
பா - கே - ப
அன்றைக்கு வந்திருந்த தபால்களை பிரித்து படித்துக் கொண்டிருந்தேன். அவற்றின் இடையில், சில சிறு பத்திரிகைகள், இதழ்கள், ஆங்கில ஜர்னல்கள் அடங்கிய கட்டு ஒன்று இருக்க, பிரித்து பார்த்தேன். அறிவியல் சம்பந்தமான ஆங்கில பத்திரிகை ஒன்று தென்பட எடுத்து புரட்டினேன்.
'செல்லப் பிராணிகள் வளர்ப்பதன் பயன்' என்ற தலைப்பில், ஆராய்ச்சி கட்டுரை ஒன்று கண்ணில் பட, படிக்க ஆரம்பித்தேன்.
அதில்...
வீட்டுல பூனை, நாய், முயல், புறா, கிளி மற்றும் மீன் போன்ற செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, ஆயுள் அதிகரிக்கும், மாரடைப்பை குறைக்கும்.
உடம்புல உள்ள பல கோளாறுகளை சரி பண்ணும். ரத்தத்துல உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கும்.
இதெல்லாம் உண்மைன்னு நிரூபிச்சுருக்காங்க, ஆராய்ச்சியாளர்கள்.
'மனித வாழ்க்கையில், செல்லப் பிராணிகளின் பங்கு' என்ற ஆராய்ச்சி அது. மேலும், அது பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடந்துகிட்டு தான் இருக்கு.
'ஹார்ட் அட்டாக்' வந்த நோயாளிகள்ல, 92 பேரிடம், பல கேள்விகள் கேட்டு பதிவு பண்ணி வச்சுக்கிட்டாங்க. ஒரு ஆண்டுக்கு பின், அந்த, 92 பேரில், 14 பேர் இறந்துட்டாங்க.
உயிரோடு இருந்தவங்களை பற்றிய குறிப்புகளை ஆராய்ந்து பார்த்ததில், பெரும்பாலானோர், செல்லப் பிராணிகள் வளர்க்கிறவங்க என்று தெரிந்தது.
இதுக்கு என்ன காரணம்?
தனிமையில வாடாம தடுத்திருக்கிறது, அவங்க வளர்க்கும் செல்லப் பிராணிகள். நாம் தனித்து வாழ்கிறோம்ங்கிற உணர்வு வராமல் இருந்தாலே, ஆயுள் அதிகரிக்கும்.
ஆஸ்திரேலியாவுலயும் இது மாதிரி ஆராய்ச்சி நடந்திருக்கு. 5,741 பேரிடம் சோதனை பண்ணியதில், செல்லப் பிராணிகள் வளர்த்தவங்க உடம்புல உள்ள ரத்தத்துல, மத்தவங்களை விட, 2 சதவீதம் கொலஸ்ட்ரால் அளவு குறைவா இருந்தது.
இது, 4 சதவீதம் இதய நோயை குறைக்கும். இதுமட்டுமல்ல, டிரைகிளிசரைடு என்ற கொழுப்பு ஆபத்தானது. இதுவும் இவங்க உடம்புல குறைவாகவும், ரத்த அழுத்தமும் சாதாரண நிலையில இருந்திருக்கு.
செல்லப் பிராணிகள்கிட்ட அப்படி என்ன பெரிய விசேஷம் என்றால், அதுகளை பார்க்கும்போது, நம்மிடம் இருக்கும் வெறுப்பு மாறிப் போகும், கோபம் மறைஞ்சுடும், களைப்பு போயிடும். மனசு லேசாகிறதால, உடம்பும் சுகமாயிடும்.
மன அழுத்தம் உள்ள, 'டீன் - ஏஜ்' வயதினருக்கு கூட, இது நல்ல வைத்தியம்.
பூனைகிட்டயும், நாய் குட்டிகிட்டயும், அவர்கள் சந்தோஷமா விளையாடுவர், பேச ஆரம்பிப்பர், அப்புறம் நம்மகிட்டயும் சகஜமா பேச ஆரம்பிச்சுடுவாங்க. இதுவும் ஆராய்ச்சி மூலமா நிரூபணமாயிருக்கு.
செல்லப் பிராணிகள் வளர்க்கறதுனால, என்னென்ன சவுகரியங்கள் உண்டுன்னு பெரிய, 'லிஸ்ட்டே' கொடுக்கிறார், மனித - மிருக நட்பு ஆராய்ச்சியாளரான, செர்வல்.
சின்ன சின்ன கவலைகள் மறையும். இடுப்பு வலி, தலைவலி, கால் வலி, துாக்கம் வராம இருக்கிறது. நரம்பு தளர்ச்சி, எப்பவும் அசதி, குடல் வியாதிகள் இது மாதிரியான குறைபாடுகள், செல்லப் பிராணிகள் வளர்க்கிறவங்ககிட்ட குறைவா இருக்கும், என்கிறார்.
அதனால, செல்லப் பிராணிகள் வளர்க்கறதுல ஒண்ணும் தப்பில்ல. ஆனா, அப்பப்ப அதுகளுக்கு வேண்டிய தடுப்பூசியெல்லாம் போட்டுகிட்டு, புத்திசாலித்தனமா வளர்க்கணும்.
இவ்வாறு முடிந்திருந்தது, அந்த கட்டுரை. இதைப் பற்றி லென்ஸ் மாமாவிடம் கூறினேன்.
அதற்கு அவர், 'அட போப்பா... மாமி, என்னை செல்லப் பிராணி போல தான் வளர்த்துட்டு இருக்கிறா. அவளுக்கு தான் மனசு லேசாகும், எனக்கில்லை...' என்று கூற, சுற்றியிருந்தவர்கள், 'கொல்' என்று சிரித்தனர்.
ப
எழுத்தாளரும், பத்திரிகையாளருமான மறைந்த, சாவி, ஒரு கட்டுரையில்...
கடந்த, 1963ல், நானும், நண்பர், பரணீதரனும், திருவையாறு தியாகய்யர் உற்சவத்துக்குப் போயிருந்தோம்.
நாங்கள் இருவரும் காவிரிப் படித்துறையில் இறங்கி முகம் கழுவிக் கொண்டிருந்த போது, அதே படித்துறையில், நாலைந்து வெளிநாட்டுக்காரர்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.
தென்னையும், வாழையும் மண்டிய காவிரிக் கரையில், சட்டை களைந்த சங்கீதக்காரர்களுக்கும், விபூதி அணிந்த ரசிகர்களுக்கும் இடையே, அந்த வெள்ளைக்காரர்கள் சற்றும் பொருந்தாதவர்களாய் காணப்பட்டனர். சிறிது நேரம் அவர்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
'என்ன பார்க்கிறீர்கள்?' என்றார், பரணீதரன்.
'இந்த இடத்தில் இவர்களைக் காணும்போது வேடிக்கையாக இருக்கிறது...' என்றேன்.
'நம் கர்நாடக சங்கீதத்தின் பெருமை அத்தகையது. வெளிநாட்டுக்காரர்களையும் கவர்ந்திழுக்கும் சக்தி வாய்ந்தது...' என்றார்.
'ஒரு ஆண்டு, தியாகய்யர் உற்சவத்தை, வெளிநாட்டில் போய் நடத்தினால் எப்படி இருக்கும்?' என்று கேட்டேன்.
'ரொம்ப வேடிக்கையாகத்தான் இருக்கும். அதுவும், இதுபோல் ஒரு நதிக்கரையில் நடத்திப் பார்க்க வேண்டும். அங்கே, தியாகய்யருக்கு ஒரு கோவில் கட்டி, சன்னிதியில் அந்த நாட்டவர்களும், நாமும் உட்கார்ந்து பஞ்சரத்னக் கீர்த்தனங்கள் பாட வேண்டும்...' என்றார்.
அவ்வளவு தான், வெறும் வாயை மெல்லும், என் போன்ற எழுத்தாளருக்கு அவல் கிடைத்தால் போதாதா? அதிலிருந்து, என் கற்பனையை ஓட விட்டேன். அது எங்கெல்லாமோ சுற்றி அலைந்ததன் பயனாக, நகைச்சுவை தொடர் ஒன்று எழுத வேண்டுமென்று பல ஆண்டுகளாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்த, என் லட்சியம், நிறைவேறும் காலம் வந்துவிட்டது போல் ஒரு பிரமை.
வெளிநாட்டில் தியாகய்யர் உற்சவம் நடத்துவதை காட்டிலும், நம் ஊர் திருமணம் ஒன்றை நடத்தினால், அந்த நாட்டவர்கள் அதை எப்படி ரசிப்பர்? திருவையாற்றில் வெள்ளைக்காரர்களைக் கண்டபோது நமக்குக் கிடைக்கும், வேடிக்கையும், தமாஷும் அமெரிக்காவில், நம் கல்யாணத்தை நடத்துகிற போது அவர்களுக்கு ஏற்படலாம் என்று தோன்றியது.
இந்த எண்ணம் தான், 'வாஷிங்டனில் திருமணம்' தொடருக்கு வித்தாக அமைந்தது.
அமெரிக்காவுக்கே போய், கல்யாணம் நடத்துவதென்றால், அது அத்தனை எளிதான காரியமா? உண்மையாகவே கல்யாணம் செய்யப் போகிறவர்களுக்கு கூட, அத்தனை கவலை இருந்திருக்காது.
கதைக்கு, 'வாஷிங்டனில் திருமணம்' என்று பெயர் கொடுத்து, விளம்பரமும் செய்து விட்டேன். விளம்பரத்திலும் சரி, வாரா வாரம் கதை வெளியான போதும் சரி, அதை எழுதுகிறவர் யார் என்று சொல்லாமலே கடைசி வரை, 'சஸ்பென்சில்' வைத்திருந்து, முற்றும் போடுகிறபோது தான், என் பெயரை வெளியிட்டேன்.
பதினொன்றே வாரங்கள் வெளியான இந்தக் கதைக்கு, வாசகர்கள் அளித்த வரவேற்பு பற்றி சொல்லத் தேவையில்லை. வாரா வாரம், கோபுலுவின் உயிர் சித்திரங்கள் இந்தக் கதைக்கு தனிச் சிறப்பும், முழு வெற்றியும் தேடித் தந்தன.
- இப்படி, சாவி எழுதியிருந்ததை படித்ததும், அந்த கதையை மீண்டும் படிக்க வேண்டும் என்ற, ஆவலை துாண்டி விட்டது.