sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

மடை மாற்றம்!

/

மடை மாற்றம்!

மடை மாற்றம்!

மடை மாற்றம்!


PUBLISHED ON : பிப் 04, 2024

Google News

PUBLISHED ON : பிப் 04, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாலையோரத்து சரக்கொன்றை மரங்களில் தொங்கிய மஞ்சள் கொத்துக்களைப் பார்த்தபடியே, அவற்றின் அடர்த்தியற்ற நிழலில் நடந்து கொண்டிருந்தார், தனபாலன்.

ஐம்பதை தொட்ட வயதில், நடைப் பயிற்சியை மீறி, லேசான தொப்பை.

தெரு நாய்களை விரட்ட, கையில் சிறு குச்சி.

தாண்டிச் செல்லும் பால்கார சைக்கிள்கள், அவ்வப்போது செல்லும் ஆட்டோக்கள் தவிர, சந்தடியில்லாமல் இருந்த காலை நேரத்து அமைதியைக் குலைக்கும் வகையில், அவருக்குப் பின்னாலிருந்து சிறு கூச்சல்.

அவரைத் தாண்டி படு வேகமாக முன்னால், ஒல்லியாக, அழுக்கான அரை டிராயரும், பரட்டைத் தலையுமாக ஒரு உருவம் ஓடியது.

புரியாமல் திரும்பிப் பார்த்தார். சிறு கூட்டம் ஒன்று, அவனை துரத்தி ஓடி வந்து கொண்டிருந்தது.

பெர்மூடா, டீ - ஷர்ட்டில் இரண்டு ஆண்கள், கொஞ்சம் சிரமப்பட்டு ஓடி வந்தபடியே, சத்தமாக, 'பிடிங்க, பிடிங்க சார் அவனை...' என்றனர்.

அவர்களுக்குப் பின்னால் சற்று துாரத்தில், புடவை தடுக்க, நடக்கவும் முடியாமல், ஓடவும் முடியாமல், நடுத்தர வயது பெண் மற்றும் அவளை விட இளையவளாக ஒருத்தி.

அவர், அவசரமாக முன்னால் பார்த்து அடியெடுத்து வைத்தார். துாரத்தில் ஓடிக் கொண்டிருந்தவன், தன் கையிலிருந்த பையைத் துாக்கி அவரது கால் பக்கம் வீசி, சட்டென அருகில் இருந்த, சிறு சந்துக்குள் ஓடி மறைந்தான்.

வேகமாக ஓடிப் போய் தனபாலன், அந்த சந்து முனையில் பார்க்கும்போது, அங்கே யாரும் இல்லை. அதன் முடிவில் இரு பக்கமாக விரிந்திருந்தது தெரு. இடது, வலது எந்தப் பக்கம் ஓடியிருப்பானோ...

திரும்பி வந்து, அவர்களிடம் விபரம் கேட்டார்.

மூச்சிறைக்க வந்து நின்ற பெண்கள், கீழே கிடந்த கைப் பையைத் திறந்து, சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.

தன் உறவினரோடு கோவிலுக்கு வந்தவள், பெரிய பெண்மணி. பூக்கடையில் நின்று பூ வாங்கும் போது, அவளது கைப்பையை பிடுங்கி ஓட ஆரம்பித்திருக்கிறான், அந்தத் திருடன்.

அவர்கள் கத்தவே, நடை பயிற்சியில் இருந்த இரு பெர்மூடாக்காரர்களும் அவனைப் பிடிக்க, ஓடி வந்திருக்கின்றனர்.

எல்லாரும் வருவதை பார்த்ததும், பையை விசிறி விட்டு ஓடி விட்டான்.

''எல்லாம் சரியா இருக்குதாம்மா... பணத்தை எடுத்துருக்கானா?'' என்றார்.

''இருக்குங்க... பர்ஸ், பணம் எல்லாம் அப்படியே தான் இருக்கு.''

''இன்னைக்கு உங்க நல்ல காலம், பர்ஸ் கிடைச்சுது. அவன் மட்டும் மாட்டியிருந்தா, கதையே வேற,'' என்றார், தனபாலன்.

''சின்ன வயசுக்காரன் தான் போல...'' என்றான், ஒரு பெர்மூடா.

''இவனை எல்லாம் விடக்கூடாது. போலீஸ்ல பிடிச்சு கொடுத்து, நல்லா தட்டி, கை, காலை உடைக்கணும். அப்ப தான் பயம் இருக்கும்,'' என்றான், இன்னொரு பெர்முடா.

அவர்கள் சொல்வதை ஆமோதித்தபடியே வீட்டை நோக்கி நடந்தார், தனபாலன்.

முன் பக்கத்து சிறு தோட்டத்தில் வேப்ப மரத்தடியில் இருந்த குப்பைகளைப் பெருக்கி, பக்கெட்டில் அள்ளி, வெளியே குப்பைத் தொட்டியில் கொட்டி விட்டு திரும்பிக் கொண்டிருந்தான், பெருமாள். அவ்வப்போது வரும் தோட்டக்காரன், அவன். 20 அடி நடை பாதையைக் கடந்து, படிகளில் ஏறி, லேசாகத் திறந்திருந்த கிரில் கேட்டின் இடைவெளியில் கையை விட்டுத் திறந்தார்.

ஷூக்களைக் கழற்றி, ரேக்கில் வைத்தார். அப்போது, வலது பக்கத்தில் மாடிக்குச் செல்லும் படிகளின் வளைவுக்குக் கீழே, உள் வாங்கிய பகுதியில், அட்டைப் பெட்டிகள், பல கோணங்களில் கிடந்தன. அவற்றின் பின்னால் ஒரு சின்ன சத்தம்.

'இப்படி அடைச்சா, பூனை, எலி எல்லாம் வரும்...' என்றபடி, அங்கே சென்றவர் கண்ணில் பட்டது, ஏதோ அசைவு.

படாரென்று அட்டைகளைத் தள்ளினார்.

குனிந்து, மடிந்து உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு உருவம், மெல்ல தலை நிமிர்த்தியது.

''எழுந்திரு... யாருடா நீ?''

சத்தமாக அவர் அதட்டியதில், மெல்ல அந்த உருவம் சுவரோடு ஒட்டியபடி, வயிறு உட்பக்கம் மடிந்து குழிந்து கிடக்க, மெல்ல தலையை நிமிர்த்தி எழுந்தது.

அழுக்கு அரை டிராயர், ஒல்லி, பரட்டைத் தலை, விலா எலும்புகளின் புடைப்பு.

சற்று முன் அவரை தாண்டி ஓடிய அந்த திருடன் என, புரிந்தது.

வயதை கணிக்க முடியாதபடி ஒரு தோற்றம்.

''வாடா வெளியில... நீதானே பூக்கடையில அந்த அம்மாகிட்ட பர்ஸ் அடிச்ச?''

பதில் சொல்லாமல் தரையைப் பார்த்தான்.

''வெளியே வாடாங்கிறேன்... போலீசுக்கு போன் பண்ணா, அடி பின்னிடுவாங்க.''

அட்டைப் பெட்டிகளைத் தாண்டி, ஒல்லிக் காலை அவசரமாக எடுத்து வைத்தான்.

கண்ணில் கரகரவென்று தண்ணீர்.

''போலீசுக்கு மட்டும் வேணாங்க,'' கரகரப்பாக அவன் கெஞ்சினான்.

''ஏன், நீங்க திருடுவீங்க... போலீஸ்ல மட்டும் மாட்டக் கூடாது. திருட்டு ராஸ்கல், இங்கே எப்படிடா வந்த?''

அவன், கேட்டைக் காட்டினான்.

வேலைக்காக கேட்டை பாதி திறந்து வைத்திருந்தான், பெருமாள்.

சின்ன சத்தங்களைக் கேட்கும் அளவுக்கு அவன் காது, வேலை செய்யாது. இவன் வந்ததையோ, கிரில் திறந்து உள்ளே பதுங்கியதையோ, கவனித்திருக்க

மாட்டான், பெருமாள்.

அவன் வயிற்றைப் பார்த்தார்.

அவனை ஒரு கண் பார்த்துக் கொண்டே, உள்ளே கூடத்துக்குள் நுழையும் நிலைப்படி அருகே நின்று, உள்பக்கமாக உரக்கக் குரல் கொடுத்தார்.

''ராவ்...''

கூடம் தாண்டிய பின்கட்டு சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தார், வேட்டி மடிச்சுக் கட்டிய, ஒருவர்.

''என்ன அண்ணா?'' என்று, குரல் கொடுத்தார்.

பல ஆண்டுகளாக சமையல் செய்யும் உரிமையின் அழைப்பு, அந்த அண்ணா.

''ஒரு பெரிய டம்பளரில் காபி கொண்டு வாங்க.''

''இதோ!''

''உஷா எழுந்தாச்சா?''

''அம்மா இன்னும் எழுந்திருக்கலேங்க.''

மனைவியின் பிரஷர், ஷுகர் மாத்திரைகள் அவளை காலை, 8:00 மணிக்கு முன் எழுப்பாது.

மிரட்சியுடன் முழித்தபடி நின்றிருந்தவன் பக்கம் திரும்பி, ''உன் பேர் என்னடா?'' என்றார்.

எச்சில் முழுங்கி, ''தும்பி...'' என்றான்.

''தும்பியா... அதென்னடா பேரு?''

காபி டம்பளருடன் வந்த ராவ், ''இந்தப் பையன் யாரு அண்ணா?''

''அப்புறம் சொல்றேன், டம்பளரை இப்படி வைங்க.''

மாடியேற சென்றவரிடம், ''டிபன் பண்ணிட்டிங்களா?'' என்றார்.

''ஒரு ஈடு இட்லி வார்த்திருக்கேன், அண்ணா.''

''அதை ஒரு தட்டுல போட்டுக் கொண்டு வாங்க.''

அவர் உள்ளே போனதும், ''இந்த காபியை எடுத்துக் குடி,'' எனக் கூற, மிரட்சியுடன் பார்த்தானே தவிர எடுக்கவில்லை.

''குடிடா...'' அவர் பெரிதாக அதட்டியதும், அவசரமாக காபியை கையில் எடுத்ததுதான் தெரியும். சில நொடிகளுக்குள் அவனது காய்ந்த வயிற்றுக்குள் அடைக்கலமானது.

''தும்பியா.. அதென்னடா பேரு?''

''பெரிய ஆயா, ஊருல எல்லாம் அப்படித்தான் விளிக்கும்,'' குரல் தொண்டைக்குள்ளேயே பதுங்கிக் கொண்டது.

''விளிக்கும்... கேரளாவா?''

ஐந்து இட்லிகளை ஒரு தட்டில் போட்டு மேலே சாம்பார் ஊற்றி, எடுத்து வந்தார், ராவ். அவன் கண்கள் அம்பாக தட்டின் மேல் பாய்ந்தன. நாவில் ஊறிய நீர், வாய் ஓரத்தில் வழிந்தது.

''தின்னு...'' அவர் சொல்லி முடிக்கும் முன்பே. ராவ் படியில் வைத்த தட்டை பாய்ந்து எடுத்தான்.

இரண்டு நிமிடத்தில் தட்டு காலி. தண்ணீர் எடுத்து வந்த ராவ், பிரமிப்புடன் பார்க்க, அவரை உள்ளே போகச் சொன்னார், தனபாலன்.

இப்போது, அவன் கண்களில் கொஞ்சம் உயிர் வந்திருந்தது.

''ஏன்டா திருட்டு நாயே, இந்த வீட்டுலயும் திருடலாம்ன்னு தானே வந்து ஒளிஞ்சுக்கிட்ட? இப்பவே போலீசை கூப்பிடறேன். தப்பி ஓடலாம்ன்னு பார்க்காத.''

கை கூப்பி, அவர் காலில் விழுந்தான்.

''வேணாங்கய்யா... இனிமே திருட மாட்டேங்க,'' திக்கினான்.

''எங்கேருந்து வர்ற... எத்தனை வீட்டுல திருடின. ஏதாச்சும் பொய் சொன்னா, நடக்கிறதே வேற.''

கைகள் இரண்டையும் நெஞ்சுப் பக்கம் கட்டிக் கொண்டு, ''அய்யா...'' என்றான்.

ஒவ்வொரு கேள்விக்கும் பெரிய அதட்டல் போட்ட பின், ஒரு வரி பதிலாக சொன்னான்.

''எந்த ஊருடா உனக்கு?''

''தெக்கால சின்ன ஊருங்க...'' அரைகுறையாக பேரைச் சொன்னான்.

நாகர்கோவில் அருகே ஒரு குக்கிராமம் என்று தெரிந்தது.

''படிக்கல, வயசு தெரியல.''

முகமும், உடலும், 15 வயதென பறைசாற்றிறயது. அம்மா - அப்பா தெரியவில்லை.

''ஆயா வேல செஞ்ச, பெரிவரு வீட்டு ஆடுங்களை மேச்சலுக்கு, சாமியார் குன்று அடிவாரத்துக்கு கொண்டு போயிட்டு, இருட்டறப்ப கொண்டு விடுவேன். பழைய சோறு தருவாங்க. பழைய வேட்டி, டவுசர் கூட தருவாங்க.

''போன வருஷம் பெரிய மழை பேஞ்சப்ப, ஆயா செத்துப் போச்சு. பத்து ரூபாயை என் கையில கொடுத்து, 'பட்டணத்துக்குப் போய் பொழச்சுக்கடா'ன்னு சொல்லிட்டு செத்துப் போச்சு.''

அவனது தடுமாற்றப் பேச்சிலிருந்து ஓரளவு புரிந்து கொண்டார்.

பல ரயில் மாறி வந்து இறங்கியவனுக்கு, தாடிக்காரன் ஒருவன், சோறு வாங்கிக் கொடுத்து, பயணிகள் அசந்த நேரம் பைகளைத் துாக்கி வரச் செய்து, ஐந்தோ, பத்தோ கொடுத்து வந்தான்.

அப்போது, அவனுக்கு அந்த பணம், பசியாற்றும் அமுதம்.

பல மாதங்களுக்குப் பின், கஞ்சா கேசில் தாடிக்காரனுடன் இவனும், போலீசில் பிடிபட்டான். அடி உதை பட்டு, பின்னர், இவனுக்கு அதில் சம்பந்தமில்லை என்று விடப்பட்டான்.

அதன்பின், தெருவோர சாப்பாட்டுக் கடையில் நாள் முழுக்க வேலை. சம்பளமில்லாமல் சோறு மட்டும்.

யாரோ ஒருவன், கடை சாப்பாட்டில், ஏதோ பூச்சி கிடந்ததாக, ஏக ரகளை செய்தான். அவனை சமாதானப்படுத்த, இவன் மேல் பழி போட்டு, விரட்டி விட்டார், கடைக்காரர்.

வேலை கேட்ட இடங்களில் துரத்தப்பட்டதில், மூன்று நாட்கள் வயிறு வாடியது. தாடிக்காரன் பழக்கிய, 'பை திருடும் கலை' முயற்சி செய்யும் எண்ணம் வந்தது.

கோவில் வாசலில், கவனமில்லாத அம்மையாரின் கைப்பை பார்த்ததும், எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தான். எல்லாரும் துரத்துவதைப் பார்த்து, பையை விட்டெறிந்து விட்டு ஓடி வந்ததில், கேட் திறந்திருந்த இந்த வீடு கண்ணில் பட்டது.

''உன்னை இப்படியே விட்டா, நீ திருடத்தான் போவே...'' என்றவாறு, போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்தார்.

''வேணாங்க...'' என்று அவன் கெஞ்சியதை லட்சியம் செய்யவில்லை.

ராவைக் கூப்பிட்டு, ''பெருமாள்கிட்ட சொல்லி, 'சைட்'ல இருக்கிற தோட்டக் குழாயில இந்தப் பையன் குளிக்க ஏற்பாடு பண்ணுங்க. 'டெட்டால்' சோப்பு, கொஞ்சம் எண்ணை தலையில வைக்க சொல்லுங்க. இழுத்துட்டுப் போங்க,'' என்றார், தனபாலன்.

''அய்யா, வேணாங்க. நான் போயிடறேங்க,'' என்றான்.

''முதல்ல குளி. மரியாதையா அவரோட போ. தப்பிச்சு ஓடப் பார்க்காத.''

பெருமாளையும் உதவிக்கு அழைத்து, இழுத்துச் செல்லப்பட்டான்.

தன் அறையில், மூலையில் இருந்த பீரோவைத் திறந்தார். அமெரிக்காவில் வேலை பார்க்கும் அவரது மகனின் உள் நிஜார், பேன்ட், சட்டை எடுத்து வந்தார். ராவிடம் கொடுத்து அவனுக்கு அணிவிக்க சொன்னார்.

சற்று தொள தொளப்பான உடை, பொருத்தமில்லை. ஆனால், ஓரளவு பார்க்கும் படியாக வந்து நின்றான்.

''அய்யா, நான் இனிமே திருட மாட்டேனுங்க.''

''எதுவானாலும் ஸ்டேஷன்ல போய் பேசிக்க.''

வாசலில் போலீஸ் ஜீப் வந்து நின்றது. இரண்டு கான்ஸ்டபிள்கள் இறங்கினர்.

''வேணாங்க...'' என்று முரண்டு பிடித்தவனை, தரதரவென இழுத்துப் போய், அடாவடியாக ஏற்றப்பட்டான்.

திரும்பி அவர் வந்தபோது, மாடியிலிருந்து சின்ன கொட்டாவியுடன் இறங்கி வந்தாள், உஷா.

''இங்க என்ன அமர்க்களம்?''

''எல்லாம் அப்புறம் சொல்றேன். இப்ப குளிக்க நேரமாயிடிச்சு,'' என்றபடி குளியல் அறைக்கு விரைந்தார்.

காலைச் சிற்றுண்டி முடித்து, உடையணிந்தவரிடம், காபியுடன் வந்த உஷா, ''இப்பவாச்சும் சொல்லுங்களேன்.''

காலையில் நடந்தவற்றை சொன்னார்.

''என்னை எழுப்பக் கூடாதா... நானும் ஒரு போடு போட்டிருப்பேன் இல்ல...'' என்றவள், ''என்ன செய்யப் போறீங்க?'' எனக் கேட்டாள்.

''நண்பன் லோகநாதன்கிட்ட பேசிட்டேன். அவர் கம்பெனியில அவனை, 'அட்டெண்டரா' சேர்த்துக் கொள்வதாக கூறினார். இன்னும் கொஞ்ச நேரத்தில், அவர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், அவனை கூட்டிட்டுப் போயிடுவாரு.''

சிரித்தபடியே, ''ஸோ, ஜீப் வரவழைச்சு, உங்க ஸ்டேஷனுக்கே அவனை அனுப்பிச்சுட்டீங்க இல்லையா, இன்ஸ்பெக்டர் சார்?'' என்றாள், உஷா.

- பத்மினி பட்டாபிராமன்






      Dinamalar
      Follow us