
எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியையே பார்த்துக் கொண்டிருந்தாள், தீபா.
இவளைப் பொறுத்தவரை, இருட்டு பழக்கமானது தான். தன் தாயுடன் தங்கியிருந்த ஓட்டு வீட்டில், மின்சாரம் தடைப்படும் போதெல்லாம் இவளுக்கு, இந்த மெழுகுவர்த்தி தான் துணை. அதுவும், தேர்வுக்கு படிக்கும் நேரம் பார்த்து, அடிக்கடி மின்சாரம் காணாமல் போகும். மெழுகுவர்த்தியை ஏற்றி, அதன் ஒளியிலே படிப்பாள்.
தியாகத்திற்கு மெழுகுவர்த்தியை உதாரணமாகச் சொல்வர். ஆனால், இவள் கல்விக்கு அந்த மெழுகுவர்த்தி தான் உறுதுணையாக இருந்திருக்கிறது. குழந்தை பருவத்தில், வாழ்க்கைக் கடலில் ஒரு மிதவையாக மிதந்தாலும், இவள் பயணம் தொடர்ந்திருக்கிறது.
இல்லாவிட்டால், தன் வீட்டுக்கு, நள்ளிரவு நேரத்தில் யாரோ ஒருவர் வந்து கதவு தட்டுவதும், கதவு திறப்பதும், பிரிக்கப்பட்ட புத்தகங்களுடன் இவள் தன் அறையில் தனியாகக் கிடப்பதும்...
இருட்டில் கேட்கும் சத்தங்களும், மெலிதான பேச்சுகளும் இவளை சுற்றி நடந்தபோது, கண்களையும், கதவுகளையும், காதுகளையும் மூடி கிடந்துள்ளாள்.
அம்மா நல்லவள் தான். அம்மாவின் மீதும் குற்றம் சொல்ல முடியாது; வாத பிரதிவாதங்களும் தேவையில்லை.
இவள் அம்மா வேலை செய்யும் வீட்டின் எஜமானி, ராஜம்மா. வேலை செய்ய வரும்போது குழந்தைகளை அழைத்து வரக்கூடாது என்பது, ராஜம்மாவின் கண்டிப்பான உத்தரவு. எனவே, தீபாவை அழைத்து போக மாட்டாள், அம்மா.
குழந்தையில், தீபாவை வீட்டிலேயே வைத்து பூட்டி விட்டுத் தான் கிளம்புவாள். விளையாட்டு சாமான்களை வைத்து விளையாடுவாள். அதன் பின், இவள் பள்ளி போக ஆரம்பித்தாள்.
அம்மாவிடம் எதையும் பேசியோ, கேட்டோ பழக்கமில்லை. அம்மாவுக்கும், இவளுக்கும் இடையே ஒரு இறுக்க நிலை. அது ஏனென்று தெரியாது.
இவள் கேள்விகள் கேட்க நினைத்தாலும், பேச்சு அடைபட்டு, வார்த்தைகள் மவுனிக்கும். இவள் அம்மா பேசாவிட்டாலும், அவ்வப்போது இவளை பார்த்து சிரிப்பாள். அந்த சிரிப்பு தான், சிறகுகளோடு நெஞ்சிலே பறக்கும்.
ஒரு நாள் இரவு, வீட்டில் பலத்த குரல். அம்மா, இப்படி இரைந்து பேசி, இவள் கேட்டதே இல்லை. மென்மையான அந்தக் குரலுக்குள் இப்படி ஒரு ஆக்ரோஷமா? கூடவே ஒரு ஆண் குரல்.
கதவை திறந்து, வெளியே வந்து பார்க்கவும் இவளுக்கு தைரியம் இல்லை. ஆனால், மெதுவாக ஜன்னல் கதவு திறந்து, மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் பார்த்த அந்தக் காட்சி, இவளை திடுக்கிட வைத்தது.
கையில் அரிவாள்மணையுடன், பத்ரகாளியாக நின்று கொண்டிருந்தாள், அம்மா. அம்மாவின் முகமெல்லாம் ரத்த வெள்ளம். யார் அந்த அன்னியன்? அவன் முகத்தை உற்றுப் பார்த்தாள். யாரென்று தெரியவில்லை. அவன் முகமெல்லாம் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது.
திடீரென்று தடைப்பட்ட மின்சாரம் மறுபடியும் வந்துவிட, அறையெல்லாம் ரத்தம். யாரோ வாசக்கதவை தட்டும் சத்தம். இவளுக்கு தலை சுற்றி அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
இவள் கண்டது தோற்ற பிழையா, காட்சிப் பிழையா? புரியவில்லை.
கண் விழித்தபோது, ஒரு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் கிடத்தப்பட்டு இருப்பது புரிந்தது. எதிரில், காவல்துறையைச் சேர்ந்த பெண் கான்ஸ்டபிள் அமர்ந்திருந்தார். எதுவுமே புரியவில்லை. என்னென்னமோ கேள்விகள்... எதுவும் சொல்ல தெரியவில்லை. வாயடைத்து போன நிலை.
ராஜம்மா கண் கலங்க வந்து, தன்னுடன் இவளை அழைத்துப் போனார்.
அதன் பிறகு ஏதேதோ சில கேள்விகள் கோர்ட்டில் கேட்டனர். ராஜம்மா சொல்லி கொடுத்தபடி எதுவுமே தெரியாது, தெரியாது என்று பதில் சொன்னாள்.
அம்மா யாரையோ கொலை செய்ததற்காக, அவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது என்று மட்டுமே இவளுக்கு தெரிந்தது.
'நான் தான் கொலை செய்தேன். நான் தான் கொலை செய்தேன். என்னை சிறையிலே போடுங்கள்...' என்று அம்மா கூறினாளாம்.
'தீபா உங்க அம்மாவே சொன்னது தான். நீ என்கிட்ட இருந்தா தான் உனக்கு பாதுகாப்பு. அம்மாவுக்கு தண்டனை தீர்ப்பாயிடுச்சு. நானும் ஜாமின் எடுக்க எத்தனையோ முயற்சி பண்ணினேன்.
'ஆனால், உங்க அம்மா எதையுமே வேண்டாம்ன்னு சொல்லிட்டு, ஆயுள் தண்டனையை மனப்பூர்வமா ஏத்துக் கிட்டா. 14 ஆண்டுகள், நிமிஷமா ஓடிடும் கவலைப்படாதே.
'உங்க அம்மா விடுதலையாகி வரும்போது, நீயாவது காத்திரு. உன் படிப்புக்கு எல்லா ஏற்பாடுகளையும் நான் செய்கிறேன். நீ நல்லா படிச்சு, முன்னுக்கு வரணும்ன்னு, உன் அம்மா அடிக்கடி சொல்வாங்க...' என்றாள், ராஜம்மா.
போர்டிங் ஸ்கூலில் சேர்க்கப்பட்டு கல்வியைத் தொடர்ந்தாள், தீபா. எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார், ராஜம்மா.
இப்போது, கல்லுாரியில், இறுதியாண்டு படிக்கிறாள். அடுத்த வாரம் தேர்வு இருக்கிறது.
அடிக்கடி இவளை வந்து பார்த்து செல்வார், ராஜம்மா. வரும்போதெல்லாம், கை நிறைய பிஸ்கட், சாக்லேட் என்று வாங்கி வருவார். அவர் வாங்கி வந்த சாக்லேட் காகிதங்களில், பொம்மை செய்து, ஒரு மாலையாக்கி வைத்திருக்கிறாள்.
விடுதலையாகி வரும்போது, இந்த காகித சாக்லேட் மாலையை, அம்மாவுக்கு போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
வார்டன் வந்து, ''உன்ன பார்க்க, ராஜம்மா மேடம் ஆள் அனுப்பி இருக்காங்க. ரிசப்ஷன்ல காத்துகிட்டு இருக்காங்க. ஆமா, இந்த இருட்டுல மெழுகுவர்த்தியை வைச்சு என்ன பண்ணிட்டு இருக்க?'' என்றார்.
தவறாமல் வரும், ராஜம்மா, சில மாதங்களாக வரவில்லை. அதை சொல்லத்தான் கூப்பிட்டு இருப்பார்களோ!
அவசரமாக ரிசப்ஷனுக்கு ஓடினாள். அங்கே, ராஜம்மா வீட்டு காரோட்டி காத்திருந்தார்.
''ராஜம்மா மேடத்திற்கு சில நாட்களாக உடம்பு சரியில்லை. வீட்டிலேயே சிகிச்சை நடக்கிறது. உன்னை அழைத்து வரச் சொல்லி என்னை அனுப்பினார்,'' என்றான், காரோட்டி.
உடனே, காரில் ஏறி, அம்மா வேலை செய்த ராஜம்மாவின் வீட்டை நோக்கிப் பயணித்தாள்.
பிரமாண்டமான வீடு, உள்ளே நுழைந்தாள்.
களை இழந்து காணப்பட்டது, வீடு. தயங்கியபடி, ராஜம்மாவின் அறைக்கு போனாள், தீபா.
ராஜம்மாவின் அருகில் ஏதோ மாத்திரையை கொடுத்தபடி, நர்ஸ் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
உடம்பு மெலிந்து, எலும்பும், தோலுமாக படுக்கையில் இருப்பது ராஜம்மா தானா? மூச்சு விட முடியாமல், மூக்கில் டியூப் சொருகப்பட்டு, செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டிருந்தது.
''இப்படி எத்தனை நாளைக்கு ஓடும்ன்னு தெரியவில்லை,'' என்று வருத்தப்பட்டு கொண்டார், நர்ஸ்.
ராஜம்மா கண்களில் கண்ணீர்.
நர்சை அறையை விட்டு வெளியே போக சொன்னார், ராஜம்மா.
''மேடம், சிலிண்டர்ல ஆக்சிஜன் குறைவா இருக்கு. வேற சிலிண்டர் மாற்றட்டுமா?''
வேண்டாம் என, தலையசைத்தார், ராஜம்மா.
நர்ஸ் விடைபெற்று சென்ற பின், தீபாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள், ராஜம்மா.
''மேடம் அழாதீங்க. நீங்க அழுதா என்னால தாங்க முடியாது. உங்களை, என் அம்மாவா நினைக்கிறேன். உங்க தயவால தான் எனக்கு இத்தனை படிப்பும், வசதியும் கிடைச்சிருக்கு.
''உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. உங்க கணவரையே கொன்ற கொலைகாரியான என் அம்மாவை மன்னிச்சு, அவரோட மகளான என்னை, உங்க மகள் போல வளர்த்ததற்கு நான் தான் நன்றி சொல்லணும்.''
''என் கணவரை கொன்னுட்டதா, உன் அம்மா எப்ப சொன்னாங்க?'' என்று கேட்டாள், ராஜம்மா.
தலை குனிந்தபடி, ''வேற ஊர் ஜெயிலுக்கு அம்மாவை மாற்றுவதற்கு முன், என்னோட பேசணும்ன்னு சொன்னாங்களாம். நானும், போய் பார்த்தேன். அவங்க கொன்றது நம்ம ஐயாவைத்தான்னு அப்ப சொன்னாங்க,'' என்றாள், தீபா.
திக்கி திணறி பேசினார், ராஜம்மா...
''தீபா, என் கணவர் ஒரு பொறுக்கி. பெண்களை கண்டாலே வெறி பிடிச்சு அலையும் ஒரு காமுகன். அதுவும் புத்தம் புது மலர்ன்னா ரொம்பப் பிடிக்கும். அதனால தான், உன்னை கூட்டிட்டு வேலைக்கு வர வேண்டாம்ன்னு, உன் அம்மாகிட்ட நான் சொல்லி இருந்தேன்.
''எப்படியோ உங்க அம்மாவுக்கும், ஐயாவுக்கும் ஏற்கனவே உறவு ஏற்பட்டிருப்பது எனக்கு தெரியவே தெரியாது. எத்தனையோ தவறுகளை என் கணவன் செய்யும் போதெல்லாம், அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் வாழ பழகிக் கொண்ட பைத்தியக்காரி, நான்.
''நீ வயசுக்கு வந்த பிறகு, என் கணவன், உன்னையும் அடையணும்ன்னு, உங்க அம்மாவிடம் சொல்லியிருக்கிறார். அம்மா என்ன சொல்லியும் கேட்காமல், என் கணவர் பிடிவாதம் பிடிக்க, கோபத்தில் அரிவாள்மணையை எடுத்து அவரை கொன்றிருக்கிறாள்.
''அவருடைய மகள் நீ தான். எப்போதோ ஏற்பட்ட அந்த உறவுக்கு தீர்வு காணத்தான் என்னை தேடி வந்திருக்கிறாள், உன் அம்மா. ஆனால், வந்த இடத்தில் மீண்டும் உறவை புதுப்பித்துக் கொள்ள, அவள் இல்லம் அடிக்கடி போக ஆரம்பித்திருக்கிறார், என் கணவர்.
''கடைசியாக, உன்னையும் அடைய என் கணவர் விரும்பிய போது, உன் அம்மா அழுதபடி தடுத்து இருக்கிறாள். பெற்ற பெண்ணையே அடைய நினைக்கும் கணவனை எந்த அம்மா தான் பொறுத்துக் கொள்வாள்!
''கோபம் எல்லை மீற, அரிவாள்மணையால் ஐயாவைக் கொன்று விட்டாள். நான் செய்ய முடியாததை, உங்க அம்மா செஞ்சுருக்கா.
''உண்மையா சொல்லப் போனால், நான் தான் உனக்கும், உங்க அம்மாவுக்கும் நன்றி சொல்லணும். எனக்கு விடுதலை வாங்கி கொடுத்த உத்தமி, உன் அம்மா. இதெல்லாம், உன் அம்மாவுக்கு நான் ஜாமின் எடுக்க போன போது, எல்லா கதையும் என்கிட்ட சொல்லி விட்டாள்.
''அப்பாவோட நடவடிக்கை பிடிக்காமல் தான், என் பொண்ணு மேற்படிப்புன்னு சொல்லிட்டு அமெரிக்கா போயிட்டாள். அப்பா இறந்ததுக்கு கூட, என் மகள் வரல. நீ, என் கணவரோட வாரிசு. என் மகளுக்கு என்ன உரிமை உண்டோ அத்தனை உரிமையும் உனக்கும் உண்டு. நான் வக்கீல்கிட்ட சொல்லி, எல்லா ஏற்பாடுகளையும் முறைப்படி பண்ணியிருக்கேன்.''
பிரமித்துப் போனாள், தீபா.
இப்போது புரிகிறது... குழந்தையாக இருக்கும்போது, வீட்டில் கேட்ட சில துாரத்து குரல்கள், மங்கிய சில புகைத் தோற்றங்கள்.
''மேடம்...'' என, ராஜாம்மாவின் கைப்பிடித்து இவள் அழுதபோது, அவரது வாயோரத்தில் ரத்தப் புள்ளிகள்.
''அம்மா...'' என்று கதறியபடி, ராஜம்மாவின் மேல் விழுந்து அழுதாள், தீபா.
விமலாரமணி