
பா - கே
முன்னாள் திரைப்பட நடிகை, அவர். 10 அல்லது 15 தமிழ் திரைப்படங்களில் நடித்திருப்பார். திடீரென்று நடிப்பதிலிருந்து விலகி, தொழிலதிபராக மாறி விட்டார். சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் தொழிலை விரிவாக்கியுள்ளார்.
விமான பயணம் ஒன்றின்போது, அவரை சந்தித்துள்ளேன். லென்ஸ் மாமா தான் அறிமுகப்படுத்தி வைத்தார். எப்போதாவது, மொபைல் போனில் பேசுவார்.
சமீபத்தில், அரசியல் கட்சி ஒன்றில் இணைந்திருப்பதாக செய்தி வந்தது. இவருக்கு எதற்கு அரசியல் ஆசை என்று நினைத்துக் கொண்டேன்.
அன்று அவரிடமிருந்து மொபைல் போன் அழைப்பு வந்தது.
'மணி... உன்னை சந்திக்க வேண்டும்...' என்றார்.
வரச் சொன்னேன்.
அலுவலக மதிய உணவு இடைவேளையின்போது வந்தார். அன்று பார்த்ததை விட, இப்போது, கூடுதல் அழகாக, கம்பீரமாக இருந்தார்.
பரஸ்பர நலன் விசாரிப்புக்கு பின், வந்த நோக்கம் பற்றி கேட்டேன்.
'மணி... நான் அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்திருப்பதை கேள்விப்பட்டிருப்ப... இனி, மேடையேறி, மக்கள் முன் பேச வேண்டியிருக்கும். மேடை பேச்சு பற்றி ஒன்றும் தெரியாது. உன்னிடம் ஏதாவது, 'டிப்ஸ்' கிடைக்குமே என்று வந்தேன்...' என்றார்.
'இதற்கெல்லாம் லென்ஸ் மாமா தான் சரியான ஆள். அவர் வரட்டும்...' என்றேன்.
'ஐயோ மணி... நீள நீளமான வசனங்களா சொல்லி, குழப்பி விடுவார். சினிமா வசனம் பேசவே நான் தடுமாறுவேன். உனக்கு தெரிந்ததை சொல்...' என்று வற்புறுத்தவே, நான் படித்த, கேள்விப்பட்ட சில விஷயங்களை கூறினேன்.
அது :
மேடைப் பேச்சுங்கிறது அவ்வளவு கடினமான விஷயமல்ல. யாரும் பேச்சாளராகலாம்... இது ஒண்ணும் பெரிசு இல்லேங்கிறாங்க, அனுபவசாலிகள்.
* உங்க பேச்சு எளிமையா இருக்கணும். ஏதாவது ஒரு கருத்து அல்லது இரண்டு கருத்து சொன்னா போதும். 20 அல்லது 30 கருத்துக்களை சொல்லிக்கிட்டே போகக் கூடாது
* நீங்க என்ன பேசப் போறீங்கங்கிறது, முதல்ல உங்களுக்கு நல்லா புரியணும். அப்பத்தான் அடுத்தவங்களுக்கு புரியும். எப்படி ஆரம்பிக்கப் போறோம், என்ன கருத்தை முக்கியமா வலியுறுத்தப் போறோம், எப்படி முடிக்கப் போறோம்ங்கிறதை முதல்லயே நல்லா சிந்திச்சு, மனசுல வச்சுக்கணும். கடைசியா என்ன சொல்றீங்களோ, அதுதான் கேட்குறவங்க மனசுல நிற்கும்
* உங்க பேச்சு, சுருக்கமா இருக்கணும். 15 நிமிஷம் பேசறது ரொம்ப பொருத்தம். மணிக்கணக்குல பேசிக்கிட்டிருக்கிறது நல்லது இல்ல
* நீங்க பேசுறது உண்மையா இருக்கணும். உங்களுடைய உண்மையான அனுபவங்களை மற்றவர்களோட பகிர்ந்துக்குங்க. அப்போது தான் உங்க பேச்சில் நம்பிக்கை ஏற்படும்
* ஆரம்பத்துல கொஞ்ச நேரம் உங்களை பற்றியும், எதிரில் உள்ளவங்களை பற்றியும் சம்பந்தப்படுத்தி ஏதாவது பேசி, ஒரு நெருக்கத்தை ஏற்படுத்திக்கணும்
ஒவ்வொருத்தரும், இவர், இப்ப பேசப் போறது நம்ம சம்பந்தப்பட்டதுன்னு நினைக்க ஆரம்பிச்சு, கேட்க தயாராயிட்டாங்கன்னு அர்த்தம்
* எதிரில் உட்கார்ந்திருக்குற கூட்டத்துலேர்ந்து மூன்று பேரை தேர்ந்தெடுங்க. வலது பக்கம் ஒருத்தர், நடுவுல ஒருத்தர், இடது பக்கம் ஒருத்தர்... உங்களை கனிவாகவும், ஆர்வமாகவும் பார்க்கிறவரா பார்த்து தேர்ந்தெடுக்கணும். பேசும்போது இவங்களை நேருக்கு நேரா மாறி மாறி பார்த்துக்கிட்டே பேசுனீங்கன்னா... நீங்க ஏதோ ஒட்டுமொத்த கூட்டத்தையும் பார்த்துப் பேசற ஓர் உணர்வை அது ஏற்படுத்தி விடும்
* எழுதி வைத்து படிக்கிறது நல்லா இருக்காது. வேணும்ன்னா குறிப்புகள் வச்சுக்கலாம்
* மேடையில் ஏறி நின்ற உடனே, மூச்சை இழுத்து விட்டு, இயல்பு நிலைக்கு வாங்க. அப்புறம் பேச ஆரம்பிங்க.
இவ்வளவும், பேச்சுக் கலையில் வல்லுனர்களா இருக்குறவங்க சொல்ற ஆலோசனைகள்.
நான் சொல்லி முடிக்கவும், லென்ஸ் மாமா வரவும், சரியாக இருந்தது.
'நீ, வருவதாக கூறியிருந்தால், சீக்கிரமே வந்திருப்பேனே! அரசியலில் காலடி வைத்ததற்கு வாழ்த்துகள்...' என்று கூறியவர், 'அரசியலில் பெரிய ஆளாகி விட்டால், சேர்ந்து படம் எடுக்க முடியுமோ என்னவோ...' என்றபடி தன் மொபைல் போனில், அவருடன், 'செல்பி' எடுத்துக் கொண்டார்.
'இந்த, 'குசும்பு' தான் உம்மிடம் எனக்கு பிடித்ததே...' என்று கூறி, விடைபெற்று சென்றார், அவர்.
ப
சிகை அலங்காரக்கூடம் அது...
ரொம்ப சுறுசுறுப்பாக வேலை நடந்துகிட்டு இருந்தது. முடி வெட்ட வந்திருந்த நிறைய பேர், வரிசையாக உட்கார்ந்திருந்தாங்க.
அந்த சமயத்துல, கதவை திறந்துகிட்டு உள்ளே வந்தார், ஒரு பெரிய மனிதர்.
அவரை பார்த்தவுடன், வரிசையில் உட்கார்ந்திருந்த எல்லாரும் எழுந்திருச்சு, அவரை சுற்றி நின்னு, 'எப்படி இருக்கீங்க... நல்லா இருக்கீங்களா?' என, விசாரிச்சாங்க.
'வரிசையில் கடைசியா இருக்கிறவர் யார்?' எனக் கேட்டார், வந்தவர்.
'ஏன்?' என்றனர், அங்கிருந்தவர்கள்.
'அவருக்கு அடுத்தபடியாக நான் உட்காரணும். அதுக்காக தான் கேட்டேன்...' என்றார்.
'நீங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டாம். நீங்க, முக்கியபுள்ளி. உங்களுக்கு நேரம் முக்கியம். அதனால, நீங்க முன்னாடி போங்க...' என்றனர்.
'தோழர்களே... உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி. எல்லாரும் வரிசையாத்தான் வரணும். அந்த நடைமுறையை நானும் பின்பற்ற விரும்பறேன். நாம எல்லாரும் சமமானவர்கள்...' என்று சொன்னார்.
பிறகு, வரிசையின் கடைசியில் இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்து, சட்டை பையிலிருந்த ஒரு செய்தி தாளை எடுத்து, படிக்க ஆரம்பித்தார்.
ஆனால், அங்கே இருந்தவங்களால் இதை பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியல. ஒருத்தர் எழுந்திருச்சு வந்து, 'ஐயா... இப்ப என்னுடைய முறை வந்திருக்கு. உங்களை இங்கே காக்க வைக்கிறதை விட, ஐந்து ஆண்டுகளுக்கு கூட முடி வெட்டிக் கொள்ளாமல் என்னால் இருக்க முடியும்.
'நீங்க வரிசை முறையை தாண்டி போக விருப்பப்படலை. சரி, ஆனா, என்னுடைய முறையை மாற்றிக் கொடுக்க எனக்கு முழு உரிமை இருக்கு. இதுக்கு பதிலா, உங்களுடைய கடைசி இடத்தை நான் எடுத்துக்கிறேன். இதை நீங்க மறுக்க கூடாது...' என்றார்.
அங்கே இருந்த மற்றவர்களும், இதை ஒருமனதாக வற்புறுத்த ஆரம்பித்தனர்.
'சரி...' என, ஒப்புக்கொண்டார், அந்த பெரியவர்.
அவர் யார் தெரியுமா?
ரஷ்ய முன்னாள் அதிபர், லெனின்.
ரஷ்யாவுல கிரெம்ளின் நகரில் இருந்த சிகை அலங்கார கூடத்துல நடந்த நிகழ்வு இது.
எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்ன்னு வாயளவுல பேசறதுல என்ன பிரயோஜனம்... நாம எல்லாரும் சமம்ங்கிறதை நடைமுறையில கடைப்பிடிச்சு காட்டினவங்க கொஞ்ச பேர் தான்!
அவர்களில் ஒருவராக, லெனின் இருந்துள்ளார்.
நம்மூரில் இதெல்லாம் நடக்குமா!
எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.