
பா - கே
அலுவலகத்தில், அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, திடீரென, 'மணி... நியூசை படிச்சியா... அபுதாபியில் பணிபுரியும் கேரளாவை பூர்வீகமாக கொண்ட ஒருவருக்கு, லாட்டரியில், 33 கோடி ரூபாய் கிடைச்சிருக்காம். அதிர்ஷ்டகார பயலா இருப்பார் போலிருக்கு...' என்றார்.
'இதென்ன பிரமாதம். கொஞ்ச நாட்களுக்கு முன், அமெரிக்காவில், ஒரு டிரக் டிரைவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இத்தனைக்கும், அவர், அந்த சீட்டை வாங்கியதும், எங்கேயோ வைத்து, மறந்தும் விட்டிருக்கிறார்.
'அதன் குலுக்கல் எல்லாம் முடிந்து, இரண்டு ஆண்டுகளுக்கு பின்னரே, அந்த சீட்டு அவர் கைக்கு கிடைத்துள்ளது. 'பரிசு எங்கே கிடைக்கப் போகிறது...' என்ற அவநம்பிக்கையுடன் அந்த லாட்டரி சீட்டு நிறுவனத்தை அணுகியுள்ளார்.
'என்ன ஆச்சரியம்! அந்த சீட்டுக்கு தான் முதல் பரிசு கிடைத்துள்ளது. பரிசு தொகையை அப்படியே அள்ளி கொடுத்து விட்டனர்...' என்றார், அருகிலிருந்த செய்தியாளர் ஒருவர்.
'லாட்டரி சீட்டுத் திட்டம், எப்போ எங்கே ஆரம்பமாச்சு தெரியுமா?' என்று ஆரம்பித்தார், மூத்த செய்தியாளர்:
பதினைந்தாம் நுாற்றாண்டிலேயே இது ஆரம்பமாயிட்டுது. முதன்முறையா, ரோமானியர்கள் தான் இதை ஆரம்பித்தனர். அப்போதெல்லாம், முதல் பரிசாக, ஒரு கப்பல். இரண்டாவது, ஒரு வீடு. மூன்றாவது, வீட்டு வேலைகள் செய்யிறதுக்கு ஒரு அடிமை ஆள். நான்காவது, ஆடு, மாடு. ஐந்தாவது, கட்டை வண்டி என்று, பரிசுகளை கொடுத்துள்ளனர்.
இப்பல்லாம், கப்பலை முதல் பரிசாக கொடுத்தா, அதை வச்சுக்கிட்டு என்ன பண்றது?
பணம் கொடுத்து, லாட்டரி டிக்கெட்டுகள் வாங்கற முறை, இங்கிலாந்தில் தான் முதன் முதலில் அறிமுகமாச்சு. அதுவும், 1612ல் தான் பரிசையும், பணமாகவே கொடுக்க துவங்கினர்.
அதுக்கப்புறம், 1894ல், அமெரிக்காவில் ஆரம்பமாகி, ஜெர்மனி, பிரான்ஸ் இங்கேயெல்லாம் லாட்டரி திட்டம் நடைமுறைக்கு வந்தது.
நம்மூரில், 'டாஸ்மாக்'கை வைத்து, அரசை நடத்துறது போல், அப்போது, இத்தாலி நாடும், லாட்டரி மூலம் கிடைத்த வருவாயில், அரசை நடத்தியது.
தன் நாட்டின் புகழ்பெற்ற அருங்காட்சியகத்தை, லாட்டரி வருவாய் மூலமாத்தான் கட்டி முடித்தது, இங்கிலாந்து அரசு.
அமெரிக்காவில், ஹார்வார்டு பல்கலை கழகத்தையும், கொலம்பியா பல்கலை கழகத்தையும் ஆரம்பிக்கிறதுக்கும், இன்று வரைக்கும் சிறப்பாக இயங்கி வர்றதுக்கும், லாட்டரி சீட்டு விற்பனை வருவாய் தான் ரொம்பவும் உதவியாய் இருக்கிறது.
இரண்டாம் உலகப்போர் நடந்த சமயத்தில் மட்டும், லாட்டரி நடத்தியிருக்கு, ரஷ்யா.
சரி... இந்தியாவுக்குள், இந்த லாட்டரி சீட்டு எப்படி நுழைஞ்சுது?
இங்கே, 1850ல், ஆங்கிலேய கவர்னராக இருந்த, சர் சார்லஸ் எட்வெர்ட் டிரிவேலியன் தான், முதன் முதலில், இந்தியாவில், இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
சென்னையில் உள்ள ரிப்பன் மாளிகை, மூர் மார்க்கெட், மியூசியம் மாதிரியான கட்டடங்களை எல்லாம், லாட்டரி வருமானத்தில் தான் கட்டி முடித்துள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் முதல் முறையா, லாட்டரி சீட்டு அறிமுகமான மாநிலம், ஒடிசா. லாட்டரி திட்டம் ஆரம்பிச்ச, 1955க்குள்ள அதை நிறுத்திட்டாங்க. அதுக்கப்புறம், 13 ஆண்டுகளுக்கு, இந்தியாவில் லாட்டரி சீட்டே கிடையாது.
மறுபடியும், 1968ல், கேரளாவில் ஆரம்பமானது. அதன்பின், தமிழ்நாட்டுக்கு வந்தது.
இப்ப, தமிழ்நாட்டில் தடை செஞ்சுட்டாங்க.
கேரளாவில், லாட்டரி சீட்டு வியாபாரம், இப்போ அமோகமா நடந்துகிட்டிருக்கு. அங்கு, லாட்டரி சீட்டு வாங்கிய பலருக்கு, கோடிக்கணக்கில் பரிசு விழுந்ததாக அடிக்கடி செய்தி வந்துட்டிருக்கு.
என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர்.
இதையெல்லாம் அதுவரை, தனக்கு சம்பந்தமில்லாதது போல், அசட்டையாக கேட்டுக் கொண்டிருந்த லென்ஸ் மாமா, தலையை உலுக்கியபடி, 'மணி... ஒரு நடை கேரளா போய் வருவோமா?' என்றார்.
அவர் எதற்கு கேட்கிறார் என்று புரிய, 'இருக்குறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்படலாமா?' என்று கூறி, அவரது ஆசைக்கு அணை போட்டேன், நான்.
ப
இங்கிலாந்து பாராளுமன்றத்தில், தன் வாதங்களுக்கு எதிர்வாதமே யாரும் செய்ய முடியாத அளவுக்கு நுட்பமாக பேசுவார், முன்னாள் பிரதமர், வின்ஸ்டன் சர்ச்சில்.
அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வும், சமயோஜித புத்தியும் கொண்டவர், சர்ச்சில்.
நீண்ட நேரம், உணர்ச்சிகரமாகவும், உற்சாகமாகவும், நகைச்சுவையாகவும், மேடைகளில் உரையாற்றக்கூடிய வல்லமை பெற்றிருந்தாலும், மிக ரத்தினச் சுருக்கமாகவும் பேசி, மக்களை ஈர்க்கும் திறனும் பெற்றிருந்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது, இங்கிலாந்து முழுக்க, பல இடங்களில், பொதுக்கூட்டங்களில் பேச வேண்டிய கட்டாயத்தில் இருந்தார், சர்ச்சில். ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்துவது, நாட்டு மக்களை உணர்ச்சிவசப்பட வைத்து, அரசுக்கு ஆதரவாக செயல்பட வைப்பது, இப்படி பல யுக்திகளைக் கையாண்டார்.
பொதுக்கூட்டம் ஒன்றில், சர்ச்சிலை பார்த்து, 'நீங்கள் ஒரு முட்டாள்...' என்று, திட்டி விட்டான், ஒருவன். அவனை கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
பாராளுமன்றம் வரை இச்செய்தி விவாதப் பொருளாகியது. சர்ச்சிலின் விளக்கத்தை கேட்க, ஒட்டுமொத்த எம்.பி.,க்களின் கூட்டமும் காத்திருந்தது.
'அவன், என்னை முட்டாள் என்று சொன்னதற்காக கைது செய்யவில்லை. அரசாங்க ரகசியத்தை இப்படி எல்லாருக்கும் தெரியும்படி சொல்லிட்டான் என்பது தான் காரணம்...' என்று, சர்ச்சில் சொன்னதும், அவையில் இருந்த அனைத்து எம்.பி.,க்களும், சிரித்து விட்டனர்.
இன்னொரு முறை, பாராளுமன்றத்தில், அவரது வாதங்களுக்கு பதில் தர முடியாத, ஒரு பெண் எதிர்க்கட்சி எம்.பி., 'நீங்கள் என் கணவராக இருந்திருந்தால், காபியில் விஷத்தை கலந்து கொடுத்திருப்பேன்...' என்று கூறினார்.
அதற்கு, 'நீங்கள் மட்டும் என் மனைவியாக வாய்த்திருந்தால் அந்த காபியை சந்தோஷமுடன் வாங்கிப் பருகி இருப்பேன்...' என்று பதில் அளித்தார், சர்ச்சில்.
— எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.