
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும், கமல்!
விக்ரம் படத்திற்கு பிறகு, கமலின் மார்க்கெட் மீண்டும் சூடு பிடித்துள்ளது. பல மெகா படங்களில், 'பிசி'யாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள, இந்தியன்- 2 படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில், தற்போது, அப்படத்தின் மூன்றாம் பாகத்தையும் சத்தம் இல்லாமல் முடித்து விட்டனர்.
இதனால், இந்தியன்- 2 படம் திரைக்கு வந்து ஓரிரு மாதங்களிலேயே, இந்தியன்- 3 படத்தையும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதேபோல், தான் நடித்த இன்னும் சில, 'சூப்பர் ஹிட்' படங்களின் இரண்டு, மூன்றாம் பாகங்களையும் ஒரே நேரத்தில் படமாக்கி வெளியிட, சம்பந்தப்பட்ட இயக்குனர்களிடம், பேச்சு நடத்தி வருகிறார், கமல்.
—சினிமா பொன்னையா
நயன்தாரா, புது, 'ரூட்!'
மெகா நடிகர்கள், நயன்தாராவை ஓரங்கட்ட துவங்கி விட்டதால், தற்போது, அவரை பிரதானப்படுத்தும் கதைகளாக தேடி வருகிறார். அந்த படங்களில் மூன்றாம் தட்டு அல்லது வளர்ந்து வரும், 'ஹீரோ'களையே, அவருக்கு ஜோடியாக்கி வருகிறார்.
இப்படி செய்வதால், அவருக்கே அந்த படங்களில் முக்கியத்துவம் கொடுப்பர். மேலும், அவருடன் நடிக்கும் நடிகர்கள், ஓரங்கட்டவோ அல்லது போட்டியாகவோ செயல்பட மாட்டார்கள் என்பதால், தற்போது, இந்த, 'ரூட்'டை பிடித்துள்ளார், நயன்தாரா.
— எலீசா
மாடர்ன் உடை வேண்டாம்! - கீர்த்தி சுரேஷ்
சமீபகாலமாக, 'கிளாமர்' ஆக நடிப்பதற்கும் தயாராகிவிட்ட, கீர்த்தி சுரேைஷ, மாடர்ன் உடையில் நடிக்கச் சொன்னால், மறுப்பு தெரிவிக்கிறார். 'புடவை தான் என் உடற்கட்டுக்கு சிறப்பாக இருக்கும்...' என்று சொல்லி, புடவை, 'காஸ்ட்டியூமில்' தன்னை நடிக்க வைக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.
'சோஷியல் மீடியா'வில், ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது, புடவை, 'கெட் - அப்'தான் கீர்த்தி சுரேஷுக்கு அழகாகவும், 'கிளாமராக'வும் இருப்பதாக கருத்து கூறி வருகின்றனராம். அதனால் தான், இதே கருத்தையே, இயக்குனர்கள் முன் வைக்கிறார், கீர்த்தி.
— எலீசா
'ஹீரோ' தேடும், விஜய் மகன் சஞ்சய்!
நடிகர் விஜய், சினிமாவுக்கு, 'குட் பை' சொல்லி, அரசியலுக்கு செல்ல தயாராகி விட்ட நிலையில், அவரது மகன், ஜேசன் சஞ்சய், சினிமாவில் இயக்குனராக, 'என்ட்ரி' கொடுக்கப் போகிறார். அவர் இயக்கும் படத்தில், விஜய் சேதுபதி அல்லது கவின் நடிப்பார் என்று கூறப்பட்டது.
தற்போது, மலையாள நடிகர், துல்கர் சல்மானை, தன் முதல் படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ள சஞ்சய், 'இந்த படத்தை, அழுத்தமான கதை, அதிரடியான திரைக்கதை என்று மிரட்டப் போகிறேன்.
'விஜயின் மகன் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு விஷயத்திலும், பார்த்து பார்த்து செயல்பட்டு வருகிறேன்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்புப் பூனை!
ராணுவ வீரராக மெரினா நடிகர் நடித்து வரும் நான்கெழுத்து படத்தின், 'டீசர்' வெளியான போது, அதில், ஒரு குறிப்பிட்ட மதத்தவரை, தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சொல்லி, போர்க் கொடி பிடித்ததுடன், மெரினா நடிகரையும் கைது செய்ய வேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
இதனால், அதிர்ச்சி அடைந்த நடிகர், அப்படத்தை தயாரித்து வரும், உலக நடிகரிடம், 'இப்படத்தில் இடம்பெற்றுள்ள, மதவாதிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை கத்தரித்து, என்னை காப்பாற்றுங்கள். இல்லையென்றால், ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு எதிரான நடிகராக என்னை சித்தரித்து விடுவர்...' என்று, கெஞ்சி கேட்டுள்ளார்.
திருமணம், குழந்தை பிறப்புக்கு பிறகு, சினிமா வட்டாரத்தில் உள்ளோர், தாரா நடிகையை, 'ஆன்ட்டி' கோணத்தில் பார்ப்பதோடு, முன்பு பெயரை சொல்லி அழைத்தவர்கள் கூட இப்போது, 'வாங்கம்மா போங்கம்மா...' என்கின்றனர்.
இப்படியே போனால், தன்னை வயதான நடிகை பட்டியலில் சேர்த்து விடுவர் என அதிர்ச்சியடைந்துள்ளார்.
அவரை யாராவது ஓவர் மரியாதை கொடுத்து அழைத்தால், 'எப்போதும் போல், என்னை பெயரை சொல்லியே கூப்பிடுங்கள். திருமணமாகி விட்டபோதும் இன்னமும் நான் சின்ன பெண் தான்...' என்று சொல்லி, மரியாதை கொடுத்தவர்களை, சகஜநிலைக்கு மாற்றி வருகிறார், தாரா நடிகை.
சினி துளிகள்!
* வேட்டையன் படத்தில் நடித்து வரும், ரஜினி, அதையடுத்து, லோகேஷ் கனகராஜ் இயக்கும், தன், 171வது படத்தில் நடிக்கிறார். அதன்பின், தான் நடித்து, 'ஹிட்' அடித்த, ஜெயிலர் படத்தின், இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போகிறார்.
* அப்பா, -மகன் என, இரண்டு வேடங்களில், விஜய் நடித்து வரும், கோட் படம், அவரது பிறந்த நாளான, ஜூன் 22ல், திரைக்கு வருகிறது.
* 'கண்கள் மற்றும் முகபாவணையிலேயே அதிகப்படியான, 'கிளாமரை' என்னால் வெளிப்படுத்த முடியும். அதனால், ஓவராக உடம்பை காண்பித்து நடிக்க மாட்டேன்...' என்கிறார், பிரியங்கா மோகன்.
* அமரன் படத்தை முடித்துவிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார், சிவகார்த்திகேயன்.
அவ்ளோதான்!