
குழந்தைகளுக்கு, 'போட்டோ ஷூட்'டா... உஷார்!
சமீபத்தில், நண்பரின் குழந்தைக்கு, முதலாமாண்டு பிறந்தநாள் விழாவை, விமரிசையாக கொண்டாடினர்.
'விழாவுக்காக எடுத்த புகைப்படங்களுடன், இன்னொரு நாள், 'ரிலாக்ஸ்' ஆக, 'அவுட்டோர் போட்டோ ஷூட்' நடத்தி, அதன்பின், 'ஆல்பம்' போட்டுக் கொள்ளலாம்...' என்றார், புகைப்படங்களை எடுக்க வந்த போட்டோகிராபர்.
சில நாட்களுக்கு பின், நகரின் பல இடங்களில், நண்பர் மற்றும் அவர் மனைவியுடன் குழந்தையை இருவரும் துாக்கி வைத்துக் கொண்டும், தனியாகவும் என, பல கோணங்களில் புகைப்படம் எடுத்தார்.
சிறுவர் பூங்கா ஒன்றில், விதவிதமாக படம் எடுத்ததும், குழந்தையை மட்டும் ஊஞ்சலில் அமர வைத்து, ஆட்டியவாறு படம் எடுக்க முயன்றார்.
எதிர்பாராத விதமாக, ஊஞ்சலிலிருந்து கீழே விழுந்து, முகத்திலும், தலையிலும் அடிபட்டு, மயங்கி விட்டது, குழந்தை. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துப் போனதால், குழந்தையை காப்பாற்ற முடிந்தது.
அதற்கு முன், நீச்சல் குளத்தில் மிதக்க விட்டு, படமெடுக்க முயலும்போது, தவறி விழுந்து, மூழ்க இருந்தது. அங்கே தப்பிய குழந்தை, ஊஞ்சலில் தப்பவில்லை.
வாசகர்களே... வசதி இருக்கிறது என்பதற்காக, வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்காதீர்கள். குறிப்பாக, குழந்தைகளுக்கான, 'போட்டோ ஷூட்' தேவையா என, யோசியுங்கள்.
-வெ.பாலமுருகன், திருச்சி.
என்ன தான் படித்திருந்தாலும்...
நண்பரின் மகன், தன்னுடன் பணிபுரிந்த பெண்ணை, நீண்ட காலம், ஒருதலையாக காதலித்தான். அவளுக்கு, வீட்டில் வரன் பார்ப்பதை கேள்விப்பட்டு, பதறி, அவளிடம், தன் காதலை சொல்லி இருக்கிறான்.
'உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். காதலை ஏற்று, நான் உன் மனைவியாவதற்கு ஒரே ஒரு நிபந்தனை...' என்று, கூறியிருக்கிறாள்.
'என்ன?' என்றான்.
'எம்.எஸ்சி., படித்து, அலுவலகத்தில் வேலை பார்த்தாலும், எனக்கு, தையல் தெரியும். நன்றாக ஜாக்கெட்டுகள் தைப்பேன். நீ, இன்ஜினியரிங் படித்திருக்கிறாய். உனக்கு, ஏதாவது கைத்தொழில் தெரியுமா?' என்று, கேட்டுள்ளாள்.
'தெரியாது...' என்றான்.
'எவ்வளவுதான் படித்திருந்து, கம்ப்யூட்டரில் வேலை செய்தாலும், மனித வாழ்க்கைக்கு அடிப்படை, உடல் உழைப்பு தான். 'கொரோனா' மற்றும் மழை, வெள்ள, பேரிடர் காலங்களை, நாம் நன்றாக உணர்ந்துள்ளோம்.
'அன்றே, நம் முன்னோர், 'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்' என்று, கூறி இருக்கின்றனர். கைத்தொழில் தெரிந்திருந்தால், வாழ்வின் எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் திறன் தானாகவே வந்து விடும்.
'அதனால், ஏதாவது ஒரு கைத்தொழில் ஒன்றை கற்று வா. என் வீட்டில், நான் சம்மதம் வாங்கி விடுகிறேன்...' என்று கூறியிருக்கிறாள்.
அவள் மேல் உள்ள காதலின் தீவிரத்தில், கார்பென்டரிடம், பகுதி நேர வேலையில் சேர்ந்து, அந்த தொழிலை ஒரே ஆண்டில் முழுமையாக கற்றுக் கொண்டு விட்டான்.
அப்பெண்ணும், வீட்டில் விஷயத்தைச் சொல்லி, கைத்தொழில் கற்ற காதலனையே, பெற்றோர் சம்மதத்துடன், திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக இருக்கிறாள்.
மு.க.இப்ராஹிம், வேம்பார்.
கவனியுங்கள் கணவர்களே!
என் தோழி மிக அன்பானவள். குடும்பம் மட்டுமே அவளது உலகம்.
மகள், மகன், கணவர் மற்றும் அவரின் உறவுகள் என, அனைவருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, பார்த்து செய்வாள். அவளின் அளவுக்கு அன்பும், அக்கறையும் திரும்பக் கிடைப்பதில்லை என, புலம்பிக் கொண்டே இருப்பாள். ஒவ்வொரு நிகழ்வையும் அவள் சொல்லும் போது பாவமாக இருக்கும்.
ஆனால், அவளுக்கு உடம்பு முடியவில்லை என்றால் மட்டும், அவளது கணவர் அக்கறையுடன் பார்த்துக் கொள்வார். இதைக்கண்ட அவள், இப்போதெல்லாம் மாதத்தில் பாதி நாள் உடம்பு முடியவில்லை என, படுத்து விடுகிறாள்.
டாக்டரிடம் காட்டினால், உடம்பில் ஒன்றுமேயில்லை என்கிறார். எல்லா விதமான, 'செக் - அப்'பும் செய்தாகிவிட்டது. ஆனாலும், ஏதாவது சொல்லி படுத்துக் கொள்கிறாள்.
குடும்பத்தின் அக்கறையும், கவனமும் தன் பக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக அவள் நடத்தும் உத்தி
இது என்பதை, பிறகு தான் கண்டுபிடித்தேன், நான்.
பெரியவர்களின் கவனம் தன் பக்கம் திரும்ப வேண்டும் என்பதற்காக, சிறுபிள்ளைகள் செய்யும் அழிச்சாட்டியம் போல் தான் என, தாண்டி வர இயலவில்லை. இது தொடர்ந்தால் மனரீதியாக இப்படியான பெண்கள் பாதிக்கப்படுவர். ஒருவித நோயாக மாறவும் கூடும்.
சிகிச்சை அவளுக்கு தேவையில்லை, அவள் குடும்பத்தினருக்குத்தான். என்ன செய்ய? கணவர்களே திருந்தினால் தான் உண்டு.
ரா. ஹேமமாலினி, மும்பை.