
துப்புரவு பணியாளரின் சேவை!
எங்கள் பகுதியில், துப்புரவு பணியாளராக பணிபுரிகிறார், பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர வயதுள்ள ஒருவர்.
தினமும் காலையில், விசில் ஊதியபடி, குப்பை வண்டியை ஓட்டிக்கொண்டு வருவார். குப்பை கொட்ட வருபவர்களிடம், அவர்களது வீட்டில் பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பழைய செருப்புகளை கேட்டு வாங்கி சேகரித்து கொள்வார்.
அவைகளை, அவருக்கு தெரிந்த செருப்பு தைக்கும் தொழிலாளியிடம் தந்து, தன் சொந்த செலவில் பழுது நீக்கி, பாலீஷ் போட்டு வாங்கிக் கொள்வார்.
அவருடைய கிராமத்திலும், நகரத்து பிளாட்பாரங்களிலும், செருப்பில்லாமல் சிரமப்படும் ஏழைகளுக்கு, தன்னிடமுள்ள செருப்புகளில் பொருத்தமானதைத் தந்து, அணிந்து கொள்ளச் செய்வதை, வழக்கமாக வைத்திருக்கிறார்.
'தொழிலுக்கும் தொழில், சேவைக்கும் சேவை...' என, பலரும் அவரை பாராட்டுகின்றனர்.
பழுதடையாமல், பயன்படுத்த தகுதியுள்ள பழைய காலணிகளை, குப்பையில் துாக்கி வீசுவோர், சிறிது மனது வைத்து, கொஞ்சம் செலவு செய்து புதுப்பித்து, தேவையானவர்களுக்கு தந்து உதவலாம். செய்வீர்களா!
—சி.அருள்மொழி, கோவை.
ஆட்டோ ஓட்டுனர்களின் மனிதாபிமானம்!
எனக்கு நன்கு பழக்கமான ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், சர்க்கரை வியாதியால் அவதிப்பட்டு வந்தார். இதன் காரணமாக, சில மாதங்களுக்கு முன், இரண்டு கால்களையும் எடுக்க வேண்டிய சூழல். அவருக்கு மனைவியும், கல்லுாரியில் பயிலும் இரு மகள்களும் உள்ளனர். குடும்பத்தில் இவர் மட்டுமே சம்பாதித்து வந்தார்.
இந்நிலையில், தவித்த ஆட்டோ ஓட்டுனரின் குடும்பத்தை, சக ஆட்டோ ஓட்டுனர்கள் ஒன்றிணைந்து தோள் கொடுத்தனர். அவர் மனைவிக்கு ஆட்டோ ஓட்ட பயிற்சி அளித்து, லைசென்சும் பெற்றுத் தந்தனர். இப்போது, கணவரின் ஆட்டோவை, ஓட்டி வருகிறார், மனைவி.
அதுமட்டுமின்றி, தங்களின் ஆட்டோ ஸ்டாண்டிலேயே, நண்பருக்கு பெட்டிக்கடை ஒன்றை வைத்துக் கொடுத்துள்ளனர்.
நட்புக்கு முன்னுதாரணமாக, மனிதாபிமானத்தோடு உதவிகள் செய்து, நண்பரின் கவுரவத்தையும், குடும்பத்தையும் கஷ்டத்திலிருந்து காப்பாற்றிய அந்த ஆட்டோ ஓட்டுனர்களை, அனைவருமே வாழ்த்தி, பாராட்டுகின்றனர்.
—வடிவேல் முருகன், நெல்லை.
கிராமத்து பெண்களின் சுயதொழில்!
சமீபத்தில், சென்னையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அந்த குடியிருப்புக்கு, கிராமத்து பெண்கள் மூன்று பேர் வந்தனர். அவர்களுள் ஒரு பெண், முருங்கைக்கீரை உள்ளிட்ட, கிராமத்தில் மட்டுமே கிடைக்கக் கூடிய கீரை வகைகளை வைத்திருந்தார்.
இன்னொரு பெண், ஆலங்குச்சி மற்றும் வேலங்குச்சிகளை, ஒரு ஜாண் அளவுக்கு நறுக்கி, கட்டுக்களாக கட்டி வைத்திருந்தார். அடுத்த பெண், சிறிய துணிப்பைகளில், பசுஞ்சாண எருவை வைத்திருந்தார். அவர்களிடம் அதுபற்றி விசாரித்தேன்.
'நாங்க மூணு பேரும், ஒரே கிராமத்திலிருந்து தான் வர்றோம். இதுபோன்ற குடியிருப்புகளில், வசிப்பவர்களுக்கு தேவையான, கீரை வகைகள், தொட்டிச் செடிகளுக்கு இயற்கை உரம், ஆலங் குச்சியால் பல் துலக்க விரும்பற, நிறைய வாடிக்கையாளர்கள் இருக்காங்க.
'தினமும் ஒரு குடியிருப்புன்னு போய், விற்பனை செய்கிறோம். எங்கக்கிட்ட போன் பண்ணி கேட்பவர்களுக்கும், தேடிப் போய் கொடுப்போம். 'இங்க தேவைகள் அதிகமாக இருக்கிறதால, நாங்க எடுத்து வர்ற பொருட்கள், ஒருநாள் கூட மிச்சமாவதில்லை. இந்த வியாபாரம் மூலம் கைநிறைய சம்பாதிச்சு, கவுரவமா சொந்தக் கால்ல நிக்கறோம்...' என்றனர், மகிழ்ச்சியுடன்.
தன்னம்பிக்கையும், துணிவும் உள்ள அவர்கள், மென்மேலும் வாழ்க்கையில் உயர, மனதார வாழ்த்தினேன்!
—மு.ஆதினி, சேலம்.