
முன்கதை சுருக்கம்: கீழனுார் கோவிலிலிருந்து, கிருஷ்ணராஜால் கொள்ளையடிக்கப்பட்ட புராதன நடராஜர் சிலையை மீண்டும் அங்கே சேர்க்க முற்பட்டான், தனஞ்ஜெயன்.
தனஞ்ஜெயனை எப்படியாவது, தங்கள் பக்கம் இழுக்க, படு தீவிரமாக முயன்றான், 'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்' பங்குதாரரான தாமோதரரின் மகன், விவேக். பலமுறை போனில் தொடர்பு கொண்டு அதுபற்றி பேசினாலும், தனஞ்ஜெயன் மறுத்து விடுகிறான்.
தனஞ்ஜெயனுக்கு பயத்தை ஏற்படுத்த, அவனது தங்கைகளுக்கு உதவுவது போல் நடித்தான், விவேக். தன் பேச்சை மதிக்காவிட்டால், தனஞ்ஜெயனின் குடும்பத்தினருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாக மிரட்டினான், விவேக்.
குமாரின் வீட்டு வாசலை கார் அடைந்த போது, தனஞ்ஜெயனுக்காக, அவனும் காத்துக் கொண்டிருந்தான்.
''வாப்பா தனஞ்ஜெயா, வேலை கிடைச்சிருக்காமே?'' என்றார், குமாரின் அம்மா அன்னபூரணி.
''ஆமாம்மா, ஆசீர்வாதம் பண்ணுங்க,'' என, குனிந்து அவர் கால்களைத் தொட்டான், தனஞ்ஜெயன்.
''நல்லா இரு, நல்லா இரு. அப்படியே உன் நண்பனையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ,'' என்றார், அன்னபூரணி.
''நிச்சயமாம்மா, நீங்க சொல்லவே வேண்டாம்.''
''இரு, காபி போட்டு கொண்டு வரேன்.''
''இருக்கட்டும்மா. இப்பத்தான் புறப்படும்போது குடிச்சேன்,'' என்றான், தனஞ்ஜெயன்.
''ஆமாம், கீழனுார் போறியாமே?''
''ஆமாம்மா.''
''என் அண்ணன் அங்க தான் இருக்காரு. ஊர்லயே நல்ல செல்வாக்கானவர். அங்க இருக்கிற சிவன் கோவிலுக்கும் அவர் தான் தர்மகர்த்தா,'' என்றார், அன்னபூரணி.
சிவன் கோவிலோடு தொடர்புபடுத்தி சொல்லவும், தனஞ்ஜெயனுக்கு, 'ஜிவ்'வென்றானது. கும்பிடப் போன தெய்வம் எதிரிலேயே வருவது போல இருந்தது.
''ஆமா, அந்த ஊருக்கு எதுக்கு போற?''
''அலுவலக விஷயமாதாம்மா.''
''டேய், உன் அலுவலகம் ஒரு கார்ப்பரேட். கீழனுாரோ ஒரு கிராமம். அங்க என்னடா வேலை?'' இடைமறித்தான், குமார்.
''கார்ல போகும்போது சொல்றேன். கிளம்பலாமா?'' என்றான், தனா.
''நான் தயார். அம்மா, நான் போயிட்டு வந்துடறேன்,'' என்றான், குமார்.
''மாமாகிட்ட நான் அடுத்த மாசம் வரேன்னு சொல்லு,'' என்றார், அன்னபூரணி.
''சரிம்மா.''
பேசியபடி இருவரும் காரில் ஏறி புறப்பட்டனர். தனஞ்ஜெயனே, காரை ஓட்டினான்.
''என்னடா, கார் கொடுத்தவங்க டிரைவரை தரலியா?'' என்றான், குமார்.
''தந்தாங்க. ஆனா, அந்த டிரைவரை எனக்கு பிடிக்கல,'' என்றான், தனா.
''அப்ப நீயே ஓட்டிக்கிட்டு இருக்க போறியா?''
''கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காத, நீ டிரைவராக வர்றீயா?'' என்றான், தனா.
திகைப்புடன், ''டேய், நானா... டிரைவர் வேலைக்கா?'' என்றான், குமார்.
''தற்காலிகமா தான், குமார். எனக்கு நம்பிக்கையான ஒரு நபர் தேவை. கொஞ்ச நாள் தான். அதுக்கு பிறகு, உனக்கு, 'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்'ல நல்ல, பெரிய வேலையே வாங்கித் தரேன்,'' என்றான்.
''உனக்கு நல்ல டிரைவரை நான் பிடிச்சு தரேன். அந்த பெரிய வேலையை இப்பவே எனக்கு வாங்கிக் கொடேன்,'' என்றான், குமார்.
''இல்ல குமார், எனக்கு எப்பவும் என் கூடவே இருக்கிற, உன்னைப் போல ஒரு நம்பிக்கையான நபர் தான் தேவை. நீ, அதுக்கு சரியா இருப்பேங்கிறதால தான் கேட்கிறேன். நீ, போடப் போறது டிரைவர் வேஷம்ன்னு வெச்சுக்கோ. உனக்கு ஆபீசர் சம்பளம் வாங்கித் தரேன்,'' என்றான், தனா.
''நீயே இப்ப தான் வேலைக்கு சேர்ந்திருக்க. ஆனா, கிட்டத்தட்ட 'கார்த்திகா இண்டஸ்ட்ரீஸ்' எம்.டி., மாதிரியே பேசறியேடா. எனக்கு ஆச்சரியமா இருக்கு,'' என்றான், குமார்.
''குமார், என்னை ரொம்ப நோண்டாத. நான் சில கடமைகளை எப்படியாவது முடிக்க வேண்டிய கட்டாயத்துல இருக்கேன். அதை நான் தனி மனுஷனா செய்து முடிக்கிறது ரொம்ப கஷ்டம். நிறைய எதிரிகளும் இருக்காங்க. ஆகையால தான், உன்னை டிரைவர் வேஷம் போடச் சொல்றேன்,'' என்றான், தனா.
''நீ இவ்வளவு சொல்லும் போது நான் மாட்டேன்னு சொல்வேனா? ஆமா, அப்படி என்ன கடமை. யார் அந்த எதிரிங்க?'' என கேட்டான், குமார்.
''சாரி... எல்லாத்தையும் உன்கிட்ட என்னால இப்ப சொல்ல முடியாது. மிலிட்டரியில இருக்குற மேஜர், வேலையின் ரகசியத்தை, தன் பெண்டாட்டிகிட்ட கூட பகிர்ந்துக்க மாட்டாங்களாம். நானும், இப்ப அந்த மேஜர் மாதிரின்னு வெச்சுக்கோயேன்,'' என்றான், தனா.
''உன் தோற்றம், பேச்சு எல்லாமே ரொம்ப ஆச்சரியத்தை தருதுடா. உன் வாழ்க்கையே தலைகீழா மாறிட்ட மாதிரி தான் எனக்கு தோணுது,'' என்றான், குமார்.
''நிச்சயமா, நீ சொல்றது சரி. நான் இப்ப, பட்டப்படிப்பு படித்த, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் இல்ல. கிட்டத்தட்ட, சி.பி.ஐ., ஆபீசர் மாதிரின்னு வெச்சுக்கோயேன்,'' என்றான்.
''சி.பி.ஐ., ஆபிசரா... என்னடா சொல்ற?'' வாயைப் பிளந்தான், குமார்.
''ஆமாம்டா... கிட்டத்தட்ட அப்படித்தான்,'' என்றான், தனா.
''உங்க எம்.டி.,க்கு நீ, 'பர்சனல் செகரட்ரி'ன்னு தானே கேள்விப்பட்டேன்?''
''பர்சனல் செகரட்ரியும் கூட. இதுக்கு மேல என்ன நோண்டாத. அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், நாம் பேசிக்கிற எதுவும், எப்பவும் வெளிய யாருக்கும் தெரியக் கூடாது.
''இதுக்கெல்லாம் உனக்கு இஷ்டம்ன்னா, நீ என் கூட சேரு. இல்லேன்னா, உன் விருப்பப்படி செய். நான் உன்னை வற்புறுத்த விரும்பல,'' என்றான், தனஞ்ஜெயன்.
''இப்படி புதிராவே பேசினா எப்படிடா?'' குழப்பத்துடன் கேட்டான், குமார்.
''என் நிலை அப்படி, குமார்...'' என்றான், தனா.
''சரிடா, உன் விருப்பப்படியே நடந்துக்கிறேன். போதுமா?''
''பை த பை... உனக்கு, டிரைவருக்கான யூனிபார்ம் உண்டு. வேற வழி கிடையாது; நீ அதை போட்டுக்க தான் வேணும். அப்புறம், விவேக்குன்னு ஒருத்தன், உன்னை விலைக்கு வாங்க வருவான். என் நடவடிக்கைகளை உன் மூலமா தெரிஞ்சுக்க முயற்சி செய்வான். நீ விலை போயிடக் கூடாது,'' என்றான், தனா.
''அடக்கொடுமையே இப்படி எல்லாம் கூட நடக்குமாடா?''
''நடக்கும். உறுதியாவும், நம் நட்புக்கு துரோகம் பண்ணிடாமலும் நீ நடந்துக்கணும்.''
''அது சரி, யார் அந்த விவேக்?''
''எல்லா வகையிலும் எங்க எம்.டி.,க்கு எதிரி. அதனால, எனக்கும் எதிரி.''
''தொழில் எதிரியா?''
''இல்லை, குடும்பத்துக்கே எதிரி.''
''அப்ப அது உங்க எம்.டி.,யோட சொந்த பிரச்னை. அதை ஏன் நீ உன் பிரச்னையா நினைக்கிற?''
''நான் பர்சனல் செகரட்ரி. அவர், இப்ப வெளிய நடமாட முடியாத நிலையில இருக்கார். அதனால, அவர் தன் மகளான கார்த்திகா மூலமா தான் இண்டஸ்ட்ரியை, 'ரன்' பண்றார்.
''கார்த்திகா தான் என்னை தேர்வு செய்திருக்காங்க. அவங்க பிரச்னைகளுக்கு உதவத்தான் நானும் செகரட்ரியா வேலையில் சேர்ந்திருக்கேன்,'' என்றான், தனஞ்ஜெயன்.
''ஓ... கதை அப்படிப் போகுதா? அவங்களுக்கு உதவ, நீ. உனக்கு உதவ, நானா?'' என்றான், குமார்.
காரை ஓட்டியபடி, உறுதியான குரலில், ''ஆமாம். நான் இல்ல இனி... நாம் சரியா?'' என்றான், தனஞ்ஜெயன்.
அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில், கட்டை விரலை உயர்த்தினான், குமார்.
''சரி, இப்ப நாம எதுக்கு கீழனுார் போறோம்ன்னு சொல்லிடறேன். உன் மாமா தான், கீழனுார் சிவன் கோவில் தர்மகர்த்தான்னு அம்மா சொன்னாங்கள்ல?'' என்றான், தனஞ்ஜெயன்.
''ஆமா... அதுக்கென்ன?'' என்றான், குமார்.
''அவர் உதவி, நமக்கு இப்ப தேவை. செய்வாரா?'' என்றான், தனா.
''அவர் உதவியா. அந்த ஊர்ல உன் அலுவலக விஷயமா எதாவது காரியம் நடக்கணுமா?'' என்றான், குமார்.
''அப்படித்தான்னு வெச்சுக்கோயேன்.''
''என்னடா அது?''
''சொல்றேன். முதல்ல உன் மாமாவை சந்திச்சுட்டு, அப்படியே கோவிலுக்கு போவோம்,'' என்றான், தனஞ்ஜெயன்.
''புதிராவே பேசற. புரிஞ்சிக்க கேட்டா, ரொம்ப நோண்டாதேன்னு சொல்லிடற. சரி காரை அப்படி ஒரு ஓரமா நிறுத்திட்டு கீழே இறங்கு,'' என்றான், குமார்.
''ஓ... இப்பவே நான் டிரைவர் ஆயிடறேங்கறீயா?'' என்றான், தனா.
''எஸ் பாஸ்...'' என, குமார் கூற, காரை ஓரமாக நிறுத்தி இறங்கினான், தனஞ்ஜெயன்.
ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து, ''பாஸ்... ஒரு நண்பனா, 'விஷ்' பண்ணுங்க,'' என்றான், குமார்.
புன்னகைத்தபடியே கை குலுக்கி வாழ்த்தினான், தனஞ்ஜெயன்.
கீழனுார் பச்சை பசேல் என்றிருந்தது. மழை பெய்திருந்ததால், கண்மாய் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. சாலை ஓரமாக அறுவடை செய்த நெற்கதிர்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மண் சாலை தான். மேடு பள்ளத்தில் குலுங்கியது, கார்.
ஊரின் வீடுகளைப் பார்த்தபடி, ''உன் மாமாகிட்ட சொல்லி, முதல்ல ரோடு போடச் சொல்லுடா,'' என்றான், தனஞ்ஜெயன்.
''நம் சிட்டியில மட்டும் போட்டு கிழிச்சுட்டாங்களாக்கும். நீ, இந்த கிராமத்துக்கு வந்துட்ட?'' என்றபடி, முல்லைக் கொடி படர்ந்திருந்த வீட்டு வாசல் முன், காரை நிறுத்தினான், குமார்.
''இதுதான் உன் மாமா வீடா?'' என்றான், தனஞ்ஜெயன்.
''ஆமாம், இறங்கு...'' எனும்போதே அவன் மாமன் மகளான, பூங்கொடியின் தலை தெரிந்தது. பாவாடை, தாவணி அணிந்திருந்தாள். அதுவே, கீழனுார், இன்னும் நவீனங்களில் சிக்கவில்லை என்பதை தனஞ்ஜெயனுக்கு உணர்த்தியது.
தமிழ் மரபில், ''வாங்க அத்தான்...'' என, வரவேற்றாள்.
''சார், இது பூங்கொடி. என் மாமா பொண்ணு,'' என்று அறிமுகம் செய்தவாறு, தனாவை உள்ளே அழைத்து சென்றான், குமார்.
அந்த காலத்து வீடு. வலது ஓரமாய் ஹால். அதில், நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார், குமாரின் மாமா சதாசிவம்.
''மாமா!''
''வாலே... என்ன அதிசயமா இந்தப் பக்கம்?''
''ஏன் மாமா, வரக்கூடாதா. இல்ல, நான் தான் வராதவனா?''
''அப்படியா... இதுக்கு முன், ஐயா எப்ப வந்தீங்கன்னு ஞாபகத்துல இருக்கா?'' என்றார், சதாசிவம்.
''வந்ததும் வராததுமா, அத்தான்கிட்ட ஒரண்டை இழுக்காதப்பா. உட்காரச் சொல்லி, முதல்ல அத்தையை பற்றி கேளு,'' என்று, அவர்களின் முட்டலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள், பூங்கொடி.
தனஞ்ஜெயனும் அதை ரசித்தான். அப்படியே வீட்டை ஒரு பார்வை பார்த்தான். சுவர் மாடத்தில் முழுநீள சாவிகளோடு ஒரு சாவிக் கொத்து அவன் கவனத்தை ஈர்த்தது.
''உட்காரு குமார். ஆமா, தம்பி யாரு?'' என, தனஞ்ஜெயனிடம் ஊன்றினார், சதாசிவம்.
''சார் பேர், தனஞ்ஜெயன். நான் புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிற கம்பெனியில் ஜெனரல் மேனேஜரா இருக்காரு,'' என்றான், குமார்.
''ஓ... நீ வேலையில் சேர்ந்துட்டியா... சபாஷ்! உட்காருங்க சார். இவன் சினேகிதன்னு நினைச்சு தம்பின்னுட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க,'' என்றார், சதாசிவம்.
இருவரும் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்ததும், சொம்பு நிறைய தண்ணீரும், ஒரு பெரிய பித்தளை லோட்டாவுடன் வந்தாள், பூங்கொடி.
''குடிங்க சார். இதெல்லாம் கிராமத்து வழக்கம்,'' என்றான், குமார்.
நன்னாரி வாசத்தோடு கமகமத்தது, தண்ணீர்.
அப்போது, படபடப்போடு ஓடி வந்தாள், பூங்கொடியின் அம்மா கல்யாணி.
அவள் படபடப்புக்கு காரணம், சுவரோரம் மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது, ஒரு நாகப் பாம்பு.
ஓடிப்போய் கற்பூரத் தட்டில் சூடம் ஏற்றி, சதாசிவத்திடம் தந்தாள், பூங்கொடி. அதை வாங்கி, நாகத்தை நோக்கி காட்டத் துவங்கினார்.
—தொடரும்.- இந்திரா சவுந்தர்ராஜன்