது? அதனால, என் வீட்டுக்காரரு எங்கெங்கோ வேலை தேடி, கடைசியா இந்த இடத்தில் வேலை செஞ்சார்.''
''இங்க ரெண்டு பேருமா வேலை செய்யறீங்களா... எங்கே அவரு?''
''இப்ப இல்ல தம்பி.''
''லீவுல இருக்காரா?''
''இல்லப்பா, செத்துட்டாரு.''
''செத்துட்டாரா... எப்படி?''
''பத்து வருஷத்துக்கு முன், இந்த ஹோட்டல்ல வேலை செஞ்சிட்டி இருந்தப்போ, ராத்திரி, 11:00 மணிக்கு, ஒரு லாரி வேகமா உள்ள வந்திருக்கு. வெளியே போற பஸ்சுக்கு வழி விடணும்ன்னு, லாரியை தடுத்து நிறுத்தியிருக்காரு, என் வீட்டுக்காரர்.
''லாரி நிக்காம அவர் மேல ஏறிடுச்சி. அப்புறந்தான் தெரியும், பிரேக் பிடிக்காம ஹோட்டல் ஓரமா உள்ள மரத்தில் மோதி நிக்க வெக்க வந்ததுன்னு. கடைசியா ஹோட்டலில் பல வண்டிகள இடிச்சுட்டுப் போயி மோதி நின்னுச்சாம், லாரி.''
''அப்போ நீங்களும் இங்க இருந்தீங்களாம்மா?''
''இல்ல தம்பி. எங்க ரெண்டு பிள்ளைங்களும் சின்னவங்க. நாலாவது, ஐந்தாவது படிச்சிட்டிருந்தாங்க. என் வூட்டுக்காரரு செத்துட்டார்ன்னு தெரிஞ்சதும் உலகமே இருண்டு போச்சு.
''என்ன பண்றதுன்னே தெரியாம அழுதேன். ரெண்டு பிள்ளைங்களையும் கரையேத்தணும்; கடனை அடைக்கணும்; இருந்த ஒரு வருமானமும் போச்சு.''
''கேஸ் போட்டு நஷ்ட ஈடு வாங்கலயாம்மா?''
''ஹோட்டல் முதலாளியே, ஹோட்டலுக்கு நஷ்ட ஈடு கேட்டும், என் புருஷனுக்காகவும் தனித்தனியா ரெண்டு கேஸ் போட்டாரு. கேஸ் முடிஞ்சு, லாரி இன்சூரன்ஸிலிருந்து பணம் கொடுத்தாங்க.
''அதுல கூட, கால் பாகம் கொடுத்துட்டு, மீதிய கோர்ட்டே, 10 வருஷத்துக்கு என் பேர்ல பேங்க்ல போட்டுட்டாங்க. வந்த பணத்தில் கடன்காரங்களுக்கு கொஞ்சம் கொடுத்துட்டு, பிள்ளைங்க படிப்புக்குன்னு கொஞ்சம் செலவு பண்ணினேன்.
''என் புருஷன் இறந்த ஒரு வருஷத்துல, இனிமே என்ன செய்யறதுன்னு தெரியாம இருந்த நான், அவரு செஞ்ச வேலையை கொடுங்கன்னு முதலாளிகிட்ட வந்து கேட்டேன்.''
''கேட்டதும் வேலை கொடுத்துட்டாரா?''
''இல்ல தம்பி. இது, ரொம்ப கஷ்டமான வேலை. ஆம்பளைங்களே செய்ய கஷ்டப்படுவாங்க, உங்களால முடியாதுன்னு சொல்லிட்டாரு. நான் விடாம கேட்டதால, இந்த வேலை செய்ய அனுமதிச்சார்.
''பிள்ளைங்களுக்கு ஸ்கூல் திறந்தாங்க. கால்ல விழுந்து, ஸ்கூலோட இருக்கற ஹாஸ்டல்ல சேர்த்து விட்டுட்டு, இந்த வேலைக்கு வந்துட்டேன். ஆரம்பத்தில், ஓய்வுப்பெற்ற டிராபிக் போலீஸ வச்சு, எப்படி வண்டிகளை, 'கன்ட்ரோல்' செய்யனும்ன்னு, பயிற்சி கொடுத்தாங்க. பிறகு தான், இந்த வேலைய செய்ய ஆரம்பிச்சேன்.''
''ஓ அப்படியா... இப்ப உங்க ரெண்டு பிள்ளைங்களும் என்ன படிக்கிறாங்க?''
''மகள, ஒரு நல்ல இடமா பார்த்து கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன். நாங்க பண்ணின புண்ணியத்துல நல்லா வாழ்ந்துக்கிட்டிருக்காள்.''
''அப்படின்னா உங்க பையன்?''
''இன்ஜினியரிங் முடிச்சிட்டு, சென்னையில், பெரிய கம்பெனியில, லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை செய்யறான், தம்பி.''
''அப்புறம் என்னம்மா, இந்த வேலையை விட்டுட்டு மகனோட இருக்கலாமே?''
''இல்ல தம்பி. என் மகனும் உங்கள மாறி தான் சொல்லிச்சு. நாந்தான் மறுத்திட்டேன். உடம்புல சத்து இருக்கிற வரைக்கும் வேலை செய்யலாம்ன்னு இருக்கேன். ஏன்னா, எம் பொண்ணு நல்லா இருந்தாலும், பண்டிகை வந்தா, கல்யாண தினம், பொறந்த தினம் அது இதுன்னு என் மகளுக்கு செய்ய வேண்டிதை செய்யணும்...
''கொஞ்சம் கடன் இருக்கு, அதை அடைக்கணும். மகனுக்கு கல்யாணம் செய்யணும்; அவன் பெயரில், ஒரு வீடு வாங்கணும். இது, இந்த பெத்தவளோட ஆசை. அதுவரைக்கும் ஒரு தாய்க்கான கடமையை மறக்காம நான் வேலை செஞ்சாவணும்,'' என, சொல்லி முடித்தாள், குப்பம்மாள்.
அச்சமயம். ஹோட்டலிலிருந்து ஒரு பையன் வந்து, ''அம்மா, உங்கள, ஓனர் கொஞ்ச நேரம் உட்கார்ந்து, 'ரெஸ்ட்' எடுக்கச் சொன்னாரு,'' என்று, சொல்லிவிட்டு போனான்.
குப்பம்மாவிடம், ''கவலைப்படாதீங்கம்மா, கடவுள் காப்பாத்துவார்,'' என்றான், நவின்குமார்.
''கடவுளென்ன தம்பி கடவுள்? முதலாளி உருவத்தில் வேலை கொடுத்து, சாப்பாடு போட்டு, துாங்க இடம் கொடுத்து, என் மீது இரக்கப்பட்டு ஓய்வெடுக்கச் சொல்றாரே, அவர் தான் கடவுள்...
''என்னை புரிஞ்சிக்கிட்டு, குடும்ப நிலைமையை உணர்ந்து, படிச்சு, இன்னமும் என் மீது பாசம் காட்டற என் மகனும், ஒரு கடவுள்; என் நிலைமை தெரிஞ்சு, உதவி பண்ணின உங்க பொண்டாட்டி ஒரு கடவுள்...
''வேண்டாம்ன்னு சொல்லியும், உங்க அம்மாவா நெனச்சு கட்டாயப்படுத்தி உதவின நீங்க ஒரு கடவுள்; உங்கள மாதிரி தினமும், எனக்கு பணம் கொடுத்து உதவுற எல்லாருமே கடவுள் தான்.
''உலகத்தில், இரக்க குணத்தோட, இல்லாதவங்களுக்கு கொடுத்து உதவுற எல்லாருமே கடவுள் தான், தம்பி,'' என்று, குப்பம்மாள் சொன்னதை கேட்டதும், மெய்சிலிர்த்து கையெடுத்து கும்பிட்டான், நவின்குமார்.
அந்த இரண்டு கைகளையும் பிடித்து, தன் தலை மீது வைத்து கண்கலங்கினார், குப்பம்மாள்.
கண்கலங்கியபடி, 'இரும்பு பெண்மணி' என்று பெருமிதத்தோடு, நேர்மையான, கஷ்டப்படக் கூடிய ஒரு நல்ல அம்மாவை சந்தித்ததில், மன நிறைவுடன் நடந்தான், நவின்குமார்.
ராம இளங்கோவன்புனைபெயர்: நெருப்பலையார்.வயது: 67.படிப்பு: முதுகலை பட்டதாரி.பணி: முழு நேர இலக்கியவாதி.இதுவரை வெளியான படைப்புகள் ஆயிரக்கணக்கில் இருக்கும் என்று குறிப்பிடுகிறார். இவரது படைப்புகளுக்காக, நுாற்றுக்கணக்கான விருதுகளையும் பெற்றுள்ளார்.மரபு கவிதை மற்றும் சிறுகதை எழுத, இன்றைய இளைய தலைமுறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பது, இவரது லட்சியம்.கதைக்கரு பிறந்த விதம்: வெளியூர்களுக்கு பேருந்தில் பயணிக்கும்போது, ஹோட்டல் வாசலில் நின்றபடி, அங்கு வரும் வாகனங்களை, பெண்கள், ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதை பார்த்து, உருவான கதை இது.