
துறவி ஒருவர் இருந்தார். அவரிடம் நிறைய பேர் வந்து, உபதேசம் கேட்பது வழக்கம். அனைவருக்கும் அறிவுரை கூறி, ஆறுதல் சொல்வார்.
ஒருநாள், துறவியிடம் அறிவுரை கேட்பதற்காக வந்தான், ஒரு கஞ்சன்.
'சுவாமி, நான் முக்தி அடைவதற்கான வழியை சொல்லுங்களேன்...' என்றான்.
'இதோ பாருப்பா, நீ முக்தி அடைய வேண்டுமானால், மகான்களும், சாஸ்திரங்களும் காட்டிய, தார்மிக நெறிகளை பின்பற்றணும். ஏழை, எளியவர்கள் மற்றும் யாரும் இல்லாதவங்களுக்கு உதவி செய்யணும்...' என்றார், துறவி.
'இந்த துறவி சொல்றபடி நடந்தால் தான், நமக்கு முக்தி கிடைக்கும் போல இருக்கு. ஆனா, அதுக்கு நிறைய செலவு ஆகுமே. செலவு பண்ணினா எங்கிட்ட இருக்கிற செல்வம் எல்லாம் கரைந்து போய் விடுமே என்ன செய்வது?
'சரி... இவர் சொன்ன உபதேசத்தை எடுத்துக்க முடியலேன்னாலும், குறைஞ்சபட்சம் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு பின்பற்றுவோம். அந்த அளவுக்கு முக்தி கிடைத்தால் போதும்...' என்று முடிவு செய்தான்.
தினமும், ஒரு பிடி அரிசி எடுத்து, அதை யாருக்காவது தானமாக கொடுத்துடுவான்.
இப்படியே செய்து கொண்டு இருந்தவன், கொஞ்சநாள் கழித்து, மறுபடியும் அந்தத் துறவியை போய் பார்த்தான்.
'என்னப்பா, நான் சொன்ன மாதிரி தானம் பண்ணிக்கிட்டு வர்றியா?' என்று கேட்டார், துறவி.
'ஆமாம் சுவாமி... தினமும் தவறாமல் ஒரு கைப்பிடி அரிசியை தானம் பண்ணிக்கிட்டு வர்றேன்...' என்று, பெருமையாக கூறினான்.
இதைக் கேட்டு துறவி, அவனை பாராட்டுவார் என எதிர்பார்த்தான். ஆனால், எதுவும் பேசாமல், அவர் அமர்ந்திருந்த மரத்தின் அடிப்பாகத்தை, விரல் நகத்தால் கீற ஆரம்பித்தார், துறவி.
இதை பார்த்து, 'என்ன சுவாமி, என்னோட தானத்தைப் பத்தி சொன்னேன்... நீங்க, அதுபற்றி எதுவுமே சொல்லாமல், மரத்தை கீறிட்டிருக்கீங்களே...' என்றான்.
'ஒண்ணுமில்லப்பா... நான், நகத்தால் இந்த மரத்தை வெட்டிக்கிட்டு இருக்கேன். நீ கொஞ்ச நேரம் சும்மா இரு...' என்றார், துறவி.
'என்னங்க இது, கை நகத்தால் அவ்வளவு பெரிய மரத்தை வெட்ட முடியுமா? கோடாரியால் செய்ய வேண்டிய ஒரு காரியத்தை, உங்கள் நகத்தால் எப்படி செய்ய முடியும்...' என்றான்.
'ஒரு பிடி அரிசியைக் கொடுத்துட்டு, நீ மோட்சத்துக்குப் போகணும்ன்னு நினைக்கும் போது, என் விரல் நகத்தால் இவ்வளவு பெரிய மரத்தை வெட்டணும்ன்னு நான் நினைக்க கூடாதா?' என்றார், துறவி.
உடனே அந்த ஆசாமி, தான் செய்த தவறை புரிந்து, தெளிவு பெற்றான்.
முக்தி அடைவது என்பது, சாதாரண விஷயமா?
பி. என். பி.,
அறிவோம் ஆன்மிகம்!
ஊர்வன, பறப்பன, விலங்குகள் என்று விரிந்து, பஞ்சபூதங்கள் ஒன்றில் ஒன்று ஒடுங்கி, இறுதியில் கற்பூரம் போல் எரிந்து, மிச்சம் ஏதுமின்றி இறைவனோடு ஒன்று கலத்தலே, தீபாலங்காரத் தத்துவம்.