
வயதான தம்பதியின் தன்னம்பிக்கை!
சமீபத்தில், எங்கள் தெருவுக்கு, 60 வயதைக் கடந்த தம்பதியர் வந்தனர்.
தென்னை மரம் வைத்திருப்போர் வீடுகளுக்கு சென்று, 'தென்னை மட்டையை வெட்டி, கீற்று முடைந்து தருகிறோம். ஒரு மரத்தில் ஏறுவதற்கு, 50 ரூபாயும், ஒரு கீற்று முடைவதற்கு, மூன்று ரூபாயும் தாருங்கள்...' என்றனர்.
கோடைகாலம் நெருங்குவதால், மாடிகளில் கீற்றுக் கொட்டகை அமைக்க வசதியாக இருக்குமென்று, அந்த தம்பதிக்கு அனுமதி அளித்தனர், அங்கிருந்த சிலர்.
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட அவர்களுக்கு, ஊர் ஊராக சென்று, கிடைத்த இடங்களில் தங்கி, ஆண்டுதோறும் கீற்று முடைந்து தருவது தான் வேலையாம்.
இவ்வாறு இருவரும் இணைந்து, தினசரி குறைந்தபட்சம், 600 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பராம். எப்போதாவது ஊர்ப் பக்கம் போய் வருவதாகவும், சம்பாதிப்பதை, இங்கிருந்தே பிள்ளைகளுக்கு அனுப்பி விடுவதாகவும் கூறினர்.
கையில் தொழில் ஒன்று இருந்து விட்டால், வறுமையை விரட்டி, வாழ்ந்து காட்ட முடியும் என்பதை, வயதான காலத்திலும் நிரூபிக்கும், அந்த தன்னம்பிக்கை தம்பதியரை, மனதார பாராட்டினேன்!
— டி.பிரேமா, மதுரை.
இப்படியும் செய்யலாம்!
விடுமுறைக்கு நானும், குழந்தைகளும், கொடைக்கானல் அருகில் அமைந்துள்ள என் பெற்றோரின் கிராமத்துக்கு, காரில் சென்று கொண்டிருந்தோம். வழியில் ஓரிடத்தில், இளைப்பாற காரை நிறுத்தினோம்.
எங்களுக்கு முன்பு அங்கிருந்த ஒரு குடும்பத்தினர், ஏதோ ஒரு பொருளை, பாதை ஓரம் இறைத்துக் கொண்டிருந்தனர். அருகில் சென்று, அதைப் பற்றி விசாரித்தேன்.
'இவை, விரைவில் வளரக்கூடிய வெள்ளரி, தர்பூசணி மற்றும் மரமாக வளரக்கூடிய நாவல், கொய்யா, மா, பலா போன்ற பழங்களின் விதைகள். சென்றமுறை இங்கு வந்தபோது, நிறைய குரங்குகள் இருந்ததாகவும், அவற்றிற்கு, என், 11 வயது மகள் உணவளித்ததை, தன் ஆசிரியரிடம் கூறியிருக்கிறாள்.
'இதை கேட்டு அவளை பாராட்டியவர், 'குரங்குகளுக்கு பழ உணவுகளை தரலாம். ஆனால், அதை நாம் கொடுத்து பழக்கக் கூடாது. அவைகளே உணவை தேடி உட்கொள்வது தான் சரியான முறை...' என்று அறிவுறுத்தியுள்ளார், அந்த ஆசிரியர். அதை செயல்படுத்தத்தான், இந்த விதைகளை விதைக்கிறோம்.
'அதுமட்டுமின்றி, இந்த விதைகள் அனைத்தும், நாங்கள் உண்ட சுவையான பழங்களுடையது. அவற்றை சேகரித்து, விதைப்பதற்கு ஏற்ற வகையில் விதை பந்தாக தயார் செய்துள்ளேன். இதனால், இயற்கை செழிக்கும், வன விலங்குகளுக்கும் உணவு கிடைக்கும்...' என்று கூறினார்.
நாங்களும் இந்த செயலை பின்பற்ற வேண்டும் என்று, உறுதி எடுத்துக் கொண்டோம்.
— பி. கார்த்திகாதேவி, கே.சி.பட்டி, திண்டுக்கல்.
நற்பணிகள் செய்வோம், மனித நேயம் காப்போம்!
சமீபத்தில், ஒரு திருமணத்திற்கு செல்ல, பஸ்சில், வெளியூர் பயணம் மேற்கொண்டேன். இரவு வெகுநேரம் ஆகிவிட, திருமண விழா நடக்கும் ஊருக்குப் போக, பஸ் கிடைக்காததால், லாட்ஜில் தங்கினேன்.
காலை, 6:00 மணிக்கு எழுந்து, விடுதியை காலி செய்து, பஸ் பிடிக்க விரைந்தேன். போகும் வழியில், ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரைப் பார்த்தவுடன், பிரமித்துப் போனேன்.
அதில், அந்த ஊரின் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மருத்துவ மனைகள், தபால் நிலையம் மற்றும் முக்கிய இடங்களின் முழு விலாசமும், போன் நம்பரும் இருந்தது.
பிரமிப்பு அடங்குவதற்குள், கேட்டின் அருகில் உட்காருவதற்கு கான்கிரீட் பெஞ்சும், காம்பவுண்டு சுவரில், ஒரு சிறிய மரப்பெட்டியில் முதலுதவி கிட், வாட்டர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள் இருந்தன.
விசாரித்ததில், வெளியூரிலிருந்து களைப்பாக வரும் பயணிகள் மட்டுமல்ல, ஏழை, எளியவர்களும் பயன் பெற வேண்டும் என்ற நல்ல மனதுடன், அந்த வீட்டின் சொந்தக்காரர், பல ஆண்டுகளாக இந்த சமூக நலப் பணியை தவறாமல் செய்து வருவதாக கூறினர்.
ஒவ்வொரு ஊரிலும், முடிந்தவர்கள் இந்த சிறிய நற்பணியை மேற்கொள்ளலாமே!
— க.கீராசந்த், விருதுநகர்.