
பி. முருகேசன், கோவை: ஒருவரை பற்றிய விமர்சனம், எப்படி இருக்க வேண்டும்?
விமர்சனம் என்பதை, ஒரு பூனை போல எடுத்துக் கொள்ள வேண்டும். தன் குட்டியை, பூனை துாக்கி அணைப்பது போல இருக்க வேண்டும். எலியை, பூனை குதறுவது போல இருந்து விடக்கூடாது!
ஆர். புவனா, மதுரை: புன்னகை என்பது என்ன?
நம் முகத்தையும், இதயத்தையும் இணைப்பது தான் புன்னகை. புன்னகைக்கும் முகம், பொன் நகைக்கு சமம். எப்போதும் புன்னகையுடன் இருப்போம்; பூரிப்போடு இருப்போம்!
* ப. செல்வம், சென்னை: ஒருவனின் வெற்றி என்றால் என்ன?
ஒருவனின் வெற்றி, அவன் அடைந்த பதவியைப் பொறுத்து அளவிடப்படுவது அல்ல. அதை அடைவதற்கு முன், எவ்வளவு தடங்கல்களையும், தடைகளையும் தாண்டி வந்தான் என்பதை பொறுத்தது தான் வெற்றி!
ஆ. ராஜா, விருதுநகர்: நான் நிம்மதியாக வாழ நினைக்கிறேன், என்ன செய்ய வேண்டும்?
ஆடம்பரம் இல்லாத வாழ்க்கை; ஆணவமில்லாத நடத்தை; அனுசரணையான போக்கு; திருப்தியான மனப்பான்மை; அடுத்தவர் மகிழ்ச்சியில் தம் மகிழ்ச்சியை காண்பது. இப்படி இருந்தால், நிம்மதி தானாகவே வரும்!
* மு. சிவா, கோவை: என் நண்பன், பெருத்த செலவாளியாக உள்ளான். நான் சிக்கனத்தையே விரும்புகிறேன். இது சரியா?
'வெரிகுட்' சிக்கனம் பெரிய வருமானம். சம்பாதிப்பது பெரிதல்ல, செல்வத்தை சேர்ப்பது தான் பெரிது. எனவே, சம்பாதிப்பவர்களை விட, சிக்கனமாக இருப்பவர்களே, மகிழ்ச்சியாக இருக்கமுடியும்!
ப. நாதன், சேலம்: எனக்கு துன்பங்கள் அதிகமாக உள்ளதே... நான் என்ன செய்வது?
எதில், எதில் ஆசையை அகற்றுகிறோமோ, அதில், அதில் துன்பங்கள் தானே விலகும். செய்து பாருங்களேன்!
ச. வள்ளி, திருப்பூர்: என் முகம் அழகாக இல்லை என்று, என் தோழிகள் கூறுகின்றனரே...
நீங்கள் கோபக்காரியாக இருப்பீர்களோ என்று நினைக்கிறேன். முகத்தின் அழகை, கோபம் கெடுத்து விடும்; சாந்தமே, முகத்திற்கு அழகைத் தரும்!