
ஏமாற்றுவதில் புது வகை!
சமீபத்தில், குடும்பத்துடன் திருநெல்வேலி சென்று, ரயில்வே ஸ்டேஷன் அருகில் அறை எடுத்து தங்கினோம். குல தெய்வம் கோவிலுக்கு சென்று, மதியம், காரில் வந்து, இறங்கினோம்.
ஒரு வயதான அம்மா, என் கையை பிடித்து, 'என்னை, உன் அம்மாவாக நினைத்துக் கொள். எனக்கு பணம் எதுவும் வேண்டாம்...' என்றார்.
'பணம் வேண்டாம் என்றால், வேறு என்ன வேண்டும்...' என்று, கேட்டேன்.
அருகிலிருந்த, மருந்து கடையை காண்பித்து, காலி மாத்திரை அட்டைகள் இரண்டை கொடுத்து, 'எனக்கு, 'பிளட் பிரஷர்' இருக்கு. வெயிலில் நிற்க முடியவில்லை. மாத்திரை வாங்கிக் கொடு, ஓரமாக நிழலில் உட்காருகிறேன்...' என்றார்.
அதை காண்பித்து, மருந்து கடையில் மாத்திரை கேட்டேன். இரண்டு ஸ்ட்ரிப், 500 ரூபாய் என்றனர். ஒன்று மட்டும் வாங்கி கொடுத்தேன்.
'நீ நல்லா இரும்மா...' என்றார்.
அறைக்கு சென்று, இரவு வெளியில் வந்தபோது, மருந்து கடையிலிருந்து ஏதோ வாங்கிச் சென்றார், அந்த அம்மா.
விசாரித்ததில், 'பிச்சை கேட்டால், 10 ரூபாய் போடுவர். அதற்கு பதில், மருந்து கடையுடன் ஒப்பந்தம் போட்டு, மாத்திரை வாங்கித்தரச் சொல்லி, அதை மீண்டும் கடையில் கொடுத்தால், கமிஷன் போக, கணிசமாக தொகை கையில் கிடைக்கும்.
'பெரும்பாலும், வெளியூர்வாசிகளை தான் இவர்கள் குறி வைக்கின்றனர்...' என, பக்கத்து கடைகாரர் கூறினார்.
ஏமாற்றுவதில் இதுவும் ஒரு வகையா என, அதிர்ந்தேன்.
சுப்புலஷ்மி சந்திரமவுலி, சென்னை.
உழைப்புக்கேற்ற ஊதியம்!
புதிதாக திருமணமான மகள் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றாள், தோழி.
கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கின்றனர். விடுமுறை நாளில், அன்று இருவரும் வீட்டில் இருந்தனர். சமையலறையில், ஒரு பெண்மணி வேலை செய்து கொண்டிருந்தார்.
'சமையலுக்கு ஆள் வைத்திருக்கிறாயா?' என, கேட்டேன்.
'இல்லை. இவர், சாதத்தில் பிசைந்து சாப்பிடுவதற்கு தேவையான, பொடி மற்றும் தொக்கு வகைகளை தயார் செய்து தருவார்...' என்றாள்.
'ஏன், அவையெல்லாம் கடைகளில் விற்பனை ஆகிறதே...' என்றேன்.
'தரமான மளிகை சாமான்களை வாங்கி கொடுத்து, சுத்தமான முறையில் கண் முன்னே செய்து கொடுக்கிறார். அவர் செய்யும் வேலைகளுக்கு ஏற்ப, பணம் பெற்றுக் கொள்வார். இவரது கைப்பக்குவத்தில், பொடி மற்றும் தொக்கு வகைகள், சுவையாகவும், சுத்தமாகவும் இருக்கிறது...' என்றாள், தோழி.
அங்குள்ள வீடுகளில் எல்லாம், இவர் தான், பொடி மற்றும் தொக்கு வகைகளை தயார் செய்து கொடுக்கிறார். மேலும், இட்லிக்கு மாவு அரைத்தும் கொடுக்கிறார்.
எந்த வீட்டில் என்னென்ன வேலை செய்ய வேண்டுமோ, முன்கூட்டியே இவரிடம் சொல்லி விட்டால், வேலை செய்து, அதற்குரிய பணம் வாங்கிக் கொள்வார்.
'பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, வீடு துடைப்பது போன்றவை மட்டுமின்றி, இந்த வேலைகளும் செய்வேன். அதற்கேற்ற கூலியை மட்டும் கொடுங்கள்...' என கேட்டு, நியாயமாக, நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் அப்பெண்மணியை, பாராட்டிவிட்டு வந்தேன்.
ம.வசந்தி, திண்டிவனம்.
நண்பர் மனைவியின் முயற்சி!
சமீபத்தில், நண்பரின் புது வீட்டு கிரஹபிரவேசத்திற்கு சென்றிருந்தேன்.
விழா நிறைவில், பெண்களுக்கு மட்டுமென, தனியாக ஒரு தாம்பூல பையை தந்தார், நண்பரின் மனைவி. அதில், அவர் கைப்பட செய்த சில கைவினைப் பொருட்கள், அதை செய்ய உதவும் வழிகாட்டி புத்தகம் ஒன்றையும் வைத்திருந்தார்.
இதுபற்றி நண்பரின் மனைவியிடம் கேட்டேன்.
'பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது.
'எதற்கெடுத்தாலும் காசு கொடுத்து கடைகளில் வாங்குவதை விட, கொஞ்சம் நேரம் ஒதுக்கி கற்றுக் கொள்ள முயன்றால், நாமே பல கைவினைப் பொருட்களை உருவாக்க முடியும். இதனால், அவர்களது வாழ்வாதாரம் மேம்படும்.
'பெண்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையை வெளிப்படுத்த, முதலில் ஆர்வத்தை துாண்டினால் போதும். அதற்காகத்தான் பெண்களுக்கு மட்டுமான இந்த தாம்பூலப் பை...' என்றார்.
நண்பர் மனைவியின் முயற்சியை, மனதாரப் பாராட்டினேன்!
- வெ.பாலமுருகன், திருச்சி.