
அன்புள்ள அம்மா —
என் வயது: 40, கணவர் வயது: 45. திருமணமாகி, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தனர். வெளிநாட்டில் வேலை செய்கிறார், கணவர்.
நான், மாமனார் - மாமியாருடன் வசிக்கிறேன். எங்கள் வீட்டுக்கு அருகிலேயே என் பெற்றோரும் இருப்பதால், இரட்டையர்களை வளர்ப்பதில் அதிக சிரமப்படவில்லை.
இரு மகன்களும், இப்போது பள்ளியில் படிக்கின்றனர். உருவ ஒற்றுமை இருந்தாலும், இருவரும் எப்போதும் எலியும், பூனையுமாகவே இருப்பர். எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொள்கின்றனர்.
இருவருக்கும் ஒரே மாதிரி ஆடை எடுத்தால், கோபித்துக் கொள்கின்றனர். வெவ்வேறு நிறம் மற்றும் மாடலில் இருக்க வேண்டும் என்கின்றனர்.
இரட்டை குழந்தை வைத்திருப்பவர்கள் எல்லாம், ஒரே மாதிரி ஆடை அணிவிப்பதையும், ஒரே மாதிரி ஹேர் - ஸ்டைலில் இருப்பதையும் பார்த்திருக்கிறேன். இவர்களிடம் அதை சொன்னால், 'அவர்களும், நாங்களும் ஒன்றல்ல...' என்கின்றனர்.
உடை மட்டுமல்ல, பென்சில், பேனா, விளையாட்டு பொருள் என, எது வாங்கினாலும், வித்தியாசம் இருக்க வேண்டும் என, பிடிவாதம் பிடிக்கின்றனர்.
'டிவி' நிகழ்ச்சி பார்ப்பதிலும், போட்டா போட்டி. ஒருவன் பார்க்கும் கார்ட்டூன் சேனலை மற்றொருவன் பார்ப்பதில்லை. சேனலை மாற்றி மாற்றி வைப்பதில் போட்டி.
பள்ளியிலும், ஒரே வகுப்பில் இருக்க மாட்டோம் என்றதால், தலைமை ஆசிரியரிடம் கெஞ்சி, வெவ்வேறு வகுப்புக்கு மாற்றச் சொன்னேன்.
ஒருவன், ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டால், மற்றொருவன், நீச்சல் போட்டிக்கு பேர் கொடுப்பான்.
எவ்வளவு சொல்லியும், இருவரும் கேட்பதாக இல்லை. இப்போதே இப்படி என்றால், வளர்ந்த பின் எப்படி இருப்பரோ என, பயமாக இருக்கிறது.
தினம் தினம் இவர்களை சமாதானம் செய்வதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது.
வெளிநாட்டில் இருக்கும் கணவர், ஊருக்கு வரும்போதும், இதே நிலை தான். அவரும், இருவரையும் சமரசம் செய்து வைப்பார், சிறிது நேரத்தில் மீண்டும் யுத்தம் துவங்கி விடும்.
இருவரையும் ஹாஸ்டலில் சேர்த்து விடலாம் என்கிறார், கணவர். இதில், எனக்கு உடன்பாடில்லை.
இவர்களை திருத்துவது எப்படி அம்மா?
— இப்படிக்கு, உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உன் இரட்டையர் மகன்கள், வெவ்வேறு ரசனை மற்றும் விருப்பங்களுடன் இருப்பதாக கூறியிருக்கிறாய்.
உலகில், 800 கோடி மக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான கைரேகை, உதட்டு ரேகை, உதட்டு வடிவம் அளவு, கருவிழிப்படலம், காதுகளின் விளிம்பு வளைவுகள், முகடுகள், நாக்கு, கால் அச்சு, பற்கள், விழித்திரை உண்டு.
உன்னுடைய இரட்டைக் குழந்தைகள் ஒரே ரசனையில், ஒரே விருப்பத்தில் இருந்தால் அதிலென்ன சுவாரசியம் இருக்கும்!
அவர்கள் வெவ்வேறு நிற ஆடை அணியட்டும். வித்தியாசமான, 'ஹேர் ஸ்டைல்' வைத்துக் கொள்ளட்டும். ஆளுக்கு ஒரு சேனல் பார்க்கட்டும். ஒருவன், ஓட்டப்பந்தயம் கலந்து கொண்டால், இன்னொருவன், நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளட்டும். இருவரும் வாய் சண்டை, கை சண்டை போடாமல், அவரவர் வழியில் வளர அனுமதி.
நீயும், கணவரும், இருவரையும் அவரவர் வழியில் போக அனுமதித்தாலே, அவர்கள் சண்டை போட்டுக் கொள்ள மாட்டார்கள்.
இருவரின் சம்மதத்தை பெற்று, அவர்களை வெவ்வேறு ஹாஸ்டலில் சேர்க்கலாம் அல்லது ஒருவனை வீட்டில் வைத்துக் கொண்டு, இன்னொருவனை ஹாஸ்டலில் சேர்க்கலாம்.
இரு சாதாரண சகோதரர்களை வளர்க்கும் பாவனை, மிக அவசியம். ஒருவருடன் ஒருவரை ஒப்பிட்டு, இவன் திறமையானவன், இவன் திறமை இல்லாதவன் என வகைபடுத்துதல் தவறு.
இரட்டையர்களை காட்சி பொருளாக்காது, சாதாரணர்கள் ஆக்க வேண்டும். அப்போது தான் இருவரும், லஜ்ஜையின்றி வளர்வர்.
இருவருக்கும் ஒரே ஓசை நயத்தில் முடிவது போல் பெயர் வைத்திருந்தால், ஒருவனின் பெயரை, 'கெஜட்டில்' கொடுத்து மாற்று. இரட்டையர்களை வளர்க்கும், 'த்ரில்'லை நன்றாக அனுபவித்து மகிழ், மகளே!
— என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.