PUBLISHED ON : டிச 24, 2023

ஐரோப்பிய நாடுகளுள் ஒன்றான ருமேனியாவில், 'டர்டே' என்ற ரொட்டி மிக பிரபலம். இது பல மடிப்புகள் கொண்டதாக இருக்கும். குழந்தை இயேசுவை, பல மடிப்புகளுடைய துணிக்குள் அன்னை மேரி வைத்து அரவணைத்தை, இந்த வகை ரொட்டி நினைவுறுத்துவதாக நம்புகின்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, கண்டிப்பாக டர்டேக்களை தயாரித்து உண்டு மகிழ்வர், ருமேனிய மக்கள்.
* போலந்து நாட்டு மக்கள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சாப்பிடும், வேபர் பிஸ்கட்களில், மத சம்பந்தமான காட்சிகளை பொறித்து தயாரித்து, மத குருமார்களின் ஆசிகளையும் பெறுவர்.
இப்படி தயாரித்த வேபர் பிஸ்கட்களை மற்றவர்களுக்கு, பரிசு பொருட்களாக அனுப்புவர்.
கிறிஸ்துமசுக்கு முதல் நாள் மாலை, குடும்பம், குடும்பமாக இந்த வேபர்களை வைத்து பிரார்த்தனை நடத்துவர்.
* ஜெர்மனியில், 'ஜிஞ்சர் பிரெட்மேன்' என்ற குக்கீசை, கிறிஸ்துமஸ் விருந்துக்கு தயாரிப்பர். இதற்கு, 'பெர்னஸி' என்று பெயர்.
பாதாம் மாவில், சர்க்கரை சேர்த்து குழைத்து, காய்கறிகள், பழ வகைகள் கலப்பர். இதில், பல்வேறு உருவங்கள் செய்து, உண்பதற்கு ஏற்றபடி பக்குவம் செய்து வைப்பர். இதற்கு, 'மார்ஸிபான்' என்று பெயர்.
* குரங்கு வால் இல்லாமல் ஸ்காட்லாந்து, அயர்லாந்து நாடுகளில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவதில்லை. அது என்ன குரங்குவால்? காபி, பால், முட்டை, பழரசம், ஐஸ் மற்றும் பீர் போன்றவற்றை ஒன்றாக கலந்து தயாரிக்கப்பட்ட குளிர்பானமே, குரங்கு வால்!
* ஸ்காண்டிநேவியாவில், பறவைகளுக்கு விருந்தளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுகின்றனர். கோதுமை கதிர்களை துாண் போல கட்டி, வயல் வெளியில் வைத்து விடுவர். இதன் கீழேயும் கோதுமை மணிகளை பரப்பியிருப்பர்.
* நம்ம ஊரு உறியடி திருவிழா போன்று, மெக்சிகோ நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. ஒரு மண் பானை நிறைய இனிப்புகள் நிரப்பி, அதை கட்டி தொங்க விடுவர். குழந்தைகள், தடியால் அடித்து, பானையை உடைக்க முயற்சிப்பர். பானை உடைந்ததும் இனிப்புகள் கொட்டும்.
* கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வழக்கம், இயேசு கிறிஸ்து பிறந்த, 335 ஆண்டுகளுக்கு பிறகே துவங்கியது. எந்த தேதியில் இந்த பண்டிகையை கொண்டாடுவது என்பதில் முதலில் சிக்கல் ஏற்பட்டு, கடைசியில், டிசம்பர் 25 என முடிவானது.
* கிரேக்க மொழியில், 'கிறிஸ்டோஸ்' என்றால், காப்பாற்ற அவதரித்தவர் என்று அர்த்தம். இப்போது இது வழக்கில் இல்லாமல் இருப்பினும், ஒரு காலத்தில் ஆங்கிலத்தில், 'மாஸ்' வார்த்தைக்கு பண்டிகை அல்லது கொண்டாடுதல் என்றும் பொருள் இருந்தது.
'கிறிஸ்து' என்ற வார்த்தையை சுருக்கமாக கிரேக்க மொழியில், X என்ற எழுத்தாலும் குறிப்பிட்டனர். ஆகவே தான், கிறிஸ்துமஸ் என்பதை ஆங்கிலத்தில், XMAS என்றும் எழுதுகின்றனர்.
* இயேசு பிறந்த நாளுக்கு, கிறிஸ்துமஸ் என பெயரிட்டவர், டேஸ் என்ற அமெரிக்க பெண்மணி.
* 'பீஸ்ட் ஆப் லைப்' எனப்படும் பண்டிகை எது தெரியுமா? கிறிஸ்துமஸ் தான்.