
என். சுமதி, தேனி: 'ஒரு கிறுக்கனை, ஏன் விரும்புற...' என, என் தோழி கேட்கிறாளே?
மிக மிக, அன்பாகவும், பாசமாகவும், அறிவு ஜீவியாகவும் இருப்பார் என நினைக்கிறேன். அதனால் தான் அப்படி கேட்கிறாள்!
எம். முகுந்த், கோவை: உங்களுக்கு, ஆண் வாசகர்கள் அதிகமா... பெண் வாசகியர் அதிகமா?
இரண்டு பேருமே சரி சம விகித அளவிலேயே உள்ளனர்!
எஸ். இந்திராணி, புவனகிரி: வரும் லோக்சபா தேர்தலில், முதன் முறையாக ஓட்டளிக்க காத்திருக்கும், புதிய வாக்காளர்களுக்கு, தாங்கள் கூற விரும்புவது என்ன?
ஓட்டுக்கு துட்டோ, இலவசங்களோ கொடுக்க வரும் கட்சிகளை தவிருங்கள். ஊழல் இல்லாத கட்சி என்று, மக்கள் எந்த கட்சியை நம்புகின்றனரோ, அந்த கட்சிக்கு ஓட்டளியுங்கள்!
* மு. நிர்மலா, மதுரை: என் தோழி, 'அறிவு என்பது தான் முதலாளி...' என்கிறாளே. அது சரியா?
மிகவும் சரி தான்... அறிவு என்பதே முதலாளி. மனம் என்பது வேலைக்காரன்; அறிவு தான், மனதிடம் வேலை வாங்க வேண்டும்!
வி. மனோகரன், நெல்லை: ஒரு மனிதன் வாழ்வது எப்படி இருக்க வேண்டும்?
புகழோடு வாழ வேண்டும்; மற்றவர் போற்றிப் பாராட்டுகிற வகையில் வாழ வேண்டும்; எளிமையாக வாழ வேண்டும்; எடுத்துக் காட்டாக வாழ வேண்டும்; இயல்பாக வாழ வேண்டும்; எதார்த்தமாக வாழ வேண்டும். இவை இருந்தால் போதும்!
மு. விஜயராணி, எஸ்.கொடிக்குளம்: 'மத்தியில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நடக்கும்...' என்று, தி.மு.க., எம்.பி., கனிமொழி கூறியுள்ளாரே...
எந்த ஆண்டு தேர்தலில் என்று, கூறினாரா?
* ஆர். சிந்துஜா, சென்னை: வைகோவும், திருமாவளவனும், 'கொடுத்ததை வாங்கிக் கொள்கிறோம்...' என, கூறுகின்றனரே...
தி.மு.க., இவர்களுக்கு எவ்வளவு கொடுக்கும் என, யோசித்து பாருங்களேன்!