
கரும்புச்சாறு பொங்கல்!
தேவையானவை: கரும்புச்சாறு - இரண்டு கப், கல்கண்டு - ஒரு கப், பால் - ஒரு கப், பச்சரிசி - இரண்டு கப், பாசிப்பருப்பு - ஒரு கப், ஏலம், முந்திரி, திராட்சி, நெய் - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் பருப்பை சிவக்க வறுத்துக் கொள்ளவும். இதனுடன் களைந்த அரிசி, மூன்று கப் தண்ணீர், ஒரு கப் பால், இரண்டு கப் கரும்புச்சாறு சேர்த்து மூன்று விசில் வரை குக்கரில் வேக விடவும்.
விசில் அடங்கியதும் ஏலப்பொடியை தூவி, நெய்யில் லேசாக வறுத்த முந்திரி, திராட்சையையும் போட்டு கிளறினால், கரும்புச்சாறு பொங்கல் ரெடி.
தினைப் பொங்கல்!
தேவையான பொருட்கள்: தினை - இரண்டு கப், பாசிப் பருப்பு - இரண்டு கப், துருவிய பனைவெல்லம் - இரண்டு கப், நெய் - அரை கப், ஏலம், முந்திரி, திராட்சை - தேவையான அளவு.
செய்முறை: வெறும் வாணலியில் தினையையும், பாசிப்பருப்பையும் தனித்தனியாக வறுக்கவும். இதனுடன் எட்டு கப் தண்ணீர் விட்டு, நான்கு விசில் வரை குக்கரில் வேக விடவும்.
வெல்லத்தை சிறிதளவு தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும். பொங்கியதும் அதை. வெந்த கலவையில் கொட்டி, நெய்யையும் சேர்த்து, பொங்கல் குழையாதவாறு கிளறவும். ஏலப்பொடி, முந்திரி, திராட்சையைத் தூவி பரிமாறவும்.
* பொதுவாக வெண் பொங்கலை, பச்சரிசிக்குப் பதிலாக நன்கு குழைகிற வரகரிசியிலும் செய்யலாம்.
ஆனால், இனிப்புப் பொங்கல்கள் செய்கிறபோது, குழையாத குதிரைவாலி, சாமை போன்ற சிறுதானியங்களில் செய்ய வேண்டும்.
ஒரு கப் குதிரைவாலிக்கு, இரண்டு கப் தண்ணீரும், ஒரு கப் சாமைக்கு, மூன்று கப் தண்ணீரும் சேர்க்க வேண்டும். குதிரைவாலியை வறுக்கக்கூடாது. சாமையை வறுக்க வேண்டும்.
ஏழு கறி குழம்பு!
ஏழு விதமான காய்கறிகளை உபயோகித்துச் செய்வதால், இந்த குழம்பிற்கு 'ஏழு காய் குழம்பு' என்று பெயர் வந்தது. ஏழு அல்லது ஒன்பது வகை என்று, ஒற்றைப்படையில் காய்கறிகளை சேர்ப்பது வழக்கம்.
அதாவது, பூசணி, உருளை, சேனை, அவரை, வாழை, கத்தரி, கொத்தவரை என்று ஏழு காய்களில், வகைக்கு 100 கிராம் அளவு தேவை. இவற்றை ஒரே அளவு துண்டுகளாக நறுக்க வேண்டும்.
இவற்றுடன் இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து, நீர்த்த புளிக்கரைசலில் வேக வைக்கவும். தலா ஒரு கைப்பிடியளவு நிலக்கடலை, கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்து, குக்கரில் தனியாக வேக வைக்கவும்.
இந்த காய்களின் அளவிற்கேற்றபடி சிவப்பு மிளகாய் - 10, தனியா - இரண்டு தேக்கரண்டி, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு தலா ஒரு தேக்கரண்டி தேவை. இவை எல்லாவற்றையும் அரை தேக்கரண்டி எண்ணெயில வறுக்கவும். கடைசியாக, தேங்காய்த் துருவலைச் சேர்த்து, சிவக்க வறுத்து எடுக்கவும்.
ஒரு தேக்கரண்டி எள், சிறிது பச்சரிசி, இவை இரண்டையும் எண்ணெய் விடாமல் தனியே சிவக்க வறுக்கவும், பின்னர் வறுத்த பொருட்கள் அனைத்தையும், ஒன்றாக மிக்ஸியில் பொடிக்கவும்.
காய்கறிகள் வெந்ததும்க, வேகவைத்த நிலக்கடலையும், கொண்டைக்கடலையும் சேர்க்கவும். தகுந்த உப்பு, மஞ்சள்தூள், வறுத்து அரைத்த பொடி சேர்த்து குழம்பு கெட்டிப்படும் வரை வேக வைக்கவும்.
வாணலியில், சிறிதளவு எண்ணெய் சூடு செய்து, கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து பெருங்காயத்தூளைக் கலந்து குழம்பில் கொட்டவும். இந்தக் குழம்பை, பொங்கலுடன் சூடாகப் பரிமாறலாம்.