
அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 27 வயது பெண். திருமணமாகி விட்டது. ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறேன். பி.இ., இன்ஜினியரிங் முடித்து, கட்டுமான நிறுவனம் ஒன்றில், பொறியாளராக பணிபுரிகிறார், கணவர்.
சமீபத்தில் எனக்கு, சிசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. அம்மா இல்லாததால், பிறந்த வீட்டில் யாரும் எங்களை கவனிக்க ஆள் இல்லாமல், மாமியார் வீட்டிலேயே இருக்கிறேன்.
திருமணம் ஆனதிலிருந்தே, என்னை தனியாக இருக்க விட மாட்டார், மாமியார். வேலைக்கு போகும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் அவருடன், அவர் பக்கத்திலேயே இருக்க வேண்டும் என்பார். சமையல் செய்யும்போது கூட, அவருடன் இருந்து, உதவி செய்வேன்.
அடிக்கடி வெளியூர் சென்று விடுவார், கணவர். ஊரில் இருக்கும்போது மட்டும், நாங்கள் ஒரே அறையில் துாங்க அனுமதிப்பார்.
சில நேரங்களில் எனக்கும், கணவருக்கும் பிரச்னை ஏற்பட்டு, வாக்குவாதம் ஏற்பட, மாமியார் முன்பே குரல் உயர்த்தி பேசியுள்ளேன். எங்களை பற்றி எல்லா விஷயமும் அவருக்கு தெரிய வேண்டும் என, எதிர்பார்ப்பார்.
இதெல்லாம் எரிச்சலை ஏற்படுத்தினாலும், வேலைக்கு போகும் எனக்கு அவரது ஒத்தாசை தேவை என்பதால், பொறுத்துக் கொள்வேன்.
ஆனால், குழந்தை பிறந்த பின், குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும்போது கூட, எதிரில் அமர்ந்து, கொட்டு கொட்டென்று பார்த்துக் கொண்டிருப்பார். இது, எனக்கு சங்கோஜமாக இருக்கும். மறைமுகமாக சொல்லி பார்த்தும் கேட்கவில்லை. கணவரிடம் சொல்ல சொல்லியும் பலன் இல்லை.
இதனால், இப்போது அவருடன் சகஜமாக பேசவோ, பழகவோ முடியாமல் தவிக்கிறேன். அவர்களை பார்த்தாலே படப்படப்பாக, சங்கடமாக உணர்கிறேன். இதிலிருந்து நான் வெளியே வருவதற்கு ஆலோசனை தாருங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
உன்னில் இருக்கும் சுயநலமும், ஈகோவும் தலை விரித்தாடுகின்றன. நீ வீட்டிலும் பன்னாட்டு நிறுவன ஊழியராய் கோலோச்ச விரும்புகிறாய். இது தவறு மகளே.
வயது முதிர்ந்த, உன் மாமியார் உன்னளவு இல்லா விட்டாலும் குறைந்த அளவாவது படித்திருப்பார். அவர், கணவரை இழந்தவர். நீயோ, தாயை இழந்தவள். நீ, மாமியாரை அம்மாவாக பாவிக்கிறாயோ என்னவோ, மாமியார் உன்னை மகளாக பாவிக்கிறார்.
மாமியாருக்கு, கணவர் ஒரே மகன் என யூகிக்கிறேன். அதனால், ஒட்டு மொத்த பாசத்தையும், கவனிப்பையும் உன் மீது கொட்டுகிறார், மாமியார்.
பொதுவாக ஒரு பெண்ணுக்கு பிரசவம், தாய் வீட்டில் தான் பார்ப்பர். குழந்தை பிறந்து ஆறு மாதங்கள் கழித்து தான், புகுந்த வீட்டுக்கு அனுப்புவர். உனக்கு அம்மா இல்லாததால், பிரசவத்தை தானே முன் நின்று பார்த்திருக்கிறார், மாமியார்.
தன் தனிமை துயரத்தை போக்க, ஒரு நாளில் 16 மணி நேரம் உன்னுடன் இருக்க விரும்புகிறார், மாமியார். குழந்தைக்கு பால் கொடுக்கும் போது, கவனத்தில் கொள்ள வேண்டியவைகளை முறையாக செய்கிறாயா என்று, மருத்துவ தாதி போல், உடன் அமர்ந்து கவனிக்கிறார்.
மகளே, மாமியாருடன் இணைந்திரு. அவருடன் உபயோகரமாக நேரத்தை கழிக்க கற்றுக் கொள். மாமியாருடன் உன்னை ஒப்பிட்டு பார்த்து பொறாமைப்படாதே. அவர் இயங்குவதற்கான சுதந்திரத்தை கொடு.
உன்னுடைய உணர்வுகளையும், தேவைகளையும் மாமியாரிடம் நாசுக்காய் வெளிப்படுத்து. மாமியாரிடம் அவரின் மகனை பற்றி, கணவரிடம் மாமியாரை பற்றி குறை கூறாதே. பேச்சை குறைத்து, கண், காதுகளை திறந்து வை. அடுத்தவரை கனிவுடன் புரிந்து கொள்ள முயற்சி.
மாமியார் அனுசரனையாய் உடனிருந்து, மகன், மருமகள், பேரனை கவனித்துக் கொள்ளா விட்டால் திண்டாடி போவாய்.
நன்றி உணர்ச்சி சுரந்தால், மாமியாரை படபடப்பாய், சங்கடமாய் உணரமாட்டாய். உன்னுடைய சுயநலத்துக்காவது மாமியாருடன் நல்லுறவு பேணு.
-என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.