sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நன்றிக்கடன்!

/

நன்றிக்கடன்!

நன்றிக்கடன்!

நன்றிக்கடன்!


PUBLISHED ON : ஜன 07, 2024

Google News

PUBLISHED ON : ஜன 07, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீட்டிற்குள் நுழையும் போதே, கணேசனின் முக வாட்டத்தைக் கவனித்தாள், இந்திரா.

குழந்தைகளுக்கு சாப்பாடு போட்டு, துாங்க வைத்த பின், அருகில் அமர்ந்து, ''இப்போ சொல்லுங்க, என்ன நடந்தது?'' என்றாள், இந்திரா.

''வழியில், மூர்த்தியை பார்த்தேன். முதலாளியும், அம்மாவும், ரொம்ப திட்டினதா சொன்னான். கேட்டதிலிருந்து மனசு ஆறவே இல்லை,'' என்றார், கணேசன்.

இடைமறிக்காமல், அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தாள், இந்திரா.

''எவ்வளவோ செய்திருக்கோம். கணேசன் அதையெல்லாம் நினைக்காம, காரணமே இல்லாம வெளியேறிட்டான் என்று, சொன்னாராம், ஐயா. என் கையில், எத்தனையோ வருஷம் சாப்பிட்டிருக்கான். அந்த நன்றி கூட இல்லை என்று சொன்னாங்களாம், அம்மா. கேட்டதிலிருந்து மனசு ஆறல,'' என்ற கணேசனின் முகத்தில் மட்டுமல்ல, குரலிலும் வருத்தம் இருந்தது.

இதில், மறுத்துச் சொல்ல எதுவுமே இல்லை. ஆனால், எத்தனையோ ஆண்டுகளாக, எத்தனை கொட்டியும் வாசம் தராத பெருங்காயமாகவே அவர்களின் நன்றி உணர்வு, மதிப்பிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

'என் சொந்தக்கார பையன். சமீபத்தில தான், இவன் அப்பா தவறிட்டான். தகப்பன் இல்லாத பிள்ளை. வழி தவறி போயிடாம, நீதான் ஏதாவது பார்த்து செய்யணும்...' கணேசனை அழைத்து வந்து, பெரியவர் ஜவுளிக் கடையில் எடுபிடி வேலைக்கு சேர்த்து விட்டுப் போனது, பெரியப்பா தான். 20 ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது.

நகரத்தின் மையத்திலிருந்தது, பெரியவரின் ஜவுளிக்கடை. அவருக்கென்று வழக்கமான வாடிக்கையாளர்கள் நிறையவே இருந்தனர். நான்கைந்து விற்பனையாளர்களுடன் எப்போதும் பரபரப்புடன் இயங்கும் கடையில், கணேசனை வேலைக்கு சேர்த்ததே, டீ வாங்கி வரவும், கதவு திறந்து விடவும் தான்.

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவான். சொல்லும் வேலையை செய்வான். மூன்று வேளை சாப்பாடும், கடை ஊழியர்களோடு மேல்தளத்தில் தங்கிக் கொள்ள அனுமதியும் கிடைத்தது.

மாதம்தோறும் ஒரு சிறு தொகையை கை செலவுக்குத் தருவார், பெரியவர். மற்றபடி சம்பளம், 'போனஸ்' எல்லாம், கணேசனும் கேட்டதில்லை, அவரும், தருவதாகச் சொன்னதுமில்லை.

அவனுடைய நேரம் காலம் பார்க்காத உழைப்பும், நேர்மையும் மட்டும் தான், படிப்படியாய் கணேசனை, பெரியவருக்கு, சமீபமாய் நெருங்க வைத்தது.

'ஈரோடு போகணுமா, சூரத் போய், 'மெட்டீரியல்' ரகம் பார்க்கணுமா, கணேசனை கூப்பிட்டுப் போங்க...' என்று சொல்லும் அளவுக்கு, ஜவுளி வர்த்தகத்தில் அத்தனை நெளிவு சுளிவுகளும், கணேசனுக்கு அத்துப்படி.

கதவு திறந்து விட்டுக் கொண்டிருந்தவன், திடீரென, கல்லாவில் உட்காரும் அளவிற்கு உயர்ந்தான் என்றால், அதற்கும், பெரியவர் தான் காரணம்.

பிற்காலத்தில் கூட, அவர் தந்த சம்பளத்தையே வாங்கிக் கொண்டான், கணேசன்.

பெரியவர் வீட்டு விசேஷங்களில், பத்து ஆள் வேலையை, ஒற்றை ஆளாய் இழுத்துப் போட்டு பார்த்திருக்கிறான்.

கணேசன் கல்யாணத்தைக் கூட, முன் நின்று நடத்தி வைத்தது, பெரியவர் தான்.

கை நிறைய சம்பளமும், நல்லது, கெட்டதிற்கு, பெரியவரின் கவனிப்பில் எந்த குறையும் சொல்ல முடியாது தான்.

மனைவி இந்திராவும் வந்து, குழந்தைகளும் ஆன பிறகு தான், கணேசனுக்கு இந்த யோசனை வந்தது; அதுவும் இந்திராவின் மூலமாகத்தான்.

மகள் பிறந்தநாளுக்கு துணி எடுக்க, 'சர்ப்ரைஸாக' கடைக்கு, குழந்தைகளோடு வந்தாள், இந்திரா.

அங்கு, கணவனுக்கு இருக்கும் மரியாதையையும், அவனின் வியாபாரத் திறமையையும் பார்த்து ஆச்சர்யத்தில், மூக்கில் விரலை வைத்தாள். ஆனாலும், அத்தனையும் அவனுக்கானது அல்ல. பெரியவர் வந்ததும், கல்லாவை விட்டுவிட்டு, அவர் முன் கை கட்டி நின்ற, கணவனின் பவ்யமும் பிடித்திருந்தது.

பெரியவரின் பிள்ளைகள் இருவரும், படித்து, பெரிய வேலைகளில் இருந்தனர்.

'கணேசன் மாதிரி விசுவாசி இல்லாமல் போய் இருந்தால், இந்தக் கடை இவ்வளவு நாள் நிலைத்திருக்காது...' என்று சொன்ன வார்த்தைகளும், மனசுக்கு நிம்மதியை தந்தது தான்.

ஆனாலும், யோசனையில் அமர்ந்திருந்தாள், இந்திரா.

'நான் வந்தப்போ, ஐயா இல்லையே... எங்கே போயிருந்தார்?'

'பெரும்பாலும், அவர் கடையில இருக்கறது இல்லை. வயசாச்சுல்ல, கோவில் குளம், உறவு முறை விசேஷம்ன்னு போயிட்டு, நேரம் கிடைக்கும் போது இங்கே வருவார்...'

'உங்களுக்கும் வயசாயிட்டே இருக்கு. இப்படியே எத்தனை நாள் இருக்கறது?'

'இந்த வாழ்க்கைக்கு என்ன குறை? சும்மா ஏதாவது உளறாதே. ஐயாவுக்கு எல்லாமே நான் தான். இந்த தொழிலை கத்துக் கொடுத்து, என்னை உருவாக்கினது அவர் தான். அந்த வகையில், எனக்கு வித்தை கற்றுத்தந்த குரு...' வார்த்தைகளில் வழிந்த நேர்மையை கண்டு வியந்தாலும், தான் சொல்ல வந்ததை, சொல்லி விட்டாள்.

'குருகிட்ட கத்துக்கிட்ட வித்தையை, அவர்கிட்டயே அடமானம் வைக்கிறதை, எந்த நல்ல குருவும் விரும்ப மாட்டாங்க. காலம் முழுக்க, மாணவனாகவே வாழ நினைக்கிறது நல்லாவா இருக்கு!

'மாணவன், ஆசிரியரா மாறணும். அவனும், தன் பங்குக்கு, பல மாணவர்களை உருவாக்கணும். அதுதானே ஆசிரியருக்கும் பெருமை...' என, எந்த சுயநலமும் இல்லாமல், இந்திரா சொன்ன வார்த்தைகள், கணேசனை மெதுவாய் அசைத்தது.

பதினெட்டு வயதில் வந்தது. 20 ஆண்டுகள் தொழிலாளியாய் உழைத்தாயிற்று. அடுத்து என்ன என்ற கேள்வி மனசை நமைக்க, ஊரில் நிலம் நீச்சை விற்ற காசும் கைக்கு வந்து சேர, எல்லாம் தன்னால் அமைந்தது.

'தனியா கடை போடலாம்ன்னு இருக்கேன், முதலாளி. பக்கத்துல இல்ல, தள்ளி தான். நீங்க தான் துவங்கி வைக்கணும்...' என்று, முகம் முழுக்க மகிழ்ச்சியோடு சொன்னான், கணேசன்.

உடனே, ஆரத்தழுவி வாழ்த்தவில்லை. அந்த செயலே மனதை நெருடியது.

'உனக்கும் முதலாளி ஆகுற ஆசை வந்துடுச்சா? அடுத்தவன் தொழில்ல, லாப, நஷ்டம் பார்க்காம முடிவு எடுக்கிற மாதிரி, சொந்த தொழில்ல செய்ய முடியாது...' என்றவர் பேச்சிலும், செயலிலும், அன்றிலிருந்து அப்பட்டமாக விலகினார்.

எப்போதோ கடைக்கு வந்து போனவர், இந்த பேச்சுக்கு பின், கடையிலேயே நின்றார். கணக்கு வழக்குகளை அவரே பார்த்து, 'நன்றி கெட்ட உலகம். செய்தது எல்லாம் யாருக்கும் நினைப்பில் இல்லை...' கணேசனை வைத்துக் கொண்டே குத்தலாய் பேசி, மெதுவாக தள்ளி வைத்தார்.

திறப்பு விழாவிற்கு அழைத்தபோது, 'திருப்பதி போகிறேன்...' என்று சொல்லி, வராமல் தவிர்த்தது, கணேசனை வெகுவாய் தாக்கியது.

கணேசனின் தொழில் சாமர்த்தியம், அனுபவம், அவனை சட்டென்று துாக்கி நிறுத்தியது.

அவனுக்கு பிறகு வந்தவர்கள், தங்காமல் ஓடிக் கொண்டிருக்க, முழுவதுமாய் பெரியவரே கவனித்துக் கொள்ள, அவரால் இயலவில்லை என்பதை, கடை ஊழியர்கள் மூலம் கேட்ட போது, கணேசனுக்கு குற்ற உணர்வாகிப் போனது. இந்திராவிடம் சொல்லி வருத்தப்பட்டான்.

'இன்றைக்கு இல்லைன்னாலும், இது என்றைக்காவது நடக்கப் போகுது தானே? எத்தனை விசுவாசம் காட்டினாலும், இந்த வார்த்தையை சொல்லி தான் அனுப்புவாங்க. அவருக்கு பையன்கள் இருக்காங்க. தொழிலுக்கு அவங்க தான் வாரிசு. நீங்க இல்ல. அதனால், நம் வேலையை பார்ப்போம்...' என்று, ஆறுதல் சொன்னாள்.

தொடர்ந்து நடந்த அவமதிப்பும், குத்தல் பேச்சுகளும், கணேசனை வெகுவாய் தாக்க, மொத்தமாய் பழைய கடைக்கு செல்வதையே தவிர்த்தான்.

கோவிலில் சந்தனகாப்பு அலங்காரத்தை பார்த்து விட்டு, கணேசனும், இந்திராவும் வெளியே வரவும், பெரியவரும், அவர் மனைவியும் உள்ளே வரவும், சரியாக இருந்தது.

கணேசனை பார்த்ததும் அளவாய் சிரித்தபடி, கோவிலுக்குள் புகுந்தவர்களை வருத்தத்தோடு பார்த்தான், கணேசன்.

''அவங்க வரட்டும், இந்திரா. இரண்டு வார்த்தை பேசிட்டு போயிடலாம்,'' என, விபூதி கடை முன் காத்திருந்தனர்.

திரும்பி வந்தவர்கள் முகத்தில், ஒரு அதிருப்தி.

''நல்லா இருக்கீங்களா, முதலாளி?''

''இப்போ, நான் உனக்கு முதலாளி இல்ல கணேசா. நீயே முதலாளி ஆயிட்ட,'' என்றார் கேலியாய்.

''அது, உங்களுக்கு பெருமை தானே முதலாளி!''

''இல்லாம என்ன? ஆனால், இப்பெல்லாம் எந்த பயலுகளை கொண்டாந்தும், வளர்த்து விடறது இல்ல. தீட்டின மரத்துலயே கூர் பார்க்குறானுக. நன்றி கெட்ட உலகம்,'' என்று பெரியவர் சொன்னதும், கணேசனின் முகம் சுருங்கியது.

''தப்பா நினைக்காதீங்க, ஐயா. வளர்ச்சி இல்லாட்டி வாழ்க்கையே இல்ல. நீங்க, அவருக்கு தொழில் கத்துக் கொடுத்ததுக்கு, அவர் இத்தனை வருஷமா உங்களுக்கு காட்டின விசுவாசம் தான் நன்றிக் கடன்னு, உங்களுக்கு புரியலையா?

''நன்றிக் கடனை மட்டும் வட்டிக்கு மேல வட்டி போட்டு வசூலிக்க நினைக்கிற நாம, நமக்கு காட்டப்படற விசுவாசத்தை மட்டும் இலவசமாவே அடைய நினைக்கிறோம்.

''பார்க்கிறவங்க எல்லார்கிட்டயும் அவருக்கு நன்றி இல்லைன்னு மட்டும் தான் உங்களால சொல்ல முடியுதே தவிர, அவர் உழைப்பையும், விசுவாசத்தையும் குறை சொல்ல முடியலை பாருங்க.

''பெற்ற பிள்ளையா இருந்தாலும், அவங்க இலக்கை நோக்கி போகும்போது, 'நல்லா இருக்கட்டும்'ன்னு மனசார சொல்லணும். ஏதோ தப்பு பண்ணிட்டு போற மாதிரி, குற்ற உணர்ச்சியை தரக்கூடாது.

''காலம் முழுக்க அவர், உங்களுக்கு நன்றியோட தான் இருந்தார். ஆனால், உங்க பார்வையில அடிமையா இருக்கிறது தான், நன்றி காட்டறதுன்னா, யாரும் எதுவும் செய்ய முடியாது...'' நிமிர்ந்து, முகம் பார்த்து, துளியும் கடுமை இல்லாத முகத்தோடு சொன்ன இந்திரா, கணேசனோடு நடந்தாள்.

பெரியவர்கள் இருவரும் விக்கித்து நின்றனர்.

பத்தடி துாரம் கடந்திருப்பர்.

தெளிந்து மலர்ந்த குரலில், ''கணேசா, கடை எங்கேன்னு இடத்தை சொல்லு. நானும், அம்மாவும், நாளைக்கு வந்து பார்க்கறோம்,'' என்றார், பெரியவர்.

எஸ். பர்வின் பானு






      Dinamalar
      Follow us