
ஜன., 23 - சுபாஷ்சந்திரபோஸ் பிறந்த நாள்
ஜன., 26 - குடியரசு தினம்
குகன் எழுதிய, 'நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' நுாலிலிருந்து:
ஜூலை 26, 1921. மும்பையில் உள்ள, 'மணிபவனம்' என்ற மாளிகையில், காந்திஜி இருப்பதை அறிந்து, அவரைச் சந்திக்கச் சென்றார், போஸ்.
காந்திஜியை கண்டதும், தான் அணிந்திருந்த வெளிநாட்டு ஆடைகளுக்காக வருத்தம் தெரிவித்தார். தேசத்துக்காக தன், ஐ.சி.எஸ்., பட்டத்தை உதறிவிட்டு வந்த அந்த இளைஞனை அமைதியாகப் பார்த்தார், காந்திஜி. பிறகு போசிடம் பேசத் துவங்கினார்.
பல நாட்களாக இந்திய விடுதலை பற்றி தனக்குள் இருந்த கேள்விகளை காந்திஜியிடம் கேட்டார், போஸ்.
அனைத்துக் கேள்விகளுக்கும் கொஞ்சமும் சலிப்படையாமல், பொறுமையுடனும், அக்கறையுடனும் பதிலளித்தார், காந்திஜி.
'இந்திய விடுதலைக்கு தங்களின் திட்டம் என்ன?' என்றார், போஸ்.
'விடுதலைப் போரில் நம்மை முதலில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். பின்னர், திட்டம் தீட்டிச் செயலாற்ற வேண்டும். சுயநலமில்லாத துாய உள்ளமும், தியாக மனப்பான்மையும் வேண்டும்...' என்றார், காந்திஜி.
'விடுதலைக்கான தங்களின் திட்டம் போதுமானதா?'
'வெள்ளையர்களுக்கு எதிராக ஒத்துழையாமை, வரி கொடாமை, சத்தியாகிரகம், அஹிம்சை மூலம் சுதந்திரத்தைப் பெற முடியும்...' என்றார், காந்திஜி.
வரிகொடாமை, போசுக்கு உடன்பாடாக இருந்தாலும், மற்ற விஷயங்களில் அவருக்கு உடன்பாடு இல்லை. ஆனால், காந்திஜிக்கு, போசின் வேகம் புரிந்தது. நாட்டுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்று, அவர் நினைப்பதை உணர்ந்தே இருந்தார், காந்திஜி.
'உன் வேகம் இப்போது போல் எப்போதும் நிலைத்திருக்குமா?' என்று கேட்டார், காந்திஜி.
'உயிர் உள்ளவரை இருக்கும்...' என்றார், போஸ்.
அவரைப் பார்த்து புன்னகைத்தார், காந்திஜி.
அக்டோபர் 21, 1943. சிங்கப்பூர். போசின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். ஆம், அன்று தான், 'ஆசாத் ஹிந்த்' என்ற பெயரில், சுதந்திர இந்திய அரசு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார், போஸ்.
பிரிட்டிஷ் அரசுக்கு மாற்றாக இந்தியர்களால், இந்தியர்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என்று சொன்ன போஸ், 'இது தாற்காலிக ஏற்பாடு தான்; விரைவில் பிரிட்டிஷார் அனைவரும் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டு, அங்கு நிரந்தரமான அரசாங்கம் அமைக்கப்படும்...' என்று அறிவித்தார்.
அந்த தாற்காலிக இந்திய அரசாங்கத்துக்கு ஜப்பான், சுதந்திர பர்மா, சுதந்திர பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளும் வாழ்த்து அனுப்பின.
'காதே' என்ற சினிமா அரங்கத்தில், போஸ் பதவி ஏற்க வரும்போது, அரங்கம் அதிர கை தட்டல்கள் எழுந்தன. மேடையில் கண்கள் பனிக்கப் பேசினார், போஸ்.
'சுபாஷ் சந்திர போசாகிய நான், இறைவன் மீது ஆணையாக, என்றைக்கும் இந்தியாவின் ஊழியனாகவே இருந்து வருவேன். உடன் பிறந்த, 38 கோடி சகோதர - சகோதரிகளின் நன்மையைக் கவனிப்பதே என் முழுமுதற் கடமை...'
இந்தியர்கள் மனதில் சுதந்திரத்தை நோக்கிய புதிய சகாப்தத்துக்கு, விதை போட்டார், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக, தென்கிழக்கு ஆசியாவில், ஜப்பான் உதவியுடன் உருவாக்கப்பட்டதே, இந்திய தேசிய ராணுவம். இதில், இந்திய ராணுவத்தின் போர் கைதிகள் இடம் பெற்றிருந்தனர். இது, 1942ல், ராஜ்பிகாரி போஸ் என்பவரால் துவங்கப்பட்டது.
இதன் படைத்தளபதி கோமன்சிங். 1943ல், இந்திய தேசிய ராணுவத்திற்கு புத்துயிர் அளித்து, 43 ஆயிரம் வீரர்களை கொண்ட படையாக உருவாக்கியவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
இதில், தமிழகத்திலிருந்து ஆயிரக்கணக்கான மறவர் கூட்டம் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.
செ.ஜெயக்கொடி எழுதிய, 'சின்னச் சின்னச் செய்திகள் சிறகடிக்கும் செய்திகள்' நுாலிலிருந்து:
அரசியல் நிர்ணய சபையின் தலைவராக, டாக்டர் ராஜேந்திர பிரசாத் இருந்தார். அதன் மொத்த உறுப்பினர்கள் 299 பேர். இதை உருவாக்க எடுத்துக் கொள்ளப்பட்ட நாட்கள், மூன்று ஆண்டுகள், 11 மாதம், 18 நாட்கள். அரசியல் சாசனத்தை எழுதி முடிக்க எடுத்துக் கொள்ளப்பட்ட நாட்கள், ஆறு மாதங்கள்.
இதை முழுவதுமாக எழுதி முடித்தவர், பிரேம் பிஹாரி நரேன் ரைசாடா என்பவர்.
நம் நாட்டில் மக்கள் அனைவருக்கும், அரசியலைப்புச் சட்டம் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. நமக்கு, ஏதேனும் மீறல் இருந்தால், நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம்.
1.சமத்துவ உரிமை, 2. சுதந்திர உரிமை, 3. சுரண்டலுக்கு எதிரான உரிமை. 4. சமய சுதந்திர உரிமை. 5.கல்வி மற்றும் கலாசார உரிமை, 6. அரசமைப்பு சார் தீர்வுகள் உரிமை ஆகியவை, நமக்கு வழங்கியுள்ள உரிமைகள்.
கடந்த, 1950ல், அரசியல் நிர்ணய சபையின் தலைவரான, பாபு ராஜேந்திர பிரசாத், 'வந்தே மாதரம்' பாடலை, தேசிய கீதமாக அறிவித்தார்.
வங்காள கவி சரத் சந்திரர் எழுதி, தேவநாகரி எழுத்துருவில் அமைந்த, 'வந்தே மாதரம்' எனத் துவங்கும், வங்காள மொழிப் பாடலே, இந்தியாவின் தேசியப் பாடலாகும்.
இந்தியர்கள் தன் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்கமாக இப்பாடல் கருதப்படுகிறது.
'வந்தே மாதரம்' பாடலை, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார், அரபிந்த கோஷ்.
நம் தேசிய கொடியில் உள்ள சக்கரம், சாரநாத்தில் உள்ள அசோகரின் சிம்மத் துாணிலிருந்து பெறப்பட்டது.
நம் தேசிய சின்னத்தை நாட்டின் தேசிய அடையாளமாக தேர்ந்தெடுத்தவர், ஜவஹர்லால் நேரு.
நாடாளுமன்றத்தில், லோக்சபா என்பது துவக்கத்தில், 'ஹவுஸ் ஆப் பீப்பில்ஸ்' எனப்பட்டது. பிறகு, மே 14, 1954ல், லோக்சபா என, பெயர் மாற்றம் பெற்றது.
ராஜ்யசபா என்பது ஆரம்பத்தில், 'ஹவுஸ் ஆப் ஸ்டேட்ஸ்' எனப்பட்டது. பிறகு, ஆகஸ்டு 24, 1954ல் இருந்து, ராஜ்யசபா என, பெயர் மாற்றம் பெற்றது.
- நடுத்தெரு நாராயணன்