
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 30 வயது ஆண். எனக்கு ஐந்து சகோதரிகள். நான், கடைசி மகன். அம்மா இல்லத்தரசி. அப்பா, அரசு பணியிலிருந்து பணி ஓய்வு பெற்றுள்ளார்.
முதல் மூன்று சகோதரிகளுக்கு, தன் சம்பளம் மற்றும் பணி ஓய்வுபெற்ற பின் கிடைத்த பணத்தில், திருமணம் செய்து வைத்து விட்டார், அப்பா.
நான் தற்சமயம், வங்கி ஒன்றில் பணிபுரிகிறேன். திருமணமான சகோதரிகளுக்கு சீர் செய்வது மற்றும் குழந்தை பிறந்ததும் அதற்கான செலவுகள் எல்லாம், என் தலையில் விழுகிறது.
நானும், என் செலவுகளை குறைத்து இதையெல்லாம் செய்து வந்தேன். மற்ற இரு சகோதரிகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டிய பொறுப்பும் எனக்கு உள்ளது. இருவரும் பட்டப்படிப்பு படித்திருந்தும், வேலைக்கு செல்லாமல், வீட்டில் இருக்கின்றனர்.
அம்மாவுக்கு அவ்வப்போது உடல்நல குறைவு ஏற்பட, மருத்துவ செலவும் விழி பிதுங்க வைக்கிறது.
அப்பாவும், சின்ன சின்ன வேலைகள் செய்து, குடும்ப செலவை ஈடுகட்டி வருகிறார்.
இதற்கிடையில், நான் ஒரு பெண்ணை, ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகிறேன். 'நமக்கும் வயதாகிக் கொண்டே போகிறது. விரைவில் திருமணம் செய்து கொள்ளலாம்...' என்று வற்புறுத்துகிறாள், காதலி.
மீதமுள்ள இரு சகோதரிகளுக்கும் திருமணமானால் தான், என் திருமணத்தை பற்றி யோசிக்க முடியும்.
அப்பா கொண்டு வந்த, இரண்டு, மூன்று வரன்களை, வசதி குறைவானவர்கள் என்று நிராகரித்து விட்டனர், சகோதரிகள். நிலைமை இப்படியே போனால், என் நிலைதான் பரிதாபமாக போய் விடும் போலுள்ளது. இதிலிருந்து மீள எனக்கு ஒரு வழி சொல்லுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்பு மகனுக்கு —
உன் கடைசி இரு சகோதரிகள், பட்டப்படிப்பு படித்திருந்தும், வேலைக்கு செல்லாமல் வீட்டில் உண்டு, உருண்டு புரள்வது, மிகப்பெரிய குற்றம். கடைக்குட்டி தம்பியாகிய நீ, அக்காக்களுக்கு செல்லமும், சலுகைகளும் வாரி வழங்கி விட்டாய்.
திருமணத்திற்கு வரன்கள் வரும்போது யதார்த்தமாய் பரிசீலனை செய்வது உத்தமம். உன் கடைசி இரு அக்காக்கள், கற்பனையில் மிதக்கின்றனர்.
இனி நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* உன் கடைசி இரு அக்காக்களிடம், மனம் விட்டு பேசு. அவர்களை எதாவது ஒரு வேலைக்கு போகச் சொல். மாதம், 5,000லிருந்து 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கட்டுமே. வேலைக்கு செல்வதால், உன் கடைசி இரு அக்காக்களுக்கு வெளி உலக யதார்த்தம் புரியும்
* உன் தந்தை பழைய ஓய்வூதியகாரராகத் தான் இருப்பார். பெற்றோரிடம் கலந்து ஆலோசி. உன் கடைசி இரு அக்காக்களின் திருமண செலவுக்கான தொகையை, ஓய்வூதியர் கடனாக வங்கியிலிருந்து உன் தந்தை பெறட்டும். திருமண மேற் செலவுகளுக்கு அக்காக்களுக்கு தலா ஒரு லட்சம் வங்கிக் கடனாய் வாங்கி உதவு
* உனக்கு, 30 வயதாகி விட்டது. நீ, திருமணத்தை தாமதப்படுத்தினால், ஐந்தாண்டு காதலி, உன்னை கை கழுவி விடுவாள்.
ஆகவே, உன் பெற்றோரிடமும், திருமணமான அக்காள் குடும்பத்தினரிடமும், திருமணமாகாத இரு அக்காக்களிடமும் தகவலாய் தெரிவித்து விட்டு, உன் திருமண ஏற்பாடுகளை கவனி.
அக்காக்களின் திருமணமும், உன் திருமணமும் ஓரிரு மாத இடைவெளியில் நடக்கட்டும். உன் தடாலடி உடனடி திருமணம் கூட, கடைசி இரு அக்காக்களின் கனவுகளை தகர்த்து, தரை சேர்க்கும்
* நீயும் கடனாளி ஆகிவிடாமல், உன் சுக துக்கங்களை அனுபவித்து, பெற்றோருக்கும், அக்காக்களுக்கும் உதவி, திருப்தியான குடும்பஸ்தனாக வாழ். தம்பி, கெட்டிக்காரன் அவனுக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு, மீதியைத் தான் நமக்கு தருவான்- என்ற பேருண்மை, அக்காக்களுக்கு உறைக்கட்டும்
* உன் திருமண வாழ்க்கை மகோன்னதமாய் சிறக்க வாழ்த்துகள்!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.